privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!

தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!

-

வில்லன்தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை. எதற்கு பிரச்சினை என்று பாதுகாப்பாக பேசுவது ஒருபுறமிருந்தாலும் “எங்காத்துக்காரரும் கச்சேரி செய்கிறார்” என்பதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும் இவர்களிடத்தில் இருக்கிறது. பொறுப்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆசை இருந்தால் அது இப்படித்தான் அபஸ்வரமாக வெளிப்படுமோ?

முதல் கூட்டம் கடற்கரையில் நடந்தது. “சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்” என்கிற பெயரில் ஒரு அமைப்பு தர்மபுரி மற்றும் தமிழகத்தின் இன்னும் பிற இடங்களில் நடந்தேறும் வன்முறைகளையும், மனித உணர்வின் உன்னதமான காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும் போக்க “வன்மத்தின் சிறையில் மானுடம்” என்கிற பெயரில் ஒரு ஓவியக்கண்காட்சியை நடத்தியது. இந்தக் ‘கவித்துவமான’ தலைப்பே பிரச்சினைக்குரியது. நாயக்கன் கொட்டயாயில் பாதிப்படைந்த தலித் மக்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்திய வன்னிய சாதிவெறியர்களுக்கும் இந்த மொழியும் பொருளும் புரியப் போவதில்லை. உழைக்கும் மக்களிடம் சாதிவெறி குறித்து எதார்த்தமாக எப்படி பேசுவது என்பது கூட நமது அறிஞர் பெருமக்களுக்குத் தெரியவில்லை.

அங்கே பல்வேறு ஓவியர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே சென்ற போது பல ஓவியங்களில் தருமபுரி என்கிற வார்த்தை இருந்ததை காண முடிந்தது.  ஒரு ஓவியத்தில் பூந்தொட்டி ஒன்றை வரைந்து அதில் தருமபுரி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருந்தது. இன்னொரு ஓவியத்தில் சிவப்பு கலரில் ஒரு பெரிய இதயம். அடுத்து பச்சை கலரில் ஒரு பெரிய புதிய வகை விலங்கு.  வீடுகள் கைகள், கால்களை கொண்ட ஒரு ஓவிய்ம் என்று பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. எந்த ஓவியத்திலும் உயிர் இல்லை. நவீன ஓவியங்கள் யதார்த்தமாகவோ அரூபமாகவோ இருக்கட்டும். பொருள் என்ற விதத்தில் உயிர் இல்லாத போது வடிவங்கள் என்ன உணர்த்திவிடும்?

அதே போல இராமதாஸ், காடுவெட்டி குரு போன்ற சாதிவெறியர்களின் முகத்தையும் வன்னிய சாதிவெறி, ஆதிக்க சாதிவெறி என்கிற வார்த்தைகளையும் எந்த ஓவியத்திலும் காண முடியவில்லை. வன்மத்தின் சிறையில் மானுடம் என்கிற தலைப்பிற்கேற்ப ஓவியங்களும் மேலோட்டமான அரசியலற்ற மனிதாபிமானத்தை பேசுபவவையாகவே இருந்தன.

ஓவியர் விஸ்வம் பேசும் போது ஓவியங்களை பற்றி எதுவும் பேசவில்லை, ராமதாசை பற்றியும் பேசவில்லை, வன்னிய சாதிவெறியை பற்றியும் பேசவில்லை என்ன தான் பேசினார்,  அண்ணன் திருமாவை பற்றி பேசினார் அது போதாதா ? அம்பேத்கருக்கு பிறகு நான் கண்ட மாபெரும் அறிஞன் என்றால் அது திருமா தான் என்றார். அம்பேத்கரை இதை விட யாராவது இழிவுபடுத்த முடியுமா தெரியவில்லை. கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி காவடி தூக்கும் திருமா இடையிடையே தைலாபுரத்திற்கும் செல்வதை நிறுத்தவில்லை. இந்த இலட்சணத்தில் இவர் அறிஞராம், அம்பேத்கராம்!

அடுத்ததாக பேசிய எழுத்தாளர் வ.கீதாவாவது அரசியல் உள்ளடக்கமற்ற அந்த ஓவியங்களை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் ஒன்றைக் கூட பெண் ஓவியர்கள் யாரும் வரையாதது தனக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது என்றார். எனக்கு பிடில் வாசித்த நீரோ மன்னன்தான் நினைவுக்கு வந்தான். வன்னிய சாதி வெறி குறிப்பாக கண்டிக்கப்படாத போங்காட்டத்தில் பெண்கள் இல்லையே என்றால் வ.கீதா உண்மையான பெண் போராளிகளை தன் வாழ்நாளில் கண்டதில்லை போலும்!

அடுத்தகூட்டம்அதே சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டம். தாமதமாக சென்று சிலர் பேசியதைப் பார்த்த பிறகுதான் கூட்டத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். அத்தனையும் அக்மார்க் காமடிக் காட்சிகள்.

அப்போது கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த யாக்கன் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்திற்கு தி.மு.க வினரை அழைத்திருந்தோம்.  இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்கிறோம் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று கூறினார்.கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள தி.மு.க விலிருந்து தலைமைதான் வரவில்லை மாவட்டம், மாநகரம், ஏன் ஒரு வட்டம் கூடவா கிடைக்கவில்லை? உண்மையான அக்கறையிருந்தால் கலந்து கொண்டிருப்பார்கள். தி.மு.கவிற்கோ, அ.தி.மு.கவிற்கு உண்மையான அக்கறை இருக்குமா என்று கூட தெரியாத அளவுக்கு நமது அறிஞர்கள் சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழக காங்கிரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் அமெரிக்கை நாராயணன் பேசுவார் என்றார் அறிவிப்பாளர்.  என்னடா பேரு இது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணிக்கொண்டு அமெரிக்கை நாராயணனனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் தலைவர், எங்கள் தலைவர் என்று அவரை நாங்கள் மட்டும் உரிமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர் இந்த நாட்டுக்கே தலைவர், உலகத்துக்கே தலைவர். அவர் தான் மகாத்மா. அவர் தான் சாதியை ஒழிக்க உண்மையாக பாடுபட்டார் என்றார். ஆமாம் அவர் கோவணத்தை கூட அம்பேத்கர் அவிழ்த்துவிட்டாரே என்று எண்ணிக்கொண்டேன். இது கூடப் பரவாயில்லை. சாதிப்பிரிவினையை அன்றிலிருந்து எதிர்த்த ஒரே கட்சி காங்கிரசுதான் என்று ஒரே போடாகப் போட்டார். அந்த அதிர்ச்சியில் மேடையில் இருந்த தலித் தலைவர்களும் ஏனைய அறிஞர் பெருமக்களும் வெட்கத்தில் சிவந்ததை தரிசிக்க முடிந்தது.

இந்த அமெரிக்கை நாராயணனுக்கு இரண்டாவது சீமான் என்றே பட்டமளிக்கலாம். அந்தளவுக்கு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரல் எடுத்தவர் பொதுவாக தருமபுரி தாக்குதலை கண்டித்தார். நானும் மேல்சாதிக்காரன் தான் ஆனா சாதி பார்க்கிறேனா என்றவர் திடீரென்று சட்டைக்குள்ளிருந்த பூணூலை கூட்டத்தின் முன்னால் உருவிக் காட்டினார். அவர் அப்படி செய்தது அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிப்போனது. அனைவரும் முகத்தை சுழித்தனர்.  திருமாவளவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூணூலில் சிக்கிய தலித்தியம் என்று இந்தக் கூட்டத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாமோ?

நான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் ஆனால் கிரீமி லேயரையும் ஆதரிக்கிறேன் நீங்களும் ஆதரிக்கணும். உங்கள் மத்தியிலிருந்து இடஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்து மேல வந்தவங்களுக்கு அதுக்கப்புறமும் எதுக்கு இடஒதுக்கீடு. வளர்ந்து மேல போய்ட்டா அப்புறம் எதுக்கு அது.  அதனால அதை நீங்களே எதிர்க்கணும் என்றார் நாராயணன்.

இருப்பினும் நாராயணன் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று பேசியதும் அண்ணன் திருமா முதலில் தனது கைகளை உயர்த்தி தட்டினார். அண்ணனே தட்டிவிட்டதால் அவரைத் தொடர்ந்து இளைஞர்களும் நாராயணனுக்கு கைகளை தட்டினர். நமக்கோ அழுகையே வந்தது.

நீங்கள் எல்லாம் நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு, பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் அப்போது தான் எல்லோரும் உங்களை மதிப்பார்கள் என்றார். அதன் பிறகு நமக்கு தமிழ்தேசியம் எல்லாம் வேண்டாம். இந்தியாவிற்குள்ளேயே இருப்பது தான் நமக்கும் நல்லது இந்தியாவிற்கும் நல்லது என்று அவர்கள் பேசும் தமிழ்தேசியத்தை அதே மேடையில் மறுத்து பேசிவிட்டு   தமிழா தமிழா நாளை நம் நாளை, தமிழா தமிழா நாடும் நம் நாடே என்று ரஹ்மான் பாட்டை பாடிவிட்டு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் என்று முடித்தார்.

நான் பார்ப்பான் என்று மேடையில் பூணூலை உருவியது முதல் அம்பேத்கர் எச்சரிக்கையாக இருக்கச்சொன்ன காந்தியை உயர்த்திப் பிடித்து, கிரிமிலேயர் மூலம் இடஒதுக்கீட்டை எதிர்த்து,  இந்திய தேசியத்தை ஆதரித்து, தமிழ்தேசியத்தை எதிர்த்து கடைசியில் ரஹ்மான் பாட்டை பாடியது வரை காங்கிரசுகாரன் தனது கருத்தை, அரசியலை எந்த எதிர்ப்புமின்றி இவர்களுடைய மேடையிலேயே பிரச்சாரம் செய்து விட்டு போய்விட்டான். விட்டால் இவர்களை ராமதாசையும் கூப்பிட்டிருக்கலாம் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஒருவேளை உண்மையில் கூப்பிட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அடுத்ததாக கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷீ என்று இராணுவ வீரர்களை போல உடை அணிந்து வந்திருந்த சினிமா டைரக்டர் களஞ்சியம் பேசினார். இவரும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் என்பது அன்றைக்கு தான் தெரியும். அந்த அமைபின் பெயர் “தமிழர் நலம்”. தமிழ் தேசியத்தை உய்விக்க வந்த இது எத்தனை ஆயிரமாவது இயக்கம் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் தேசியம் ஒரு மில்லியன் தலைவர்களை தொட்டுவிடுவது நிச்சயம்.

சாதி என்றால் என்ன என்று துவங்கியவர், வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களின் சாவுக்கு காரணமாவனவர்களை சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலுள்ள நம் தமிழ் சொந்தங்கள் கொன்றார்கள் என்று நக்சல்பாரி புரட்சியாளர்களையும் தமிழ் சொந்தங்களோடு சேர்த்துக்கொண்டார். மொத்தம் ஐந்து நிமிடம் இருபது நொடிகள் பேசிய களஞ்சியத்தின் உரையில் பதினேழு முறை தமிழ்ச் சொந்தங்களே, தமிழ் சொந்தங்களே என்கிற வார்த்தை வருகிறது.

அவர் கூறும் அந்த தமிழ் சொந்தங்களில் உள்ள வன்னிய தமிழ் சொந்தங்கள் தலித் தமிழ் சொந்தங்கள் மீது காட்டிய சாதிவெறித்தனத்தை கடுமையாக, சாதிவெறியர்கள் என்று குறிப்பிட்டு கண்டிக்காமல் பொதுவாக கூறிவிட்டுச் சென்றார். ஒரு வேளை வன்னிய தமிழ் சொந்தங்களின் மனது பாதிக்கப்படக்கூடாது என்று பரந்த தளத்தில் யோசித்திருக்கலாம் அல்லவா!

சரணடைதல்அடுத்தகூட்டம்சேவ் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரியில் நடைபெற்ற கூட்டம். இந்த கூட்டமும் தருமபுரி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிரான கூட்டம் தான்.  இந்த கூட்டத்தில் இரண்டு பேர் பேசியதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறேன்.

முதலில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணிபுரியும் அரங்க.மல்லிகாவின் உரை.

தலித் தலைவர்கள் யாரும் சரியில்லை என்றவர் அதன் பிறகு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள ? அடித்தால் உங்களுக்கு திருப்பி அடிக்கத்தெரியாதா, அடிக்க முடியவில்லையா ? இவர்கள் படங்களை கூட பார்ப்பதில்லையா ? ஏன் அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள், ஊமைகளாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். விட்டால் அனைவரும் ஜாக்கிசானிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு பறந்து பறந்து சண்டையிட வேண்டும் என்று கோருவார் போலும். பெரும்பான்மை ஆதிக்க சாதிவெறி சிறுபான்மை தலித் மக்களிடம் நடத்தும் வன்முறையின் அடிப்படை கூடத் தெரியாமல் ஏதோ அவர்களெல்லாம் கோழைகள் போலவும், இவரைப் போன்று நகரத்தில் பாதுகாப்பாக வளைய வருகிறவர்களெல்லாம் வீரர்கள் போலவும் கருதுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

பிறகு, சமூக தலைவர்கள் எல்லோரும் முதலில் ஒன்றாக கூடி உட்கார்ந்து பேசுங்கள். முடிந்தால் அந்த கூட்டத்திற்கு இராமதாசையும் அழையுங்கள் என்றார் ! அடிபட்டவனுக்கான பஞ்சாயத்தில் அடித்தவனையே நீதிபதியாக்கும் இந்த போராளிதான் தலித் மக்களை கோழைகள் என்கிறார். இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் சட்டத்தை திருத்த வேண்டும், இருக்கின்ற சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றார்.  சாதிப் பிரச்சினையே சட்டபிரச்சினையில் தான் இருக்கிறது என்பதை போல பேசினார். சட்டத்தை திருத்தினால் சாதியை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து அம்பேத்கர் காலத்திலேயே தோல்வியடைந்துவிட்டதை அவர் அறியவில்லை என்பதல்ல. அறிஞர்களிடம் தீர்வு கேட்டால் அது அவர்களது வீட்டறையின் யதார்த்தத்தோடு கூட பொருந்தி வராது. சமரசமே சரணாகதி என்றான பிறகு இறுதியில் சட்டத்தின் முன் மண்டியிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவ்வளவிற்கும் தலித் மக்களுக்கான பல்வேறு சட்டங்களெல்லாம் ஆதிக்க சாதிகளைப் பாதுகாக்கும் இந்த அமைப்பின் முன்னால் சுருண்டு படுத்துக் கிடக்கின்றன. அவற்றையே கிளப்ப முடியவில்லை எனும் போது புதிய சட்டங்கள் என்ன கிழித்து விடும்?

அடுத்ததாக பேசிய வ.கீதா,” என்னை ஒரு மேடையில் பேசும் பெண்ணியவாதியாவே மாற்றிவிட்டார்கள் அதனால் அந்த வகையிலேயே பேசுகிறேன். எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை என்று சாதி ஒடுக்குமுறை பற்றி பேசத் துவங்கியவர் உற்பத்தி உறவுகள், குடும்பம், பெண்கள் மீதான வன்முறை என்று பெண்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு இடத்தில் நிறுத்தி நிறைய சிதறல் சிதறலாக பேசிவிட்டேன். தொகுப்பாக சொல்லனும்னா பெரியார் தான் பெண்களை பற்றி நிறைய பேசியுள்ளார்” என்றார்.

திருமாவளவன் மீது எனக்கு நிறைய விமர்சனம் உண்டு மதிப்பும் உண்டு. பெண்கள் என்று வரும் போது அவர் கூட அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு பேசுறாரு என்ன பேச்சு இது ?  ஆதிக்கம் என்றாலே அது ஆணாதிக்கம் தான் இன்றைக்குள்ள முதலமைச்சர் செய்வது கூட ஆணாதிக்கம் தான் என்றார். கல்லூரி மாணவிகளை தொந்தரவு செய்வது தலித் மாணவர்கள் மட்டுமல்ல எல்லா பசங்களும் தான் செய்றாங்க என்றார்.

அதன் பிறகும் பெண்கள் பிரச்சினை பெண்கள் பிரச்சினை என்று தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர தர்மபுரியில் நிகழ்ந்த சாதி ஒடுக்குமுறை, அதற்கான காரணம், எதிர்காலத்தில் அதை எப்படி எதிர்கொளவது, அதை முற்றாக ஒழித்துக்கட்ட என்ன வழிமுறை, தீர்வு என்பதை பற்றி பேசவில்லை. இறுதியில் என்னை இப்படி மேடையில் ஏத்தி புலம்ப விட்டுட்டீங்களே என்கிற பொருள்படும்படி சலித்துக்கொண்டார். உண்மையான வாழ்க்கையை நேருக்கு நேர் சந்தித்து களப்பணியாற்றாத அறிஞர் பெருமக்களின் மனவழித்தடங்கள் எல்லாம் இப்படித்தான் போகாத ஊருக்கு வழிகாட்டுகின்றன. இதையே இவர்கள் பொது மேடையில் எல்லோருக்கும் தீர்வாகப் பேசுவது எவ்வளவு பெரிய வன்முறை!

‘கண்டன கூட்டங்கள்’ என்கிற பெயரில் நடப்பவை எல்லாம் இப்படி தான் காமடிக் கூட்டங்களாக இருக்கின்றன. பொதுவாக யாரையும் குறிப்பிடாமல் சாதிவெறி என்பதும் அதையும் குத்திக்கிழிக்கும் படி பேசாமல் புண்படாமல் தொட்டுச்செல்வது என்று தான் இருக்கின்றன. பாதுகாப்பான சென்னையில் கூட்டம் நடத்தும் போதே வன்னிய சாதிவெறி என்று உரத்து பேசமுடியாதவர்கள் விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எல்லாம் கூட்டம் நடத்தினால் எப்படி எல்லாம் பேசுவார்களோ என்று எண்ணிக்கொண்டே அரங்கை விட்டு வெளியே வந்தேன்.

_____________________________________________________

வினவு செய்தியாளர்
______________________________________________________

  1. அரசியலில் செல்லாக்காசாகி போன ராமதாஸ் தனது சாதியினர்களாலேயே சென்ற தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் புதிய வியூகத்தை கையிலெடுத்திருக்கிறார். வன்முறையின் மூலம் தனது சாதிய உணர்ச்சியை தூண்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (தலித்) எதிராக களம் திரும்புகிறார்.

    ‘ராமதாசின் இப்படிப்பட்ட அநாகரிமான நடவடிக்கைகள் எங்களை அதிர வைக்கிறது’ என்று அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    முதல் தொடக்கமாக நெல்லை பா.ம.க நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

    • யோவ் கட்சியில இருக்கவனையே கட்சியில சேக்குற மாதிரி இருக்கு நீ சொல்றது .. நெல்லையில எவன் பா .ம.க வுல இருந்தான் … இருந்தவன் யாருன்னு உலகத்துக்கே தெரியும் ..

  2. சாதி என்ற வார்தை வராமல் சாதி பிரச்சினையை பேசும் அட்டை கத்தி வீரர்களின் இழி முகத்தை கிழித்துள்ளது இந்த கட்டுரை. சரியான செருப்படி…

  3. எல்லா சாதிகாரணும் ஆதிக்கசக்தி சாதிவெறிஉள்ளவர்கள்,நீங்கமட்டும் ஒன்னும் தெரியாத பச்சிலம் குழந்தைகள் நீங்க செய்றத இப்ப அம்பேத்கார் பார்த்த அந்தாலே மானசா மாத்திட்டு போயிருவாரு. உங்கள இந்த உலகத்துல எங்கபாத்தலும் கண்டுபுடிக்கலாம்டா … அப்படி ஒரு மூஞ்சிடா ஒங்க மூஞ்சி

    • இதோ இது தான் சாதிவெறி. இந்தியாவுல பொறந்தவனுக்கு எல்லாம் எங்க ஜனநாயகத்தை பத்தி தெரியப்போவுது காட்டுமிராண்டி.

  4. தினமலரில் வரும் ‘நமது நிருபர்’ மாதிரி ‘வினவு செய்தியாளர்’. பெயரை குறிப்பிடலாமே.

  5. தமிழகத்தில் சாதி எதிர்ப்பு அரசியல் என்பதே ஒரு காமெடி…
    இந்த காமெடி கருஞ்சட்டைக்காலத்திலேயே ஆரம்பித்தாயிற்று…
    அடி விழாது என்றறிந்ததால் பார்ப்பன எதிர்ப்புப்புரானம் பாடி விட்டு படம் காட்டிகொண்டிருந்தார்கள் (இருக்கிறார்கள்) இந்த காமெடியன்கள்…அதை பெருவாரியான முட்டாள் (முக்கியமாக ஆதிக்க சாதிக்காரர்கள்) சனங்கள் கை கொட்டி ரசித்தனர் (ரசிக்கின்றனர்)…

    விளைவு: இன்று நாம் காண்பது…
    மக்களே,நம்மை வெச்சு இவன்கள் காமெடி பன்னிப்புட்டாங்க…

    • பாப்பான் எதிர்ப்பு தான் தேவை. அதை செயல்படுத்தாமல் வெற்று சாதி எதிர்ப்பு பேசுவதனால் தான் தமிழ் தேசியவாதிகள் சாதியத்தில் சரணடைகிறார்கள். பாப்பான எதுக்குரதுதான் கடினம்.

      • நல்ல நகைச்சுவை…
        பார்ப்பனீய எதிர்ப்பு தான் சாதி எதிர்ப்பின் முதல் படி…

        பலர் முதல் படியிலேயே உட்கார்ந்த்டுகொண்டு ஒழிந்தது சாதியம் என்று பிலிம் காட்டுகிறார்கள்…

        இதை நாங்கள் நம்ப மறுத்தால் பார்ப்பனன், சாதி வெறியன் என்று அவதூறு வேறு…

        • மரம் வெட்டி ஐயாவின் லேட்டஸ்ட் அறிக்கை தெரியுமா? “எங்களுக்கு மேல்சாதியான பார்பனர்களின் ஆதரவே இருக்கு”. ஏன் அவரு மற்ற ஆதரவளிக்கும் சாதிகளை குறிப்பிடவில்லை. ?

    • //நான் பார்ப்பான் என்று மேடையில் பூணூலை உருவியது முதல் அம்பேத்கர் எச்சரிக்கையாக இருக்கச்சொன்ன காந்தியை உயர்த்திப் பிடித்து, கிரிமிலேயர் மூலம் இடஒதுக்கீட்டை எதிர்த்து, இந்திய தேசியத்தை ஆதரித்து, தமிழ்தேசியத்தை எதிர்த்து கடைசியில் ரஹ்மான் பாட்டை பாடியது வரை காங்கிரசுகாரன் தனது கருத்தை, அரசியலை எந்த எதிர்ப்புமின்றி இவர்களுடைய மேடையிலேயே பிரச்சாரம் செய்து விட்டு போய்விட்டான். //

  6. தரும்புரி தாக்குதலைக் கண்டித்து கூட்டம் நடத்துபவர்கள் ,வன்னிய சாதியின் பெயரை கூட உச்சரிக்க முடியமல் போன இந்த முதுகெழும்பில்லா வெத்துவெட்டுகள் ,இந்த கட்டுரையை வாசிக்க ஒருமுறை கூடுமாயின் அடுத்து இனி ஒரு கூட்டம்நடத்தலாம் எண்ணம் கனவிலும் வராது.

  7. தோழர் வணக்கம்.அன்றைய கூட்டத்தில் நான் பேசியவற்றை முழுவதும் கேட்க வில்லையா?இல்லை சும்மா கிண்டல் பண்ணுவதற்காகவே எழுதியுள்ளிர்களா?புரியவில்லை.தாங்கள் அதுகுறித்து எனது பேச்சை திரும்ப கேட்டு விவாதிக்க தயாரா?எனது எண்;9042961702

    • இங்கே விவாதிப்பதற்கு விருப்பமிலாது ஏன் நம்பர் தந்து தனியாக விவாதிக்க முனைகிறீர்கள்

  8. லீனா மணிமேகலை பிரச்சனை தொடர்பாக,வினவு எழுதிய கட்டுரை ஒன்றில் அவரை சீமாட்டி என்று வினவு விமர்சித்திருந்தது.இதற்காக வினவு தளத்தை அ.மார்க்சின் சீடரும்.சி.பி.எம்.மின்.ஆதரவாளரும்,சமீபகாலமாய் புதியதாய் முற்போக்கு போராளி அவதாரம் எடுத்துள்ள‌ருமான கவின்மலர் தனது முகநூலில் கடுமையாய் விமர்சித்திருந்தார்.(சீமாட்டி என்கிற வார்த்தை பெண்களை ஆணாதிக்க வெறியுடன் குறிப்பிடும் சொல் என்பது கண்டுபிடிப்பு)
    இப்பொழுது நீங்கள் இந்தப்பதிவில் “சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்” என்னும் அமைப்பின் அபத்தமான அரைவேக்காட்டுத்தனமான செயல்பாட்டைக் கடுமையாய் நேர்மையாய் விமர்சித்திருக்கின்றீர்கள்.அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் தான் கவின்மலர்.
    அவர் இதற்கு என்ன மாதிரி போகிறபோக்கில் விமர்சிக்கப் போகிறாரோ..பதில் காரணங்களை அடுக்கப் போகிறாரோ?பொறுத்திருந்து பார்ப்போம்.

  9. ராமதாஸ் மருத்துவம் படிப்பதற்காக தன்னை தலித் என்று சொல்லி பொய்யான சாதிச் சான்றிதழ் பெற்று படிப்பை முடித்தார். பின்னர் அது அம்பலமாகி அவரது பயிற்சி தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் அப்போதிய முதலமைச்சர் காமராஜரை வன்னிய சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் அணுகி ராமதாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்கள்.

Leave a Reply to karthik பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க