privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

-

விதர்பா விவசாயிநாடெங்கும் ஆட்சியாளர்கள் 66-வது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்திலுள்ள வார்தா மாவட்டத்தின் சாகூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கண்பத் போரே என்ற 40 வயதான விவசாயி, கடன் சுமை தாளாமல் ஆகஸ்ட் 15 அன்று தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனார். அவர் பயிரிட்ட பி.டி. பருத்தி அதிக அளவு தண்ணீரையும் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விழுங்கி, செலவு அதிகரித்துக் கொண்டே போனதாலும், கடந்த 3 ஆண்டுகளாக பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்து போனதாலும், கடன் சுமை பெருகி கந்துவட்டிக்காரர்கள் நெருக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விதர்பா பிராந்தியத்தில் 11 பெரிய அணைகளும் 58 நடுத்தர அணைகளும் உள்ளன. ஆனாலும் இப்பகுதியில் பாசன வசதியோ மிக மோசமானதாக இருக்கிறது. பருத்தி விவசாயிகளோ தண்ணீர் முறையாகக் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இடுபொருட்களின் செலவுகள் அதிகரிப்போடு, முறையாகப் பாசன நீர் இல்லாமல் பயிர்கள் பாழாவதும், விளைச்சல் குறைவதும், கடன் சுமை பெருகுவதும், அதனால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பதும் தொடர்கிறது. விதர்பா பிராந்தியத்தில் மட்டும் கடன் சுமையால் 2002 முதலாக இதுவரை 8,200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இத்தற்கொலைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உருவாக்கப்படும் 71 அனல் மின்நிலையங்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவற்றில் 33 மின்நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரிலையன்ஸ், டாடா, எஸ்ஸார், இஸ்பட், ஜிண்டால் முதலான கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே இங்கு மின்திட்டக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளன. 38 மின் திட்டங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

12-வது ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மைய அரசு தீர்மானித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நடந்துவரும் விதர்பா பிராந்தியத்தில் அனல் மின்நிலையங்களைத் தொடங்கி 55,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவாகியுள்ளது. இதன்படி, ஏறத்தாழ 2,049.2 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு விவசாயத்துக்கான பாசன நீர் இம்மின்திட்டங்களுக்காகத் திருப்பி விடப்படும். இத்திட்டங்களால் வார்தா ஆற்றின் நீர்மட்டம் 40 சதவீத அளவுக்குக் குறையும்.

விவசாயத்துக்கும் குடிநீருக்குமான நீரை, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு ஒதுக்குவது சட்டவிரோதமானது. பருத்தி, கரும்பு விவசாயம் நடந்துவரும் விதர்பா பிராந்தியத்தின் கிராமப்புறங்களில் கிளைக் கால்வாய்கள் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், விதர்பா பாசன வளர்ச்சிக் கழகமோ இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறது. அரசாங்கமோ, விவசாயிகள் நீர்பாசனத்தைப் பயன்படுத்தாததாலேயே அவற்றை மின்திட்டங்களுக்குத் திருப்பி விட்டதாகப் புளுகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே தானே மாவட்டத்தில் 1996-இல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டத்தால் தகானு எனும் கிராமமே நாசமாகிவிட்டது. இவ்வட்டாரத்தில் பயிர்களின் மீது சாம்பல் படிந்து விளைச்சல் இல்லாமல் போயுள்ளதோடு, நீர்நிலைகள் பாழாகி கால்நடைகளுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், விவசாயத்துக்கு அல்லாமல் தண்ணீரை அனல் மின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டால் விதர்பா பிராந்தியமே வறண்ட பாலைவனமாகிப் போகும். அனல் மின் திட்டங்களால் விவசாயிகளில் சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டாலும், இலட்சக்கணக்கான இதர விவசாயிகளின் அப்பகுதியில் வாழக்கூட முடியாத நிலையில் தள்ளப்படுவார்கள். ஏற்கெனவே கடன் சுமையால் தற்கொலைகள் தொடரும் விதர்பாவில், விவசாயத்துக்குத் தண்ணீரும் இல்லாமல் போனால் விவசாயிகளின் தற்கொலைகள் மேலும் தீவிரமாகும். அதனாலென்ன? விவசாயமும் விவசாயிகளும் அழிந்தாலும் பரவாயில்லை, மின்திட்டங்கள்தான் முக்கியம் என்பதுதான் அரசின் அறிவிக்கப்படாத கொள்கையாகிவிட்டது. மின் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி இப்படி விதர்பா பிராந்தியத்தை நாசமாக்கும் செயல் நியாயப்படுத்தப்படுகிறது. மின் திட்டங்களுக்காக அரசின் சலுகைகளும் மானியங்களும் வாரியிறைக்கப்படுகின்றன.

விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மின்திட்டங்களை உருவாக்கிக் கொள்ளையடிக்கும் ஓட்டுப்பொறுக்கிகளும் முதலாளிகளும் இதற்கு முன்பாக இதே விதர்பா விவசாயிகளைக் காட்டி இன்னுமொரு கூட்டுக் கொள்ளையை நடத்தினர். மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் விவசாயிகள் கடனில் சிக்கி தற்கொலைகள் பெருகிய நிலையில், விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்களோ இத்திட்டங்களின் செலவினங்களைப் பலமடங்கு உயர்த்தி கொள்ளையடித்தனர்.

2009-இல் தேசியவாத காங்கிரசு அரசில் அஜித்பவார் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, 20,000 கோடி மதிப்பில் விதர்பா பிராந்தியத்தில் 32 திட்டங்களும் கொங்கண் பிராந்தியத்தில் 6 திட்டங்களுமாக மொத்தம் 38 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நாலே நாளில் முறைகேடாக அனுமதி அளித்தார். இத்திட்டங்களைச் செயல்படுத்திய ஒப்பந்ததாரர்களோ, விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டதைவிட 300% அளவுக்கு செலவுகள் அதிகரித்துவிட்டதாகக் கணக்கு காட்டினர். அது குறித்து அரசு விசாரணை ஏதும் செயாமலேயே, செலவை 6 முதல் 33 மடங்கு உயர்த்திக் கொள்ள தாராள அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக, வார்தா கீழணைத் திட்டத்துக்கான உத்தேச திட்ட மதிப்பீடு ரூ.950 கோடியிலிருந்து, திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ. 2,356 கோடியாக உயர்த்தப்பட்டது.

பா.ஜ.க. தலைவரான நிதின் கட்காரி இப்பிராந்தியத்தில் 5 மின் நிறுவனங்களையும் 3 சர்க்கரை ஆலைகளையும் வைத்திருக்கிறார். இதுதவிர, கட்டுமான நிறுவனம், சாராயம், விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றையும் கொண்டு மிகப் பெரிய முதலாளியாக அவர் வளர்ந்துள்ளார். கட்காரியின் பூர்த்தி பவர் நிறுவனக் குழுமத்தின் கீழ் அவினாஷ் எரிபொருள் எனும் நிறுவனம் மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. மாநிலங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

ஐடியல் ரோடு பில்டர் எனும் நிறுவனம் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் பூர்த்தி பவர் மற்றும் சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு நிதியளித்துள்ளது. நிதின் கட்காரி, முன்பு மகாராஷ்டிர மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, ஐடியல் ரோடு பில்டர் நிறுவனத்துக்குப் பல்வேறு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். அதற்குக் கைமாறாக ஐடியல் நிறுவனம் கட்காரியின் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துள்ளதாகக் கணக்குக் காட்டியது. கட்காரியின் மகன் நிகில், 270 மெகாவாட் திறன் கொண்ட ஐடியல் எனர்ஜி மின் நிறுவனத்தில் சுயேட்சையான இயக்குனராக உள்ளார்.

கட்காரியின் பூர்த்தி சர்க்கரை மற்றும் மின் நிறுவனத்தின் 70 சதவீதப் பங்குகளை 18 நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்த 18 நிறுவனங்கள் யார்? அவற்றின் பங்குதாரர்கள் யார் என்ற விவரத்துக்குள் போனால், அந்தப் பங்குதாரர்கள் எவருக்கும் முறையான முகவரியே இல்லை. உதாரணமாக, எர்ன்வெல் வர்த்தகர்கள் என்ற நிறுவனம் பூர்த்தி நிறுவனத்தில் 5 கோடிரூபா அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முகவரியாக மாலாட் கிழக்குப் பகுதியிலுள்ள கோவிந்த் கர்மான் குடியிருப்பிலுள்ள பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குடியிருப்பில் சென்று விசாரித்தால், அப்படியொரு நிறுவனமே இங்கு இல்லை என்று குடியிருப்போர் தெரிவிக்கின்றனர். பூர்த்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள பல பங்குதாரர்களின் கதையும் இதுதான். ஆனால் கட்காரியோ, பூர்த்தி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குதாரர்களாக இருப்பதால், அவர்கள் அடிக்கடி இடம் மாறியிருக்கலாம், அவர்களின் முகவரிகளைத் துல்லியமாக தெரிவிக்க வாப்பில்லை என்கிறார்.

மனோகர் பன்சீ என்பவர் கட்காரியின் வாகன ஓட்டுநர். அவர் அஷ்வாமி வர்த்தகம் என்ற நிறுவனத்தை நடத்துவதாகவும், அந்த நிறுவனம் கட்காரி நிறுவனத்தில் 3.2 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாகவும் கணக்கு காட்டுகிறார் கட்காரி. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றுதான் பா.ஜ.க. தலைவரான கட்காரியின் கூட்டாளியும் பா.ஜ.க. எம்.பி.யுமான அஜ சஞ்செட்டியின் நிறுவனமாகும். இந்நிறுவனம் தேசியவாதக் காங்கிரசு அரசுடன் கூட்டுச் சேர்ந்து செலவுத்தொகையை பலமடங்கு உயர்த்திக் காட்டியதும், விவசாயிகளின் நலனை முன்னிட்டு இந்த நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கட்காரி கடிதம் எழுதியுள்ளார். ஒப்பந்தக்காரர்களால் கூடுதலாகக் கோரப்பட்ட தொகையைச் செலுத்துமாறு மைய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிய கட்காரி, இந்த அணைக்கட்டுத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயிகளுக்குக் கொடுக்காமல், மின் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து மைய அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. இதுதான் விவசாயிகளின் நலனுக்காக உருகுவதாக நாடகமாடும் கட்காரியின் லட்சணம்.

போலி நிறுவனங்களின் பெயரால் கட்காரி நிறுவத்தில் முதலீடுகள் செயப்பட்டதையொட்டி குற்றச்சாட்டுகள் கிளம்பியதும், அவரைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு பா.ஜ.க. வின் தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ராம்ஜெத்மலானி,யஷ்வந்த் சின்கா ஆகியோரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் சத்ருகன் சின்காவும் போர்க்கொடி தூக்கினர். இத்தனைக்கும் பிறகும் கட்காரியின் மீதான குற்றச்சாட்டுகள் அவரது வர்த்தகத்தில் நடந்துள்ள தவறுகள்தானே தவிர, அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுப்பட்டார் என்பதற்கான ஆதாரமல்ல என்கின்றனர், அத்வானியும் குருமூர்த்தியும்.

விதர்பாவில் நிலவிய விவசாயிகளின் தற்கொலையையும் அவலத்தையும் காட்டி நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்கி கொள்ளையடித்த அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளும் முதலாளிகளும், இப்போது அந்த நீர்ப்பாசனத் திட்டங்களால் கிடைக்கும் தண்ணீரை மின்நிலையங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் மடைமாற்றிக் கொண்டுள்ளனர். விதர்பாவில் இப்போது பாசனத்துக்கு நீருமில்லாமல் போனதோடு, இப்பகுதியில் உருவாக்கப்படும் மின்திட்டங்களால் விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு பட்டினிச் சாவுக்குள் தள்ளப்படும் பேரபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் நிலவும் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு அதன் வழியாகக் கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர். தனியார்மயம் – தாராளமயம் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கொடூரமானது என்பதையும், அது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கானதுதான் என்பதையும் நாட்டுக்கு உணர்த்திவிட்டு தீராத அவலத்தில் புதைந்து கொண்டிருக்கிறது, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம்.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_____________________________________________________________