privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

-

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு  அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம்  கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர்  மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த  ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார்.  51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த  திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும்,  வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும்  என்பதும்தான் அவர்களது கோரிக்கை.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி  ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச்  செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித்  தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன்  பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம்  நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத்  தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று  ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல்  எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும்  பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து  கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசியவற்றுக்காகவே இவர்களை  வன்கொடுமைச் சட்டத்தில் உள்ளே வைத்திருக்க வேண்டும்.  ஆனால் அம்மாவின் அரசை விமரிசித்தாலே அவதூறு  சட்டத்தைப் பாய்ச்சும் ஜெ அரசு, இவர்கள் யாரையும் கைது  செய்யவோ வழக்குத் தொடரவோ இல்லை. வெளிப்படையான  இந்த சாதிவெறிப் பேச்சுகளையும், வன்கொடுமைச் சட்டம்  குறித்து ராமதாசு பரப்பும் அபாண்டமான பொய்களையும்  ஓட்டுக்கட்சிகள் கண்டிக்கவும் இல்லை. தனிக்குடியிருப்பு,  தனிச்சுடுகாடு, தனிக்கிணறு, தனிக்கோயில்கள்,  தனிக்குவளைகள் ஆகியவை கிராமப்புறங்களில் அமலில்  இருப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஊராட்சி  மன்றப் பிரதிநிதிகளும் தலைவர்களும் அவமதிக்கப்படுவதும்  நாடறிந்த உண்மை.

இவற்றுக்கெதிரான போராட்டங்கள் நடக்கும் இடங்களில் கூட  அரசு நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று  நாடகமாடுகிறதே தவிர, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்  வழக்குத் தொடர்வதில்லை. திண்ணியம் போன்ற  வழக்குகளிலேயே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் குற்றவாளிகள்  தண்டிக்கப்படுவதில்லை. தற்போது நடைபெற்றுள்ள நத்தம்  சாதிவெறியாட்டத்திலும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.  நாடு முழுவதுமே வன்கொடுமைத் தடுப்புச் சட்ட  அமலாக்கத்தின் யோக்கியதை இதுதான்.

சாதி மறுப்பு காதல் திருமணங்களாலும், வன்கொடுமை  வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாக  ராமதாசு சித்தரிப்பது, தனது சாதிவெறி அரசியலை  முன்னெடுத்துச் செல்வதற்கான தந்திரம். இதன் மூலம்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்ற பிரிவு மக்களிடம்  சாதிவெறியைத் தூண்டுகிறார் ராமதாசு. மறுகாலனியாக்க  கொள்கைகளுடைய தாக்குதலின் விளைவாக மக்களின்  அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் வெகு வேகமாக  அழிக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கெதிராகப்  போராடாமல் மக்களைத் திசை திருப்பும் சதியே இது.  பெரியாருடைய பணியின் காரணமாக, சாதிப் பெயரைப்  போட்டுக் கொள்வதே இழிவானது என்ற  பொதுக்கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கும் தமிழகத்தை,  மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல  முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள்  தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.

_____________________________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
____________________________________________________________