privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

-

முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற சில அரசு உதவித் திட்டங்கள் பண வடிவிலும், அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், எரிவாயு உருளை, டீசல், உரம் போன்றவைகளுக்கான மானியம் பொருள் வடிவிலும் வழங்கப்படும் தற்போதைய நடைமுறையை மாற்றி, அனைத்து மானியங்களையும், நல உதவித் திட்டங்களையும் பண வடிவில் மட்டுமே மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம் (Direct Cash Transfer) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், “உங்கள் பணம் உங்கள் கையில்” எனக் கவர்ச்சிகரமான முறையில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை முதற்கட்டமாக குறிப்பட்ட 51 மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி 1, 2013 முதல் அறிமுகப்படுத்தவும், 2013-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடெங்கிலும் கொண்டுவரவும் மைய அரசு திட்டமிட்டுள்ளது.

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதைப் பார்ப்பது அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாலும், அதனைக் கையிலெடுத்துக் கொஞ்ச முடியாது. அதனைப் போன்றதுதான் இந்தத் திட்டமும். “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தக் கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, பொது விநியோகத் திட்டத்தை, அதாவது ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் அபாயம் மறைந்திருக்கிறது.

ஆல்வார் பத்ரம்

தனியார்மயம்-தாராளமயத்தை அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டுவதை ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர். இக்கொள்கையின்படி ரேஷன் அட்டைகள், வெள்ளை அட்டை, பச்சை அட்டை எனப் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் ஒழித்துக்கட்டப்பட்டது. குறைந்த விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுவரும் வறிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்-சோனியா கும்பல். இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 29/- ரூபாய்க்கு மேலும், கிராமப்புறங்களில் 23/- ரூபாக்கு மேலும் கூலி பெறுவோர் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்ட கமிசன். இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனினும், நேரடி பணப்பட்டுவாடாத் திட்டத்தின் கீழ் தற்போதைக்கு 29 நலத் திட்டங்களை மட்டுமே கொண்டுவரப் போவதாகவும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இத்திட்டத்தின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப் போவதில்லை என்றும் மைய அரசு அறிவித்திருக்கிறது. இது, மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் எப்படிபட்ட எதிர்வினையைத் தோற்றுவிக்கிறது என ஆழம் பார்க்கும் தந்திரம் தவிர வேறல்ல.

இந்தத் திட்டம் முழுமையாக அமலாகும்பொழுது, ரேஷன் கடைகள் பெயரளவில் இருக்கும். ஆனால், அக்கடைகளின் ஊடாக அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது ரத்து செய்யப்பட்டு, அவை தனியார் மளிகைக் கடைகள் போல இயங்கும். இத்திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் தற்பொழுது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களைச் சந்தை விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்படும். அதன் பின், அவர்கள் வாங்கிய அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற பொருட்களுக்கான மானியம், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும்.

நோஞ்சான் குழந்தைஉதாரணத்திற்குச் சொன்னால், ஒருவர் ஒரு கிலோ அரிசியை முப்பது ரூபா என்ற சந்தை விலைக்கு வாங்குவதாகவும், அந்த அரிசியின் மானிய விலை மூன்று ரூபா எனவும் வைத்துக் கொண்டால், பொது மக்கள் மானிய விலையைவிடக் கூடுதலாகச் செலுத்திய தொகையை (ரூ.27/-), அரசு அவர்களுக்குத் திருப்பித் தரும். இந்த மானியத்தைப் பெறுவதற்குப் பொது மக்கள் ஒவ்வொருவரும் ஆதார் அடையாள அட்டையையும், வங்கிக் கணக்கையும் பெற்றிருக்க வேண்டும். எனினும், இந்தப் பணப்பட்டுவாடா பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிய இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே நடந்துவிடாது. குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கொரு முறைதான் மானியம் பொதுமக்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.

தற்பொழுது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களையும், 10 லிட்டர் மண்ணெண்ணெயையும் ஓரே தவணையில் வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் கூலித் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் தட்டுத் தடுமாறுவதோடு, பல நேரங்களில் பொருட்களை வாங்காமலும் விட்டுவிடுகிறார்கள். இப்படிபட்ட நிலையில் வறியவர்களையும் ஏழைகளையும் சந்தை விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென்ற கட்டாயத்திற்குள் தள்ளுவது, ரேஷன் பொருட்களைப் பெறுவதிலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்துவிடும். இத்திட்டம் பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட டெல்லியிலும், ராஜஸ்தானிலும் கிடைத்த அனுபவங்கள் ஏழைகள் ஒதுக்கப்பட்டதை நிரூபித்திருக்கின்றன.

• • •

இராசஸ்தான் மாநிலம் – ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்காசிம் என்ற பகுதியில் ரேஷன் கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் வழங்குவது பரிசோதனையின் அடிப்படையில் நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, மானிய விலையில் ஒரு லிட்டர் ரூ.15/-க்கு விற்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சந்தை விலையில் (ஒரு லிட்டர் ரூ.50/-க்கு) விற்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை அதளபாதாளத்துக்குச் சரிந்தது. அப்பகுதியிலுள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சந்தை விலையைக் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்வது கட்டுப்படியாகாமல், அவர்கள் மண்ணெண்ணெய் வாங்குவதையே நிறுத்திவிட்டதால்தான் இச்சரிவு ஏற்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலியான பச்சன் சிங், “கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் முடிய 1,000 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கியிருக்கிறேன். ஆனால், ராஜஸ்தான் கிராமிய வங்கியில் உள்ள எனது கணக்கில் இதுவரை ஒரு பைசாகூட மானியமாக வரவாகவில்லை. இனியும் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க வழியில்லாததால் விறகு வாங்கத் தொடங்கி விட்டேன்” என்கிறார்.

கோட்காசிம் பகுதியிலுள்ள புர் கிராமத்தைச் சேர்ந்த பத்ரம் என்பவர், “ரேஷன் கார்டு எனது தந்தையின் பெயரிலுள்ளது. வங்கிக் கணக்கோ எனது பெயரில் உள்ளது. அரசு அதிகாரிகள் இதைக் காட்டி எனக்கு மானியம் வழங்க மறுப்பதால், நான் மண்ணெண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார்.

இப்படிபட்ட காரணங்களால்தான் அப்பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை சரிந்து போனது என்பதை முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட அம்பலப்படுத்திய பிறகும், அரசோ, “போலி ரேஷன் கார்டுகளும் மண்ணெண்ணெய் கடத்தலும் ஒழிந்தததால்தான் இச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தில் 79 சதவீதம் வீணாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுதான் இத்திட்டத்தின் வெற்றியென்றும்” தம்பட்டம் அடித்து வருகிறது.

‘‘ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது ஏற்படும் நிர்வாகப் பிரச்சினைகளால்தான் கோட்காசிம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியம் முறையாகக் கிடைக்காமல் போயிருக்கிறது. வங்கிகளின் முகவர்கள் கிராமப்புற மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து மானியத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எனவே, சில்லறை பிரச்சினைகளைக் காட்டி இப்பணப்பட்டுவாடா திட்டத்தை எதிர்க்கக் கூடாது” என வாதிடுகிறார், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

• • •

குடும்ப அட்டைதாரர்களின் வாசல் கதவைத் தட்டி மானியப் பணத்தைக் கொடுத்தாலும்கூட, இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதுதான். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மையமான நோக்கமே உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளும் கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் மக்களைத் தள்ளிவிட வேண்டும் என்பதுதான். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன. உணவுப் பொருள் மானியத்தையும், அரசு கொள்முதலையும் ஒரே அடியில் ஒழித்துக் காட்டினால், அது அரசியல்ரீதியாகத் தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும் என்பதாலேயே, இவற்றைக் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டும் நோக்கில் நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.

மன்மோகன் சிங் -

பணமாக அல்லாமல், உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை மானிய விலையில் பொருளாக வழங்கும்போது மட்டுமே சந்தையில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புண்டு. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருளின் விலைக்கும், அவற்றின் சந்தை விலைக்கும் வேறுபாடு கிடையாது என்ற நிலையை உருவாக்கும்பொழுது, அரசு சந்தையில் தலையீடு செய்வது முடிவுக்கு வந்துவிடும்.

பதுக்கல், வர்த்தகச் சூதாட்டம் போன்ற பல கிரிமினல் நடவடிக்கைகளால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியும்; உணவுப் பொருட்களின் விலைகளைச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்த பதுக்கல் வியாபாரிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் நாடெங்கும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டன. அக்கடைகள் இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வண்ணம் அரசால் இயக்கப்படாவிட்டாலும், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் நடைமுறை இருந்து வருவதால்தான், ஏழை மக்களுக்கு அரைகுறை உணவுப் பாதுகாப்பாவது கிடைத்து வருகிறது. நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நிலையைத் திருப்பிப் போட முயலுகிறது, மன்மோகன் சிங் கும்பல்.

இன்னொருபுறமோ, உணவுப் பொருள்களின் விலைகள் சந்தையில் உயருவதற்கு ஏற்றவாறு மானியத்தை உயர்த்திக் கொடுக்கவும் அரசு முன் வராது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையைக் குறைக்க மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டி வரும் அரசு, சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்திக் கொடுக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் சந்தையின் சூதாட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியது தவிர, வேறு வழி இருக்காது. குறிப்பாக, வறிய நிலையில் வாழும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், பழங்குடி மக்கள் ஆகியோர் ஒன்று, சந்தை விலையில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும், அல்லது பட்டினி கிடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

‘‘மக்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ஒரு ரூபா மானியத்திலும் வெறும் 15 பைசாதான் அவர்களைச் சென்று சேர்கிறது. மீதியை இடைத்தரகர்கள் தின்று தீர்த்துவிடுகிறார்கள்” என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டுப் போனதைச் சுட்டிக்காட்டி, இந்த இடைத்தரகர்களை ஒழித்து, மக்களுக்கு ஒதுக்கப்படும் மானியம் முழுமையாக அவர்களைச் சென்று சேர்வதற்காகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகப் பீற்றி வருகிறது, காங்கிரசு கும்பல். உணவு மானியமாக, உர மானியமாக ஒதுக்கப்படும் இந்தப் பணத்தைக் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க தனியார் வங்கித் தரகர்கள் (Bank Correspondents) நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில்லறை வர்த்தகத்தில் உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்கள்; மானியத்தில் புகுந்து விளையாடும் இடைத்தரகர்களை ஒழிக்க வங்கித் தரகர்கள்!

கிராமப்புறங்களைச் சேர்ந்த கந்துவட்டி பேர்வழிகள், உர வியாபாரிகள் போன்ற பழைய நிலப்பிரபுத்துவக் கும்பல்கள்தான் வங்கித் தரகர்களாக அவதாரமெடுத்துள்ளனர். இக்கும்பல் கிராமப்புற ஏழை மக்களை ஏற்கெனவே பல்வேறு வழிகளில் சுரண்டியும் ஏய்த்துப் பிழைத்தும் வரும் நிலையில், மானியத் தொகையை முழுங்கி விடாமல், அதில் கமிசன் அடிக்காமல் பட்டுவாடா செய்வார்களா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். எனினும், இவர்களின் கைகளில் ஒரு ரூபாயல்ல, இரண்டு ரூபாயல்ல, ஏறத்தாழ 1,50,000 கோடி ரூபாய் மானியப் பணத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார், மன்மோகன் சிங். ரேஷன் கடைகளில் நடக்கும் உணவுக் கடத்தல் – ஊழலைவிட, மானியத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைத்திருக்கும் இத்தாராளமய நடவடிக்கைதான் மிகப் பெரிய ஊழலாகும்.

வங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும் இருந்தால் ஊழலும் மோசடியும் நடைபெறாது என மன்மோகன் சிங் கும்பல் நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால், இது வெற்றுப் பிதற்றல் என்பதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆதார் அட்டை உண்மையான பயனாளிகளை நல உதவித் திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத்தான் பயன்பட்டுள்ளது என்பதை வறிய மாநிலமான ஜார்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆதார் அட்டைத் திட்டம் இதுநாள் வரை நாடாளுமன்றத்தின் ஒப்பதலையும் பெறவில்லை; நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த அட்டை வழங்குவதைச் சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளவில்லை. மானியத்தை ஒழிப்பதைவிட, ஆதார் அட்டைகள் மூலம் ஏழைகளை ஒழித்துக் கட்டுவது எளிது என்பதனால்தான், குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் மட்டுமே மானிய உதவியைப் பெற முடியும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார், மன்மோகன் சிங்.

நேரம் காலம் பாராமல் உழைத்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கிடைக்கும் கூலியைக் கொண்டுப் போதிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகும் நிலையில், ரேஷன் கடைகளில்கூட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது என்ற நிலைமை மக்களின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது? குடிப்பழக்கம் பெருகிவரும் வேளையில், குடும்பத் தலைவரின் பெயரில் வங்கியில் போடப்படும் மானியத் தொகை, உணவு வாங்கப் பயன்படுமா, டாஸ்மாக் கடைக்குப் போகுமா? ஏறத்தாழ 70 சதவீத மக்கள் வெறும் 20 ரூபாயை மட்டுமே தினக் கூலியாகப் பெறுகிறார்கள் என்ற நிலையில், மக்களுக்குக் கிடைத்து வந்த அரைகுறை உணவுப் பாதுகாப்பையும் பறிப்பது பட்டினிச் சாவுகள் என்ற பேரழிவைத்தான் ஏற்படுத்தும். இந்த அபாயத்தை உணர்ந்து, “உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற இந்த நயவஞ்சகத் திட்டத்தைப் பரிசோதனை அடிப்படையில்கூட நடத்தவிடாமல், உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணமிது.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013

_______________________________________________________