privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 14/01/2013

ஒரு வரிச் செய்திகள் – 14/01/2013

-

செய்தி: சென்னையில் ஏழைகள், கூலி வேலை செய்பவர்களுக்காக 1000 சலுகை விலை உணவகங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: தினமும் டாஸ்மாக்கிற்கு ரூ.100 மொய் எழுதி தமிழக அரசை வாழவைக்கும் ஏழைகளுக்கு பத்து ரூபாயில் உணவு போடும் மனிதாபிமானமும், கையேந்தி பவன்களை ஒழித்து பெரிய உணவகங்களை வாழவைக்கும் தொலை நோக்குத் திட்டமும் ஃபுல் அரிக்க வைக்கிறது.

_____

செய்தி: தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு இளைஞர்கள் அடிமையாகிவிட வேண்டாம் என ‘தினமணி’ கார்ட்டூனிஸ்ட் மதி கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதி: மதி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமணி முதலாளி அனைவரும் ஜெயலலிதாவுக்கு அடிமையாக இருக்கும் போது ஒரு இளைஞர் செல்பேசிக்கு அடிமையாக இருப்பதால் என்ன பாதிப்பு நடந்து விடும்?

_____

செய்தி: திங்கட்கிழமை மாலை சபரிமலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சியளிக்கும் மகர ஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

நீதி: கேரள மின்வாரியம் மலையுச்சியில் ஆள் போட்டு பிடிக்க வைக்கும் இந்த செட்டப் ஜோதியைக் காணவா இவ்வளவு கூட்டம் என்று ஐயப்பனே வெட்கப்படுகிறாராம்.

_____

செய்தி: ராகுல் காந்திதான் எங்கள் தலைவர்; வரும் மக்களவைத் தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்ப்பதாக மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியிருக்கிறார்.

நீதி: காங்கிரஸ் கட்சியினர் சாகும் வரை நேரு குடும்பத்தின் அடிமைகள் என்பதை சாகும் வரை ஓதிக்கொண்டே இருப்பார்களோ?

_____

செய்தி: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, இந்த ஆண்டு திங்கள் கிழமை தொடங்குகிறது. மகரசங்கராந்தி தினத்தில் துவங்கி மகாசிவாரத்திரியில் நிறைவடையும் இந்நிகழ்வின் போது கோடிக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி: போராட்டத்தில் குதிக்க வேண்டிய மக்கள் ‘புனித’ அழுக்கு கங்கையில் குளிப்பதால் வாழ்க்கையும் மாறாது, அரிப்பும் நிற்காது.

_____

செய்தி: ஆதரவற்ற ரசியக் குழந்தைகளை அமெரிக்கா தத்து எடுப்பதை தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து மாஸ்கோவில் ஆயிரக்கணக்கானோர் உறையும் பனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதி: சோசலிசத்தை ஒழித்த முதலாளித்துவ ரசியாவில், அநாதைகள் வாழ முடியாது என்பது யாருக்கு அவமானம்?

_____

செய்தி:  பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்தபோது, 12 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்; 22 நாடுகளுக்கு சென்றதில், 205 கோடி ரூபாய் செலவானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நீதி: ரப்பர் ஸ்டாம்பே ஆனாலும் நாலு ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசை இருக்காதா?

_____

செய்தி: 14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: தொழில், அரசியல், சினிமா, பத்திரிகைகள் என்று தொடரும் ராஜ குடும்ப வாரிசுப் பாரம்பரியத்தில் கிரிக்கெட்  இல்லை என்ற குறையை சச்சின் நீக்கியது சாதனையில்லையா?

_____

செய்தி: வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் தனது உயிரை காப்பாற்ற போராடி வருகிறார் என முன்னாள் துணை அதிபர் எலியாஸ் ஜாவ்வா தெரிவித்துள்ளார்.

நீதி: சாவேஸ் பிழைப்பதற்க்காக வெனிசூலா மக்கள் பிராத்தனை செய்வார்கள். சாவதற்காக அமெரிக்கா காத்திருக்கும், முடிந்தால் முயற்சியும் செய்யும்.