privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

-

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா?

இந்தியத் தலைநகர் தில்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றம், அதுவும் குறிப்பாகக் கும்பல் பாலியல் வல்லுறவுக் குற்றம் எப்போதாவது அரிதாக நடக்கும் நிகழ்வு அல்ல. “இந்தியாவின் வல்லுறவுத் தலைநகர்” என்ற வெறுக்கத்தக்க பெயர் பெறும் அளவுக்கு வாடிக்கையாகி விட்டது. ஒரு நாளைக்கு சராசரி இரண்டாவது நடப்பதுதான் என்கிறவாறு அதிகரித்துவிட்டது. காஷ்மீர், கிழக்கு- வட கிழக்கு மாநிலங்கள் போன்ற போராட்டக் களங்களிலும் கிராமப்புற எளிய ஒடுக்கப்படும் மக்கள் மீதும் வல்லுறவுக் குற்றங்கள் ஏராளமாக நடந்தபோதும் பெருந்தன்மையுடன் அமைதி காத்து வந்த தலைநகர்வாழ் குடிமக்களை” கடந்த மாதம் 16-ஆம் நாள் முன்னிரவு நேரம் தில்லியில் நடத்தப்பட்ட கொடூரமான கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் பொங்கி எழச் செய்துவிட்டது.

குறிப்பாக, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளின் மாணவி-மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், இளந்தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் வெறுப்பு, ஆத்திரம், கோபம் கொப்பளிக்கத் தில்லி அதிகாரபீடங்களின் வாயில்களில் தினமும் குவிந்தார்கள். தடுப்புக் கம்பிகளையும், தடுப்பு அரண் கட்டைகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டு முன்னேறினார்கள். வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவும், பெண்களுக்குப் பாதுகாப்பும் அதற்குரிய கடும் சட்டங்கள் போடவும் கோரி முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும், மெழுகுவர்த்திகள் ஏந்தி பிரார்த்தனைகளும் ஆவேச முழக்கங்களும் எழுப்பி அமைதியாகப் போராடினரார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரடியாகத் தம்முன் வந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டுமென்பதுதான் அவர்களது உடனடி வேண்டுகோள்.

போலீசு தாக்குதல்
பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் மீது வெறியோடு பாயும் இந்தியாவின் வல்லுறவுத் தலைநகரப் போலீசு

ஆனால், பெண்களுக்கு எதிரான எல்லாப் பாலியல் குற்றங்களும் இந்த அளவுக்கு வளர்வதற்குக் காரணமாக இருந்த அரசியல்-அதிகாரக் குற்றவாளிகள், தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதலைக் கண்டித்துக் குரல் கொடுப்பவர்களின் வரிசையில் முன்னணியில் வந்து நின்று கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டத்தைக் கடுமையாக்குவது முதல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வல்லுறவு உணர்வுகளை காயடிக்கும் மருந்து ஊசி போடுவது வரை வல்லுறவுக் குற்றங்கள் மீது கட்சி வேறுபாடின்றிக் கடும் உக்கிரம் காட்டினர். இந்த வகையில் செய்தி ஊடகங்களும் முன்னிலையில் நின்றன. ஆனால், தில்லித் தெருக்களில் போராட்டங்கள் வலுப்பெற, வலுப்பெற இக்கட்சிகளின், ஊடகங்களின் அணுகுமுறை நிறம் மாறத் தொடங்கியது. ஆளும் கட்சிகளும் அதிகார அமைப்புகளும் அடக்குமுறைகளைக் கையிலெடுத்தன. “இளைஞர்கள் – மாணவர்களின் போராட்டங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. சமூக விரோத கும்பல்கள் ஊடுருவி விட்டார்கள்” என்று கூறி போலீசு அதிரடிப் படைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போலீசுக் காட்டுமிராண்டித்தனம் என்று தொடக்கத்தில் கண்டித்த ஊடகங்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மிகையானவை, நிறைவேற்றகூடியவை அல்ல எனக் காட்ட ஆரம்பித்தன.

கல்லுளிமங்கர்களான சோனியா-மன்மோகன் கும்பல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சட்டங்கள் கடுமையாக்கப்படும், பேருந்துகளில் காமிராக்கள் பொருத்தப்படும், போலீசு ரோந்து அதிகரிக்கப்படும் என்று ஒருபுறம் வாக்குறுதி அளித்தது. மறுபுறம், ருசிய அதிபர் வருகைக்கு முன்பு தில்லி தெருக்களைச் சுத்தம் செய்துவிட வேண்டும் என்றும், வல்லுறவு தாக்குதலுக்குப் பலியாகி உயிருக்குப் போராடிவரும் பெண்ணுக்கு எதாவது நிகழ்ந்தால், அதுவும் இந்தியாவில் நிகழ்ந்தால் விபரீத மாகிவிடும் என்றும் சதித்தனமாகத் திட்டமிட்டது. போராட்டங்களை ஒடுக்கவும், அப்பெண்ணுக்கு உயர் சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் அனுப்பவும் உத்திரவு போட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். விரைவில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும், விரைவு நீதிமன்றத்தில் விசாரித்துக் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவர்; போராட்டங்களை முடித்துக் கொண்டு இருப்பிடங்களுக்குத் திரும்புங்கள் என்று அதிகார பீடங்கள் எச்சரித்தன.வல்லுறவுத் தாக்குதலுக்குப் பலியான அப்பெண் சிங்கப்பூரில் இரண்டே நாளில் மரணமடைய, அரசு அவள் உடலை இரவோடு இரவாக கொண்டு வந்து சில நிமிடங்களில் எரியூட்டி விட்டது. இனிச் சட்டம் தனது வழக்கமான வேலையைச் செய்யும்! மக்கள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள்!

பஞ்சாப் சம்பவம்
தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதைத் தட்டிக் கேட்ட குற்றத்துக்காக அமிர்தசரஸ் கடைவீதியில் ஆளும் அகாலிதளக் கட்சித்தலைவர்களுள் ஒருவனான ரஞ்ஜித்பால் சிங்-ஆல் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் போலீசு உதவி ஆய்வாளர் ரவீந்தர்பால் சிங். இந்த அநீதியை யாரும் தட்டிக் கேட்கவில்லையே என்று கதறியழும் அவரது மகள்.

இதற்கிடையே, பாலியல் வன்முறைக் குற்றங்களுக்குப் பெண்களே காரணமென்றும், குற்றவாளிகளை நியாயப்படுத்தியும், குடியரசுத் தலைவரின் மகன் உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பேச ஆரம்பித்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பாலியல் குற்றவாளிகள் கணிசமான பேர் உறுப்பினர்களாக உள்ளபோது, மாநிலப் போலீசுத் தலைமை அதிகாரிகள் முதல் போலீசில் பலரும் பாலியல் குற்றவாளிகளாக உள்ளபோது, இதில் ஒன்றும் வியப்பில்லை. தில்லியே வல்லுறவுத் தலைநகர் என்று பெயர் பெற்றுள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகள் வேறு எப்படி இருக்கும்?! காசுமீரிலும், வடகிழக்கு, கிழக்கு-மத்திய இந்தியாவில் பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஒடுக்குவது என்ற பெயரில் அரசின் ஆயுதப்படைகளே கும்பல் பாலியல் வன்முறை குற்றங்களைக் கேள்விமுறையின்றி நடத்தி வருகின்றன. தில்லி சம்பவம் நடந்த நாளுக்கு முன்னும் பின்னும் ஒரிசா, தில்லி, தமிழ்நாடு, மும்பை என்று பெருந்திக்குகளிலும் பாலியல் வல்லுறவுக் குற்றச்செய்திகள் குவிகின்றன. ஒன்றரை வயது, பதின்வயது குழந்தைகள், சிறுமிகள், பள்ளி மாணவிகள் பெருமளவு வல்லுறவுக்குப் பலியாகும் அவலங்கள் ஆட்கொல்லி நோயைப் போல பரவுகின்றன.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்துதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்திரவு போட்ட அடுத்த நாள், பஞ்சாபின் ஒரு நகரில் பட்டப் பகளில் 5 வாலிபர்கள் கடைத்தெருவில் தந்தையுடன் போன இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். தடுக்கப்போன அவளது தந்தை ஆளும் அகாலித் தள உள்ளூர்த் தலைவனால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவன் போலீசு துணை இன்ஸ்பெக்டர். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு போலீசு பட்டாளம். இதே போன்று பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான வேறொரு இளம் பெண் அகாலி தளத் தொண்டர்களால் அடுத்த வாரம் தாக்கப்பட்டார். மும்பையில் தன் அண்டை வீட்டு இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டு போனான் ஒரு இளைஞன். அப்பெண்ணைக் கேலி கிண்டல் செய்த கும்பலை எதிர்த்ததற்காக அந்த கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டான் அந்த இளைஞன்.

இவ்வாறான பாலியல் வெறிச் சம்பவங்கள் இந்நாட்டில் அதிகரித்து வருவது ஏன்? ஏற்கனவே, பிற்போக்கு ஆணாதிக்க சமுதாயத்தைக் கொண்ட இந்திய சமூகத்தின் மீது புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய தாராளவாத அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்கள் திணிக்கப்பட்டதன் விளைவாக பெண்களும் நுகர்வுவெறிக்கான பண்டமாகக் ஆணாதிக்க பாலியல் வெறியர்களால் கருதப்படுகின்றனர். புதிய சீர்திருத்தவாதமும் தாராளமயமும் பெண்களுக்குப் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால், அவ்வாறான மாயத்தோற்றத்துக்கு பலரும் பலியாகின்றனர். வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா? பாலியல் குற்ற விசாரணை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நீதியரசர்களிடமிருந்து நீதி கிடைக்குமா?
_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________