privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

-

ரவுடி ஜெயலலிதாண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் மாநாட்டின் நிறைவில் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள அதிரடி அறிவிப்புகள், பாசிச ஆட்சியைச் சட்டபூர்வமாகக் கட்டவிழ்த்துவிடுவதற்கான முன்னறிவிப்பாகவே அமைந்துள்ளன. இம்மாநாட்டில், போலீசாருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ள ஜெயலலிதா, தற்போதுள்ள குண்டர் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவது, இணையக் குற்றங்களை (சைபர் கிரைம்) குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது, மறியல் செய்வதற்கு முப்பது நாட்களுக்கு முன்னதாக அனுமதி வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது – என மூன்று சட்டத் திருத்தங்களை அறிவித்துள்ளார்.

தொடர் குற்றங்களில் ஈடுபடும் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள், கள்ளச் சாராயம் காச்சுவோர் போன்றோரைத் தண்டிப்பது; வெளியில் இருந்தால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அத்தகையோரைக் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என்று கூறிக் கொண்டுதான் பிணை ஏதுமின்றி ஓராண்டு காலத்துக்குச் சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குற்றச் செயல்களிலிருந்து தடுப்பதற்கான இச்சட்டத்தை இப்போது, ஒருவர் முதன்முறையாகக் குற்றம் செய்தால்கூட ஏவலாம் என்றும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்கலாம் என்றும் இச்சட்டத்தைத் திருத்தி விரிவாக்கியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.

ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச் சட்டத்தின்படி, அரசுக்கு எதிராகப் போராடும் புரட்சிகர -ஜனநாயக சக்திகளும் எதிர்க்கட்சியினரும் நாடெங்கும் ஒடுக்கப்பட்டனர். அக்கொடிய சட்டத்தைக் கொண்டு 1990-களில் பாசிச ஜெயா அரசு ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புகளையும் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகளையும் கொடூரமாக ஒடுக்கியது. அடிப்படை மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட ஜனநாயக விரோதச் சட்டம்தான் இது. இச்சட்டத்தின் நீட்டிப்பாகவே, தொடர் குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தன்னளவிலேயே ஜனநாயக விரோதமான இச்சட்டம், பின்னர் திருட்டு விசிடி தயாரிப்போர், விற்போர் மீது ஏவும் வகையில் விரிவாக்கப்பட்டது.

தமிழகத்தில் குண்டர் சட்டத்தைப் போலக் கேடாகப் பயன்படுத்தப்பட்ட சட்டம் வேறு எதுவும் இல்லை. குண்டர் சட்ட வரையறைக்குள் வராதவை என்று 99 சதவீதத்துக்கும் மேலான வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க.தலைவர்களும் முன்னணியாளர்களும் இச்சட்டத்தால் பழிவாங்கப்பட்ட கதையை அனைவரும் அறிவர். எதிர்க்கட்சியினரை முடக்குவதற்கானதாக மட்டுமின்றி, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் பறித்து மக்களை ஒடுக்கும் நோக்கத்துடன் அச்சட்டத்தின் எல்லைகள் இப்போது மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிடலாம் என்கிற புதிய விதியானது, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடிய விதியாகும். மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடும் உழைக்கும் மக்களும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களும், காவிரி- முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகப் போராடும் விவசாயிகளும், இனி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம். பொது அமைதி என்றால் என்ன என்பதை மாவட்ட ஆட்சியரும், போலீசு அதிகாரிகளும், அரசு வழக்குரைஞர்களும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிப்பார்கள். இதன் மூலம் எந்தவிதமான சட்டபூர்வமான போராட்டங்களைக்கூட நடத்த முடியாத நிலைமை ஏற்படும். உழைக்கும் மக்கள் ஒரு கண்டன ஊர்வலம் நடத்தும்போது, அதனால் பொதுப் போக்குவரத்துக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டால் கூட, அதனைப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி, முன்னணியாளர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிட முடியும்.

ஏற்கெனவே உள்ள தகவல்-தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின்படி, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொத்துக்கள் குவிந்தது எப்படி என்று டுவிட்டரில்” விமர்சித்ததற்காக புதுச்சேரியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில், பால்தாக்கரேயின் மரண ஊர்வலத்துக்காக மும்பை நகரம் முடக்கப்பட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கருத்துரிமையைப் பறிக்கும் இக்கொடிய சட்டப் பிரிவானது, இப்போது குண்டர் சட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நோக்கம், அரசுக்கு எதிராகக் கருத்துக்களைச் சொல்பவர்களை மிரட்டி ஒடுக்குவதற்குத்தான். அதாவது, இனி ஜெயலலிதாவை நையாண்டி செய்து யாராவது கேலிச்சித்திரம் வரைந்தால்கூட அவர் மீதும் குண்டர் சட்டம் பாயும். இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துகளை வெளியிட முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளை பாசிச ஜெயாவின் இச்சட்டத்திருத்தம் கீழறுத்துப் போட்டுள்ளது.

இத்தனையும் போதாதென்று, மறியலில் ஈடுபடுபவர்கள் 30 நாட்களுக்கு முன்னதாக போலீசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்ற விதியானது, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடூரத் தாக்குதலாகும். தங்கள் குரலை ஆட்சியாளர்கள் செய்விமடுக்காதபோது, உழைக்கும் மக்கள் வேறுவழியின்றி பயன்படுத்தும் ஒரு ஆயுதம்தான் மறியல் போராட்டம். இது அநீதிக்கு எதிரான மக்களின் போராட்ட வடிவம். ஒரு ஊரில் சாதியக் கொடுமையோ, அல்லது போலீசின் அட்டூழியமோ நடந்தால், அப்போது நாட்டு மக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க மறியல் போராட்டம் முக்கியமான போராட்ட முறையாக உள்ளது. இது வன்முறைப் போராட்டம் அல்ல. இருப்பினும், இத்தகைய போராட்டம் நடத்தும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு எதிராக நள்ளிரவில்கூட குடும்பத்துடன் திரண்டு, வேறுவழியில்லாத நிலையில்தான் உழைக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போலீசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கேலிக்கூத்தானது மட்டுமின்றி, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையே குழிபறிக்கும் செயலாகும். மறியல் போராட்டத்தை முற்றிலும் தடை செய்யவில்லை என்று காட்டிக் கொண்டு, மறியல் போராட்டத்தைத் தண்டிக்கத்தக்க குற்றமாக மாற்றியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.

தனியார்மய – தாராளமயத் தாக்குதல் தீவிரமாவதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்களின் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகி வருகின்றன. அதை முந்திக் கொண்டு பாசிச அடக்குமுறைச் சட்டங்களும் பெருகி வருகின்றன. தனியார்மய – தாராளமயத்துக்கு எதிராகப் போராடுபவர்களை எவ்விதத் தடையுமின்றி ஒடுக்குவதற்காகவே தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும், தடா-பொடா சட்டங்களின் மறு அவதாரமான “ஊபா”வும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் ஆதார் அடையாள அட்டை கொண்டுவரப்படுகிறது. பெருகிவரும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவே, இப்போது குண்டர் சட்டத்தின் எல்லைகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சமச்சீர் கல்வி, பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரியில் பிரச்சினை முதலானவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள பாசிச ஜெயா கும்பலின் ஆட்சியை போலீசு அடக்குமுறையும் பாசிச சட்டங்களும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. “ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா திருந்திவிட்டார், இவர் பழைய ஜெயலலிதா அல்ல” என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் அவருக்கு ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதைத் தனது அதிரடி பாசிச சட்டங்களின் மூலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்மென்றால் பொய்வழக்கு! ஏனென்றால் குண்டர் சட்டம்!!

பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என ஜெயா அறிவித்திருப்பது மக்களுக்காகப் போராடுபவர்களைக் குறிவைத்துதான் என்பதை, சென்னை-மதுரவாயல் பகுதி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியைச் சேர்ந்த திவாகரன், குமரேசன் என்ற இரண்டு தோழர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைதாகியிருப்பது நிரூபித்துவிட்டது.

கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வந்த போலீசு, பகுதி மக்களைப் பீதியூட்டும் அராஜகத்தில் இறங்கியது. அவ்விரண்டு தோழர்களும் போலீசின் அராஜகத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர்களைக் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்த போலீசு, அதன் பின் அவர்கள் மீது குண்டர் சட்டத்தையும் ஏவிவிட்டது. போலீசின் இந்தக் காட்டு தர்பாரைக் கண்டித்து போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்களின் மீதும், பு.மா.இ.மு தோழர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசு, பு.மா.இ.மு. தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டு 64 பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்தது.

குண்டர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் போவதாக கடந்த டிசம்பர் 19 அன்றுதான் அறிவித்தார், ஜெயா. ஆனால், அதற்கும் முன்பாகவே உழைக்கும் மக்களுக்காகப் போராடிவரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீது அச்சட்டத்தைச் சட்டவிரோதமான முறையில் ஏவியிருக்கிறது, சென்னை போலீசு. அம்மா எள் என்பதற்கு முன்பாகவே எண்ணெயாக நின்ற தமிழக போலீசின் கடமையுணர்ச்சியை என்னவென்பது!

_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________

  1. //பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் //

    தார் குச்சிய எடுத்து குத்துனாலும் தமிழன் என்ற உணர்வு வராது…

    வெறும் போஸ்ட்ர் அடித்து ஒட்டுபவனே நவீன போராளி!.
    முகநூலில் லைக்கும் கமெண்டும் போடுபவன் புரட்சியாளன்….!

    தெருவில் வந்து யாரும் இன்று உண்மையாக போராடுவதேயில்லை..பின்
    எவன் பொது அமைதிக்கு குந்தகம் கந்தகம் செய்ப்போறான்…
    அப்புறம் எதுக்கு இந்த சட்டம்???

  2. ஒரு பயலும் போராட வரமாட்டான் (என்னையும் சேத்துதான் )… சாதாரண மக்களுக்கு தன் தேவையை சமாளிக்கவே நேரம் சரியாய் இருக்கு..இதுல போராட்டம்ன்னு வந்த, உள்ள தூக்கி போடுறன்…எவன் வேல வெட்டிய பாக்கிறது…அண்ணா கசாரே மாதிரி சும்மா விளக்கு புடிக்கிற போராட்டம் இருந்தா சொல்லுங்க, அதுவும் சனி, ஞாயிறு கிழமைகளில்….இல்லேனா எல்லா டிவிஇல் வருகின்ற மாதிரி போராட்டம் இருந்த சொல்லுங்க..

    என்ன பண்ணுறது..காலம் கெட்டு கெடக்கு..நம்மதான் பாத்து சுதனமாக நடக்கவேண்டும்..அது எப்படி???? நம்மளையே அடகு வச்சி, அடிமையாய் வாழ வேண்டியதுதான்..இந்த மானம் கெட்ட எங்களிடம் போய் சுதந்திரம், புண்ணாக்கு , தனி நபர் வாழ்கைன்னு…பன்னி கூட்டத்திற்கு எதுக்கு பட்டு குஞ்சரம்

  3. இந்திய அரசியலில் உண்மையான சனனாயகம் எப்பொழுதோ இறந்துவிட்டது. போலியான தேர்தலின் மூலம் தெரிவாகும் நவீன மன்னராட்சிகளே இங்கு நடைமுறையில் உள்ளன. எந்தத்தகுதியும் இல்லாத விதேசி ஊழல்ராணி ஒருவரின் கையில் நாட்டையே கொடுத்துவிட்டு, ஒரு கொள்ளைக்கார அகங்காரியிடம் மானிலத்தைக் கொடுத்துவிட்டு, தாதாக்களிடம் உள்ளூராட்சிகளைக் கொடுத்துவிட்டு நாடும் நாமும் நன்றாக, சுதந்திரமாக இருக்கவேண்டும் எனக் கனவு காண்பதில் அர்த்தமில்லை.

  4. புரட்டு தலீவீ .இந்த ரூட்டுல போயி தமிழகத்த அமைதீ பூங்காவாக ஆக்க போகுதுன்னு நிணைக்கிறேன்.

  5. தி.மு.க. ஆட்சியின்போது மட்டும் என்ன தமிழகம் அமைதிப் பூங்காவ◌ாகத் திகழ்ந்ததா? இப்போது இப்படிக் கரிச்சுக் கொட்டுவதில் என்ன சுகம் இருக்கு?

  6. எதுக்குஎதுக்கோ அம்மா பெயர் வைக்கும் போது குண்டர் சட்டத்துக்கும் அம்மா பெயர் வைக்கலாம் வெகு பொருத்தமாக இருக்கும் 2 வாரமா நிமிந்துநடக்கும் பன்னீர் செல்வம் இதை கவனித்தால் நல்லது….

Leave a Reply to ஆர்.தியாகு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க