privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!

-

ராமதாஸ்-பா-ம-க-கார்டூன்டந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் அங்கு வந்த தாம்பரம் காவல் நிலைய காவலர் ஒருவர் பத்திரிகையை கேட்டு வாங்கினார். “இங்க என்ன செய்றீங்க, உடனே கெளம்புங்க” என்று புறப்பட்டுப் போகச் சொன்னார். அதற்குள் அங்கு வந்த அருகில் இருந்த 2-3 ரவுடிகள்,

“இவுனுங்கள சும்மா விட மாட்டோம். நான் பா.ம.க. நகரச் செயலாளர், வக்கீல். நான் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளெயின்ட் எழுதித் தாரேன், இவனுங்கள புடிச்சி உள்ள போடுங்க” என்று எகிற ஆரம்பித்தனர்.

காவலரோ, “ஏம்பா, நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கீங்க, நாங்க விசாரிக்கிறோம். இடையில இப்படி ரவுடித்தனம் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார்.

இதற்குள் ரவுடிகளில் ஒருவன், தொலைபேசியில் “ஆமாஜீ, சுத்தி வளைச்சிட்டோம். 4 பேரு இருக்காங்கஜி, போலீஸ்ல கொண்டு போயிரலாம்ஜி” என்று ஏதோ ஒரு ஜீக்கு தகவல் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

இதற்குள் போலீஸ் ரோந்து வாகனம் வந்து விட காவலர் தோழர்களை வண்டியில் ஏறச் சொன்னார். “இவனுங்க 100க்கு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கானுங்க. நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வந்து ஒரு அறிக்கை கொடுத்துட்டு போயிருங்க”என்றார்கள்.

வெளியில் ரவுடிகளுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொள்ள சாமியாட ஆரம்பித்தார்கள்.

“தேவிடியாப் பசங்க, இவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அய்யாவைப் பத்தி எழுதுவாங்க, கைய, கால உடைச்சாத்தான் சரியாகும்”

“பத்திரிகைல என்ன வேணுண்ணா எழுதிருவியா நீ! ஒனக்கு வன்னியப் பொண்ணுதான் கேக்குதா, நீ சக்கிலியண்ணா, சக்கிலியப் பொண்ணை போய் கல்யாணம் பண்ணுடா”

என்று சாதிவெறியை போதை போல ஏற்றிக் கொண்டு பேசிக் கொண்டே எகிற ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரி அவர்களை கடிந்து கொள்வதைப் போல விலக்கி விட ஆரம்பித்தார். “டேய் விடுறா, டேய் விடுறா” என்று உதார் விட்டுக் கொண்டே அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தனர் ரவுடிகள்.

தோழர்கள், உறுதியாக நின்று கொண்டு, பாமக சாதிவெறியர்களுக்கு உரிய மறுமொழி கொடுத்தனர்.

ரோந்து வண்டியில் ஏறி தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் உதவி ஆய்வாளர்கள் அறைக்குள் தோழர்களை அமரவைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் இதற்குள் வெளியில் ஒரு கும்பலை சேர்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

4-5 கார்களில் வந்து இறங்கிய வட்டம், மாவட்டங்களுடன் உதிரிகளாக காலையில் அடித்த டாஸ்மாக் மயக்கம் தெளிந்து எழுந்தது போலத் தெரிந்த 20-30 பேர் சேர்ந்து கொண்டிருந்தனர்.

கும்பலின் துணையோடும் பிற கொடுக்கல் வாங்கல் உறவுகளின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிணைப்போடு, பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவருடன் உட்கார்ந்து புகார் ஒன்றை எழுதினார். புகாரில், தோழர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் பொய் புளுகுகளை அவிழ்த்து விட்டிருந்தனர்.

இதற்குள் தோழர்கள் மூலமாக தகவல் தெரிந்த மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஊடகங்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

வெளியில் கூடியிருந்த பாமக ரவுடி கும்பல், “எங்கள் அய்யாவை இழிவு படுத்தியவர்களை கைது செய்” என்று முழக்கம் போட ஆரம்பித்தது. காவல் அதிகாரிகளோ, தோழர்களை வெளியில் விடாமல் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தார்கள்.

காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் மாமியார் வீடு போல உள்ளே வந்து போய்க் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் சிலர், தோழர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ஏதோ நோட்டம் விடுவதைப் போல ஒவ்வொருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள்.

ஒருவர்,

“நீங்க என்னிக்காவது நல்லா படிச்சு, வேலைக்குப் போங்கன்னு பத்திரிகைல எழுதியிருக்கீங்களா. அப்படி எழுதியிருந்தா எனக்கு அத்தாட்சி கொடுங்க, காதல் கேக்குதா, காதல், அம்பானி மகளை கல்யாணம் செஞ்சு ஒரே நாள்ள அம்பானி ஆகப் பாக்குறானுங்க”

என்று திட்டி  விட்டுப் போனார்.

இதற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் சொன்ன தகவலின் படி அக்கட்சியின் நகரச் செயலாளர் வந்து தோழர்களிடம் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்த தோழர்கள் ‘இந்தப் பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்வதாக கூறினர். அப்போதுதான் பா.ம.க ரவுடிகளுக்கு ஒரு பாடமாக இருக்கு’மென்று கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களுக்கு ஆதரவாக வந்ததைப் பார்த்த பா.ம.க ரவுடிகள் உடனே அவர்களிடம் “நாமெல்லாம் ஒரே ஏரியா, ஒரே முகம் பார்த்து பழகுறோம், நீங்கள் ஏன் கலை இலக்கியத்துக்கு (மகஇக) ஆதரவாக போறிங்க” என்று புலம்பினார்கள்.

சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு காவல் நிலையத்துக்கு வந்த ஆய்வாளர் தோழர்களை அழைத்துப் பேசினார். பேசுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று சொல்லி தோழர்களின் செல்பேசிகளை வாங்கி வைத்துக் கொண்டார். புதிய கலாச்சாரம் இதழின் பின் அட்டையில் வெளியாகியிருந்த கவிதையைப் படித்துப் பார்த்தார்.

“சைவப் பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும் கீரிப்பிள்ளை பிறப்பதில்லை!
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!”

“வன்னியப் பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்
நாடு ஒன்று மூழ்கிடாது
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!”

என்ற வரிகளைப் படித்துக் காண்பித்து, “இப்படி ஒரு கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதலாமா” என்று நியாயம் பேசினார்.

“இது தனிப்பட்ட முறை தாக்குதல் இல்லை சார், அவர் பொதுவில்   பேசிய அராஜக பேச்சுகளுக்கும், நடத்தைக்கும் பதில் சொல்லும்படியாக எழுதப்பட்ட கவிதை. நாங்க இந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுடனும் உடன்படுகிறோம். மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி விடக் கூடிய பாட்டாளி மக்கள்  கட்சி போன்ற கும்பல்களைப் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்” என்று தோழர்கள் பதில் சொன்னார்கள்.

“நீங்க, காவல் துறை அனுமதி இல்லாம எப்படி பத்திரிகை விற்கலாம்” சட்டம் பேச ஆரம்பித்தார்.

“இப்படி புத்தக விற்பனை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் செய்கிறோம். அப்படி விற்கக் கூடாது என்பதற்கு எந்த சட்ட விதிகளும் இல்லை. விற்பது, பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை என்றும், ஒருவேளை இது போன்ற ரவுடிகள் பிரச்சினை வந்தால் மக்களின் ஆதரவுடன் அதைத் தீர்த்துக் கொள்கிறோம்” என்று தோழர்கள் விளக்கினார்கள்.

“இதுவரை பிரச்சனை வரவில்லை, இப்போ இவங்க பிரச்சனை செய்றாங்க, எதுனா சட்ட ஒழுங்கு குலைவு ஏற்பட்டா, யாரு பதில் சொல்வாங்க” என்று சொல்லும் போதே அவர் உயர் அதிகாரியிடமிருந்து தொலைபேசி வர,

“ஆமா சார், அதுதான் விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். இவங்க ராமதாஸ், காடுவெட்டி குரு பத்தி கவிதை எழுதியிருக்காங்க” என்றபடி பத்திரிகையை புரட்டிப் பார்த்து விட்டு,  ‘பா.ம.க., ராமதாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க! – கள ஆய்வில் வன்னிய மக்கள் கருத்து’ என்று இவங்க சர்வே நடத்தின மாதிரி போட்டிருக்காங்க.”

“அதில ‘வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், நானே வன்னியர்தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டு ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார் என்று கோபத்துடன் தன்னுடைய சொந்த சாதி வெறியர்களைச் சாடினார்’னும் எழுதியிருக்காங்க சார். விசாரிச்சிட்டு சொல்றேன் சார்”

என்று தொலைபேசியை வைத்தார்.

‘நீங்க அனுமதி வாங்காம இப்படி பொது இடத்தில பத்திரிகை இஷ்யூ பண்ணக் கூடாது’ என்று திரும்பவும் சொல்லி விட்டு, “எத்தனை பத்திரிகை வித்தீங்க” என்று பத்திரிகை விற்ற பணத்தையும் வாங்கிக் கொண்டார். செல்பேசிகளை திருப்பித் தராமல் வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்.

காவல் துறை இப்படி ரவுடிக் கும்பலுடன் ஒத்துழைத்து அவர்கள் ஆட்சியை அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தார்கள். மேலும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பெண்களையும் உள்ளிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூடி விட்டார்கள்.

காவல் நிலையத்துக்கு வெளியில் பாட்டாளி மக்கள் கட்சி கும்பல் கோஷம் போட்டுக் கொண்டிருந்தது. தோழர்கள் எண்ணிக்கை வர வர ஷத்திரியர்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி ஓட ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் ஐம்பது பேர் என்றால் தோழர்கள் வந்த பிறகு பத்து பேராக சிறுத்துப் போனது. உள்ளே தடுக்கப்பட்டிருந்த தோழர்கள், மதிய உணவுக்கு போக வேண்டும் என்று சொன்னதும், காவலர்களே வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் உடன் வர அனைவரும் ஆய்வாளர் அறைக்குள் போனார்கள்.  அங்கு வந்திருந்த காவல் துறை உதவி ஆணையர்

“அவங்க புகார் கொடுத்திருக்காங்க, இவங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சொல்லியிருக்காங்க. அதுக்கு சிஎஸ்ஆர் போட்டுக் கொடுத்திருக்கோம். நீங்க ஏன் இப்படி எல்லாம் எழுதி பொது இடத்தில குழப்பம் ஏற்படுத்துறீங்க” என்று தோழர்கள் மீதே குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்.

வழக்கறிஞர்களும் தோழர்களும் உறுதியாக அதை மறுத்தனர்.

‘புதிய கலாச்சாரம் பத்திரிகை சமூக பிரச்சனைகளை உறுதியாக நேர்மையாக யாருக்கும் பயப்படாமல் விமரிசித்து முன் வைக்கும் பத்திரிகை. 30 ஆண்டுகளாக இப்படித்தான் வெளியாகிறது. தமிழ் நாடு எங்கும் பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவதற்குத்தான் போலீஸ் அனுமதி தேவை. இது போன்று பத்திரிகை விற்பதற்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை’ என்றார்கள்.

உதவி ஆணையரோ, “அப்படின்னா, நீங்க விற்கும் போது அவங்க வந்து அடிக்கத்தான் செய்வாங்க, அப்போ பொறுப்பு எங்களுக்குத்தானே” என்று மடக்கப் பார்த்தார்.

“நீங்க ஒரு அதிகாரியா இருந்துட்டு இப்படிச் சொல்லக் கூடாது. பொது இடத்துல ரவுடித் தனத்தை கட்டுப்படுத்தத்தான் நீங்க இருக்கீங்க. நீங்க பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்களின் அவதூறு புகாரை வாங்கிக் கொண்டு தோழர்களை காலையிலிருந்து காவல் நிலையத்தில் காத்திருக்க வச்சிருக்கீங்க. அந்த குண்டர்கள் தோழர்களை அசிங்கமாகத் திட்டியதோடு இல்லாமல் கும்பலைச் சேர்த்துக்கிட்டு மிரட்டியிருக்காங்க. அதற்கான புகாரையும் வாங்கிக் கிட்டு அத்தாட்சி கொடுங்க.” என்று வாதாடினார்கள்.

இதற்கிடையில் ஒரு உதவி ஆய்வாளர் வந்து, “ஏன் சார், இதப் பெருசு படுத்துறீங்க! பேசாம ‘இப்படி பிரச்சனை வந்துட்டுது, எங்கள மன்னிச்சுக்குங்க, இனிமே இப்படி நடந்துக்க மாட்டோம்’னு எழுதிக் கொடுத்திட்டு போங்க. நீங்களும் நீளமா ஒரு புகார் எழுதணுமா” என்று ‘நட்பு’டன் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“எந்தத் தப்பும் செய்யாத  நாங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும். அராஜகம் செய்த ரவுடிங்க மேலதான் புகார் பதிவாகணும். நாங்க சமூகத்துக்காக நியாயமான கருத்துக்கள பிரச்சாரம் செய்றோம். ரவுடிங்க புகாரை நீங்க வாங்கியிருக்கும் போது நாங்களும் புகார் கொடுக்கிறோம், வாங்கிக்கிட்டு அத்தாட்சி கொடுங்க” என்று சொல்லி தோழர்கள் நடந்த சம்பவங்களை எழுதி புகார் கடிதம் கொடுத்தார்கள்.

பின்னர் போலீசு தோழர்களின் செல்பேசி, மற்றும் பத்திரிகை விற்பனைப் பணம் ஆகியவற்றை முறையாக ஒப்படைத்தது.

இறுதியில் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சுமார் 4.30 மணியளவில்  தோழர்கள் வெளியில் வந்தனர்.  தோழர்கள் வெளியே வந்தால் அடித்து நொறுக்குவதாக சபதம் போட்டு இனோவாவிலும், ஸ்கார்ப்பியோவிலும் வந்து குதித்த ஷத்திரிய குல வீரர்களில் ஒருவனைக் கூட காணவில்லை. கடைசியில் பா.ம.க குண்டர் படை, தோழர்களின் அணிதிரட்டலுக்கு பயந்து சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சி ஓடிக் கொண்டது.

‘வன்னிய மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து, சாதி வெறியையும் கலவரங்களையும் தூண்டி விட்டு கட்சியை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கும் ஓட்டுப் பொறுக்கி ராமதாசையும், அந்தக் கட்சியை அண்டிப் பிழைக்கும் ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து உழைக்கும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்’ என்ற உறுதியோடு தோழர்கள் கலைந்தார்கள்.

___________________________
ஓவியம்  – நன்மாறன்
___________________________