privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பா.ம.க செல்வாக்கு பகுதியில் கண்டனக் கூட்டம் !

பா.ம.க செல்வாக்கு பகுதியில் கண்டனக் கூட்டம் !

-

ஆதிக்க சாதி வெறியை வேரறுப்போம், பாட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம் என்ற தலைப்பின் கீழ் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் 23.01.2013 அன்று கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் ம சி சுதேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்.

 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியபின் தலைமையுரையாற்றிய தோழர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இத்தலைப்பிலான தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கான நோக்கம் என்ன என்று தொடங்கி தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதலையும், அதற்குக் காரணமான ஆதிக்க சாதிவெறியையும், இப்படி சாதிவெறியைத் தூண்டுகின்ற கட்சிகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எடுபிடி வேலைகள் செய்வதில் ஓரணியாகவும் நிற்பதை எடுத்துரைத்து இதனை முறியடிக்க வேண்டுமெனில் பாட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைந்து உழுபவனுக்கு நிலம் சொந்தம், உழைப்பவனுக்கு அரசியல் அதிகாரம் என்பதனை நிலைநாட்ட வேண்டும் என்று சூளுரைத்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழுவின் சார்பாக புரட்சிகர பாடல் பாடப்பட்டது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் சுரேஷ் தனது சிறப்புரையில் தன்னுடைய செல்வாக்கு மிகுந்த பகுதியான கடலூர் மாவட்டத்தில் நுழைய இராமதாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, இதனை அரசியலாக்கும் கருணாநிதியையும் இதுவரை தர்மபுரி சம்பவத்தைப் பற்றி வாய் திறக்காத ஜெயலலிதாவையும் கண்டித்து தனது சிறப்புரையை தொடங்கினார். நவம்பர் 8 அன்று மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சம்பவ இடத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தி உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதையும், இச்சம்பவம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடுத்துள்ளதையும் விளக்கினார். இச்சம்பவத்திற்கு பின் பிரபலமாகத் தொடங்கியுள்ள லட்டர்பேட் கட்சிகள் சட்டப்படியானதொரு காதல் திருமணத்தை பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக எடுத்துச் செல்வதை கண்டித்தார். ஜீன்ஸ் பேன்டுக்கும் கூலிங் கிளாஸூக்கும் மயங்குவதான தனது சாதிப் பெண்களை ராமதாசு கேவலப்படுத்துவதையும், வன்கொடுமை தடுப்பு சட்டம் இதுவரை மூன்று சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அதிலும் திருத்தம் செய்யக் கோருவதையும், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளின் கூட்டு முறிந்து இட ஒதுக்கீட்டினை கையிலெடுத்து அதுவும் பலனளிக்காததால் இப்போது சாதி பிரச்சனையை தூண்டி விட்டு ஓட்டுப் பொறுக்கத் துடிப்பதை அம்பலப்படுத்தினார்.

சாதி பெருமை பேசும் மக்களை நோக்கி, சாதியினால் அடைந்த பயன் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு சாதி அரசியலை கையிலெடுத்து மக்களை பிரித்தாலும் ராதாசும், திருமாவளவனும் இணைந்தே செயல்படுவதை தோலுரித்தார். உழைக்கும் மக்களின் விடுதலை என்பதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளால்தான் சாதிக்க முடியும் என்றும், ஓட்டுக் கட்சிகளை புறக்கணித்து உழைக்கும் மக்கள் ஓரணியாக திரள வேண்டும் எனவும், இன்னமும் நமது சமூகத்தில் சாதி வெறியாட்டங்கள் நடப்பது குறித்து நாம் வெட்கப்படுவே இதற்கான முதல்படியாகும் என்பதனை பதிய வைத்து தனது சிறப்புரையினை முடித்தார்.

இந்த தெருமுனைக் கூட்டத்திற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ராமதாசு கட்சியின் குண்டாந்தடிகள் அக்கம்பக்கமாக கூடினர். கூட்டத்தில் இருந்த தோழர்களை கண்டவுடன், “என்னடா, நம்ம ஆளுகங்களே உட்கார்ந்திருக்கானுங்க! வேறெங்காவது கூட்டம் நடத்தியிருந்தாலும் பரவாயில்லை. நம்ம இடத்திலேயே வந்து நம்ம சாதிக்காரனுங்களையே கூட்டி வைச்சு கூட்டம் நடத்துறானுங்களே!” என்று புலம்பினர். குண்டாந்தடிகளுக்கு என்ன தெரியும் பாட்டாளி வர்க்கமாய் அணிசேரும் தொழிலாளர்கள் சாதிவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று! முன்னதாக பகுதியில் பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு வணிகர்களும், உழைக்கும் மக்களும் ஆதரவு தெரிவித்து நிதியளித்தனர்.

தெருமுனைக் கூட்டம் நடைபெற்ற இடம் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிகுந்த பகுதியென பீற்றித் திரிந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளிடத்தில் நமது தெருமுனைக் கூட்டம் நடத்தி பாட்டாளி மக்கள் கட்சியினையும் மற்ற ஓட்டுப் பொறுக்கிகளையும் தோலுரித்தது பகுதி மக்களிடத்தில் சிறப்பானதொரு வரவேற்பினை பெற்றது. கூட்டத்தின் முடிவில் பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட குழு தோழர் ரமேஷ் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்.