privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு : தென் மாவட்டங்களில் செருப்படி!

பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு : தென் மாவட்டங்களில் செருப்படி!

-

மிழ்நாடு முழுவதும் ஆதிக்க சாதி சங்கங்களை சேர்த்து சாதி வெறி அரசியலை பரப்ப முயற்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசுக்கு எதிராக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய கோருவது போன்ற கோரிக்கைகளோடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஜனவரி 30ம் தேதி திருநெல்வேலி வந்த ராமதாசை எதிர்த்து ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு மறியல் செய்த மக்கள் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்.  அந்த கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன்,  “இழந்த செல்வாக்கை நிலை நிறுத்த ஜாதி மோதல்களை தூண்டி ஓட்டு வங்கியை தக்க வைக்க ராமதாஸ் முயற்சி செய்கிறார். அவரை கைது செய்ய வேண்டும். பா.ம.க.,வை தடை செய்ய வேண்டும்” என்றார்.

ஜங்ஷன் பேருந்து நிலையம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்றக்கழகம் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள்,  ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சிபாரதம், ஆதிதிராவிடர் நல உரிமை சங்கம், துப்புரவு பணியாளர் சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கத்தினர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  4 பெண்கள் உட்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமதாசின் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு எதிரில் மள்ளர் நாடு அமைப்பினர் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை எரித்தனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 51 பேர்  முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.  மக்கள் தேசம் அமைப்பச் சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் ராமதாசை கண்டித்து தீக்குளிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய செயலர் தமிழ் பாரி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கூட்டம் நடத்துவதற்காக திண்டுக்கல் வந்த ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலித், சிறுபான்மை மற்றும் இடதுசாரிகள் கூட்டுக் குழுவின் சார்பில் திண்டுக்கல் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்யும் வாரிசுதாரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்பட 144 பேரை கைது செய்தனர்.

ராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக இந்த ஆதிக்க சாதிவெறியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் செல்லுமிடமெல்லாம் அவருக்கு செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க