privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககிரானைட் ஊழல் : பேரம் படிந்தது - நாடகம் முடிந்தது !

கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது !

-

கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது! புஸ்வாணம் ஆகின அரசு நடவடிக்கைகள்!

நூற்றுக்கணக்கான வழக்குகள், விதவிதமான தனிப்படைகள், கிரானைட் குவாரிகளில் ரெய்டு, சிறிய விமானம் மூலம் கற்களை அளவிடுதல், வங்கிக்கணக்குகள் முடக்கம், மக்களிடமிருந்து புகார் பெறும் முகாம்கள், கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வரின் அறிவிப்பு என ஊடகங்களில் விஸ்வரூபமாய பெரிதாக்கி காட்டப்பட்ட பல லட்சம் கோடி கிரானைட் மெகா ஊழல் ஜெயா அரசின் பேரத்திற்கான நாடகம்தான் என தற்போது ஊரறிய அம்பலமாகியுள்ளது. கிரானைட் முதலாளிகள்-அனைத்து ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் – அரசு உயர் அதிகாரிகள்-நீதிபதிகள் கொண்ட கொள்ளைக் கூட்டம்   சேர்ந்து நடத்திய கிரானைட் ஊழல் மீதான நடவடிக்கைகளை ஊத்தி மூடுவதற்கான வேலைகள் தேர்ந்த முறையில் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. கிரானைட் முதலாளிகளுக்கும் ஊழலில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் ஆதரவாக சட்டச் சிக்கல்கள் இன்றி எவ்வாறு முடிப்பது என்பதே தமிழக அரசின் முன் தற்போதுள்ள பிரச்சனை. இவ்வாறு முதலாளிகளுக்கும் அரசுக்கும் வழக்கை முடிக்கும் தேவை வரும் போதெல்லாம் அவர்கள் நம்பிக்கையோடு அணுகுவது நீதி மன்றங்களைத்தான். அந்த வகையில் கிரானைட் வழக்குகளுக்கு சமாதிகட்டும் திருப்பணியை மதுரை உயர்நீதிமன்றம் சட்டப்படி செவ்வனே செய்து முடித்து விட்டது.

ஊடகங்களின் பொய்யுரை

‘ஜெயலலிதா ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று தினமலர், துக்ளக், தினமணி, ஆனந்தவிகடன், இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களில் பரப்பி வந்த கருத்தும் கிரானைட் ஊழல் விவகாரத்தில் பொய் என்றாகி விட்டது.

பி.ஆர்.பி.க்கு தேர்ந்த முறையில் கொள்ளையடிக்கச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்பதுடன் அதற்காக மாதச் சம்பளமும் பெற்றவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக கிரானைட் ஊழலில் பங்காளிகளாக இருந்த அதிகாரிகளைக் கொண்டே, இந்த ஊழல் மீதான நடவடிக்கை என்ற நூதன நாடகம் தொடங்கப்பட்ட போதே இது கதைக்குதவாது எனத் தெரிந்து விட்டது. கிரானைட் ஊழல் தொடர்பான ஆவணப்படம் தயாரிக்க மக்களிடம் நாங்கள் சென்ற போது “அரசாங்கம்-போலீசு-நீதிமன்றத்தை நம்ப முடியாது. நேற்று வரை பி.ஆர்.பி.யிடம் வாங்கித் தின்றவர்கள்தான் இவர்கள். பணம் கொடுத்து மீண்டும் பி.ஆர்.பி. வந்து விடுவார்” என்பதே அனைத்து மக்களின் கருத்தாகவும் இருந்தது. அக்கருத்து, 100 சதவீதம் சரியென இப்போது நிரூபித்திருக்கிறது ஜெயா அரசு.

அரசுதான் குற்றவாளி

  • இந்திய நீதித்துறையில் இதுவரை இல்லாத வகையில் வழக்கு எண், புகார்தாரரின் பெயர் இல்லாமல், 5 காவல் நிலையங்களின் பெயரைக் குறிப்பிட்டு மேற்படி காவல் நிலையங்களில் எந்த வழக்கிலும் பி.ஆர்.பி. மற்றும் குடும்பத்தினரைக் கைது செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் சட்டவிரோத உத்தரவை பிறப்பித்தார். அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
  • கிரானைட் கொள்ளைபி.ஆர்.பி. மீது போடப்பட்டுள்ள 32 வழக்குகளில் 17-ல் மட்டும் கைது செய்து விட்டு, மீதி வழக்குகளில் முன் ஜாமீன் வாங்க அரசே அனுமதித்தது.
  • வாழ்வுரிமைக்காக போராடிய அப்பாவி இடிந்தகரை மூதாட்டி 63 வயதான ரோசலின் மேரிக்கு ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து, கூடங்குளத்துக்கு மாறுதல் செய்ய நீதிபதி சி.டி.செல்வம் மறுத்ததால் அப்பெண்மணி மதுரையில் இறந்தே போனார். ஆனால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு வசதி கொண்ட பி.ஆர்.பி., துரைதயாநிதிக்கு குற்றம் நிகழ்ந்த இடத்திலேயே கையெழுத்திட அனுமதி. ஒரு வாரத்திலேயே துரை தயாநிதிக்கு நிபந்தனை ரத்து. இது எப்பேர்ப்பட்ட அநீதி!
  • கண்மாய்கள், பெரியாறு பாசனக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மாவட்ட ஆட்சியர், உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொண்ட பின்பும் இன்றுவரை ஆக்கிரமிப்புகளில் ஒரு கல்லைக் கூட அசைக்கவில்லை.
  • 15 ஸ்டான்டர்டு ஏக்கருக்கு மேல் ஒருவர் நிலம் வைத்திருக்கக் கூடாது என சட்டம் உள்ள போது, 23 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பி.ஆர்.பி. குடும்பத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. சட்டம் என்ன செய்கிறது? யாருக்குச் சலாம் போடுகிறது?
  • பி.ஆர்.பி. வழக்கிற்கு முன்பு சாதாரண மக்கள் தாக்கல் செய்த ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பி.ஆர்.பி.யின் ரிட் மனுவிற்கு தீர்ப்பு, ரிட் அப்பீல் மனுவிற்கு விசாரணை முடிவடைந்துள்ளது. பல லட்சம் பணம் இருந்து உச்ச-உயர்நீதின்ற மூத்த வழக்கிறஞர்களை நியமித்தால் வழக்கு முடிவுறும் என்றால் காசுள்ளவனுக்கே நீதி. இந்திய நீதித் துறையில் நிலவும் மிகப்பெரிய அநீதி இது!
  • கடந்த ஆறு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் களத்தில் இறங்கி கிரானைட் கற்களை அளவிட்டு முடித்த பின், மறுபடியும் அளவிட மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ஒப்புக் கொண்டது ஏன்? விசாரணையை இழுத்தடிக்கத்தான்.
  • ‘திறமையான’ போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தமிழக போலீஸ் துரைதயாநிதியை இரண்டு மாதங்களாகப் பிடிக்க முடியவில்லை என்பது நம்புகின்ற கதையாக இல்லை.
  • இக்கொள்ளையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அரசு உயரதிகாரிகளில் ஒருவரைக் கூட ஜெயா அரசு கைது செய்யவில்லை.
  • கிரானைட் முதலாளிகளின் ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை இல்லை.
  • ஒரு பஸ் கண்ணாடியை உடைத்தாலே ரூ 5000/- டெபாசிட் வாங்கிவிட்டு ஜாமீன் வழங்கும் உயர்நீதிமன்றம் அரசு கணக்குப்படியே ரூ 16 ஆயிரம் கோடி கொள்ளைக்கு ஒரு ரூபாய் கூட டெபாசிட் இன்றி பி.ஆர்.பி., அழகிரி மகன் துரைதயாநிதிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கூட வழங்கப்படவில்லை.
  • 8 மாதங்களாகியும் எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

பேரம் படிந்தது, நாடகம் முடிந்தது…!

கிரானைட்: மெகா கூட்டணி மகா கொள்ளையில் இவ்வாறாகத்தானே கொள்ளைக்காரர்களுக்கும் கொள்ளைக்காரிக்கும் இடையிலான பேரம் படிந்தது, நாடகம் முடிந்தது. வழக்குகள் வாய் பிளந்து விட்டன. அதிகாரிகள் மாறுதலை (டிரான்ஸ்பர்) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நீதிபதிகள் செஞ்சோற்றுக் கடன் தீர்த்ததற்காக புத்தம் புதிய நோட்டுக் கட்டுகளுடன் பரிசு (சூட்கேஸ்) பெற்றுக் கொண்டு விட்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன. ஓட்டு போடும் இயந்திரங்கள் (மக்கள்) அதுவரைக்குமா நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள். சேச்சே, அதெல்லாம் இருக்காது. இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது நமது நாட்டின் அரசியல் பொருளாதார மெகா சீரியல்கள்.

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இரும்பு, நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பி.ஆர்.பி., துரை தயாநிதி ஜாமீனை, மீன்கடையில் வாங்குவதைப் போல் வாங்கி விட்டனர். தமிழ்நாட்டில் நீதித்துறையின் மாண்பு இதுதான். இந்த லட்சணத்தில் இவர்களெல்லாம் மைலார்டுகளாம்; ஹை பிராடுகள் என்று மக்கள் சொல்கின்றனர்.

ஊழலில் புழுத்து நாறும் அரசு-நிர்வாகம்

மேற்கண்ட உண்மைகளெல்லாம் தமிழக அரசாலோ நீதித்துறையாலோ மறுக்க முடியாதவை. இவ்வாறு கொள்ளையர்களான முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் இடமாக பாராளுமன்றம், சட்டமன்றங்களும், அதை செவ்வனே அமல்படுத்தும் நடவடிக்கையில் நிர்வாக, நீதித்துறைகளும் என ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையே ஊழலில் அழுகி நாறியுள்ளது. நிலவி வரும் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த அமைப்பு முறையின் மூலம் ஊழல் குற்றவாளிகளைத் தண்டிக்கவே முடியாது என்பது நிதர்சனம்.

கிரானைட், அலைக்கற்றை, நிலக்கரி, இரும்பு, தண்ணீர், மணல் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும், பொதுச் சொத்துக்களும் முதலாளிகளுக்கு அப்படியே தாரை வார்க்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் அரசே நடத்த முடியாது என்று சொல்லி விட்டு, முதலாளிகளின் தொழில்களைப் பாதுகாப்பதற்காக அரசால் செலவழிக்கப்படும் பல ஆயிரம் கோடிகளும், பல லட்சம் கோடி வரிச்சலுகைளும் அரசு சொல்வது பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன.

ஊழலுக்கு அஸ்திவாரமாய் இருக்கும் அதிகார வர்க்கத்தை மறைத்து விட்டு அரசியல்வாதிகளை மட்டும் ஊழல் பெருச்சாளிகளாகக் காட்டுவது, ‘நாட்டின் பொதுச்சொத்துக்களை ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும்?’ என்று கேள்வியெழுப்பாமல் அதில் வெளிவரும் ஊழல், முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டி மக்களை திசை திருப்புகின்றன ஊடகங்கள். ஏனெனில் ஊடகங்களும் முதலாளிகளுக்குச் சொந்தமானவையே.

எனவே முதலாளிகளுக்கு ஆதரவான, அவர்களைப் பாதுகாக்கும் சட்டம், நீதித்துறை, அதிகாரவர்க்கம், ஆட்சிமுறையைக் கொண்டு முதலாளிகளை எந்தக் காலத்திலும் தண்டிக்க முடியாது. ஊழலையும் ஒழிக்க முடியாது. முதலாளிகளைத் தண்டிக்கவும், ஊழலை ஒழிக்கவும் வேண்டுமென்றால் மக்களைப் பாதுகாக்கும் சட்டம், ஆட்சிமுறையை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கேற்ற அதிகாரம் வேண்டும். இதை இன்றைய ஓட்டுச் சீட்டு, பாராளுமன்றம் மூலம் அடைய முடியாது. புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே மக்களைப் பாதுகாக்கும் சட்டம், ஆட்சி முறையை ஏற்படுத்த முடியும். ஊழல் பேர்வழிகள், மக்கள் விரோதிகளைத் தண்டிக்க முடியும். நம்மையும், நாட்டையும், பாதுகாக்க புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

மதுரை மாவட்டம்

தொடர்புக்கு : –
ந. குருசாமி (விவிமு) 98943 12290
ப.ராமலிங்கம் (மகஇக) 97916 53200

கிரானைட்: மெகா கூட்டணி-மகா கொள்ளை (DVD) ஆவணப்படம் (இப்போது விற்பனையில்)

— தகவல் : மதுரை மாவட்ட புரட்சிகர அமைப்புகளின் துண்டறிக்கை