privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

-

சம்பவம் – 1

சேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமனவர் – இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது. சுமதியின் செல்போனுக்கு ஆரம்பத்தில் நலம் விசாரிக்கும் குறுந்தகவல்களை அனுப்பத் துவங்கும் சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் சேகரின் செல்பேசியிலிருந்து ஆபாசமான நகைச்சுவைத் துணுக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த ‘நட்பு’ ஒரு சில மாதங்களிலேயே மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறுகிறது.

சாதாரணமாகத் துவங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசமான உரையாடல்களாகவும், தனிப்பட்ட பாலியல் உறவாகவும் மாறுகிறது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் சுமதி சேகரோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனைவியைக் காணாத சுமதியின் கணவன் போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஒரு வாரம் கழித்து பக்கத்து நகரத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இன்று இரண்டு குடும்பத்தாரும் மானம், மரியாதையைத் தொலைத்து விட்டு வதையுடன் வாழ்கின்றனர்.

சம்பவம் – 2

குமார் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன். கவிதா திருமணமான பெண் – இதற்கு மேல், சம்பவம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை அப்படியே பெயர்த்தெடுத்து இங்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரே வித்தியாசம், இங்கே கதையின் முடிவில் போலீசு வரவில்லை. கவிதா வீட்டிலிருந்து களவாடிச் சென்ற காசும், இருவரின் காமமும் தீர்ந்து போன பின் ‘காதல்’ ஜோடிகள் தாமே திரும்பி வந்து விட்டனர்.

(குறிப்பு : இந்த சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

டச் போன்சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்து மாணவர்களிடையே செல்பேசிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் கலாச்சார தாக்கத்தின் விளைவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடலின் போது அவர்கள் தெரிவித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த ரகம்தான்.

தற்போது பெருநகரங்களின் மாணவர்களிடையே செல்பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்திருக்கின்றனர். செல்பேசிகள் என்றால் சாதாரணமாக பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் கருப்பு வெள்ளைக் கருவிகள் அல்ல – இணையப் பயன்பாடு மற்றும் வீடியோக்களை காண்பதற்கு ஏதுவாக சந்தையில் விற்கப்படும் விலை அதிகமான தொடுதிரை செல்பேசிக் கருவிகள் (touch phones).

வசதி படைத்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை நச்சரித்து, விலையுயர்ந்த செல்பேசிகளை வாங்கிக் கொள்கிறார்கள். வசதியற்ற மாணவர்களோ இது போன்ற செல்பேசிக் கருவிகளை வாங்க பள்ளி, கல்லூரி நேரம் போக சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்கள். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொரியர் கம்பெனிகளில் வேலை செய்வது என்று கிடைக்கும் வேலைகளைச் செய்து சேர்க்கும் காசில் செல்பேசிகளை வாங்குகிறார்கள். இந்தளவு மெனக்கெடத் தயாரில்லாத சில கல்லூரி மாணவர்களோ, இதற்காகவே சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது, வேறு கல்லூரிகளில் படிக்கும் வசதியான மாணவர்களிடம் அடித்துப் பறிப்பது, செயின் அறுப்பது என்று எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் வாதம் – இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.

இம்மாணவர்களில் அநேகமானோர் முக நூல் (facebook) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித் தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முக நூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவைகளுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான “போர்னோ” (pornography – பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் — இலக்கியம்) கிடைக்கும் கருவியாகிவிட்டது.

செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகைசெய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. பெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேஜைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.

இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச்சுவைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்சுவைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச்சுவைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு ‘நட்பாகும்’ பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.

சக வயது மாணவிகளைக் ‘காதலிக்கும்’ ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு ‘காதல்’ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப் பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆபாசப் பேச்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுக்காக வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். செல்பேசி வைத்துக்கொள்ளாத மாணவர்கள் ‘நவ நாகரீக’ உலகத்தின் அங்கமாக மதிக்கப்படுவதில்லை. உடன் படிக்கும் மாணவர்களில் வசதியுள்ளவர்கள் ஆடம்பர நுகர் பொருட்களைத் துய்ப்பதன் மூலம் ஏற்படுத்தும் ‘முன்னுதாரணம்’ வாய்ப்பற்றவர்களிடம் ஏக்கத்தையும், வாய்ப்பை மறுக்கும் வரம்புகளை உடைத்தெறியும் வெறியையும் தோற்றுவிக்கிறது. விளைவாக, செல்போன் வாங்க செயின் அறுப்பும் – அதை ரீசார்ஜ் செய்ய ‘ஆண்டிகள்’ (ச்தணtதூ – அவர்களது மொழியில் நடுத்தர வயதுப் பெண்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் இவர்களிடம் எந்தவிதமான குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

மறுகாலனியாக்க நுகர்வு மோகத்தின் – தக்கை மனிதர்கள்..!

செல்பேசிகள் வழியே தொடர்ச்சியான இணையத் தொடர்பும், முகநூலில் மூழ்கிக் கிடப்பதும், அதில் கிடைக்கும் தொடர்புகளோடு ஆபாசமாகப் பேசிக் களிப்பதும் என்று சதா சர்வகாலமும் எதார்த்த உலகிலிருந்து விலகி சஞ்சரிக்கும் இம்மாணவர்களின் பண்புக் கூறுகள் பாரிய அளவில் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. மாணவப் பருவத்துக்கே உரித்தான புதுமைகளை சிருஷ்டிக்கும் படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவது, குழு உணர்ச்சியையும் அதன் வழியே ஒரு சமூக உணர்ச்சியையும் ஏற்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, சிக்கலானவைகளைச் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் இளமைத் துடிப்புள்ள மூளைச் செயல்பாடுகள் போன்ற நேர்மறை அம்சங்களை மெல்ல மெல்ல அவர்கள் இழந்து வருகிறார்கள்.

செல்பேசி இணையத் தொடர்பு மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், அதையே பேச்சிலும் செயலிலும் விரித்துச் செல்லும் செல்பேசி நட்புகளும் இம்மாணவர்களின் மிருக உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்து, ஹார்மோன்களைத் தாறுமாறாக இயக்கி சிந்தனையின் சமன்பாட்டையே குலைக்கின்றன. மலிவான பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு மட்டுமே வினையாற்றிப் பழகிப் போன மூளையின் நரம்புகள் இவர்களின் கவனத்தை கல்வியிலிருந்தும், விளையாட்டிலிருந்தும், சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் விலக்கி நிறுத்துகின்றன.

தனியார்மயத்தின் விளைவாய் மணவர்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்டிருக்கும் கல்வி, உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், புறக்கணிக்கப்படும் கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வேலையின்மை என்று மாணவர் சமுதாயத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய எந்த விசயத்திலும் இது போன்ற கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் மாணவர்கள் கவலை கொள்வதோ, எதிர் வினையாற்றுவதோ இல்லை. இறுதியில் விட்டேத்தித்தனமும், சமூகவிரோத தனிநபர்வாதமுமே எஞ்சி நிற்கிறது. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் இயல்பாகவே தோற்றுப் போகிறார்கள் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

முதலாளித்துவ நுகர்வு வெறியின் அடிப்படை விதியான, ‘எப்போதும் புதியவைகளைத் தேடித் துய்ப்பது’ ‘எந்த வழியிலாவது நுகர்ந்து விடுவது’ என்பது இவர்களை ஆவலுடன் அலைய வைக்கிறது. மூன்று இஞ்ச் அகலத் தொடுதிரை வசதி கொண்ட செல்பேசிகள் அளிக்கும் காட்சி இன்பத்தை விட அதிகமான இன்பத்தை புதிதாக சந்தையில் இறங்கியிருக்கும் நான்கு இஞ்ச் அகலத் தொடுதிரை செல்போன்கள் வழங்கவல்லது என்றால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இம்மாணவர்கள் துணிகிறார்கள். அதற்காக சில்லறைக் குற்றங்களில் ஈடுபடுவது என்பது நினைத்ததை சாதித்து முடிக்கப் பயன்படும் சாகச நடவடிக்கையாக வியந்தோதப்படுகிறது. இவர்களுடைய நட்புவட்டத்தில் இந்த சாகசங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் நாயக பிம்பத்துக்குக் கிறங்கிப் போகிறார்கள் – தங்களது பொறுக்கித்தனத்தை சாகசம் என்ற பெயரில் தொடரவும் செய்கிறார்கள்.

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

பொருள் நுகர்வின் மேல் உண்டாகும் மோகத்திற்கும் – அந்த மோகத்தைத் தணித்துக் கொள்ள குற்றச் செயலில் ஈடுபவதற்கும் இடையேயான எல்லைக் கோடு என்பதே கற்பனையானது தான். சமூக நியதிகள் முந்தையதைக் குற்றமற்றதாகவும், பிந்தையதை தண்டனைக்குரியதாகவும் வரையறுக்கிறது. சம்பாதிக்காத வயதில், படிக்கும் காலத்தில் இது போன்ற ஆடம்பர நுகர்பொருட்களைப் பாவிப்பது குற்றமல்ல – ஆனால் அதை அடைவதற்கு யாருடைய கழுத்துச் செயினையாவது அறுத்தாலோ, பிக்பாக்கெட் அடித்தாலோ மட்டும் குற்றம் என்றாகிறது. மேலும் ஆபாசப் படங்கள் பார்த்தாலோ யாரிடமாவது ஆபாசமாகப் பேசினாலோ குற்றம் இல்லை. ஈவ் டீசிங்கில் வரம்பு மீறாத வரை குற்றம் இல்லை என்று சொல்வது போல மாணவர்களின் இந்த சீரழிவுக் கலாச்சாரத்திற்கும் அப்படி சில வரம்புகளை கற்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டையும் பிரிக்கும் கோடு என்பது தற்போது மங்கி வருகிறது.

பாதை எதுவாயிருப்பினும் இலக்கு என்னவாயிருக்கிறது என்பதே முக்கியமானதாகி விட்ட இந்நிலையில், மேற்கொண்டிருக்கும் ‘பாதையில்’ தடுமாறி ஏதேச்சையாக மாட்டிக் கொள்பவர்கள் குற்றவாளியாகிறார்கள் – மாட்டாதவர்களின் கெட்டிக்காரத்தனம் போற்றப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகள் இந்தச் சின்ன வயதிலேயே இணையதளங்கள், செல்பேசிகள் என்று நவீன தொழில்நுட்ப சாத்தியங்களில் புகுந்து விளையாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைகிறார்கள். தமக்கு வாய்க்காத அறிவெல்லாம் தமது பிள்ளைகளுக்கு வாய்த்திருப்பதைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். எதேச்சையான சந்தர்ப்பத்தில் குட்டு வெளிப்படும் போது திகைத்துப் போகிறார்கள். நடந்த காரியத்துக்காக மனம் நொந்து போகிறவர்கள் கூட அதன் பின்னே ஒளிந்திருக்கும் காரணத்தைத் காணத் தவறுகிறார்கள். ஓரளவு விபரம் தெரிந்த நடுத்தர வர்க்கத்தினரோ, இவறையெல்லாம் ஒரு வரையறையோடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறார்கள்.

போதை பொருட்கள்

புழுத்து நாறும் ‘நவீன’ கலாச்சாரம் : உலகமயமாக்கல் வழங்கும் பரிசு..!

“அந்தக் காலத்துல சார்… ஒரு போன் பண்ணனும்னா டிரங்கால் புக் பண்ணனும். அப்பால எப்படா கூப்பிட்டு கனெக்சன் கொடுப்பான்னு தேவுடு காக்கனும். ஒரு வழியா கனெக்சன் கிடைச்சா ஒரே கொர்ர்ர்னு கேட்னு இருக்கும். இப்ப பாருங்க. எல்லார்ட்டயும் செல்போன் இருக்கு. அட, கூலி வேலைக்குப் போறவன் கூட வச்சிருக்கான் சார். இந்த வசதிகளையெல்லாம் அனுபவிக்கனும் சார்” – பேருந்திலோ, தொடர்வண்டியிலோ, தெருமுனை தேநீர்க் கடையிலோ அல்லது வேறு எங்காவதுமோ பொருளாதார உலகமயமாக்கலைப் பற்றிய பேச்சை எடுத்தவுடன் பாடமெடுக்கும் நடுத்தர வர்க்கத்தினரை எங்கும் காணலாம்..

ஆம், தொழில்நுட்பம் உலகமயமாகியுள்ளது. கணினி, இணையம், கைபேசி என தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளது. கைபேசியிலேயே இணையம் பார்க்கும் வசதியும் வளர்ந்துள்ளது. மொத்த உலகமும் தகவல் தொழில்நுட்பக் கண்ணியில் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் மிஷேல் ஒபாமா வடித்த சென்டிமெண்ட் கண்ணீர் அவரது கன்னங்களினூடே வழிந்து ஆண்டிபட்டியில் விழுவதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதித்துள்ளது. உலகின் கடைக்கோடியில் நிகழும் சம்பவங்கள் கை சொடுக்கும் நேரத்தில் அதன் மறுபக்கத்தின் மக்களைச் சென்று சேர்கின்றன.

பொருளாதார உலகமயமாக்கம் தொழில்நுட்பத்தை மட்டும் உலகமயமாக்கவில்லை – அதோடு சேர்த்து நுகர்வு வெறியையும், அதற்கு ஏதுவான முதலாளித்துவ தனிநபர் கலாச்சாரத்தையும், அது உண்டாக்கும் சமூகச் சீரழிவுகளையும் சேர்த்தே உலகமயமாக்கியுள்ளது. ஆபாசப் படங்கள் தரவிறக்கம் செய்யும் இணைய தளங்கள் இந்தியாவில் சட்ட விரோதம் – ஆனால் மேற்கின் பல்வேறு நாடுகளில் அது சட்டப்பூர்வமானது. கூடவே தொழில்நுட்ப சாத்தியங்கள் தேசங்களின் எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இணைய வெளியில் பாரவிக் கிடக்கும் ஆபாசக் குப்பைகளை எவர் நினைத்தாலும், எந்த நேரத்திலும், எந்த நாட்டிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்வதை அது சாத்தியப் படுத்தியுள்ளது.

செல்போன் நிறுவனங்கள் சந்தைப் பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் கழுத்தறுப்புப் போட்டியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதார பெருமந்தம் தோற்றுவித்திருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் எந்தளவுக்கும் இறங்கிப் போகத் தயாராய் உள்ளன. ஒரு பக்கம் லாப வெறியோடு அலையும் செல்போன் நிறுவனங்கள்; இன்னொரு பக்கம் வெட்டி அரட்டைக் கலாச்சாரத்துக்கும் இணையத்தின் கசடுகளுக்கும் அடிமையாக்கப்பட்ட இளைஞர் கூட்டம். இவர்களிருவரும் ஒருவருக்கொருவர் பொருந்திப் போகிறார்கள்.

இந்தப் பண்பாட்டை மேலும் வளர்த்தெடுத்து கல்லா கட்டும் விதமாகவே விதவிதமான ரீசார்ஜ் கூப்பன்கள், மலிவான விலையில் சிம்கார்டு, மலிவான விலையில் கொரியன் செல்போன்கள், மலிவாக இணைய வசதி என்று செல்போன் நிறுவனங்கள் தங்களிடையே போட்டி போடுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியுள்ள ஆபாசக் கலாச்சாரத்தில் கால் நனைக்கும் அளவிற்கு ‘துணிச்சல்’ இல்லாதவர்களுக்காகவே இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக சில நிழல் நிறுவனங்கள் நடத்துகின்றன. செல்போன் நிறுவனங்களும் இதைக் கண்டும், காணாமலும் தொடர அனுமதிக்கின்றன.

மாதச் சம்பளத்துக்காக அமர்த்தப்படும் பெண்கள், குறிப்பிட்ட சில எண்களில் அழைத்தால் மலிவான பாலுணர்ச்சியைத் தூண்டுவது போல் பேசுகிறார்கள். இதற்காகவே, ‘நட்புக்காக அழைக்க வேண்டிய எண்கள்’ ‘தனிமையைத் தீர்த்துக்கொள்ள அழைக்க வேண்டிய எண்கள்’ என்று சம்பந்தப்பட்ட நிழல் நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்கின்றன – மட்டுமின்றி, செல்போன் நிறுவனங்களே குறுந்தகவல்கள் மூலமும் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த எண்களை அழைத்தால், சாதாரண தொலைபேசிக் கட்டணங்களை விட பல மடங்கு அதிகளவில் செலவாகும். சில நிமிடங்கள் பேசுவதற்கே பல நூறு ரூபாய்களைக் கட்டணமாக வசூலிக்கின்றன. வசூலாகும் கட்டணத்தில் செல்போன் நிறுவனங்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு அனுமதியளிக்கின்றன. இவை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் சூழலில் பெண்களை பேசி பயன்படுத்த நினைக்கும் மாணவர்களின் செயல் எங்ஙனம் குற்ற உணர்வை ஏற்படுத்தும்?

கலாச்சாரச் சீரழிவு என்பது சூறைக்காற்றில் பரவும் விசம் போல் ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் படர்ந்து வருகின்றது. அற்றது நீக்கி உற்றதைப் பருகும் அன்னப் பறவை போல உலகமயமாக்கலின் ‘நற்பயன்களை’ மாத்திரம் பெற்றுக் கொண்டு, அதன் தீமைகளில் இருந்து எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், தனது பிள்ளை வழி தவறிச் செல்வதை தற்செயலாகவோ அல்லது விசயம் முற்றி விவகாரமாக வெடிக்கும் போதோ அறிய நேரும் பெற்றோர் அவ்வாறு முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

ஒரு படையெடுப்பைப் போல் கலாச்சார அரங்கில் நிகழும் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமெனில், புறநிலையில் இதற்கு மாற்றான ஒரு புதிய கலாச்சாரத்தை நிறுவ சமூக, பொருளாதாரத் தளத்தில் போராடுவதும், அதை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அக நிலையில் போராடுவதுமே உதவி செய்யும். மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதன் ஊடாகத் தான் இந்த மாற்றுக் கலாச்சாரத்தை வரித்துக் கொள்வதும் சாத்தியமாகும். எளிமையாகச் சொல்வதாக இருந்தால் சமூக உணர்வு, பொறுப்பின் மூலமே நுகர்விலும், வருமானத்திலும் தனிநபர் வாதத்தை முன்வைத்து வரும் இந்த கலாச்சார சீர்கேடுகளை அகற்ற முடியும்.

-தமிழரசன்.
_____________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________________

  1. சொல்பேசியா இல்லை தன்மானத்தை கொல்பேசியா..?

    அம்மன படம் பார்க்க பயந்துக்கொண்டு சைக்கிளில் பல மையில் ஓட்டி
    குற்றயுணர்வோடு அழய தேவையில்லை..! உள்ளங்கை நடுவிலே சொல்பேசி தருகிறது…அத்தனையும்…!

    பள்ளி மேசையை விற்று பாட்டில் வாங்கும் அளவுக்கு வள்ர்ந்துவிட்டது கல்வி வளர்ச்சி!!

    காதல் என்ற பெயரில் வளர்ந்துநிற்கிறது காம பிரியம்.

    சட்டமோ அசரசோ வேடிக்கை பார்க்கிறது ரோட்டோரத்தில் நிற்கும் பிச்சைக்காரனைப்போல்

    என்ன செய்வது?

    அமைச்சரே சட்டசபையில் ஆபாசபடம் பார்க்கவத்ததே இந்த செல்பேசி மண்ணிக்கவும் இந்த செக்ஸ்பேசி..!

  2. I just want to share some tips for parents.
    1. Don’t buy your kids laptops/tabs etc. Instead buy him an old fashioned PC (preferably second hand) with low RAM, no sound-card and internet. This he can only use for doing programming and playing old games like PCMAN.
    2. Buy lot of computer/science related books along with books with good moral stories (Don’t let them read craps like Harry Potter).
    3. Buy a standard English newspaper like The Hindu.
    4. Train them to type in Tamil
    5. Allow them to watch TV only with Discover/Nat Geo and other programs like “Oru vaarthai oru latcham” Vijay TV, “Puthagam Padi Parisai Pidi” Makkal TV, “Ondrey sol Nandrey sol” Kalaingar TV etc.
    6. If you want it badly take them to temple/mosque/church weekly once. Apart from that don’t discuss about caste/religion before your children and never allow them to listen/attend religious lectures.
    7. Encourage them to play cricket than watching it, ride cycle than racing in video-game and eat fruits, egg and veggies than junks like chips/soda/noodles.
    8. Play with them, study with them, read with them, sleep with them. Make them feel attached to family.
    9. Force them to mingle with neighbors like “Say good morning to uncle!” “Say thanks to sweeper!” “Say sorry to teacher” etc. Let the culture control their mind.
    10. Teach them about the scientific aspect of sex (not yourself but by trusted teachers/doctors) and let them get desensitized to abnormal sex-drives.
    11. Make them learn a music instrument rather than listening music. It is better if parent can teach this rather sending to a music school. I suggest Christians can join them in Church coir.
    12. Allow them to have friends in both gender but limit that to just a social interaction rather than personal relationship.

  3. செல்போன்..இணைய தொடர்பு கட்டணங்களை ..அவசியமாக உயர்த்தியே ஆகவேண்டும்..! பயன்பாட்டைக் குறைக்க வேறுவழி தெரியலை!

    எல்லாம் அந்த “ராசா” வின் கைங்கர்யம் !

  4. ழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். actors doing part time job as marketng executives.. pavam.. saappaatukke vali illai pola…

    I used to get anger or iritated whenever I watch this kind of advertisements. they just INSULT whoever is keeping the old model phone… who will give money to buy new model ? what is there their business in that?

    …But, I felt myself odd amoung my circle.. After reading this article, it seems terrible.
    we are trained to admire those MOVIE stars and all whatever trash shown in the movies….
    that is our people’s common ignorance…
    Vinavu keep doing this true journalist work for the shake of soceity…

  5. வினவு,
    நீங்கள் இந்த கட்டுரையில் சொல்வது அத்தனையும் உண்மை. ஆனால் அதற்கான தீர்வையும் நீங்களே சொல்லியிருக்கலாமே. என் போன்ற இளம் பெற்றோர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

  6. மிகவும் நல்ல பதிவு.பொறுப்பானதும் கூட. அறிவியல் முன்னேற்றம் புயற்காற்றுப் போல் வீசி வரும் போது வழியெல்லாம் இது போன்ற அழிவுகள் சாதாரணமாகி விட்டன. இதைத் தவிர்க்க இயலாது என்றுதான் தோன்றுகிறது. கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். ஆடம்பர வாழ்வில் அதீத மோகம், அதற்குத் தேவையான பணம் ஈட்ட எதற்கும் தயங்காத மனப்போக்கு, எளிதில் கிடைக்கும் ஆபாசம்,கல்வியறிவு தேவையில்லை – சான்றிதழ் போதும் எனும் சமுதாய அமைப்பு, நெறிகளுக்கு உட்பட்டு வாழ்வோரை எள்ளி நகையாடும் நாகரீகம், எந்தக் குற்றத்திலிருந்தும் தப்பிக்க உதவும் அரசியல் பலம், எந்தக் குற்றம் அல்லது இழி செயலையும் தண்டிக்க இயலாதபடி வக்காலத்து வாங்கும் அரசியல் அமைப்பு…! பட்டியல் முடியாதது. இந்த விஷச் சூழலில் இருந்து பிள்ளைகளைப் பெற்றோர் மட்டும்தான் காக்க இயலும்; பெற்றோரை நாடிப் பிள்ளைகள்தாம் பிழைத்துக் கொள்ளவும் வேண்டும். சமுதாய அமைப்பு திருந்தி பிள்ளைகள் மேம்பட்டு விடுவார்கள் என எதிர்பார்ப்பது வீண் வேலை. தீதும் நன்றும் பிறர் தர வாரா! நல்ல பதிவுக்கு மீண்டும் நன்றிகள்.

  7. வினவு – இக்கருத்தினை முற்றிலுமாக நிராகரிக்க சில காரணங்கள் உண்டு. தனி மனித ஒழுக்கங்கள் மீறப்படுகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன், ஊழல்வாதிகளிடம் இருக்கும் பணம் அவர்களின் மீது இருக்கும் பழிகளைத் துடைத்து, அவனைச் சமூகத்தின் புனித அடையாளமாக காட்டும் போக்கின் முடிவுதான் தனிமனித ஒழுக்க மீறல்களாய் மிளிர்கின்றன. மக்கள் கெட்டவர்களை, தீய எண்ணமுடையோரை சகித்துக் கொள்கிறார்கள். அதன் காரணமாய் தப்புச் செய்தாலும் பணம் சேர்ப்பவன் வல்லவன், அதன் பிறகு நல்லவன் என்ற அடைமொழி பெறுகிறான்.அவ்னைச் சமூகம் கொண்டாடுகிறது. சமூக சீரழிவிற்கு இது மட்டுமல்ல காரணம். எங்கெங்கு நோக்கினும் பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள், கலை என்கிற பெயரில் கவட்டிக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ணும் படைப்புகள் என்று பெண்களை போகப் பொருளாக்கி காசு குவிக்கும் முதலாளிகளில் சமூகத்தில் அடையாளங்களாய் முன்னிறுத்தப்படுகின்றார்கள். இதுவும் ஒரு காரணம். இப்படி ஒவ்வொரு மூலைக்குமாய் மனித குல விரோதிகள் தலைவர்களாய், நல்லவர்களாய் உலாவருகிறார்கள். அவர்களை ஓடோடி கொண்டாடி வரும் சமூகத்தில் இப்படி ஒரு சீரழிவு நடக்கத்தான் செய்யும்.

  8. என்ன தொழிற்நுட்பம் வந்தாலும், இஸ்லாமிய சட்ட திட்டங்கள் படி வாழ்ந்தால் எந்த தீமையையும் செய்யமாட்டோம்

Leave a Reply to கோவை எம் தங்கவேல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க