privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

-

சாதிக் கூட்டம்
ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்.

ன்றளவும் தமிழக கிராமங்கள் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், இரட்டைக் குவளை முறையும் தனிச்சுடுகாடும் இருந்துவரும் நிலையில், கிராமப் பொதுக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் சென்று வழிபடுவதற்கு ஆதிக்க சாதியினர் தடைபோட்டு வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால், ஊர் திருவிழாக்களுக்குத் தப்படிக்க மறுத்தால் தண்டிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாகவும், வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ராமதாசு கும்பல் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறது. இது மட்டுமின்றி, ராமதாசும், அவரது புதிய கூட்டாளிகளும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் ஊர்ஊராய்ப் போய்க் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கோவையில் நடந்த அனைத்துச் சமுதாயப் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ரெட்டியார் சங்கத்தைச் சேர்ந்த காமராஜ், “நம்பியூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து வந்தனர். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். அதோடு வாலைச் சுருட்டிக் கொண்டனர். இனி யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது” என வெளிப்படையாகவே ஆலயத் தீண்டாமைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

அக்கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த பா.ம.க. ராமதாசோ இன்னும் ஒருபடி மேலே போய், “பி.சி.ஆர். சட்டத்தில் புகார் அளிக்கவும், வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது. குழந்தைகளிடம் சாதியைப் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்” எனப் பேசி ஆதிக்க சாதித் திமிருக்கும் வன்கொடுமைக்கும் கொம்பு சீவிவிட்டிருக்கிறார்.

இப்பேரவை நடத்திவரும் கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்களோ ஒருபுறம் பொய்-அவதூறுகளையும் மற்றொருபுறம் வெறுப்பையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக உமிழ்கின்றன.

‘‘தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. ஆனாலும், தாழ்த்தப்பட்டோர் மற்ற சமுதாயத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப் புகார்களைக் கொடுத்து வருகின்றனர். அதனால், இச்சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களைப் பரிசீலித்து முடிவுசெய்ய மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு உடனடியாகப் பிணை கிடைக்கவும்; பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றவாறும் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.”

‘‘வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பொய்ப் புகார்களுக்கு அடுத்து, காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகத் திருமணங்களால்தான் தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் கெட்டு வருகிறது. இந்நாடகத் திருமணங்கள் பணம் பறிக்கும் நோக்கத்தோடு நடந்து வருவதோடு, இதனைச் சில தலித் தலைவர்கள் தூண்டிவிட்டு வருகிறார்கள். எனவே, இந்நாடகத் திருமணங்களைத் தடுக்கும் விதத்தில், பெண்ணின் திருமண வயதை 21 ஆகவும், ஆணின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும்; இந்த வயதிற்கு முன்பு திருமணம் நடத்த வேண்டுமென்றால், அத்திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகத் திருமணங்கள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.”

‘‘10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் மாற்றப்பட வேண்டும்” என ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் கோருகிறார்கள்.

*********

சாதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், திராவிட விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

தீண்டாமையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வரும் இந்தப் பிற்போக்குக் கும்பலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இதிலிருந்தே வன்கொடுமைச் சட்டம் எந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும், அந்தச் சட்டம் எவ்வளவு மொன்னையானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

வன்கொடுமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டியே இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வாதிடுகிறது, ராமதாசு கும்பல். மேலவளவு முருகேசன் கொலை வழக்கிலும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரின் வாயில் மலத்தைத் திணித்த வழக்கிலும்கூட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல், சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ்தான் தண்டிக்கப்பட்டனர். இவ்வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இந்தத் தீர்ப்புகளைக் காட்டி இவ்வழக்குகளில் வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாதிடுவது எத்துணை மோசடியானதோ, உண்மைக்குப் புறம்பானதோ, அதைப் போன்றதுதான் ராமதாசின் வாதமாகும்.

சாதாரண மக்கள் தரும் எந்தவொரு புகாரையும் இழுத்தடிக்காமல் போலீசுக்காரர்கள் பதிவு செய்து விடுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் போலீசு நிலையங்களில் நடத்தப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கச் சென்றாலோ, அப்புகாரை போலீசு தனது சாதிப் பற்று மற்றும் ஆதிக்க சக்திகளோடு அதற்குள்ள உறவு ஆகியவற்றின் காரணமாக நிராகரித்துவிடுவதில்தான் அக்கறை காட்டுகிறது. போலீசின் இந்த அலட்சியத்தையும் தாண்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அதற்கு வெளியிலிருந்து ஓர் அமைப்பின் உதவியைத் தாழ்த்தப்பட்டோர் நாடுவது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக வரும் இயக்கங்களை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைக் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஆதிக்க சாதிகள் பழி போடுகின்றன.

இச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் கொடுக்கும் புகார்கள் போலீசு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதனைச் சாதாரண கீழ் நிலையில் உள்ள போலீசு அதிகாரிகள் விசாரிக்க முடியாது. போலீசு துணைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அந்த அதிகாரி இது பொய்ப்புகார் என அறிக்கை அளித்தால், நீதிமன்றம் உடனடியாகவே அப்புகாரைத் தள்ளுபடி செய்துவிடும். இது, ஆதிக்க சாதியினர் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும்.

தேசியக் குற்றவியல் ஆவணத் துறை வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2007 முதல் 2010-ஆம் ஆண்டு முடிய இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைக் குற்றங்களில் 67 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களில் 81 சதவீதமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. உண்மைப் புகாரைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பாக இருக்கும்பொழுது, பொய்ப் புகாரை போலீசு பதிவு செய்கிறது என்றால், போலீசு யாருடைய ஆதாயத்துக்காகவோ தாழ்த்தப்பட்டோரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

சாதி பலியானவர்கள்
வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (இடது); வேறு சாதியைச் சேர்ந்த தனது வகுப்புத் தோழனை காதலித்த விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்ததையடுத்து, ‘மர்மமான’ முறையில் தீயில் கருகி இறந்து போன கவுண்டர் சாதியைச் சேர்ந்த நந்தினி.

ஏழு கடல் – ஏழு மலைகளைத் தாண்டிப் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட நீதி கிடைத்துவிடுவதில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2010-ஆம் ஆண்டு முடிய, கடந்த 21 ஆண்டுகளில் நாடெங்கும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் (1,26,593), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,00,098. தீர்ப்பு அளிக்கப்பட்ட 25,573 வழக்குகளில் 8,628 வழக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2010-ஆம் ஆண்டு முடிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,635. இதில் 30 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 2,839 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தீர்ப்பு அளிக்கப்பட்ட 766 வழக்குகளில் 189 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 577 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

‘‘இந்தியாவெங்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் எரிக்கப்படுகின்றன” என்ற புள்ளிவிவரத்தோடு, கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தாலே, இச்சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்விதப் பாதுகாப்பையும் நீதியையும் வழங்கிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக்குடியிருப்பு, தனிக்குழாய், தனிக்கிணறு, தனிச்சுடுகாடு போன்றவை இருப்பதை இச்சட்டம் குற்றமாகப் பார்க்கவில்லை. தீண்டாமையின் இந்த வடிவங்களை அரசும் சட்டமும்கூட ஏதோ சம்பிரதாயமான நடைமுறையாக, காலப்போக்கில்தான் இவற்றை மாற்ற முடியும் என்பது போலவே கருதுகின்றன. இப்படிபட்ட நிலையில் இன்று தீண்டாமையோ புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாகச் சோன்னால், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினால், ஆதிக்க சாதியினரோ தங்களுக்கென தனிக் கோவிலைக் கட்டிக்கொண்டு, அதில் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதியில்லை என வக்கிரமாக வாதிடுகின்றனர். முன்பு தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணியத் தடை விதித்த ஆதிக்க சாதியினர், இந்த நவீன காலத்திற்கு ஏற்ப அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டத் தடை விதிக்கின்றனர். இந்திய அரசின் வங்கிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாழ்த்தப்பட்டோருக்குக் கடன் தர மறுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ப.சிதம்பரம் புலம்பியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது போலீசும் அரசு துருப்புகளும் நடத்தும் தாக்குதல்கள் – பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கொடியன்குளம் தாக்குதல், தாமிரபரணி படுகொலை, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படுவது போன்றவை இச்சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ஆதிக்க சாதிவெறியர்களுக்குச் சாதகமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனக் கோருவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இச்சட்டம் வழங்கியிருக்கும் பெயரளவிலான பாதுகாப்பையும் பறித்தெடுப்பது தவிர வேறல்ல. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்துவிட்டு, “நான் இச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரவில்லை” என எகத்தாளமாகப் பகடி செய்கிறார், ராமதாசு.

***********

சாதி புள்ளிவிபரங்கள்சாதி மாறித் திருமணங்கள் செய்வதை அனுமதிக்கவே கூடாது என சாதித் தூமைவாதம் பேசி வரும் கொங்கு வேளாளர் பேரவையைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், “கடந்த ஓர் ஆண்டில் மட்டும் காதல் திருமணங்களால் 963 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 716 பேர் வாழாவெட்டியாக உள்ளனர். ஏழு ஆண்டுகளில் 300 கோடி ரூபா பணத்தைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தினரிடம் இருந்து கறந்துள்ளனர்” என்றொரு புள்ளிவிவரக் குண்டைத் தூக்கிப் போட்டு வருகிறார் (ஜூ.வி.,30.12.12, பக்.28) அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய தனது கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 955 காதல் திருமணங்களில் 712 தோல்வியில் முடிந்துவிட்டதாக’’க் கூறுகிறது. ராமதாசு-காடுவெட்டி குரு கும்பல், நாடகக் காதல் திருமணங்களால் 2,000 வன்னியப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்டியல் தங்களிடம் உள்ளதாகக் கூறித் திரிகின்றனர்.

இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா, போலீசில் வழக்குப் பதிவாகியிருக்கிறதா எனக் கேட்டால், இதெல்லாம் பெண் வீட்டாரின் மானப் பிரச்சினை, எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எனப் பதில் அளித்து, செண்டிமென்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகக் காதல் திருமணங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரும் ராமதாசு, அந்த விசாரணைக்கு இணையாக, ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தங்கள் சாதிப் பெருமையைக் கட்டிக் காப்பதற்காக நடத்தியிருக்கும் கௌரவக் கொலைகள் பற்றிய விசாரணை நடத்தக் கோருவாரா?

அப்படியொரு விசாரணை நியாயமாக நடந்தால், மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றியதாகக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிட, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி, அச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; தாழ்த்தப்பட்ட இளைஞர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கையைவிட, தனது குடும்பத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால், தனது பெற்றோர்களால், உறவினர்களால், சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் என்ற உண்மைகள் அம்பலத்துக்கு வரும்.

‘‘வன்னியன் வீட்டுப் பெண்களை வன்னியன்தான் காப்பாற்ற வேண்டும். கொங்கு வேளாளார் வீட்டுப் பெண்களை கொங்கு வேளாளர்கள்தான் காப்பாற்ற வேண்டும். முதலியார் வீட்டுப் பெண்களை முதலியார்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என வன்னிய சாதிப் பெருமை பேசும் இணையதளமொன்று சூளுரைக்கிறது. ஆனால், வன்னிய சாதிப் பெண்களுக்கு வன்னியனாலும், கவுண்டர் சாதிப் பெண்களுக்கு கவுண்டனாலும்தான் ஆபத்து என்பதை இக்கௌரவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

************

சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்

தருமபுரியில் வன்னிய சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலைத் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் கண்டித்துள்ளன என்றாலும், தற்பொழுது ராமதாசு அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற போர்வையில் ஆதிக்க சாதிவெறிக்குத் தூபம் போட்டு வருவதையும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதையும் எத்தனை கட்சிகள் கண்டிக்கவும், அதற்கு எதிராகப் போராடவும் முன்வந்துள்ளன என்பதுதான் இப்பிரச்சினையில் கவனத்தைக் குவிக்க வேண்டிய விடயம்.

இந்த ஆதிக்க சாதிக் கும்பல் கட்டியிருக்கும் பேரவையைத் தடை செய்யாமல், தமிழகத்தின் மூன்றே மாவட்டங்களில் மட்டும் (மதுரை, இராமநாதபுரம், கடலூர்) ராமதாசு நுழைவதற்குத் தடை விதித்து நாடகமாடுகிறார், ஜெயா. இத்தடையை கருணாநிதி எதிர்த்தவுடன், கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதிக்கப்பட்டத் தடை அ.தி.மு.க. அரசால் உடனடியாக நீக்கப்படுகிறது. இப்படியாக அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே ஆதிக்க சாதியினரை அரவணைத்துக் கொள்வதில் ஒரு போட்டாபோட்டி நடந்து வருகிறது.

மற்ற திராவிடக் கட்சிகளும், தமிழின அமைப்புகளும் காரியத்தனமாக மௌனம் சாதிக்கின்றன. சி.பி.எம்., ராமதாசு மீது விதிக்கப்பட்ட தடையை ஆதரிப்பதாக அறிவித்ததோடு முடங்கிக் கொண்டது. காதலைக் கொண்டாடும் மாநாடு நடத்தியதைத் தாண்டி, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் தெம்பு சி.பி.எம்-க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிற தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் மற்றும் பெரியார் திராவிடர் கழகம், ம.க.இ.க., ஆகிய அமைப்புகளும்தான் ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டம் நடைபெறும் இடங்களில், அதனை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடி வருகின்றன.

தேசியக் கட்சியானாலும் சரி, திராவிடக் கட்சியானாலும் சரி, அக்கட்சிகள் அனைத்தும் பல காலமாகவே ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைத்தான் கட்சிப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றன. இப்பிரமுகர்களில் பலர் நிலவுடமை ஆதிக்க சக்திகள் என்பது ஒருபுறமிருக்க, தற்பொழுது தனியார்மயத்தையும் தங்கள் பதவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட், மணல் காண்டிராக்டு, கல்வி வியாபாரம் எனப் புதுவிதமான தரகு முதலாளிகளாகவும் வளர்ந்துவிட்டனர். ஓட்டுக்கட்சிகளில் அண்ணன்களாக, தளபதிகளாக வலம் வரும் இப்பிரமுகர்களுக்கு ஓட்டுப் பொறுக்குவதற்கும், தங்களது சுய இலாபத்திற்கும் சாதியும், சாதி அரசியலும் அவசியமாக உள்ளது. அதனாலேயே இந்தத் தளபதிகளும் சாதி சங்கங்களும் இயற்கையான கூட்டாளியாகப் பொது அரங்கில் நடமாடி வருகின்றனர். இந்தத் தளபதிகள்தான் ஓட்டுக்கட்சிகளின் பணப்பெட்டிகளாக, அடியாட்களைத் திரட்டிக் கொடுப்பவர்களாக, சுருக்கமாகச் சோன்னால் கட்சியின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதால், எந்தவொரு ஓட்டுக்கட்சியும் தமிழகத்தில் தற்பொழுது தூண்டிவிடப்படும் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக நிற்காது; நிற்கவும் முடியாது.

எனினும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ராமதாசு கும்பலை ஆதரித்து நிற்கவில்லை. வன்னிய சாதி மக்கள் கணிசமாக வாழும் கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதித்த தடையை எதிர்த்து, அம்மாவட்டம் கொதித்துப் போவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி. இது, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே சாதி கடந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும், அவர்கள் மத்தியில் சாதிகளைப் புறக்கணிக்கக்கூடிய ஜனநாயகப் போராட்டங்களைக் கட்டமைப்பதற்குமான வாய்ப்புகள் அருகிப் போய்விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

– குப்பன்

சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா?

வீராணம் ஏரி நீரை விவசாயத்துக்குத் திறந்துவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரி மாதம் சிதம்பரம் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “இதுவரை நடந்ததை நாங்கள் மன்னித்துவிட்டோம்; மறந்துவிட்டோம். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறக்கும் பிரச்சினைக்காக பா.ம.க. போராட முன்வந்தால், அவர்களுடன் இணைந்து விடுதைச் சிறுத்தைகள் கட்சியும் போராடும்” எனப் பேசியிருக்கிறார், தொல்.திருமாவளவன்.எதை மறப்பது? யார், யாரை மன்னிப்பது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ராமதாசு குற்றஞ்சுமத்தி வருவதை மன்னிப்பது, மறப்பது என்றால், அதற்கு திருமாவிற்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால், தருமபுரி தாக்குதலை மன்னிப்பது என்றால், அந்த உரிமையை திருமாவிற்குக் கொடுத்தது யார்? தருமபுரியில் நடந்த தாக்குதல் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக்கூடியதா? மன்னிக்கக் கூடியதா?

தருமபுரியில் தமது கட்சியினரும் சாதியினரும் நடத்திய தாக்குதலுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், ஊர்ஊராகக் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பிச் சாதிவெறியைத் தூண்டி வரும் ராமதாசை மன்னிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகாதா, துரோகமாகாதா? ராமதாசு கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணிகள் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா?

“தருமபுரி தாக்குதலையொட்டி பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இன்ன பிற ஜனநாயக சக்திகளும் ஆற்றவிருக்கும் எதிர்வினையென்ன?” என்று மற்றவர்களையெல்லாம் கூண்டிலேற்றிக் கேள்வி எழுப்பினார் திருமா. அவருடைய எதிர்வினை “மறப்போம், மன்னிப்போம்” என்று தெளிவு படுத்திவிட்டார்.

திருமாவின் இந்தக் கூற்றுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்ன?

______________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

  1. நேற்று சன் டீவியில் பொங்கலூர்காரன் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தையும் மீறுவொம்னு சொல்றான். பாவம் மானுஷ்யபுத்திரன்… அப்படியே ஷாக் அயிட்டாரு! இப்படி பட்டவர்களை அரசு உடனே கைது செய்ய வேண்டும். இந்த நாட்டில் ஒழுங்காக இருப்பது அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச்சட்டம் மட்டுமே! அதையும் மீறத் துனிந்துவிட்டது இந்த ஜாதிவெறிக் கூட்டம்.

  2. ______ குப்ப கன்னமூடிகிட்ட உலகம் இருண்டுவிட்டதுன்னு நினைக்காத கடலூர் போராடதாலத்தான் தடை விளக்க பட்டது

  3. ***திருமாவின் இந்தக் கூற்றுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்ன?***

    நீங்க கூவி கூவி அழைத்தாலும் அவ____ ஜாதியவிட்டு வரமாட்டான்ப்பு….இவ________கலுக்கு பேரு சீர்திருத்த வாதிங்க…புரட்சிக்காரங்க…அட போங்கப்பு…

  4. //வன்னிய சாதி மக்கள் கணிசமாக வாழும் கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதித்த தடையை எதிர்த்து, அம்மாவட்டம் கொதித்துப் போவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி//

    அன்று கடலூரில் கூடிய கூட்டத்தை பார்க்கவில்லையா?

  5. //அப்படியொரு விசாரணை நியாயமாக நடந்தால், மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றியதாகக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிட//

    அப்படி நடந்தது என்று ஒத்துகொள்கிறீர்களா?

  6. // ஆனால், வன்னிய சாதிப் பெண்களுக்கு வன்னியனாலும், கவுண்டர் சாதிப் பெண்களுக்கு கவுண்டனாலும்தான் ஆபத்து என்பதை இக்கௌரவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.//

    தேன்கனிகோட்டையில் 14 வயது பள்ளி மாணவியை விடுதலை சிறுத்தை கும்பல் கடத்தி சென்றது. மீட்க வந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதனால் பெண்ணின் தாய்மாமா உயிர் இழந்தார்.

    வன்னியர் சங்கமும் விடுதலை சிறுத்தை கும்பலும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மீடியாக்கள் மூடி மறைத்து விட்டன.

    வினவு இதை பற்றியும் ஒரு விவரமான கட்டுரை எழுதலாமே…

  7. vinavu ராமதாசுக்கு மக்கள் ஆதருவு இல்லாததை கண்டுபிடித்தபிறகும் ஏன் அவரை பார்த்து மிரளுகிறது? புரியவில்லையே! ஒருவேளை வீரமெல்லாம் மக்கலை முட்டாளாக எண்ணுகிறதோ?வினவுக்கே வெளிச்சம்.

      • அட படிச்ச முட்டாள்களா , எல்லா சாதிவெறி குரங்குகளையும் தான சொல்லிருக்காங்க.. இதுல ஏன் கொரில்லாவ சேக்கல, ஏன் சிம்பன்ஸிய சேக்கலன்னு கேட்டா?

        • //வன்னிய சாதிவெறி பொய் ஆதிக்க சாதிவெறி ஆயிடுச்சேவன்னிய சாதிவெறி பொய் ஆதிக்க சாதிவெறி ஆயிடுச்சே// கட்டை பஞ்சாயத்து கும்பல் செய்த வேலைதானே?

        • அட , பயங்கர புத்திசாலி போல இருக்கே. கொஞ்சம் இந்த இணைய தளத்திலே 3 மாசமா வர்ற பதிவோட தலைப்ப பாருங்க. அதுல “வன்னிய சாதி வெறி” தலைப்போட கொஞ்சமும் மற்றும் பா.ம.க , இல்ல ராமதாஸ் பேரோட கொஞ்சம் தலைப்புமா சேந்து கிட்ட தட்ட 10+ பதுவிகள் வந்து இருக்கு. ஆனா ஆதிக்க சாதி வெறி 2-ஒ இல்ல 3-ஒ தான் வந்திருக்கு.

          அது தான் கொஞ்ச நாளா ‘வன்னிய ஜாதி வெறிய’ தலைப்புல காணோமே-நு பழக்க தொஷத்துலே கேட்டுட்டேன். மன்னிச்சு விட்டுடுங்க புத்திசாலி.

          • தலைப்ப படிச்சுட்டு நேரா கமெண்ட் போடுவீங்களா? பதிவில் வன்னிய சாதிவெறியர்களை மட்டுமா சாடியிருக்கிறார்கள்? ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை ஆதிக்க சாதிவெறியர்களையும் தான் கண்டிக்கிறார்கள். எல்லாரையும் வன்னியர்னு சொன்னா அப்புறம் மத்த சாதிக்காரவுக குடும்பத்துல குழப்பம் வந்துறாதா?

  8. லூஸ்ல உடுங்க. வரப்போற பார்லிமென்ட் தேர்தல்ல தர்ம அடி வாங்கினப்புறம் டாக்டர் வாலை சுருட்டிப்பாரு.

  9. எங்க டாக்டர் பேசுறது இருக்கட்டும். உங்க டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டத்தில யாராவது திருமா கூட்டத்து பொண்ணுங்களை காதலித்து கலியாணம் பண்ணச் சொல்லுங்களேன். திருமா கூட்டத்துல அதுக்கு கீழே உள்ள கூட்டத்தில பொண்ணு கட்டச் சொல்லுங்களேன். அப்புறமா சாதிய ஒழிக்கலாம். இந்த கூட்டங்களுக்குள்ள நடக்கிற கத்திக்குத்து, பஞ்சாயத்து எல்லாம் உங்களுக்கு ஒண்ணுமில்லாத விசயம், ஆனா ராமதாசு அவரு கூட்டத்துக்காக பேசினா அது சாதிவெறியா? ஒரு காலத்துல பாப்பானுக்கு எதிரா கிளம்பின கூட்டம் இப்ப தலீத்துக்கு எதிரா கிளம்பி இருக்கு. எந்த காலத்திலயும் ஒரு பக்கமா சலுகை போய்கிட்டு இருந்தா இதுதான் நடக்கும். பேசமுடியாம உள்ளுக்குள்ளேயே பொருமிக்கிட்டு இருந்தவன் எல்லாம் இன்னைக்கு ராமதாசு தைரியமா குரல் கொடுத்ததும் கிளம்பிட்டான்ங்கள்ல. நிஜம் என்னங்கிறதை இனியாவது புரிஞ்சுக்கிட்டு அடக்கி வாசிங்கப்பா..

  10. எல்லா பகுதரிவதியும் சேந்து சாதிய ஒலிக்கிரம்னு பேருல பொய்யா சொல்றாங்க … இதுல ஒரு கூட்டம் மள்ளராம் ?

  11. ராமதாசு..சாதி..சந்தையில்..சாதி.வெரியர்கலை..திரட்டி..தாழ்தப்பட்ட..மக்கலுக்கு..யெதிராக்……அராஜக..அரசியலை..னடதிட..ஷபதம்..பொடுகிரர்ர்..தமிழக..அரசு…இன்னும்..கடுமையான்..னடவடிக்கைகலை..யெடுதிடவென்டும்…யென்பது..தான்..இன்ட்ரய..மக்கலின்..யெதிர்..பார்ப்பு..ஆகும்…???கிருஷ்னமூரித்தி/கோபி…20.5.2013

  12. //10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் மாற்றப்பட வேண்டும்” என ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் கோருகிறார்கள்.//

    இதில் என்ன தவறு இருக்கு?
    தனித்தொகுதியே வேண்டாம் என்று சொன்னால் அதுதான் தலித் ஆதரவுபடி தவறு?

    அது என்ன தலித்களுக்கு மட்டும் தனித்தொகுதி?
    தலித்கள் மட்டும் தான் இந்தியர்களா?
    மற்றி சாதிகாறர்களுக்கும் தனித்தொகுதி தரவேண்டியது தானே?

    கடந்த 1967 ஆண்டு முதல் இன்று வரை எனது சொந்த செங்கம் தனித்தொகுதி- பெரிதாக ஒன்றும் வளர்ந்து விடவில்லை.

Leave a Reply to ஈழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க