privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

-

டெல்லி மக்கள் போராட்டத்தை ஒட்டி, பெருகி வரும் வல்லுறவுக் குற்றத்தை தடுப்பது குறித்து சட்டம், பண்பாடு ஆகிய இரு தளங்களில் இரு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. நடந்துள்ள குற்றத்தின் கொடூரம் காரணமாக வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. பிரச்சினை சூடாக இருப்பதால், வல்லுறவுக் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்.

பண்பாட்டுத் தளத்தில், பெண்கள் அடக்க ஒடுக்கமாக உடையணியாதது, இரவு நேரத்தில் தனியாகப் போவது போன்ற மேற்கத்திய கலாச்சார சீரழிவுகளே இதற்கு காரணம் என்று சங்கப்பரிவாரத்தினர் உள்ளிட்ட பிற்போக்குவாதிகள் கூறுகின்றனர். இசுலாமிய மதவாதிகள் உடனே பர்தா மார்க்கெட்டிங்கை த் தொடங்குகின்றனர்.

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
பெண்களுக்குப் பாதுகாப்பு கோரியும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் டிசம்பர் 23 அன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஆயிரம் முறை பதிலளிக்கப்பட்டாலும், இந்த ஆணாதிக்கக் கருத்துகள் வெட்ட வெட்டத் துளிர்க்கின்றன. ஆண் சட்டையைக் கழற்றுவதும், வெற்றுடம்போடு இருப்பதும் தங்களை மிருகமாக்குவதாக பெண்கள் கூறவில்லையே, ஆண்கள் கல்லூரிகளின் பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் குவிவதில்லையே என்ற எளிய உண்மைகள் கூட ஆண்களுக்கு உரைப்பதில்லை. பத்து நாள் பட்டினி ஆனாலும், ஓட்டல் கடையில் தின்பண்டங்களின் மீது காசு கொடுக்காமல் யாரும் கை வைப்பதில்லை. அந்த அளவுக்குத் தனிச் சொத்துடைமையை மதிக்கும் கருத்து இரத்தத்தில் ஊறியிருப்பவர்கள்தான், யாரோ ஒரு பெண் கவர்ச்சியாக உடையணிந்து சென்றால் தன்னை கைநீட்ட வைக்கிறது என்று கூச்சமில்லாமல் பேசுகின்றனர்.

இந்த கூச்சமின்மை நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் அளித்த பண்பாட்டுக் கொடை. பெண்ணை போகப்பொருளாகப் பார்ப்பதற்குப் பழக்கியிருக்கும் நிலவுடைமைப் பண்பாடு கூட, மனித குல மறுஉற்பத்தியில் பெண்கள் ஆற்றும் பாத்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், தாய்மை – புனிதம் என்ற விழுமியங்களை வைத்திருந்தது.

ஆனால் மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டு ரகப் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண் சிசுக்கொலை அதிகரித்திருக்கிறது. வரதட்சிணைக் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன. வாடகைத் தாய்களின் விலை குறைந்து வருகிறது.

“புகுந்த வீட்டில் உங்கள் மகள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய எங்கள் கடையில் நகை வாங்குங்கள்” என்ற விளம்பரத்தை எதிர்த்து சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தியிருக்கிறது, ஒரு பெண்கள் அமைப்பு. புகுந்த வீடு போகும் பெண்ணின் உயிரை உத்திரவாதப்படுத்த, நகை அணிவித்து அனுப்புவதைப் போல, வெளியில் செல்லும் பெண்களின் ‘கற்பை’ உத்திரவாதப்படுத்தவும் கவசங்கள் விற்கப்படலாம். பாலியல் தாக்குதலைத் தடுக்க மாணவிகள் மேல் கோட்டு அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு கூறியிருக்கிறது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஆணாதிக்கத்துக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்கள்.இராணுவமும் போலீசும்

தொலைக்காட்சியும் திரைப்படங்களும் ஆணாதிக்கத்தை மேலும் வக்கிரமாக்கியிருக்கின்றன. தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதற்காக சூர்ப்பனகை மூக்கை அறுத்தான் ராமன் என்கிறது ராமாயணம். காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றுவது சகஜமாகி வருகிறது. ஏனென்றால், நுகர்வியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

எவ்வளவு நுகர்கிறோமோ அவ்வளவு மகிழ்ச்சி, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற மனோபாவமே ஒரு மனிதனின் விழுமியங்களை ஆட்சி செய்கிறது. இத்தகைய சூழலில் ஆண்களின் நுகர்பொருள் பட்டியலில் பெண்ணும் ஒரு பண்டமாகக் காட்டப்படும்போது, அவள் மிக எளிதில் பாலியல் வன்முறையின் இலக்காகி விடுகிறாள். சக மாணவன், ஆசிரியன், தெருவில் போகிறவன், பக்கத்து வீட்டுக்காரன், சொந்தக்காரப் பையன் என்று எந்த ஒரு ஆணும் தன்மீது பாலியல் வன்முறையை செலுத்தக்கூடும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு ஒரு பெண் ஆளாக்கப்பட்டிருக்கும்போது, இதனை சட்டத்தின் மூலம் தடுப்பது எப்படி என்பதே கேள்வி.

வர்மா கமிசன்
நீதிபதி வர்மா கமிசன் அளித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ‘குடியரசு’ தினத்தன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி (உள்படம்) நீதிபதி வர்மா.

தீண்டாமையை நல்லொழுக்கமாகக் கருதும் சமூகத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஏன் இயங்க மறுக்கிறதோ, அதே காரணத்தினால்தான், ஆணாதிக்க வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களும் இயங்குவதில்லை. சட்டம் எதனைக் குற்றம் என்று விளக்குகிறதோ, அதுவே ஆண்மையின் இலக்கணமாக பண்பாட்டால் உயர்த்தப்படும்போது, பெண்ணை துரத்தி மிரட்டிப் பணியவைப்பது கதாநாயகர்களின் சாதனை ஆகிவிடுகிறது. இத்தகையொரு ‘நாயகன்’தான் காதலுக்கு இணங்க மறுத்த காரணத்தினால் விநோதினி என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றினான். முந்தையது கலை, பண்பாடு. பிந்தையது குற்றம். “புகை, குடி போன்றவற்றைக் காட்டிலும் வல்லுறவும் கொலையும் பாரிய குற்றங்கள் அல்லவா? சினிமாவில் அத்தகைய காட்சிகள் வரும்போதும் எச்சரிக்கை வாசகம் வெளியிடலாமே!” என்று கேலி செய்திருந்தார் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

மறுகாலனியாக்கம் வர்க்க ரீதியில் மட்டும் சுரண்டல், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கவில்லை. அது ஏற்கெனவே சமூகப் படிநிலையில் அதிகம் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கும் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சுரண்டல் -அடக்குமுறையையும், அதன் விளைவாக முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. பெண்களின் மீதான வன்முறை அதிகரிப்பதற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் என்னவென்று யாருக்கும் தெரியாமல் இல்லை. இருப்பினும், அவை ஆளும் வர்க்க நலனுக்கானவை என்பதால், அவற்றை இருட்டடித்து விட்டு, வல்லுறவை தனியானதொரு குற்றமாகக் காட்டவே அரசு முயற்சிக்கிறது.

மறுகாலனியாக்கம்அப்பட்டமான பாலியல் குற்றங்களே தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழ்நிலை ஒருபுறம் நிலவும்போதே, மேட்டுக்குடி பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தின் புதிய நுட்பமான வடிவங்களைப் பட்டியலிட்டு இவையும் குற்றங்களாகச் சேர்க்கப்பட வேண்டுமென்று அரசிடம் கோருகின்றனர். இவற்றையும் குற்றம் என்று அங்கீகரித்து சட்டப் புத்தகத்தில் ஏற்றி விடுவதன் மூலம், அந்தக் குற்றங்கள் நிகழ்வதற்கான சமூகப் பண்பாட்டு காரணங்களுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து அரசும் ஆளும் வர்க்கமும் தார்மீக ரீதியில் விலகிக் கொண்டு விடுகின்றன.

அதுமட்டுமின்றி, ஏற்கெனவே சட்டங்கள் அளித்திருக்கின்ற அதிகாரத்தை வைத்தே குற்றங்களைத் தடுக்காத அதிகார வர்க்கமும் போலீசும், அவ்வாறு செயல்படத் தவறியதற்கு வெகுமதியாக புதிய அதிகாரங்களைக் கோருகின்றனர். வல்லுறவுக்குக் குண்டர் சட்டம், குற்றவாளிகளைக் கண்காணிக்க எல்லா பொது இடங்களிலும் வீடியோ காமெராக்கள் – என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மீது தமது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் அதிகப்படுத்துவதற்கான அனைத்தையும் அரசு செய்து கொள்கிறது.

குற்றவாளிக்கு தண்டனை
அசாமில் மாவட்டக் காங்கிரசு கட்சியின் தலைவரான பிக்ராம்சிங் பிரம்மா என்பவன் பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட போது, பெண்கள் திரண்டெழுந்து அவனை நடுவீதியில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தும் முன்னுதாரணமிக்க போராட்டம்

ஆகவே வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களுக்கு மேலும் கடுமையான சட்டம், தூக்கு தண்டனை என்ற கோரிக்கைகளை அரசின் முன்வைக்கும் போது, இக்குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட பிறர் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். டெல்லி சம்பவத்தையே எடுத்துக் கொண்டால், பேருந்து கண்ணாடிகள் கருப்பாக இருக்கக் கூடாது என்று தான் போட்ட உத்தரவையே கண்காணிக்காத நீதிமன்றம், நிறைவேற்றாத பேருந்து உரிமையாளர், சோதிக்காத போக்குவரத்து அதிகாரி மற்றும் போலீசார், இரவு நேர ரோந்து போலீசார் – என இத்தனை பேர் இதில் தொடர்புள்ளவர்கள். அதேபோல பாலியல் வக்கிர வீடியோக்கள் புழங்கும் செல்போன்கள், போதை மருந்துகள், ஆணாதிக்கத் திமிரைச் சாகசமாக காட்டும் திரைப்படங்கள், பள்ளி மாணவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் டைம் பாஸ்” போன்ற ஆபாசப் பத்திரிகைகள் – எனப்பல குற்றவாளிகள் இதன் பின்புலத்தில் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, குற்றம் நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த அரசு, போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் முழுவதும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களிடமே கோரிக்கை வைக்கப்படும்போது, ஆளும் தகுதியை இழந்துவிட்ட அரசு மீண்டும் நியாயவுரிமை பெற்றுவிடுகிறது.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் பெரிதும் அக்கறையுள்ளது போல காட்டிக்கொள்ளும் பொருட்டு அரசு, நீதிபதி வர்மா தலைமையில் கமிசன் அமைத்த போதிலும், உள்துறை அமைச்சரும் உள்துறைச் செயலருமே இக்கமிசனுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை.

போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவப் படையினரின் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், வல்லுறவுக் குற்றம் விசயத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பொருந்தாது என்றும் வர்மா கமிசன் கூறியிருப்பதை அமல்படுத்தவியலாது என்று மறுநாளே அறிக்கை விட்டார் அமைச்சர் அச்வினி குமார். தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டமோ, மேற்கூறிய கமிசன் சிபாரிசுகளை முற்றிலுமாக நிராகரித்திருப்பதாகக் கூறுகின்றன பெண்கள் அமைப்புகள்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துத்தான் ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். “எங்களை வல்லுறவு கொள்ளுங்கள்” என்று மணிப்பூர் தாமார்கள் இராணுவ அலுவலகத்தின் முன் நிர்வாணமாக நடத்திய போராட்டம், டில்லி போராட்டத்துக்கு மிகவும் முந்தையது.

டில்லி கிரிமினல்கள், ஒரு மணி நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்து அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கி வீசிவிட்டு, தப்பிச் செய்ன்றனர். இதே குற்றத்தை இழைக்கும் போலீசும் இராணுவமும் ஓடுவதில்லை. போலீசு நிலையமும் இராணுவ முகாமும் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மீது பொயாக திருட்டு வழக்கு போடுவது, விபச்சார வழக்கு போடுவது என்பது போலீசின் உத்தி. தீவிரவாதி என்று முத்திரை குத்தி சுட்டுக் கொன்று வீசியெறிந்து விடுவது ராணுவத்தின் உத்தி. மணிப்பூரைச் சேர்ந்த தங்ஜம் மனோரமாவின் படுகொலை இத்தகையதுதான்.

ஒரு குற்றத்தை சாதாரண கிரிமினல்கள் இழைப்பதற்கும், போலீசு, இராணுவத்தினர் இழைப்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இது அதிகாரத்தைப் பயன்படுத்தி இழைக்கும் குற்றம்; பெண்களை ஒடுக்கும் அரசு எந்திரம்அதிகாரத்தைப் பயன்படுத்தியே மறைக்கும் குற்றம்; இறுதியாக, வேலியே பயிரை மேயும் குற்றம். வல்லுறவுக் குற்றத்துக்குத் தூக்கு தண்டனை கொடுப்பது என்றால், அது இவர்களுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். இருப்பினும், அவ்வாறு தண்டிப்பது போலீசு, இராணுவப் படையினரின் தார்மீக பலத்தைக் குன்றச்செய்துவிடும் என்று சொல்லித்தான் அரசு இதனைத் தொடர்ந்து நிராகரிக்கிறது.

இது ஒரு உருவகம். ஓட்டுப் பொறுக்கிகள் முதல் அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றின் எல்லா மட்டங்களிலும் லஞ்ச-ஊழல் உள்ளிட்ட நெறிகெட்ட செய்யல்கள் அனைத்தும் நியாயப்படுத்தப்படுவது இப்படித்தான். இது தனியே நடைபெறவில்லை. இதுநாள்வரை நெறிகெட்டதாகவும் சட்டவிரோதமானதாகவும் கருதப்பட்ட பல விசயங்களை மறுகாலனியாக்கக் கொள்கை சட்டபூர்வமாக்கியிருக்கிறது. தண்ணீரும் ஆறுகளும் தனியார்மயக்கப்படுகின்றன.

பஞ்சமா பாதகம் என்று எனப்பட்டவையெல்லாம் இன்று சட்டமாக்கப்படுகின்றன. ஒப்புக்கொள்ளாத மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த நாடே பன்னாட்டு நிறுவனங்களால் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது சகஜமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. சமூக நலன் சார்ந்த விழுமியங்களைக் கைவிடுவது அவ்வளவு சுலபமாக நடக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் எப்படி நிலைக்க முடியும? அதனால்தான் மகளை வல்லுறவுக்கு ஆட்படுத்திய தந்தை, மாணவியை பாலியல் சித்திரவதை செய்த ஆசிரியர் போன்ற விபரீதங்கள் அரங்கேறுகின்றன.

பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சீனத்தை அபினியில் மூழ்கடித்ததைப் போல, இந்த விழுமியங்களற்ற கலாச்சாரத்திற்குள் மக்கள் வீழ்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாகத்தான் அநீதி இழைப்பதும், அநீதியைச் சகித்துக் கொள்வதும் சகஜமாகிவிட்டது.

இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது. தனித்தனியாக திருத்தவும் முடியாது. குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது.

தனிப்பட்ட முறையில் ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் வரவேண்டுமானால், புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். டில்லியில் குறுகிய காலமே நடந்த அந்த போராட்டத்தின் ஊடாக, பல ஆணாதிக்கவாதிகளுடன் கொண்டிருந்த நட்பை முறித்துக் கொண்டதாக பெண்கள் தம் அனுபவத்தைக் கூறியிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள்தான் ஆண்-பெண் உறவில் ஜனநாயகக் கூறுகளை அமல்படுத்தும். ஒரு பெண்ணுக்குப் பேருந்திலோ, பொது இடத்திலோ அநீதி நடந்தால் பார்த்துக் கொண்டு செல்லாமல் தலையிட்டுத் தட்டிக் கேட்கும் பண்பை அனைவரிடமும் வளர்க்கும். பெண்களை இழிவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குப் பணிந்து போகாமல், எதிர்த்துப் போராடும் மனவலிமையைத் தரும்.

இதுகாறும் ஆணாதிக்கமாகத் தெரிந்திராதவற்றை ஆண்களுக்கும், பெண்ணடிமைத்தனமாகப் புரிந்து கொள்ளாதவற்றை பெண்களுக்கும் புரிய வைக்கும். அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதற்குப் பயின்று கொள்வது இப்படித்தான். இத்தகைய மக்கள் எழுச்சிகளை முடிந்தவரை விரைவாக தண்ணீர் ஊற்றி அணைப்பதன் மூலம்தான், தனது அதிகாரத்தையும் மேலாண்மையையும் அரசு தக்கவைத்துக் கொள்கிறது. இத்தகைய எழுச்சிகளை இயல்பான நிகழ்வுகளாக மாற்றுவதன் மூலம்தான், இந்த அரசதிகாரத்தைச் செல்லாக் காசாக்கவும், மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முடியும்.

– அஜித்

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________