privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க'ஆண்மையை நிலைநாட்டிய' பொறுக்கிக்கு என்ன தண்டனை?

‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?

-

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஐ.டி. துறை 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவன் காதலிப்பதாகக் கூறி கைவிட்டிருக்கிறான். இருவரும் சிறு வயது முதலே அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால், அவனை எளிதில் நம்பி மோசம் போயிருக்கிறாள் அந்த பெண்.

தன் காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அவள் கெஞ்சிய போது, ‘இப்போது நீ கெட்டுப் போனவ, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வர வேண்டும்’ என்று எகத்தாளமாக பேசியுள்ளான். அதோடு மட்டுமின்றி தெருவில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் பிற இளைஞர்களிடம் இந்த சம்பவத்தை கிளுகிளுப்பூட்டும் விஷயமாக பேசி பகிர்ந்து கொண்டுள்ளான்.

இது பற்றி அவனது தந்தையிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறாள் அந்த பெண். ஆனால், அவரோ, ‘நீ என்ன பெரிய யோக்கியமா? என் புள்ளைய பத்தி எங்கிட்டயே வந்து பேசுறியா? உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ!” என்று கூறி அவமானப்படுத்தி விரட்டியிருக்கிறார். இவர் திருச்சி அ.தி.மு.க ஏர்போர்ட் பகுதி கழகத்தில் பொறுப்பில் இருக்கும் வெல்ல மண்டி சண்முகம் என்பவரின் கையாள் என்று கூறி அந்த திமிரில் பேசியிருக்கிறான். அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் சென்று அடாவடியாக நடந்து கொண்டு அவர்களை ஆபாசமாக பேசி இழிவுபடுத்தியுள்ளனர். அவமானம், குற்றவுணர்ச்சி, வெறுப்பு என கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர் அந்த பெண்ணை வீட்டை விட்டே விரட்டி விட்டனர்.

செய்வதறியாது திகைத்த அந்த பெண், மனதை தைரியப்படுத்திக் கொண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் முறையிட்டிருக்கிறாள். விஷயத்தை கேட்டு விட்டு, ‘இது எங்க ஸ்டேஷன் லிமிட்ல வராது’ என்று கூறி வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷனை கை காட்ட, அங்கே சென்றால், ‘இது நாங்க டீல் பண்ற மேட்டரு கிடையாது, பெண்கள் காவல் நிலையத்திற்கு போங்க’ என்று நாள் முழுக்க இழுத்தடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பெண்ணைத்தான் குற்றவாளியாகப் பார்த்தார்களே தவிர இவர் தரப்பிலிருக்கும் நியாயத்திற்கு யாரும் காது கொடுக்கவில்லை.

நிர்க்கதியாக நின்ற அவருக்கு அவரது தோழியான சட்டக் கல்லூரி மாணவி உதவி செய்துள்ளார். ‘நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாதே. சட்டக் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு. தோழர்களிடம் இதைப் பற்றி கூறலாம்.’ என்று கூறி அழைத்து வந்தார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் ஆணாதிக்கத் திமிர் குறித்த அரசியல் பார்வையும் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையூட்டின. மடை திறந்த வெள்ளம் போல அவருக்கு நடந்தவை அனைத்தையும் கூறி கதறினார்.

சமூகத்தில் நிலவும் மறுகாலனியாதிக்க சீரழிவு கலாச்சாரம், ஆணாதிக்க பொறுக்கித் தனம் எப்படி பார்க்கப்பட வேண்டியவை என்று விளக்கியதுடன் அவற்றுக்கெதிராக பெண்கள் தாமாக முன் வந்து போராட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர் தோழர்கள். அனைத்தையும் கேட்ட பின்பு, “இது வரை ஏதோ தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டும் நேர்ந்த பாதிப்பாக இதை நினைத்திருந்தேன். இப்போதுதான் இப்பிரச்சினையைப் பற்றிய புதிய பார்வை தனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார் அந்த பெண்.

‘ஆண்மையை நிலைநாட்டி விட்டதாக’ ஆண்டைத் தனத்தில் திரிந்து கொண்டிருந்த பொறுக்கியை சில மணி நேரங்களில் சுற்றி வளைத்து விசாரணைக்கு இழுத்து வந்தனர் பு.மா.இ.மு. தோழர்கள். விசாரணை துவங்கிய சில மணி நேரத்தில் அவனது உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர்.

தோழர்கள் முன்னிலையில் அப்பெண்ணே நீதிபதியாய் அமர்ந்து நியாயம் கேட்டார்.

“உனக்கு உடன்பாடில்லாமல்தான் இது நடந்ததா?” என்று முதல் கேள்வியிலேயே அப்பெண்ணை அவமானப்படுத்தி குற்றவாளியாக்க முயற்சித்தனர் அவனது உறவினர்கள்.

‘தனக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருப்பதாகவும், அது சரியாக வேண்டுமானால் தாம்பத்திய உறவு மட்டுமே மருந்து என்று மருத்துவர்கள் கூறியதாகவும்’ சொல்லி, அதற்கு தனது நண்பனான மருத்துவ பிரதிநிதி ஒருவனையும் பேச வைத்து அந்த பெண்ணை நம்ப வைத்த சதி வலையை அப்பெண் விளக்கினார். “இரு வீட்டார் சம்மதம் பெற்றி திருமணம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல மாதங்கள் ஆகும், எனவே உடனடியாக நோய் தீர நீ எனக்கு ‘ஒத்துழைக்க வேண்டும்’ எதிர்காலத்தில் என் மனைவி ஆகப் போகிறவள்தானே நீ, எனக்காக இதைக்கூடச் செய்ய மாட்டாயா?” என்று அவன் அழுது நாடகமாடியதை தோலுரித்து சீறினார் அப்பெண்.

‘லேப்டாப் வாங்கித் தருவதாக ரூ 20,000 பணம் வாங்கிக் கொண்டு இன்று வரை தராமல் ஏமாற்றியதும் இவன்தான்’ என்று அடுக்கடுக்காக அவன் அயோக்கியத் தனங்களைப் பற்றிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் கள்ள மௌனம் சாதித்தனர்.

இதுவே ஆளும் வர்க்கங்களின் நீதிமன்றமாக இருந்தால் அந்த பொறுக்கியின் சார்பில் வாதாடியிருக்கும் வழக்கறிஞர் இந்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்கிறேன் என்கிற பெயரில் நீதிபதியின் முன்பு ஒரு பாலியல் வன்முறையை நிகழ்த்தியிருப்பார். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருந்தது.

‘அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்’ என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டதாக எம் தோழர்கள் மீது வழக்கு பாயலாம், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! இவனைப் போன்ற ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுங்கள்!

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி