privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?

திமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?

-

கருணா - ஜெயா கார்ட்டூன்த்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறியிருக்கிறது. “தலைவா, எங்க தன்மானத்தை காப்பாற்றிவிட்டாய்” என்று தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள். ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்கிறார்கள். மகிழ்ச்சி மேலிட எழுதித் தீர்க்கிறார்கள். ஈழத்துக்காக மகுடத்தை துறந்த கழகத்தின் முடிவை தியாகமாக சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடுவதைப் போல “தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இன்னமும் அவகாசம் இருக்கிறது. காங்கிரஸ் அரசு அதை செய்தால் நாங்கள் எங்கள் முடிவை பரிசீலிப்போம்” என்று குழிபறித்த குதிரையிடம் மனு போடுகிறார் கருணாநிதி. “இவரை நம்பி எதையும் சொல்ல முடியாது போலருக்கே” என ஜெர்க் ஆகும் தி.மு.க. தொண்டன், “நீங்க மொத்தமா நாடகத்தை முடிங்க, அப்புறம் பார்த்துக்குவோம்” என வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டான்.

இன்னொரு பக்கம் “கருணாநிதியின் விலகல் முடிவு மாணவர் போராட்டத்துக்குக்குக் கிடைத்த வெற்றி” என்று தமிழின அமைப்புகளும், ஆதரவாளர்களும் இதை திசை திருப்பப் பார்க்கிறார்கள். மாணவர்களின் கோரிக்கை, “மத்தியக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்” என்பதல்ல. இந்த போராட்டத்தின் பலனை பயன்படுத்திக் கொள்வதற்கு, மத்திய அரசில் அங்கம் வகிப்பது தடையாக இருக்கிறது என்பதால் தி.மு.க. வெளியே வந்திருக்கிறது. இதனுடன் சேர்த்து அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட இதை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக கருதியும் கருணாநிதி இந்த முடிவை எடுத்திருக்கலாம். நிலைமை இப்படி இருக்க… இதை மாணவர் போராட்டத்தின் வெற்றி என சித்தரித்து, இவர்களே கருணாநிதிக்கு வெற்றிமாலை சூட்டுகிறார்கள். மறுபுறம் மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதுடன், “போராடியதால் ஏதோ பலன் கிடைத்துவிட்டது” என்பது போன்ற பிரமையை மாணவர்களிடம் உருவாக்குகின்றனர். தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தை நேரடியாக அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு கொள்கை சாயம் அடிக்க வேண்டிய அவசியம் என்ன?

இதே தி.மு.க.தான், முத்துக்குமார் மரணத்தை ஒட்டி எழுந்த மாணவர் எழுச்சியை சூழ்ச்சியாக முடக்கியது. இதே கருணாநிதிதான் ஈழப்போரின் இறுதி நாட்களில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். இதே கருணாநிதிதான், மக்கள் செத்தொழிந்தபோது காங்கிரஸை கட்டித் தழுவிக்கொண்டார். ஆகவே இப்போதைய மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவும், தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் இன்னொரு நாடகமே.

இதை சொன்னால், “கருணாநிதியை இந்த முடிவை நோக்கித் தள்ளியது மாணவர் போராட்டங்களின் வீச்சுதானே? அந்த வகையில் இது வெற்றிதான்” என இண்டு, இடுக்குகளை தேடிப்பிடித்து ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதேபோன்ற ஒரு மொக்கை வாதத்தை முன்வைத்துதான் தமிழினவாதிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தனர். “கருணாநிதியை விட ஜெயலலிதா மேல். அவர் துரோகி. இந்தம்மா எதிரி. துரோகியை விட எதிரி மேல்” என பஞ்ச் டயலாக் பேசி, வீரமாக ஓடிச்சென்று ஜெயா காலில் விழுந்தார்கள். “தனி ஈழம் ஒன்றே தீர்வு” என்று ஜெயலலிதா பேசிய சவடால் இவர்களுக்குத் தேனாக இனித்தது. “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று அடித்துவிட்ட சீமான் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று வர்ணித்த ஆபாசத்தை கண்டிக்கக்கூட தமிழினவாதிகளுக்கு துணிவில்லை. ஆனால் அந்தம்மாவோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது “ஆதரவு வாபஸ்” என ஐந்தாம் முறையாக தி.மு.க. நாடகம் நடத்தியபோது, “தி.மு.க. ஆதரவை வாபஸ் வாங்கினால், அ.தி.மு.க. ஆதரவு தரும்” என்று தானே வலியசென்று காங்கிரஸுக்கு வால் பிடித்தார். ஈழத்தாயின் “யு&டர்ன்” குறித்து அப்போதும் தமிழினவாதிகள் வாய் திறக்கவில்லை.

அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார்; முதல்வரானார். “என் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போதும் தமிழினவாதிகள் வார்த்தைகளை மௌனித்துக்கொண்டார்கள். மூச்சு விடவில்லை.

“ஜெயலலிதா வந்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று பேசியவர்கள் தங்களின் கூற்றுக்குப் பொறுப்பேற்று இப்போது பதில் சொல்ல வேண்டும். அந்தந்த நேரத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக எதையாவது பேசுவது, பிறகு முற்றிலும் முரணாக நடந்து கொள்வது, முந்தைய கூற்றுகள் காற்றில் கரைந்துபோவது… என்ற இந்த நிலைதான் தமிழக அரசியலில் தொடர்ந்து நடக்கிறது.  “அப்போது இப்படி சொன்னீர்களே” என்று இவர்களிடம் யார் போய் கேட்பது? அந்தந்த கட்சிகளின், இயக்கங்களின் தொண்டர்கள் கேட்க வேண்டும்; அவர்கள் கேட்கப்போவதில்லை. அம்மாவுக்கு முட்டுக் கொடுத்தவர்களாவது கேட்பார்களா?

‘‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற திமிர்ப்பேச்சு பேசிய ஜெயலலிதாதான் போர்க்குற்றத்துக்கு விசாரணை கேட்கிறார். “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று பேசியவர், இப்போது “தமிழர்கள் இலங்கையில் சம உரிமையுடன் வாழ வழி செய்யவேண்டும்” என்று ஜெனிவா தீர்மானத்துக்கு திருத்தம் சொல்கிறார். தனியாய் சிக்கிய புத்த பிக்குவை புரட்டி எடுக்கின்ற மறத்தமிழர் படையின் தளபதி செந்தமிழன் சீமான் ஈழத்தாயிடம் இதைப்பற்றிக் கேட்பாரா? “கருணாநிதி நடிக்கிறார், ஜெயலலிதா உண்மையாகப் போராடுகிறார்” என்று சான்றிதழ் கொடுத்த வைகோ கேட்பாரா?

கருணாநிதியை கிடைத்த சந்துகளில் எல்லாம் போட்டுத் தாக்குபவர்கள், அம்மா கழற்றி அடித்தாலும், இளிக்கிறார்கள். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும் தேதியே முடிவடைந்துவிட்ட பிறகு “அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என பூட்டிய வீட்டுன் முன்பு சவுண்ட் விடுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் கூட்டமாக நின்று கைதட்டுகிறார்களேயன்றி, “வீடு பூட்டியாச்சும்மா” என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் தைரியம் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் உள்ளிட்ட எந்த தமிழினத் தலைவருக்கும் இல்லை. சும்மா சொல்லக்கூடாது. எப்பிடித்தா…ன் அம்மா எல்லாரையும் ஓ.பி யா மாத்துறாங்களோ தெரியல! கருணாநிதிக்கு வயித்தெரிச்சலாத்தான் இருக்கும்.

இப்போதைய மாணவர் போராட்டங்களையே எடுத்துக்கொள்வோம்.‘தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தன்னை போராட்ட சக்திகளுடன் இருப்பதைப் போல காட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, மறுபுறம் மாணவர் போராட்டங்களை நசுக்க பல வகைகளிலும் முயற்சிக்கிறார். லயோலோ மாணவர் போராட்டத்தை பெருந்தொகையிலான போலீஸை அனுப்பி அடக்கியது மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதும் ஜெ.அரசின் உளவுத்துறை மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. “பாஸ் போர்ட் கிடைக்காது. அரசு வேலை கிடைக்காது. வேலைக்குப் போக முடியாது” என அச்சுறுத்துகிறது.

ஜெயலலிதா ஈழம் குறித்தோ இல்லை தமிழுணர்வு குறித்தோ எகத்தாளமான எதிர் கருத்தும், பகை அணுகுமுறையும் உள்ளவர். இதை அவரது முதலாவது ஆட்சிக்காலத்திலிருந்தே பார்க்கலாம். அந்த வகையில் தற்போதைய போராட்டங்கள் குறித்து மிகுந்த எரிச்சலே கொண்டிருப்பார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொண்டால் அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்பதாலும்  மேற்படி ஓ.பி க்கள் தன்னைப் பற்றி உருவாக்கியிருக்கும் “முற்போக்கு” இமேஜை தக்க வைத்துக்கொள்ள ஜெயா விரும்புகிறார். அதனால்தான் இதுவரை மாணவர் போராட்டங்கள் அரசின் முழுவீச்சான அடக்குமுறை இன்றி தொடர்கின்றன. எனினும் இந்த நிலைமை கை மீறி போகிறது எனும் பட்சத்தில் தனது போலீஸ் படையை அனுப்பி ஒடுக்குமுறையே ஏவிவிடவும் தயங்கமாட்டார். கூடங்குளத்தில் அதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமில்லை… விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்… என தமிழகத்தின் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் மாணவர் போராட்டத்தின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்வதில் போட்டிப் போடுகின்றன. ஓர் அரசியல் எழுச்சி உருவாகும்போது ஏற்கெனவே இயங்கும் கட்சிகளும், அமைப்புகளும் அதில் தலையிட்டு போராடுவது சரியானதுதான். களத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிகரமாகவும், போதுமான கொள்கைப் பிடிமானங்களும் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு அத்தகைய பிடிப்பை தந்து மைய நோக்கத்தின் மீதான பற்றுறுதியை அதிகப்படுத்துவதும், போராடும் சக்திகளை நெறிப்படுத்தி போராட்டத்தை கூர்மைப்படுத்துவதும்தான் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கே ஒரு தீர்மானகரமான கொள்கை இல்லாமல் அம்மாவுக்கும், அய்யாவுக்கும் இடையில் காவடி தூக்கும்போது, இவர்கள் எங்கிருந்து மாணவர் போராட்டங்களை சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு அணுகுவது? ஆகவே இயல்பாகவே அது சந்தர்ப்பவாதமாகவும், நாடகமாகவும் உருவெடுக்கிறது. இந்த சண்டை முற்றி, ஆங்காங்கே வெளியே வரவும் செய்கிறது. சமீபத்தில் மதுரையில் தீக்குளித்தவர் “எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான்” என ம.தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் சொந்தம் கொண்டாடி அடித்துக் கொண்டதை கண்டோம். இவர்களை கெவின் கார்ட்டர் எடுத்த புகழ்பெற்ற கழுகு+குழந்தை புகைப்படத்துடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

தி.மு.க.வின் விலகல் முடிவை எடுத்துக் கொண்டால் இதைப்பற்றி விவாதிக்கும் பலரும் இதனால் ஐ.நா. தீர்மானத்திற்கோ, ஈழத் தமிழர் நலனிற்கோ ஏதேனும் நன்மை விளையுமா என்று விவாதிக்கவில்லை. மாறாக, இதனால் தமிழக, மத்தியக் கூட்டணிகளில் உருவாகப்போகும் மாற்றங்களை பற்றியே பேசுகிறார்கள். இதைப்பற்றி புதிய எஸ்.டி.எஸ் ஆக நியமனம் பெற்றிருக்கும் தா.பாண்டியனிடம் நிருபர்கள் கருத்துக் கேட்டதற்கு, “நல்ல விஷயம்தான்” என்று முதலில் சொன்னார். “அப்படின்னா நீங்க தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறதா எடுத்துக்கலாமா?” என்று நிருபர்கள் கேட்டதும் பதற்றத்துடன், “அப்படி சொல்ல முடியாது. என் கருத்தை நாளை சொல்கிறேன்” என்று ஜகா வாங்கிவிட்டார். தோட்டத்து எஜமானியை மீறி தோட்டக்காரர் தன்னிச்சையாக கருத்து சொல்வது முறையாகாது என்பது அவரது மூளைக்கு சற்றே தாமதமாகத்தான் உறைத்திருக்கும் போல!

இவர் மட்டுமில்லை… பலரும் தி.மு.க.வின் முடிவை கொள்கைப் பூர்வமாக விமர்சிப்பதற்குப் பதில் இதனால் உருவாக்கப்போகும் கூட்டணி மாற்றங்களையே மையமாகப் பேசுகின்றனர். வேறு சிலரோ, “இப்போதேனும் தி.மு.க. விழித்தெழ வேண்டும்” என அந்தக் குட்டிச்சுவருக்கு பெயிண்ட் அடிக்கப் பார்க்கிறார்கள்.

கருணாநிதி மட்டுமில்லை… ஜெயலலிதா, வைகோ, சீமான், பழ.நெடுமாறன், தா.பாண்டியன் என அனைவருமே தற்போதைய மாணவர் போராட்டங்கள் தங்களது அரசியலின் வரம்புக்கு அப்பாற்பட்ட வகையில் செல்வதை விரும்பவில்லை. ராஜபக்சேவில் தொடங்கிய கொடும்பாவி, சல்மான் குர்ஷித், மன்மோகன், சோனியா என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. “இன்று நீ ..நாளை நான்” என்று எல்லோரும் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

“இந்த பஸ் நம்ம ஊருக்குப் போகாது போலிருக்கே” என லேசாக அவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்துவிட்டதால் “பஸ் பஞ்சர் ஆக வேண்டும், இறைவா!” என கனவு காண்கிறார்கள். தானாக பஞ்சராகாவிட்டால் இவர்களே லாடம் வைத்து பஞ்சர் ஆக்குவார்கள். லாடத்தை வெளிப்படையாக வைப்பதா, தெரிஞ்சும் தெரியாமலும் வைப்பதா என்பதில்தான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு இருக்கிறது.

மாபெரும் மாணவர் திரள் தமிழகத்தின் வீதிகளில் திரண்டு நிற்கிறது. அவர்கள் நடுத்தர வர்க்கத்து, உழைக்கும் வர்க்கத்து வீடுகளை சேர்ந்த பிள்ளைகள். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் சரிபாதியானோர் இந்தப் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை பகுதி அளவிலேனும் உணரத் துவங்கியுள்ளனர். அதை வளர்த்தெடுப்பதும், போராடும் சக்திகளை ஓரணியில் திரட்டி கூர்மைப்படுத்துவதும் மட்டுமல்ல… ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கும் இதுதான் பொருத்தமான தருணம்!

வளவன்.

 

 

  1. வினவு,

    மாணவர் போராட்டத்தின் பின் ஜெகத் கெஸ்பர் இருப்பதாக கூறுகிறார்களே உண்மையா?

  2. நல்ல தெளிவான போராட்டம்.உலகத்தில் நிகழ்கின்ற ஒரு அபூர்வ நிகழ்வு .இதற்கு வெளி அரண் பாதுகாப்பு இல்லை. மனம் தவிக்கிறது எந்த அரசியல் பொறம்போக்கு குட்டைய கொழபிடுவனோ என்று .போராட்ட கரு மீது கொஞ்சம் கூட கீறல் விழ அனுமதிக்க கூடாது .தினமும் இதே எண்ணம் இதே நோக்கம் தான் .மாணவர்களுக்கு இந்த அரசியல் அசிங்கம் எல்லாம் தெரியுமா ?இறுதியில் கடவுளை தான் கூப்பிட வேண்டுமோ என்னமோ ?

  3. பாலகிருஷ்ணனின் புகைப்படம் பாதிப்பு இது.

    இன்னும் பிரபாகரன் சரணடைந்த புகைப்படம் வந்தால் என்ன ஆகும்? தமிழ் உணர்வாளர்கள் எத்தனை பேர் சாவார்கள்?முதல் துரோகி பிரபாகரன்.

    • சீமாச்சு … எப்படி சொல்றீங்க.. பிரபாகரன் தன் முதல் முதல் துரோகின்னு..?

      • புரியர மாதிரி சொல்லுங்க..

        எல்டிடிஏ எப்படி தமிழ்நாட்டை டீ ஸ்டெபிலைஸ் அதாவது நிலையற்ற தன்மையுள்ளதாக்க முடியும்?

        பக்கத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் கச்சா எண்ணை பேரல் 150டாலர்னு உயர்ந்த பட்ச அளவை தொட்டபோதும் பெட்ரோல் விலை 25 தான் இருந்தது.. ஆனா இங்க அப்ப 65 ரூபாய் ஆக்கினான்க்க…

        இப்ப 93 டாலர்ன்ன இரண்டு மடங்கு குறைந்து 42 ருபாய்க்கு இல்ல தரணும்.. இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பெட்ரோல் விலை ஏறி இருக்கே.. எப்படி?

        இன்னொறு காரணம் டாலர் ரூபாய் விலை விகிதம்னு சொல்வாங்க… டாலர் இப்போ 60 ரூபாய்ன்ன 39 வந்தபோதும் பெட்ரோல் 70 ரூபாய்லிருந்து இறங்கலயே… ஏன்….

        இதேல்லாம் இறக்கு மதி பெட்ரோலுக்கான கணக்கு தான். 27% பெட்ரோலிய பொருள் உள்நாட்டு உற்பத்தில் தானே… ஈரான், இராக்கில் கச்சா என்ண்ணை எடுத்து அதை கப்பலில் அனுப்பி, இங்க வந்து அதை சுத்தபடுத்தி விற்கும் விலைக்கு … லோக்கைல் கிடைக்கும் எண்ணையும் விற்கிறார்களே… இது எதில் சேர்த்தி?

        எந்த ஊரிலாவது இது இந்திய தயாரிப்பு பெட்ரோல் 20 ரூப்பாய் தன்னு விற்கும் பங்க் இருக்கா?

        இப்படி கண் முன்னால் ஏமாற்றும் அரசாங்கம் இருந்தே நம் எருமை தோல் இந்தியர்கள்/தமிழர்கள் அரசை ஒண்ணூம் கேட்க காணொம்…

        இதில் அவர்களின் வாழ்வுக்கே போராடும் எல்டிடியி தலை கிழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்தியனை தமிழனை திருத்த முடியாது…

        அப்புரம் எங்க டிஸேபுலைஸ் ஆகுறது ?

  4. ஈழ பிரச்சனயில் துக்ளக் ஸோ,சு.சாமி இவர்களின் கொள்கை தான் ஜெயாவின் கொள்கை !வை.கா,பழநெடுமாறன்,சிமான் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்

  5. மாணவர்களின் இந்த போராட்டம் விரைவில் தமிழக அரசியல் கட்சிகளாலேயே ஒடுக்கப்படும் என்பது எனது ஐயப்பாடு. ஏனெனில், மாணவர்களின் இந்த போராட்ட உணர்வுகளின் வளர்ச்சி சந்தர்ப்பவாத அரசியல் இயக்கங்களை வீழ்ச்சியடைய செய்யும் ஆற்றல் பெற்றது. இதை மேலே உள்ள வினவின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு கட்சியும் விரும்ப வாய்ப்பு இருப்பதாக நான் எண்ணவில்லை. ஜெயலலிதாவின் அப்பட்டமான சந்த்தர்ப்பவாத முகம் தெரிந்திருந்தும் இந்த அரசியல் கட்சிகள் காவடி தூக்கியதற்கு காரணம், இவர்களுக்கு தகுந்த அரசியல் அடைக்கலம் இன்மையே ஆகும். ஜெயலலிதாவின் நாடகங்களின் வசனங்களெல்லாம் இந்த கட்சிகளின் உபயத்தாலேயே இதுவரை மக்களிடம் செல்லுபடியாகிக்கொண்டிருந்த்தன. கருணாநிதி மட்டும் கூட்டணிக்கு வெளியே வந்து விட்டார் என்பது நிச்சயம் ஆகட்டும். பின்னர் இந்த கட்சிகளின் கூத்து இன்னும் பல காமெடி காட்சிகளை வழங்கும், பொறுத்திடுக.

  6. மாணவர்களின் போராட்டம் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டை தாண்டி போவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் எல்லாம் திட்டமிட்டே மாணவர்போராட்டத்தை திரிக்கின்றன, நீர்த்துப்போக முயற்சிக்கின்றன.

    இதில் முதலிடம் ”புதிய தலைமுறை” என்ற சமூகவிரோத கும்பல். திமுக விலகியதை மாணவர்களின் போராட்டத்தைவிட முக்கியமானது போன்று முன்னிறுத்த முயற்சித்தது. ஜெயலலிதா எழுதிய கடிதத்தை மாணவர்களின் போராட்டத்தின் வெற்றி என்ற ரீதியில் ஒப்பிட்டு நீர்த்துப்போக முயற்சித்தது.

    இப்பொழுது ”தலைவா” என்ற அட்டைப்படத்துடன் கிரிக்கெட் வெற்றியை மிகப்பெரிய விடயமாக்கி மாணவர் போராட்டத்தை புறம்தள்ளி. பழையபடி சினிமா, கிரிக்கெட், டாஸ்மாக் போதையை ஊட்ட நினைக்கிறது.

  7. ஒரு சரியான தலைமை இல்லாமல்நடக்கும் மாணவர் போராட்டம் எப்படி சரியான திசையில் செல்லும்? ஆங்காங்கே சிறு சிறு கும்பலாக கோடும் மாணவர்களை அரசு விரைவிலேயே முடக்கி விடுமே?

  8. பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே
    தான் நடாத்தி வந்த டெல்லி அல்வா கடையை இழுத்து மூடிவிட்டு ஊர்பக்கம் வந்து அல்வா கடை திறந்தவர் நமது அமாவாசை. இப்படிபட்ட உத்தமர்கள்தான் நமது தேசதிற்கு ஒரு வெளிசத்தை உண்டாக்கமுடியும் என்ற காரணத்தினால் ………

  9. Well written. ஆனால் யார் குத்தினாலும் சரி. அரிசி வந்தால் போதும் என்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இதில் தமிழ் அரசியல்வாதிகளில் யார் புனிதர் என்று ஆராய்ந்து நமக்குள் அடித்துக் கொள்வது சிங்களனுக்குத்தான் ஆதாயம் தரும். அன்புகூர்ந்து இம்மாதிரி சகோதரச் சண்டைகளை தற்போதாவது தவிர்த்து ஈழம் மலர ஆவன செய்வோம்.””

  10. பார்ப்பனர்கள் மேல் மட்டம் முதல் சாதாரணமானவன் வரை எல்லோரும் எப்படி ஒரே குரலில் பேசுகின்றனர்.?

    • அதை விட ஆச்சர்யம் அனைத்து மாநிலத்தில் உள்ள எல்லா பார்ப்பன ஊடகங்களும் அந்தந்த மாநில மற்றும் மொழி உணர்வுகள் குறித்த விஷயத்தில் ஒரே மாதிரியே கிண்டலடித்து எழுதுகிறார்கள்.

      • சூப்பரா சொன்னேள்! சாம்பிளுக்கு மிசோரம் பார்ப்பன ஊடகம் ஒண்ணுலேர்ந்து ஒரு பத்தி எடுத்து விடுங்கோ. இல்லேன்னா, உத்தராகண்ட், சட்டீஸ்கர். அப்படி செஞ்சாதான் இந்த குடுமிப் பசங்க கொட்டம் அடங்கும்.

    • இப்படி சொல்வதற்கும் “முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்” என்று அரைடவுசர்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

  11. கட்டுரையும் சரி கருத்துகலும் சரி குளப்பம் எர்படுத்தவா எழுதப்ப்படுகின்ரன?

  12. வினவின் இந்த கட்டுரை மிகவும் சிறப்பானதாக உள்ளது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற பயத்தில் ஈழப் பிரச்சினையில் தமிழினத்தின் துரோகியாகத் தன்னைநிரூபித்துக் கொண்ட அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து சாட்டை சுழற்றும் தமிழின அரசியல்வாதிகள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தன்மையுடன் அதே கருணாவின் வழியில் கடிதம் எழுதும், தீர்மானம்நிறைவேற்றும் ஈழத் தமிழர்க்காக தெருவில் வந்து ஒரு முழக்கம் கூட செய்யாத ஜெயாவை வெட் கமில்லாமல் “போராடுகிறார்” என்று சான்றளிக்கிறார்.

  13. அரசியல் ஆட்டம். அதில் ஆயிரம் நாட்டம். ஆடும் கூட்டம்.அல்லல் படும் பாவம் அப்பாவி ஜனம்.

    அழியும் இனம்.

  14. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் இதே போன்ற் மாணவர் எழிச்சியுடன் நடந்தது; ஆனால் துக்ளக், தினமணி வகையறாக்கள் அதை கொச்சைப்படுத்தின! பின்னர் 1967-ல் மக்கள் பாடம் கற்பித்தனர்! இன்றும் மாண்வர்கள் நினைத்தால் ஆள்வோருக்கு பாடம் புகட்டலாம்! ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு கொள்ளவேண்டுமே! இல்லாத காஙகிரசையும் , பி ஜெ பியும் இஙகு சிகண்டியை முன்வைத்து அல்லவா போராடும்! அப்போதைய மானணவர்களான எஙகளைவிட , இன்றைய மாணவர்கள் பொது அறிவு மிகுந்து காணப்படுகிறார்கள்! புல்லுருவி களை விடுத்து தகுந்த தலைமையினை நாடுக! வாழ்த்துக்கள்!

Leave a Reply to maan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க