privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?

திமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?

-

கருணா - ஜெயா கார்ட்டூன்த்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறியிருக்கிறது. “தலைவா, எங்க தன்மானத்தை காப்பாற்றிவிட்டாய்” என்று தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள். ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்கிறார்கள். மகிழ்ச்சி மேலிட எழுதித் தீர்க்கிறார்கள். ஈழத்துக்காக மகுடத்தை துறந்த கழகத்தின் முடிவை தியாகமாக சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடுவதைப் போல “தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இன்னமும் அவகாசம் இருக்கிறது. காங்கிரஸ் அரசு அதை செய்தால் நாங்கள் எங்கள் முடிவை பரிசீலிப்போம்” என்று குழிபறித்த குதிரையிடம் மனு போடுகிறார் கருணாநிதி. “இவரை நம்பி எதையும் சொல்ல முடியாது போலருக்கே” என ஜெர்க் ஆகும் தி.மு.க. தொண்டன், “நீங்க மொத்தமா நாடகத்தை முடிங்க, அப்புறம் பார்த்துக்குவோம்” என வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டான்.

இன்னொரு பக்கம் “கருணாநிதியின் விலகல் முடிவு மாணவர் போராட்டத்துக்குக்குக் கிடைத்த வெற்றி” என்று தமிழின அமைப்புகளும், ஆதரவாளர்களும் இதை திசை திருப்பப் பார்க்கிறார்கள். மாணவர்களின் கோரிக்கை, “மத்தியக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்” என்பதல்ல. இந்த போராட்டத்தின் பலனை பயன்படுத்திக் கொள்வதற்கு, மத்திய அரசில் அங்கம் வகிப்பது தடையாக இருக்கிறது என்பதால் தி.மு.க. வெளியே வந்திருக்கிறது. இதனுடன் சேர்த்து அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட இதை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக கருதியும் கருணாநிதி இந்த முடிவை எடுத்திருக்கலாம். நிலைமை இப்படி இருக்க… இதை மாணவர் போராட்டத்தின் வெற்றி என சித்தரித்து, இவர்களே கருணாநிதிக்கு வெற்றிமாலை சூட்டுகிறார்கள். மறுபுறம் மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதுடன், “போராடியதால் ஏதோ பலன் கிடைத்துவிட்டது” என்பது போன்ற பிரமையை மாணவர்களிடம் உருவாக்குகின்றனர். தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தை நேரடியாக அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு கொள்கை சாயம் அடிக்க வேண்டிய அவசியம் என்ன?

இதே தி.மு.க.தான், முத்துக்குமார் மரணத்தை ஒட்டி எழுந்த மாணவர் எழுச்சியை சூழ்ச்சியாக முடக்கியது. இதே கருணாநிதிதான் ஈழப்போரின் இறுதி நாட்களில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். இதே கருணாநிதிதான், மக்கள் செத்தொழிந்தபோது காங்கிரஸை கட்டித் தழுவிக்கொண்டார். ஆகவே இப்போதைய மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவும், தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் இன்னொரு நாடகமே.

இதை சொன்னால், “கருணாநிதியை இந்த முடிவை நோக்கித் தள்ளியது மாணவர் போராட்டங்களின் வீச்சுதானே? அந்த வகையில் இது வெற்றிதான்” என இண்டு, இடுக்குகளை தேடிப்பிடித்து ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதேபோன்ற ஒரு மொக்கை வாதத்தை முன்வைத்துதான் தமிழினவாதிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தனர். “கருணாநிதியை விட ஜெயலலிதா மேல். அவர் துரோகி. இந்தம்மா எதிரி. துரோகியை விட எதிரி மேல்” என பஞ்ச் டயலாக் பேசி, வீரமாக ஓடிச்சென்று ஜெயா காலில் விழுந்தார்கள். “தனி ஈழம் ஒன்றே தீர்வு” என்று ஜெயலலிதா பேசிய சவடால் இவர்களுக்குத் தேனாக இனித்தது. “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று அடித்துவிட்ட சீமான் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று வர்ணித்த ஆபாசத்தை கண்டிக்கக்கூட தமிழினவாதிகளுக்கு துணிவில்லை. ஆனால் அந்தம்மாவோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது “ஆதரவு வாபஸ்” என ஐந்தாம் முறையாக தி.மு.க. நாடகம் நடத்தியபோது, “தி.மு.க. ஆதரவை வாபஸ் வாங்கினால், அ.தி.மு.க. ஆதரவு தரும்” என்று தானே வலியசென்று காங்கிரஸுக்கு வால் பிடித்தார். ஈழத்தாயின் “யு&டர்ன்” குறித்து அப்போதும் தமிழினவாதிகள் வாய் திறக்கவில்லை.

அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார்; முதல்வரானார். “என் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போதும் தமிழினவாதிகள் வார்த்தைகளை மௌனித்துக்கொண்டார்கள். மூச்சு விடவில்லை.

“ஜெயலலிதா வந்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று பேசியவர்கள் தங்களின் கூற்றுக்குப் பொறுப்பேற்று இப்போது பதில் சொல்ல வேண்டும். அந்தந்த நேரத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக எதையாவது பேசுவது, பிறகு முற்றிலும் முரணாக நடந்து கொள்வது, முந்தைய கூற்றுகள் காற்றில் கரைந்துபோவது… என்ற இந்த நிலைதான் தமிழக அரசியலில் தொடர்ந்து நடக்கிறது.  “அப்போது இப்படி சொன்னீர்களே” என்று இவர்களிடம் யார் போய் கேட்பது? அந்தந்த கட்சிகளின், இயக்கங்களின் தொண்டர்கள் கேட்க வேண்டும்; அவர்கள் கேட்கப்போவதில்லை. அம்மாவுக்கு முட்டுக் கொடுத்தவர்களாவது கேட்பார்களா?

‘‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற திமிர்ப்பேச்சு பேசிய ஜெயலலிதாதான் போர்க்குற்றத்துக்கு விசாரணை கேட்கிறார். “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று பேசியவர், இப்போது “தமிழர்கள் இலங்கையில் சம உரிமையுடன் வாழ வழி செய்யவேண்டும்” என்று ஜெனிவா தீர்மானத்துக்கு திருத்தம் சொல்கிறார். தனியாய் சிக்கிய புத்த பிக்குவை புரட்டி எடுக்கின்ற மறத்தமிழர் படையின் தளபதி செந்தமிழன் சீமான் ஈழத்தாயிடம் இதைப்பற்றிக் கேட்பாரா? “கருணாநிதி நடிக்கிறார், ஜெயலலிதா உண்மையாகப் போராடுகிறார்” என்று சான்றிதழ் கொடுத்த வைகோ கேட்பாரா?

கருணாநிதியை கிடைத்த சந்துகளில் எல்லாம் போட்டுத் தாக்குபவர்கள், அம்மா கழற்றி அடித்தாலும், இளிக்கிறார்கள். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும் தேதியே முடிவடைந்துவிட்ட பிறகு “அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என பூட்டிய வீட்டுன் முன்பு சவுண்ட் விடுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் கூட்டமாக நின்று கைதட்டுகிறார்களேயன்றி, “வீடு பூட்டியாச்சும்மா” என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் தைரியம் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் உள்ளிட்ட எந்த தமிழினத் தலைவருக்கும் இல்லை. சும்மா சொல்லக்கூடாது. எப்பிடித்தா…ன் அம்மா எல்லாரையும் ஓ.பி யா மாத்துறாங்களோ தெரியல! கருணாநிதிக்கு வயித்தெரிச்சலாத்தான் இருக்கும்.

இப்போதைய மாணவர் போராட்டங்களையே எடுத்துக்கொள்வோம்.‘தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தன்னை போராட்ட சக்திகளுடன் இருப்பதைப் போல காட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, மறுபுறம் மாணவர் போராட்டங்களை நசுக்க பல வகைகளிலும் முயற்சிக்கிறார். லயோலோ மாணவர் போராட்டத்தை பெருந்தொகையிலான போலீஸை அனுப்பி அடக்கியது மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதும் ஜெ.அரசின் உளவுத்துறை மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. “பாஸ் போர்ட் கிடைக்காது. அரசு வேலை கிடைக்காது. வேலைக்குப் போக முடியாது” என அச்சுறுத்துகிறது.

ஜெயலலிதா ஈழம் குறித்தோ இல்லை தமிழுணர்வு குறித்தோ எகத்தாளமான எதிர் கருத்தும், பகை அணுகுமுறையும் உள்ளவர். இதை அவரது முதலாவது ஆட்சிக்காலத்திலிருந்தே பார்க்கலாம். அந்த வகையில் தற்போதைய போராட்டங்கள் குறித்து மிகுந்த எரிச்சலே கொண்டிருப்பார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொண்டால் அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்பதாலும்  மேற்படி ஓ.பி க்கள் தன்னைப் பற்றி உருவாக்கியிருக்கும் “முற்போக்கு” இமேஜை தக்க வைத்துக்கொள்ள ஜெயா விரும்புகிறார். அதனால்தான் இதுவரை மாணவர் போராட்டங்கள் அரசின் முழுவீச்சான அடக்குமுறை இன்றி தொடர்கின்றன. எனினும் இந்த நிலைமை கை மீறி போகிறது எனும் பட்சத்தில் தனது போலீஸ் படையை அனுப்பி ஒடுக்குமுறையே ஏவிவிடவும் தயங்கமாட்டார். கூடங்குளத்தில் அதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமில்லை… விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்… என தமிழகத்தின் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் மாணவர் போராட்டத்தின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்வதில் போட்டிப் போடுகின்றன. ஓர் அரசியல் எழுச்சி உருவாகும்போது ஏற்கெனவே இயங்கும் கட்சிகளும், அமைப்புகளும் அதில் தலையிட்டு போராடுவது சரியானதுதான். களத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிகரமாகவும், போதுமான கொள்கைப் பிடிமானங்களும் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு அத்தகைய பிடிப்பை தந்து மைய நோக்கத்தின் மீதான பற்றுறுதியை அதிகப்படுத்துவதும், போராடும் சக்திகளை நெறிப்படுத்தி போராட்டத்தை கூர்மைப்படுத்துவதும்தான் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கே ஒரு தீர்மானகரமான கொள்கை இல்லாமல் அம்மாவுக்கும், அய்யாவுக்கும் இடையில் காவடி தூக்கும்போது, இவர்கள் எங்கிருந்து மாணவர் போராட்டங்களை சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு அணுகுவது? ஆகவே இயல்பாகவே அது சந்தர்ப்பவாதமாகவும், நாடகமாகவும் உருவெடுக்கிறது. இந்த சண்டை முற்றி, ஆங்காங்கே வெளியே வரவும் செய்கிறது. சமீபத்தில் மதுரையில் தீக்குளித்தவர் “எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான்” என ம.தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் சொந்தம் கொண்டாடி அடித்துக் கொண்டதை கண்டோம். இவர்களை கெவின் கார்ட்டர் எடுத்த புகழ்பெற்ற கழுகு+குழந்தை புகைப்படத்துடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

தி.மு.க.வின் விலகல் முடிவை எடுத்துக் கொண்டால் இதைப்பற்றி விவாதிக்கும் பலரும் இதனால் ஐ.நா. தீர்மானத்திற்கோ, ஈழத் தமிழர் நலனிற்கோ ஏதேனும் நன்மை விளையுமா என்று விவாதிக்கவில்லை. மாறாக, இதனால் தமிழக, மத்தியக் கூட்டணிகளில் உருவாகப்போகும் மாற்றங்களை பற்றியே பேசுகிறார்கள். இதைப்பற்றி புதிய எஸ்.டி.எஸ் ஆக நியமனம் பெற்றிருக்கும் தா.பாண்டியனிடம் நிருபர்கள் கருத்துக் கேட்டதற்கு, “நல்ல விஷயம்தான்” என்று முதலில் சொன்னார். “அப்படின்னா நீங்க தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறதா எடுத்துக்கலாமா?” என்று நிருபர்கள் கேட்டதும் பதற்றத்துடன், “அப்படி சொல்ல முடியாது. என் கருத்தை நாளை சொல்கிறேன்” என்று ஜகா வாங்கிவிட்டார். தோட்டத்து எஜமானியை மீறி தோட்டக்காரர் தன்னிச்சையாக கருத்து சொல்வது முறையாகாது என்பது அவரது மூளைக்கு சற்றே தாமதமாகத்தான் உறைத்திருக்கும் போல!

இவர் மட்டுமில்லை… பலரும் தி.மு.க.வின் முடிவை கொள்கைப் பூர்வமாக விமர்சிப்பதற்குப் பதில் இதனால் உருவாக்கப்போகும் கூட்டணி மாற்றங்களையே மையமாகப் பேசுகின்றனர். வேறு சிலரோ, “இப்போதேனும் தி.மு.க. விழித்தெழ வேண்டும்” என அந்தக் குட்டிச்சுவருக்கு பெயிண்ட் அடிக்கப் பார்க்கிறார்கள்.

கருணாநிதி மட்டுமில்லை… ஜெயலலிதா, வைகோ, சீமான், பழ.நெடுமாறன், தா.பாண்டியன் என அனைவருமே தற்போதைய மாணவர் போராட்டங்கள் தங்களது அரசியலின் வரம்புக்கு அப்பாற்பட்ட வகையில் செல்வதை விரும்பவில்லை. ராஜபக்சேவில் தொடங்கிய கொடும்பாவி, சல்மான் குர்ஷித், மன்மோகன், சோனியா என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. “இன்று நீ ..நாளை நான்” என்று எல்லோரும் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

“இந்த பஸ் நம்ம ஊருக்குப் போகாது போலிருக்கே” என லேசாக அவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்துவிட்டதால் “பஸ் பஞ்சர் ஆக வேண்டும், இறைவா!” என கனவு காண்கிறார்கள். தானாக பஞ்சராகாவிட்டால் இவர்களே லாடம் வைத்து பஞ்சர் ஆக்குவார்கள். லாடத்தை வெளிப்படையாக வைப்பதா, தெரிஞ்சும் தெரியாமலும் வைப்பதா என்பதில்தான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு இருக்கிறது.

மாபெரும் மாணவர் திரள் தமிழகத்தின் வீதிகளில் திரண்டு நிற்கிறது. அவர்கள் நடுத்தர வர்க்கத்து, உழைக்கும் வர்க்கத்து வீடுகளை சேர்ந்த பிள்ளைகள். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் சரிபாதியானோர் இந்தப் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை பகுதி அளவிலேனும் உணரத் துவங்கியுள்ளனர். அதை வளர்த்தெடுப்பதும், போராடும் சக்திகளை ஓரணியில் திரட்டி கூர்மைப்படுத்துவதும் மட்டுமல்ல… ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கும் இதுதான் பொருத்தமான தருணம்!

வளவன்.