privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?

சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?

-

எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?

“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., உலகெங்கும் இரகசியமாக ஆட்கடத்தல்- சித்திரவதைகளை நடத்தியிருப்பதை, நியூயார்க்கைச் சேர்ந்த “ஓப்பன் சோசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டுள்ள “சித்திரவதையின் உலகமயமாக்கம்” என்ற இந்த அறிக்கை, உலகின் 54 அரசுகள், தமது நாட்டு சட்டங்களுக்கே விரோதமாக, தம் நாட்டுக் குடிமக்களையே கைது செய்து சி.ஐ.ஏ.விடம் ஒப்படைத்ததோடு, அவர்களைச் சித்திரவதை செய்யவும் கடத்தவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படி சி.ஐ.ஏ. வுக்கு ஒத்துழைத்த நாடுகளின் பட்டியலில் ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க், கனடா போன்ற நாடுகள் முதல் அமெரிக்காவால் “தீய சக்திகளின் ஆணிவேர்” என சித்தரிக்கப்படும் சிரியா, இரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வரை பலரும் அடக்கம்.

அதிர்ச்சியூட்டும் செய்தி இது மட்டுமல்ல; சி.ஐ.ஏ.வை அம்பலமாக்கும் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர், அமெரிக்காவில் வசிக்கும் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங். புருவத்தை உயர்த்த வேண்டாம். அது பற்றி ஆராய்வதற்கு முன், அம்ரித் சிங்கின் அறிக்கை கூறும் விவரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தி வரும் இரகசிய சிறை.

இன்று அமெரிக்க மனித உரிமைத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசு, சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்கு உதவியுள்ளது. 2003-இல் சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்காக உபயோகப்படுத்தப்படும் ரிச்மோர் ஏவியேஷன் நிறுவனத்தின் விமானம், பாங்காக்கிலிருந்து ரித்வான் இசாமுதீனைக் கடத்துவதற்கு முன் இலங்கையில் தரையிறங்கியிருக்கிறது. இவர் பின்னர் மூன்றாண்டுகள் சி.ஐ.ஏ.வின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு, 2006-இல் குவாண்டினாமோ பே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட இரகசிய அறையில் அமெரிக்க உளவுத்துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சர், சங்கிலியால் கட்டப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் பிடிக்கப்பட்ட அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள்அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு கூரையில் கட்டித் தொங்கவிடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று 40 நாட்களுக்குச் சித்திரவதை செயப்பட்டிருக்கிறார்.

-இவை சில எடுத்துக்காட்டுகள். இது போல பல விதமாக அமெரிக்கா நடத்திவரும் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு 54 நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்க இராணுவத்தால் குவான்டினாமோ பே சிறைச்சாலைக்குக் கடத்திச் செல்லப்படும் பரிதாபத்திற்குரிய ஒரு கைதி.

சி.ஐ.ஏ. செய்த இத்தகைய கொடூரங்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. “சி.ஐ.ஏ.வின் கருந்தளங்கள்” என அறியப்பட்ட இரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றியும் அதற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஒத்துழைப்பு பற்றியும் 2005-இல் சில அமெரிக்கப் பத்திரிகைகள் செதிகளை வெளியிட்டன. அப்போது ஐரோப்பிய சபை நடத்திய விசாரணையில் ஏறத்தாழ இருபது நாடுகள் சி.ஐ.ஏ.வுக்குத் துணைபுரிந்தது அம்பலமாகியது. 2006 ஜனவரியில் ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த மற்றொரு விசாரணைக் குழு அளித்த அறிக்கை, 2001-2005 காலகட்டத்தில் ஐரோப்பிய விமான வழித்தடத்தின் ஊடாக மட்டுமே சி.ஐ.ஏ. 1245 தடவை விமானங்கள் வழி ஆட்கடத்தலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சி.ஐ.ஏ. ஆப்கான் ஆக்ரமிப்பின் போது “வாட்டர் போர்டிங்” என்ற கொடூர தண்ணீர் சித்திரவதையை கைதிகள் மீது ஏவியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால், “இந்தச் சித்திரவதைகள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, அமெரிக்க நலனுக்காகவே நடந்தது” என்பதால், அதன் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டிருக்கும் அம்ரித் சிங், “சி.ஐ.ஏ. வின் இத்தகைய நடவடிக்கைகள் மீது அமெரிக்க அரசு ஒரு சுயேச்சையான விசாரணை நடத்தி, இந்தச் சித்திரவதை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சி.ஐ.ஏ. அதிகாரிகள் யார் என்பதை அம்பலமாக்க வேண்டும்; நடந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி, மற்ற நாடுகளும் பொறுப்புதான் என்ற போதிலும், இவ்வாறு சர்வதேச சட்டங்களை மீறி நடந்து கொள்வதன் விளைவாக, உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு குறைவதுடன், அமெரிக்காவின் தார்மீகத் தகுதியும் பாதிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிடுகிறார்.

அம்ரித் சிங்கின் அறிக்கை, “அமெரிக்க அரசு வேறு; அதன் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வேறு” போலவும், சி.ஐ.ஏ. என்பது நாட்டாமைக்கு தெரியாமல் ரவுடித்தனம் செயும் தறுதலைப் பிள்ளை போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சி.ஐ.ஏ. வுக்கு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரமும் சுயேச்சைத்தன்மையும் அமெரிக்க அரசால் திட்டமிட்டேதான் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில்”டேர்டிவொர்க்ஸ்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை போன்ற இரகசிய வேலைகளில் தொடங்கி, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் வரையில் எல்லா நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டிருப்பது மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களுக்காக, மற்ற நாடுகளின் வணிக நடவடிக்கைகள், ஒப்பந்தங்களை வேவு பார்ப்பது வரையிலான முறைகேடுகளிலும் அது ஈடுபட்டிருக்கிறது.

அம்ரித் சிங்
“சித்திரவதையின் உலகமயமாக்கம்” அறிக்கையைத் தொகுத்து வெளியிட்ட அம்ரித் சிங்.

இவையெல்லாம் அம்ரித் சிங் அறியாதவையல்ல. சர்வதேச சட்டங்களை மீறி அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை அதிகாரபூர்வமாகவே அமெரிக்க அரசு அரங்கேற்றி வரும் சூழலில், சி.ஐ.ஏ. இரகசியமாக செய்த சட்டவிரோத சித்திரவதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, ‘அமெரிக்காவின் தார்மீகத் தகுதியைக் காப்பாற்றுவதற்காக’ விசாரணை கோருகிறார் அம்ரித் சிங். ஏனென்றால், அவர் “ஓபன் சொசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்திய தொண்டு நிறுவனத்தின் “தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கு” பொறுப்பு வகிக்கும் தலைமை சட்ட அதிகாரி.

ஓபன் சொசைட்டி பவுண்டேசன் என்பது உலகப் பெரும் கோடீசுவரனும், நிதி மூலதனச் சூதாடியுமான ஜார்ஜ் சோரோஸ் என்பவனால் நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 1980-களில் போலந்தில் போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை சாலிடாரிட்டி என்ற எதிர்ப்புரட்சி இயக்கத்துக்கு ஆதரவாகத் திருப்புவதில் சோரோஸின் இந்த அமைப்பு முக்கியப் பாத்திரம் ஆற்றியது. மாசிடோனியா, பெலாரஸ், குரோசியா எனப் பல கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிச நாடுகளில் முதலாளித்துவத்தை நிறுவியதும், ஜார்ஜியாவில் ரோஜாப் புரட்சியை பின்நின்று இயக்கியதும் சோரோஸின் தொண்டு நிறுவனங்கள்தான்.

ஜார்ஜியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும் ஓபன் சோசைட்டி பவுண்டேசனின் பொறுப்பில் இருந்தவர்கள் அமைச்சர்களாயினர். அந்நாட்டின் துறைமுகம், மின்சாரம், ரயில்வே ஆகியவை சோரோஸின் கைக்கு மாறின. மிலோசோவிச்சை ஆட்சியிலிருந்து இறக்கி, யூகோஸ்லாவியாவைப் பிளந்தது மட்டுமல்ல, கொசாவோ விடுதலைப் படை என்ற இசுலாமியப் படைக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து, பதிலுக்கு அந்நாட்டின் தங்கம், வெள்ளி, காரீயச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொண்டார் சோரோஸ். “முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் ” என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.

ஜார்ஜ் சோரஸ்
ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அமெரிக்கப் பெருமுதலாளி ஜார்ஜ் சோரஸ்.

சோரோஸின் “இன்டர்நேசனல் கிரைசிஸ் குரூப்” என்ற தொண்டு நிறுவனத்தில், தாலிபானையும் பின் லாடனையும் உருவாக்கிய முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பிரசென்ஸ்கி, நேட்டோ படைத் தளபதி வெஸ்லி கிளார்க், யுகோஸ்லேவியாவில் ஆட்சித் தகர்வை முன்னின்று நடத்திய அமெரிக்க முன்னாள் தூதர் வாரன் சிம்மெர்மென் போன்றவர்கள் கவுரவப் பதவி வகிக்கின்றனர். 1998-இலேயே இராக் மீதான தாக்குதலுக்கு அரசியல், இராணுவ வழிகாட்டுதல்களை கிளிண்டனுக்கு வழங்கியவர்கள் சோரோஸின் ஆலோசகர்கள்தான். ஆயுத பேரங்கள் வழி பெரும் இலாபமீட்டும் கார்லைல் என்ற நிதிச் சூதாட்ட நிறுவனத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கும் சோரோஸுக்கு சீனியர் புஷ், முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர்கள், பின் லாடனின் உறவினர்கள் ஆகியோர் தொழில் கூட்டாளிகள்.

சோரோஸ் கடைப்பிடிக்கும் உத்தி எளிமையானது. எந்த நாடுகளில் சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் அதிருப்தி நிலவுகிறதோ, அங்கே சோரோஸின் மனித உரிமை மீட்பர்கள் களமிறங்குவார்கள். அதன் பின்னர் அந்த நாடுகள் பற்றிப் பத்திரிகைகள் வெளியிடும் தலைப்புச் செய்திகளை சோரோஸின் பணம் தீர்மானிக்கும். அரசுக்கு எதிரான மக்கள் கோபத்தை சோரோஸின் அரசியல் மற்றும் அறிவுத்துறை கூலிப்படை தன்வயப்படுத்திய பின்னர், பொருத்தமான நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கண் சிமிட்டும். அந்த நாட்டில் ‘புரட்சி’ அல்லது ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ அரங்கேறும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க நடவடிக்கைகளும், சோரோஸின் தொழில் சாம்ராச்சியமும், அவரது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணக்கமான முறையில் பிணைந்திருக்கின்றன.

இதன் பொருள் பிணக்கே இல்லை என்பதல்ல. முதலாளித்துவத்தையும் அமெரிக்க மேலாதிக்கத்தையும் நாசூக்காக, நயவஞ்சகமாக மக்கள் ஆதரவோடு நிலைநாட்ட வேண்டும் என்பது சோரோஸின் அணுகுமுறை. இதை விடுத்து மூர்க்கத்தனமான முறையில் இராக் மீது படையெடுத்த காரணத்தினால் ஜூனியர் புஷ்ஷை வெளிப்படையாக எதிர்த்து பரபரப்பைக் கிளப்பினார் சோரோஸ். அப்போதே சோரோஸின் உண்மை முகத்தை ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் நீல்கிளார்க் என்ற பத்திரிகையாளர் தோலுரித்தார்.

சோரோஸ் வெளியிட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எத்தகையதோ, அத்தகையதுதான் தற்போது மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டிருக்கும் சித்திரவதை எதிர்ப்பு. அப்பன் அமெரிக்க அடிவருடி என்றால், மகள் எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி. எது கொடியது? சி.ஐ.ஏ. வின் சித்திரவதையா, தொண்டு நிறுவனங்கள் பேசும் மனித உரிமையா?

– அன்பு

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

  1. உங்க லாஜிக் சகிக்கவில்லை. (இப்படி எல்லாம் ‘யோசிப்பதால் தான் இந்தியாவில் இன்னும் தோழர்களால ஜெயிக்க முடியவில்லையோ ? :)) )

    ///சோரோஸ் வெளியிட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எத்தகையதோ, அத்தகையதுதான் தற்போது மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டிருக்கும் சித்திரவதை எதிர்ப்பு. அப்பன் அமெரிக்க அடிவருடி என்றால், மகள் எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி.///

    சோரோஸின் நோக்கத்தை சந்தேகப்படுவது ஒரு வகையான மன நோய். அவருக்கும், அந்த என்.ஜி.ஓக்கும் உங்களை விட நல்ல நோக்கங்கள் இருக்கலாம் என்று எம்மை போன்ற சிற்றறிவு படைத்தவர்களுக்கு தோன்றுகிறது. ஆனால் நீங்க உளவியல் நிபுணர்கள். எனவே..

    அதென்ன ’எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி’ ? இப்படி எல்லாம் கேவலமாக பேச உங்களுக்கு வெட்கமாயில்லை ? உண்மையில் உங்களை விட அவர் தான் லட்சியவாதி. நீங்க கருதுவதை அப்படியே, சொந்த புத்தி இல்லாமல், கேட்டுக்க இங்கு எல்லோரும் மடையர்கள் இல்லை.

  2. ஐயா,அதியமானே…உங்களுடைய சிற்றறிவுக்கெல்லாம் மேற் கூறிய விஷயம் புரியாதுதான்.ஈராக்கில் நடந்ததைப்போல சோரோஸின் வழிக் காட்டுதலில்,இந்தியாவிலும் அமெரிக்க ரானுவம் ஆக்கிரமிப்பு நடத்தினால்,நம் மக்களின் மீது உயர் ரக ராணுவ ஆயுதஙளை பிரையொகித்தால் தான் உம்மைப்போன்ற சிற்றறிவிர்க்கெல்லாம் சோரோஸ் என்பவனைப் பற்றியும் அவனுக்கு அடிமை தொன்டு செய்கின்ற மன்மோகனின் மகள் அம்ரித் சிங் பற்றியும் புரியவரும்.

Leave a Reply to solomon பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க