privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!

மார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!

-

1979 முதல் 1990 வரை கிரேட் பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் தனது 87-வது வயதில் லண்டனில் காலமானார். பொருளாதாரத் துறையிலும், வெளிநாட்டு உறவுகளிலும் உறுதியான முடிவுகள் எடுத்த மார்கரெட் தாட்சர் இரும்புப் பெண் என்று முதலாளித்துவ அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறார். உண்மையில் இந்த இரும்பு பின்னர் துருப்படித்து போனதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இரும்புப் பெண்
இரும்புப் பெண், துருப்பிடித்த சாதனைகள்

1980களில் பிரிட்டனில் தாட்சரின் தலைமையிலும், அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் தலைமையிலும் தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு வழி வகுக்கப்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி, பாக்லாந்து போரில் அர்ஜென்டினாவை தோற்கடிப்பு, தொழிற்சங்கங்களை வீழ்த்தியது என்று அசைக்க முடியாத செல்வாக்கு படைத்தவராக போற்றப்பட்ட தாட்சர் 1990-ம் ஆண்டு அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து, 1951-ல் டெனிஸ் தாட்சர் என்ற பணக்கார வர்த்தகரை திருமணம் புரிந்து மார்கரெட் தாட்சர் என்று அறியப்பட்ட அவரது புகழின் பின்னணி என்ன? முதலில் இத்தகைய முதலாளித்துவ கட்சி தலைவர்கள் எத்தகைய பிற்போக்குத்தனங்களையும் ஏற்பவர்களே என்பதற்கு ஒரு சான்றைப் பார்த்து விடுவோம்.

1970களில் இறுதியில் லண்டனில் இந்தியாவின் துணை தூதுவராக பணியாற்றிய நட்வர்சிங், பன்னாட்டு ஆயுத புரோக்கரும் சாமியாருமான சந்திராசாமியை தாட்சருடன் சந்திக்க ஏற்பாடு செய்தது பற்றி “வாக்கிங் வித் லயன்ஸ்…..” என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இந்தி மட்டும் பேசத் தெரிந்த சந்திராசாமி சாமியார் உடையில் நெற்றியில் பெரிய திலகத்துடன் கம்பை ஊன்றிக் கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மார்கரெட் தாட்சரை சந்திக்கப் போயிருக்கிறார். கிரேட் பிரிட்டனுக்கான இந்தியாவின் துணைத்தூதர் சாமியாரின் மொழிபெயர்ப்பாளராக உடன் போயிருக்கிறார்.

சாதாரண மாஜிக் ஒன்றை செய்து காட்டி தாட்சரை கவர்ந்து விட்டிருக்கிறார் சந்திராசாமி. ‘அடுத்த முறை சந்திக்க வேண்டும்’ என்று தாட்சர் கேட்க, ‘துணைத் தூதுவரின் வீட்டுக்கு வாருங்கள், சிவப்பு உடை உடுத்து வாருங்கள், கையில் நான் கொடுக்கும் தாயத்தை கையில் கட்டிக் கொண்டு வாருங்கள்’ என்றெல்லாம் சந்திராசாமி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிவப்பு உடையில், தாயத்து கட்டிய கையுடன் ஆஜராகி, ‘தான் பிரதமர் ஆவது நடக்குமா, எப்போது நடக்கும், எத்தனை ஆண்டுகள் பிரதமராக இருக்க முடியும்’ என்று ஆர்வத்துடன் பல கேள்விகளுக்கு சாமியாரின் பதில்களை பெற்றுக் கொண்டு போயிருக்கிறார்.

சாமியார் சொன்னபடி பிரதமராகி விட்ட தாட்சர், அடுத்து நட்வர்சிங்கை சந்திக்கும் போது ‘சாமியாரிடம் குறி கேட்டது பற்றியெல்லாம் யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார். பின்னர் தாட்சரின் புகழ் மாயை கலைந்து அம்பலமானதாலோ என்னமோ அதை தனது சுயசரிதையில் விலாவாரியாக எழுதி விட்டிருக்கிறார் நட்வர் சிங்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ், இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள கிரந்தாம் என்ற ஊரில் 1925-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது பள்ளிப் பருவத்தை, ரயில் பாதை ஓரம் இருந்த அவரது தந்தையின் மளிகைக்கடைக்கு மேல் இருந்த வீட்டில் கழித்தார். ‘மளிகைக் கடையில் வரவு, செலவுகளை சமன்படுத்துவது போல ஒரு நாடு தனது வரவு, செலவுகளை சமன்படுத்த வேண்டும்’ என்று பிற்காலத்தில் தனது பொருளாதார அடிப்படையை ‘அறிவுடன்’ விளக்கியிருக்கிறார் தாட்சர்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தின் போது இங்கிலாந்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி, சிறு வணிகர்களும் தொழில்களும் நொடித்துப் போயின. அந்தச் சூழலில் வளர்ந்த மார்கரெட் ராபர்ட்ஸ் 1943-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டின் சாமர்வில் கல்லூரியில் சேர்ந்து 1947-ம் ஆண்டு வேதியல் பட்டப் படிப்பு பெற்றார். அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை சுரண்டும்  ஏகபோக அதிகாரத்தை பிரிட்டன் இழந்தது; போரில் அழிக்கப்பட்ட பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருந்தது; சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச அரசுகளின் தாக்கம் பிரிட்டிஷ் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் ஒன்று சேர்த்திருந்தது; சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கு மூடப்பட்டிருந்தன; காலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியா போன்ற நாடுகளில் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் மட்டுப்பட்டிருந்தன. பிரிட்டனில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்து லாபம் ஈட்டும் கட்டமைப்பும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தன.

இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றதாக சிலாகிக்கப்படும் சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி, மக்களால் நிராகரிக்கப்பட்டு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கம் சுரங்கங்கள், பெட்ரோலியத் துறை, மின்சாரத் துறை, பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்ற துறைகளை நாட்டுடமையாக்கியது. தொழில் நிறுவனங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது, தேசிய அளவில் பொருளாதார திட்டமிடுவது போன்ற கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றன. கார் தொழிற்சாலைகள், விமான தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள் போன்றவை அரசுடமையாக்கப்பட்டன.

மக்களுக்கு நாடு தழுவிய பொது மருத்துவ சேவை, இலவசக் கல்வி, அரசு வீட்டு வசதி போன்ற நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. சமூக நலத்திட்டங்களுக்கான சட்டங்கள் அனைத்தும் சோசலிச அபாயம் கருதி தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற இரு தரப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு பெருகியது. 1955-ம் ஆண்டு வேலை இல்லாத் திண்டாட்டம் 1 சதவீதமாக குறைந்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.15 லட்சமாக குறைந்திருந்தது.

இந்த பொருளாதார சூழலில் தொழிலாளர் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த டார்ட்பர்டு தொகுதியில் போட்டியிடுவதற்கு மார்கரெட் தாட்சரை கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்தது. இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் 1959-ம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த பின்க்ளே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கோழி, கோழி முட்டைத் தொழிலில் பெருமுதலாளியான ஆன்டனி பிஷர் என்பவர் நிதி கொடுத்து உருவாக்கிய பொருளாதார விவகாரங்களுக்கான கழகத்துடன் மார்கரெட் தாட்சர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ‘அரசாங்கத்தின் அளவை குறைக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களை ஒழிக்க வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், சந்தைப் போட்டியை ஊக்குவிக்க வேண்டும்’ என்ற அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அந்த கழகம் செய்து வந்தது.

1970-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த எட்வர்ட் ஹீத் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரவையில் மார்கரெட் தாட்சர் கல்வி, அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கல்வித் துறையில் அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் 7 வயது முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் அரசின் திட்டத்தை ஒழித்துக் கட்டியதன் மூலம் ‘மார்கரெட் தாட்சர் – பால் பிடுங்கியவர்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

1975-ல் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்றதை அடுத்து எட்வர் ஹீத்தை எதிர்த்து போட்டியிட்டு கட்சி தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார் மார்கரெட் தாட்சர். அந்த காலத்தில்தான் ‘3 ஆண்டுகளுக்குள் பிரதமர், 11 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவி’ என்று சந்திராசாமியின் நல்லாசியை பெற்றிருக்கிறார்.

1979-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று மார்கரெட் தாட்சர் பிரதமரானார் . 1970களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், சீனா அன்னிய முதலீடுகளை வரவேற்று உற்பத்தி வாய்ப்புகளை அளித்தது, சோசலிச முகாமின் பின்னடைவு இவற்றால் பிரிட்டிஷ் தொழில்களை தனியார் மயமாக்கி உற்பத்தித் துறையை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

தாட்சர் தலைமையிலான அரசு, பெருநிறுவனங்களுக்கான வருமான வரியை குறைத்து, உழைக்கும் மக்கள் மீதான மறைமுக வரிகளை அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன; செலவுகளை குறைப்பதாக மக்கள் நலத் திட்டங்கள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டன; பொது மருத்துவத் துறை, இலவசக் கல்வி, ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

“சமூகம் என்று ஒன்றும் கிடையாது. தனிப்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பங்களும்தான் உண்டு. ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள வேண்டும்.” என்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றி வைத்திருந்த முதலாளிகளுடன் தினமும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் ‘சுதந்திரமாக’ போட்டியிட்டு வதைபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார், தாட்சர்.

முதலாளிகளின் லாப வேட்டைக்கு உள்நாட்டு தொழிலாளர்களை சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலையில், மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்கள் ஜனநாயகமற்ற முறையில் ஒடுக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டது.

1984-ல் தேசிய நிலக்கரி வாரியம் 174 அரசு நிலக்கரி சுரங்கங்களில் 20ஐ மூடுவதன் 1.87 லட்சம் வேலைகளில் 20,000ஐ வெட்டுவதாக அறிவித்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒரு ஆண்டு வரை வேலை நிறுத்தம் செய்தனர். அரசு பாராமுகமாக இருந்து வேலை நிறுத்தத்தை முறியடித்தது. 1985-ல் 25 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1992-ல் 97 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1994-ல் மீதியிருந்த சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்பட்டன.

தொழிலாளர்களும் சிறு தொழில்களும் நசிவடைய, சிட்டி ஆப் லண்டன் எனப்படும் ஒரு சதுர மைல் பரப்பில் குவிந்திருக்கும் நிதி நிறுவனங்கள் உலகளாவிய நிதி மூலதன பாய்ச்சல் மூலம் கொழுக்க ஆரம்பித்தன. இங்கிலாந்தில் தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது; உழைக்கும் மக்கள் தமது அடிப்படை தேவைகளுக்கு கூட வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. லண்டனின் நிதித்துறை சூதாடிகள் உலகம் முழுவதும் மூலதன சூதாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

  • அரசு செலவுக் குறைப்புக்கும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கும் நிகராக மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
  • போக்குவரத்துத் துறையில் லாபம் இல்லாத தடங்களுக்கு சேவைகள் வெட்டப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்து கம்பெனி ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
  • தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, பயன்பாட்டு கட்டணங்கள் விண்ணைத் தொட்டன.
  • வீட்டு பயனீட்டாளர்களுக்கு மின்கட்டணங்கள் அதிகமாக்கப்பட்டன, மின் கட்டண வீதங்கள் தொழில் துறை முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்பட்டன.
  • தொழிலாளர்களின் எண்ணிக்கை 1979-ல் இருந்ததை விட 1997-ல் 20 லட்சம் குறைந்திருந்தது. கூலியும், சம்பளமும் குறைந்து தனியார் நிறுவனங்களின் லாபம் உயர்ந்தது.
  • அரசுத் துறை நிறுவனங்களை விற்று கிடைத்த காசில் பணக்காரர்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து கடும் சீரழிவுகளுக்கு உள்ளானது.

1980களின் இறுதியில் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் வெளிப்பட ஆரம்பித்து தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், வணிகர்கள் என்று அனைத்து பிரிவினரின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தது தாட்சர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அரசு. அடுத்த தேர்தலில் தாட்சரை தலைவராக வைத்திருந்தால் வேலைக்காகாது என்று உணர்ந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் 1990-ம் ஆண்டு தாட்சரை கட்சித் தலைவர், பிரதமர் பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்தனர்.

1984-ம் ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரத்தில் விவசாயத் துறை 5.5 சதவீதம், தொழில் துறை உற்பத்தி 50.5 சதவீதம், சேவைத்துறை 48.12 சதவீதம் பங்கு வகித்தன. 2009-ல் விவசாயத் துறையின் பங்கு 0.7 சதவீதமாகவும், தொழில் துறை உற்பத்தி 16.15 சதவீதமாகவும் வீழ்ச்சியடைய, சேவைத்துறை 83.16 சதவீத அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

1984-ம் ஆண்டு உள்நாட்டு தொழில்துறை உற்பத்தி மதிப்பில் 49.5 சதவீதமாக இருந்த உற்பத்தி பொருட்களின் இறக்குமதி 2009-ம் ஆண்டு 154.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது பிரிட்டன் தான் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பை விட 1.5 மடங்கு அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. பொருட்கள் இறக்குமதியில் 83 சதவீதம் தொழில் துறை பொருட்கள்; 12 சதவீதம் மூலப் பொருட்களும் எரிபொருட்களும்.

1984-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டுகளில், 16 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளில் 40 சதவீத வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளன. தற்பொழுது 18 சதவீத இளைஞர்கள் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல வழியற்றவர்களாக ஆக்கப்பட்டு, சமூகத்தின் கடைக்கோடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வசிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது சிறுவன்கூட ஏதாவதொரு கும்பலில் சேர்ந்து ஊரைச் சுற்றுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு பன்னாட்டு முதலாளிகளும், நிதி நிறுவன சூதாடிகளும் கொழுப்பதற்கான பொருளாதார கொள்கைகளை ஆரம்பித்து வைத்த பெருமை தாட்சரை சேரும்.

பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகும் பன்னாட்டு நிறுவனங்கள் தாட்சருக்கான தமது நன்றியை மறந்து விடவில்லை. ஜூலை 1992-ல் பன்னாட்டு சிகரெட் நிறுவனம் பிலிப் மோரிஸ் தாட்சருக்கு புவிஅரசியல் ஆலோசகர் பதவி அளித்து ஆண்டுக்கு $2.5 லட்சம் ஊதியமாகவும், $2.5 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாகவும் வழங்கியது. இதைத் தவிர பிலிப் மோரிஸ் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நிகழ்த்தும் ஒவ்வொரு உரைக்கும் அவருக்கு $50,000 ஊதியம்  வழங்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான போராளி என்று  பொய்யாக போற்றப்படும் தாட்சர் 1999-ல் சிலியின் முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளன் அகஸ்டோ பினோசெட் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட போது அவரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார். 1999-ல் லண்டனில் வீட்டுச் சிறையில் இருந்த அவரை போய் பார்த்தார். மார்ச் 2000-ல் பினோச்சே வழக்குகளை எதிர் கொள்ளாமலேயே பிரிட்டிஷ் அரசால் விடுவிக்கப்பட்டார்.

2005-ம் ஆண்டு முதல் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மார்கரெட் தாட்சர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திங்கள் கிழமை லண்டனில் மரணமடைந்தார்.

புகழ் தோன்றிய பத்து வருடங்களுக்குள்ளேயே தாட்சரின் மக்கள் விரோத கொள்கைகள் அம்பலப்பட்டு அனைவரும் வெறுக்கத் துவங்கினர். தற்போது தாட்சரின் மறைவை இங்கிலாந்து மக்கள் கொண்டாடுவதாகவும் செய்திகள் வருகின்றன. முதலாளித்துவத்தின் உலகமயக்கொள்கைக்கு தேவைப்பட்ட நடவடிக்கைகளை தாட்சர் எடுத்தார். அதனாலேயே முதலாளித்துவ உலகத்தால் பாராட்டப்பட்டு, மக்களால் தூற்றப்பட்டார்.

இதுதான் இரும்புப் பெண் துருப்பிடித்து மறைந்த கதை!

– அப்துல்.

மேலும் படிக்க
Thatcher, Chandraswami and I
The iron lady who remade Britain
Margaret Thatcher
UK Business

  1. தட்சர் அம்மையாரின் மரணம் இங்கு இரண்டு விதமான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.உயர் மேட்டுக் குடி மக்கள் தட்சர் அம்மையாரை போல் ஒரு பிரதமரை இங்கிலாந்து இதுவரை பார்த்தது இல்லை என புகழ்கிறார்கள், ஆனால் நடுத்தர, கீழ் தட்டு மக்கள் ஒன்று எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள் அல்லது மரணத்தை கொண்டாடவும் செய்கிறார்கள்.

    Brixton, Bristolபோன்ற இடங்களில் மக்களின் கொண்டாட்டம் சிறு கலவரங்களில் முடிந்தது. இதில் Brixton கறுப்பினத்தை பெரும்பாண்மையாகவும் , Bristol தேசியவாத ஆங்கிலேயரை பெரும்பாண்மையாக கொண்ட இடங்கள் ஆகும்.

    வரும் சனிக்கிழமை (12/04/2013) தட்சர் எதிர்ப்பாளர்களின் பெரும் கொண்டாட்டம் (Mass Party) Trafalgar Squareல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை ஏற்பாடு செய்யும் அமைப்பு Face Book ல் விடுத்துள்ள அழைப்பு இவ்வாறு உள்ளது.

    “6pm Trafalgar Square, bring a bottle, bring jelly & icecream, bring joy”

    தட்சரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நிலக்கரி(Coal)சுரங்க தொழிலாளர்களே, இரண்டாம் உலக யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் அரசு மற்றும், தனியாருக்கு சொந்தமாக 600 நிலக்கரி சுரங்கங்கள் இருந்தது. இன்று 3 மாத்திரமே எஞ்சி உள்ளது. பெரும்பாண்மையான சசுரங்கங்கள் தட்சரின் ஆட்சி காலத்திலே மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து இன்று வரை தகுந்த வேலை இன்மையால் அரச சொற்ப சமூக நல திட்டத்தில் தங்கி வாழ்கிறார்கள்.

    லண்டனின் புற நகர் பகுதியில் இருக்கும் கடைகளில் சமிப நாட்களாக பெரும் பத்திரிக்கைகளின் (Sun, Times etc)விற்பனை குறைந்துள்ளது, காரணம் என்ன என ஆராய்ந்ததில் இப் பத்திரிக்கைகள், அதாவது பெரும் ஊடக முதலாளிகளால் நடத்தப்படும் இப் பத்திரிக்கைகள் தட்சரை ஆகா ஓகோ என புகழ்வதால், மக்கள் வெருப்பால் இப் பத்திரிக்கைகளை வாங்காமல் செல்கிறார்கள்.

  2. 1970 ல் தொழிலலர் கட்சி ஏன் ஆட்சி இழந்தது ?நன்மை பல செய்தும் ஏன் தூக்கி எரியபட்டது ? ஒரு தலையாக மட்டுமே கருத்தை சொல்லாதீர்கள்

  3. You are talking rubbish.What do this authour Abdul know abvout Thatcher?
    Your verses are merly wrong.Thatcher is a daughter of a Grocer and not sundry..
    She graduated from Cambridge and not Oxford,with Gold Honours in the year 1943
    majouring in Physic. As like all politicians there are pros and cron where politics
    is concern No one is right nor Angel.
    You should concentrate more towards your political situations rather than looking
    at other developed nations.
    Atlast don’t forget Margret pulled her Nation from the Slum.
    What did we all do in this 20th Century?

  4. யார் இந்த மார்க்கரெட் தாட்சர்? பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடிய, ஐரிஷ் விடுதலைப் போராளிகளை சிறையில் போட்டு வதைத்தவர் தான் இந்த “இரும்புப் பெண்மணி”. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, ஈழத்தில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நிகழ்வை தமிழர்கள் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு முன்னரே, 1981 ம் ஆண்டு, வட அயர்லாந்தில் உண்ணாவிரதம் இருந்த பத்து அரசியல் கைதிகள் மரணத்தை தழுவிக் கொண்டனர். அதில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார். விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது. வட அயர்லாந்து சிறைச்சாலைகளில், பத்து அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த போதிலும், அவர்கள் பக்கம் திரும்பியும் பாராத கல்நெஞ்சக்காரியாக தாட்சர் விளங்கினார். பொபி சான்ட்ஸ் என்ற அரசியல் கைதி, சிறையில் இருந்த படியே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார். உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

  5. இந்திராவின் எமெர்ஜென்சி ஆட்சியை புகழும் அற்பர்களே அவரை இரும்பு பெண்மணி என்றனர்! பல லட்சம் ஏழ தமிழர்களை கொன்றொழிக்க காரணமான ராஜிவுக்கு தமிழ்னாட்டில் நினைவு சின்னம்! திராவிட இயக்க சொத்தான பெரியாரிசம், அண்ணாயிசத்திற்கு நாமம் சக்திகளுக்கு இஙுகு பாலபிஷெகம்! அய்ரிஷ் மக்களை போன்று தமிழனக்கு சூடு சொரணை இல்லை!

  6. I did speak to Brit professor on Sunday about Margret Thatcher. he said that 50% Britishy people believe that Margret Thatcher has saved the country and other 50% believes that she was thier evil devil (எங்கள் வாழ்வை நாசமாக்கிய சூனியக்காரி). he spoke in detail about critical her role in destroying the Labour unions in UK. So i would not say Vinanu analysis is lopsided.

  7. அரசாங்கம் எனக்கு நிரந்தர வேலை , உணவ, இருப்பிடம் என எல்லாம் தர வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறி கூட்டத்திற்கு தாட்சர் கொடிய பெண்மணி.
    தமிழகத்தில் இப்படிதான் எல்லாமே மானிய விலையில் அல்லது இலவசமாக வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகிறது.

    சொசியளிசதால் அழிய இருந்த இங்கிலாந்தை காப்பாற்றி விட்டார்.

    குறிப்பு :-
    அரசாங்கத்திடம் வேலை எதிபார்ப்பதை நான் குறை கூறவில்லை . ஆனால் நிரந்தர வேலை வேண்டும் , தவறு செய்தாலும் தண்டிக்கப்பட கூடாது, சாகும் வரை ஊதியும் கொடுத்து காப்பாற்ற வேண்டும் எனும் என்னத்தை தான் கண்டிக்கிறேன்

Leave a Reply to Sundaram பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க