privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !

மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !

-

மேலிலாண்ட் ஆர்ப்பாட்டம்
மான்சான்டோவை தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் மேரிலாண்டில் நடந்த ஆர்ப்பாட்டம்.

மெரிக்க தனியார் விதை நிறுவனமான மான்சான்டோவின் ஏகபோக விதைச் சந்தை கைப்பற்றலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உடலுக்கு தீமை விளைவிக்கும் அதன் விளை பொருட்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மான்சான்டோவின் பாதிப்புகளை தொடர்ந்து எதிர்த்து வரும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மே 25-ம் தேதியை 36 நாடுகளில் மான்சான்ட்டா எதிர்ப்பு போராட்ட நாளாக அறிவித்துள்ளன. அதே வேளையில், அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசே பல நாடுகளில் பணம் செலவழித்து லாபி செய்திருக்கும் தகவல் விக்கிலீக்ஸ் கேபிள்கள்(ஆவணங்கள்) மூலம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் உயிரிதொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) நிறுவனமான மான்சான்டோ “நாங்கள் விவசாயத்தை மேம்படுத்துகிறோம்”, “வாழ்க்கையை மேம்படுத்துகிறோம்” எனும் முழக்கங்களை முன் வைத்து, ஆனால் நடைமுறையில் அவற்றுக்கு நேரெதிராக செயல்படும் பகாசுர பன்னாட்டு நிறுவனம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்பது இவர்களது முதன்மை வணிகம்.

ஆனால் உண்மையில் ஒரு நாட்டின் விதைச் சந்தையை கைப்பற்றுவது, மரபான மறுசுழற்சி முறையிலான விவசாயத்தை ஒழிப்பது, விதைகளுக்கு காப்புரிமைகளை பெற்று ஏகபோகமாக சந்தையை கைப்பற்றுவது, வடிவுரிமை (பேடன்ட்)களை மீறியதாக வழக்கு தொடுத்து சிறு விவசாயிகளை அழிப்பது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.(Bt – பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியத்தின் மரபணுவை பயன்படுத்தி மாற்றப்பட்ட) வகை விளைபொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்த தூண்டுவது என இவர்கள் மீதான குற்றப் பட்டியல் நீளமானது.

மான்சான்டோவின் தயாரிப்புகளான பிடி. வகை விளைபொருட்களால் உடல்நல பிரச்சனைகள், மரபணு ரீதியான பிரச்சனைகள் வருகின்றன என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளி வந்திருக்கின்றன. 2009-ம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த ஆய்வு முடிவுகள், பி.டி உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தியதை உறுதி செய்தன. 2011-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பி.டி உணவுப்பொருட்களை உட்கொண்ட கருத்தரித்த பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 சதவீதத்திற்கும் மேல் பி.டி. வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கனவே வினவில் விரிவாக கட்டுரை வெளியாகியுள்ளது.

ஒரு நாட்டு அரசின் உதவியுடனும், அந்த நாட்டின் ஊடகங்களில் பிடி. வகை விளைபொருட்களுக்கு ஆதரவான செய்திகளை பணம் கொடுத்து வெளியிடுவதன் மூலமும் அந்த நாட்டின் விவசாய விதைச் சந்தையை மான்சான்டோ எப்படி கைப்பற்றுகிறது என்பது பற்றி பி சாய்நாத்தின் கட்டுரையின் மொழிபெயர்ப்பிலிருந்து (வினவில் வெளியானது) விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

மான்சான்டோ எதிர்ப்பு
36 நாடுகளில் எதிர்ப்பு

மான்சான்டோவின் அட்டூழியங்களுக்கு அரசே துணை போவதை இந்தியாவில் நடந்த மரபின மாற்றம் செய்ய்ப்பட்ட பிடி. வகை பருத்தி விவசாயிகளின் மேல் திணிக்கப்பட்ட விவகாரத்தில் நன்கு புரிந்துக்கொள்ளலாம். பிடி. வகை பருத்தி நிறைய விளைச்சலை தரும் என்ற பொய்யான விளம்பரத்துடன் அரசாலேயே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதே நேரம், இந்தியாவில் விதை வினியோக நிறுவனங்கள் தனது விதைகளையே விற்கும்படி மான்சான்டோ உறுதி செய்து கொண்டது.

மான்சான்டோவின் இந்த விதைகள் மரபான மறுசுழற்சி முறையில் செய்யப்படும் விவசாயத்தை ஒழித்து ஒவ்வொரு முறையும் விதைக்கு மான்சான்டோவிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அதன் பிறகு விதையின் விலையை ஏகபோகமாக தனியார் நிறுவனம் நிர்ணயித்துக் கொள்ளும்.

மரபுரீதியான விவசாயத்தில் மாற்றி மாற்றி பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் ஒரே வகை பயிரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய அவல நிலை உருவாகும். மான்சான்டோ சொன்ன உற்பத்தி மெல்ல பொய்த்து மிக மோசமான உற்பத்திக்கு நிலம் தாழ்ந்து போய்விடும் நிலை என மான்சான்டோ விதையின் விளைவுகள் பல்வேறு நாடுகளில் பல் இளித்ததை அடுத்து இந்தியாவில் அதற்கு எதிர்ப்பு மூண்டது.

பி.டி கத்திரிக்காய், அதன் தீமை பற்றி பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, ஒரு லட்சம் அபராதம் என மசோதா ஒன்றை அறிமுகம் செய்து இந்திய அரசு முதலாளிகளுக்குரிய ஜனநாயகத்தை காப்பாற்றியது. இந்தியா என்றில்லை உலகம் முழுவதும் மான்சான்டோ கால் பதிக்கும் நாடுகளில் இது தான் நிலை.

அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களை பொருத்தமான முத்திரைகளுடன் (லேபல்கள்) விற்பனை செய்ய வேண்டும் என்று கோரும் சட்டங்களை மான்சான்டோ வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது. அதன் மூலம் மக்கள் தாம் உண்ணும் உணவு மரபு ரீதியான விவசாய விளைபொருளா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவா என்று தெரிந்து கொள்வதை அது தடுத்திருக்கிறது. அதை எதிர்த்து அமெரிக்காவின் நுகர்வோர் அமைப்புகள் போராடி வருகின்றன. மான்சான்டோவின் விதை விற்பனை நிலையங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மற்றொருபுறம் 2011-ல் வெளியான விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆய்வு செய்த உணவு மற்றும் தண்ணீர் கண்காணிப்பு எனும் அமைப்பு, அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளில் மான்சான்டோவிற்காக லாபி செய்ய உதவியிருப்பதை அம்பலபடுத்தியுள்ளது. பல நூறு விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆய்வு செய்த அந்த அமைப்பு அவற்றில் 6 சதவீத ஆவணங்களுக்கு மேல் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் மான்சான்டோவிற்கு ஆதரவாக லாபி செய்ய லாபியிஸ்டுகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என அமெரிக்க அரசை கோரும் ஆவணங்களாக உள்ளன என்று கண்டறிந்தது. ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் லாபி செய்து அந்த நாட்டின் உயிரிதொழில் நுட்ப சட்டங்களை மான்சான்டோவிற்கு ஆதரவாக மாற்றுவது, மரபின மாற்றம் செய்யபட்ட விதைகளை பயன்படுத்தும்படி அரசே ஊக்குவிப்பது போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமா
மான்சான்டோ பாதுகாப்பு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் ஒபாமா.

மக்களின் வரிப்பணம் மான்சான்டோவிற்காக லாபி செய்வதற்காக அமெரிக்க அரசால் செலவழிக்கப்பட்டது ஆச்சரியமான விஷ்யமல்ல. ஏனென்றால் அமெரிக்க அரசு என்பது மக்களுக்கான அரசல்ல கார்ப்பரேட்டுகளின் நலன்களை பேணும் அரசு. அதை உறுதிபடுத்தவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்கும் நிறுவனங்கள் மீது வழக்கு போடப்படுவதை தடை செய்யும் “மான்சான்டோ பாதுகாப்பு சட்டம்” என எதிர்ப்பாளர்களால் அழைக்கப்படும் மசோதாவை அமெரிக்க அரசு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியிருக்கிறது. அந்த சட்டம் மான்சான்டோவிடம் நிதி உதவி பெற்ற மேலவை உறுப்பினரால் இயற்றப்பட்டது.

உலக அளவில் அரசாங்கங்களில் லாபி செய்து தன்னை பரப்பிக் கொண்டிருக்கும் மான்சான்டோவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 36 உலக நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், சமுக ஆர்வலர்கள், சுற்றுசூழலாளர்கள் மே 25-ம் தேதியை மான்சான்டோ எதிர்ப்பு நாளாக அறிவித்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

எனினும் இந்த எதிர்ப்பில் ஏகாதிபத்தியங்களே உருவாக்கிய தன்னார்வ நிறுவனங்களும் இருக்கின்றன எனும் செய்தியை நாம் புறந்தள்ள முடியாது. எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அரசியல் அற்றதாக மாற்றி ஒழிக்கும் இந்த மோசடியையும் நாம் அம்பலப்படுத்தித்தான் மான்சான்டோவை வீழ்த்த முடியும்.

சுமார் 15 பில்லியன் டாலர் (ரூபாய் 80,000 கோடி) சந்தை மதிப்பைக் கொண்ட மான்சான்டோ உள்ளிட்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்த்து போராடவில்லை என்றால், அவர்களது லாபவெறிக்காக விவசாயிகள் அழிவதும் விவசாயம் அழிவதும் தொடர் கதையாகிவிடும்.

– ஆதவன்

மேலும் படிக்க
Monsanto bill blunt agriculture
Wikileaks Monsanto cables report
Monsanto march protests 
Biotech ambassadors
Monsanto