privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

-

“அந்தப் பெண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கலாம். எங்கள் விமானத் தாக்குதலால் பாதிப்படைந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவள் அவள். நட்ட ஈடு வாங்குவதற்காக எமது இராணுவ முகாமுக்கு வந்த மக்கள் கூட்டத்தில் அவளும் இருந்தாள். நான் அந்தக் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தேன். அவளது உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது . என்னைக் கண்டதும் அடக்க முடியாமல் அழுதாள். எனது இராணுவச் சீருடை அவளை அச்சுறுத்தியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவள் மனதில் என்ன சிந்தனைகள் ஓடியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை”.

“பெயர் தெரியாத அந்தக் குழந்தையின் முகம் எனது பிள்ளைகளை நினைவூட்டுவதாக இருந்தது. அவளைக் கட்டியணைத்து ஆறுதல் கூற விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாது என்பதையும் அறிந்தேயிருந்தேன்”

–  கிம்பெர்லி ரெவேரா (கடந்த மாதம் 23-ம் தேதி அளித்த பேட்டியிலிருந்து).

கிம்பெர்லி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மெஸ்க்வெய்ட் பகுதியைச் சேர்ந்தவள். ஏழ்மையான குடும்பப் பின்னணி. வால்மார்ட்டில் பணிபுரிந்து வந்த கிம்பெர்லி, அங்கே உடன் பணிபுரிந்து வந்த மரியோ ரெவேராவைக் காதலித்து மணம் புரிந்து கொண்டாள். காதல் மணம் என்றாலும் அவளது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை.

தொடர்ந்து அதிகரித்து வரும் குடும்பச் செலவினங்களால் அந்தத் தம்பதியினர் பொருளாதார ரீதியில் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். காதல் மண வாழ்வில் சில மகிழ்ச்சியான தருணங்களும் அவளுக்கு வாய்த்தது; அழகான இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள் கிம்பெர்லி. கணவன் மனைவி இருவருமே பணிபுரிந்தாலும், வால்மார்ட் கொடுத்த சொற்ப சம்பளம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. பொருளாதார நெருக்கடி அந்தக் குடும்பத்தை சுற்றி வளைத்து நெருக்குகிறது. இதைச் சமாளிக்க இருவரில் ஒருவர் இராணுவத்தில் சேர்வதென முடிவு செய்கிறார்கள். என்றாலும், இருவருக்குமே உடற்பருமன் பிரச்சினை இருந்ததால் உடல் எடையைக் குறைக்க பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

இருவரில் யாருக்கு முதலில் எடை குறைகிறதோ அவர் இராணுவத்தில் சேர்வது என்று முடிவு செய்கிறார்கள். மரியோவை விட கிம்பர்லியின் எடை வேகமாகக் குறைகிறது. 2006–ம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் கான்டிராக்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இராணுவத்தில் சேரும் கிம்பர்லி, ஈராக் அனுப்பி வைக்கப்படுகிறார். பாக்தாத்தில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் நான்காம் காலாட்படை அணியின் முகாமுடைய வாயில் காவலாளி வேலை அவருக்கு அளிக்கப்பட்டது.

காவலாளி வேலையில் சிப்பாய்களைப் போல் நேரடியாக யுத்தத்தில் பங்கேற்க வேண்டிய தேவையில்லை. என்றாலும், போரால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களும், உறவுகளை இழந்த அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் நிவாரணம் கோரி இராணுவ முகாம்களை மொய்ப்பது வழக்கம். எனவே, போரால் வாழ்விழந்த அப்பாவி சிவிலியன்களை அவள் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருந்தது. நிவாரணம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க இராணுவம், ஈராக் மக்களை விலை பேச இயலவில்லை. அவர்களுடைய பதிலடித் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை. அமெரிக்க வீரர்கள் எல்லோரும் ஈராக்கிய குழந்தைகளைக் கூட எதிரிகளாகவே கருத வேண்டுமென்பதுதான் இராணுவத் தலைமையின் உத்தரவு.

02-riverasஇந்த உத்தரவை கிம்பெர்லியும் அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பல நாட்களாகத் தொடர்ந்த வலி நிறைந்த இந்தப் பணி, அவளை தீராத மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாக்குகிறது. ஊரில் அன்றாடத் தேவைகளுக்காக அல்லாடும் தனது குடும்பமும் குழந்தைகளும் அவள் நினைவுக்கு வருகின்றன. தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கியக் குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். ஒரு கட்டத்தில் கிம்பெர்லியின் மனசாட்சி மேலெழுகிறது; இதற்கு மேலும் தன்னால் ஈவிரக்கமற்ற இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.

தனது முடிவை மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறாள் கிம்பெர்லி.

அமெரிக்க இராணுவத்தில் கிம்பெர்லியின் நிலை அவளுக்கு மட்டுமே ஏற்பட்டதல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன தொழில்நுட்பங்களை வரித்துக் கொள்வதில் முன்னணியில் இருக்கிறது, அந்த வகையில் வெளித்தோற்றத்தில் வெல்லப்படவே முடியாது என்கிற பிம்பம் அதனைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், ஈராக், ஆப்கான் என்று ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், தற்கொலைகளும் தொடர் நிகழ்வாகவே உள்ளது.

இதைச் சமாளிக்க படையெடுத்துச் செல்லும் தனது இராணுவத்துக்கு நவீன ஆயுதங்களோடு கிருஸ்தவ மதகுருமார்களையும் (chaplain) அனுப்பி வைக்கிறது அமெரிக்க அரசு. எப்போதெல்லாம் வீரர்களுக்கு மனசாட்சி உறுத்துகிறதோ அப்போதெல்லாம் அதை ஆன்மீக ரீதியாக தடவிக் கொடுத்து, மனச்சாட்சியை மரத்து போக வைக்கும் குரு‌ஷேத்திர கிருஷ்ணனின் பாத்திரம் தான் இந்த மதகுருமார்களுக்கும்.

கிம்பெர்லியின் மேலதிகாரிகள் அவளை முகாமில் இருக்கும் மதகுருவிடம் அனுப்புகிறார்கள். மதகுருவோ, கிம்பெர்லியின் மனக் குழப்பத்தைக் கேட்டுக் கொண்டு, ‘அனைத்தையும் சகித்துக் கொண்டு தேவனின் பெயரால் கடமையைத் தொடர்வது’ குறித்து நற்செய்திப் பிரசங்கம் செய்து அனுப்புகிறார். ஒருபக்கம் கிம்பெர்லியின் தாய்மை உணர்ச்சி அவளது மனசாட்சியை அறுக்கிறது. தனது குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை விட அப்பாவி ஈராக்கியர்களின் அச்சம் தோய்ந்த முகங்கள் அவளது மனசாட்சியைப் பிடித்து உலுக்குகின்றன. பெற்றோரை இழந்து, உறவினர்களை இழந்து நிர்க்கதியாக வீசியெறிப்பட்ட ஈராக்கியக் குழந்தைகளின் ஓலம் அந்த அமெரிக்கத் தாயின் உள்ளத்தைக் குத்திக் குதறுகின்றது.

இன்னொரு பக்கம் அவளது மேலதிகாரிகளின் உத்தரவு அச்சுறுத்துகிறது. இந்த மனப்போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதென தீர்மானிக்கிறாள். 2007–ம் ஆண்டின் துவக்கத்தில் விடுமுறைக்காக அமெரிக்கா திரும்பும் கிம்பெர்லி, தனது கணவரோடு அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவில் அடைக்கலமாகி அங்கே அரசியல் அகதியாக தஞ்சம் கோருகிறாள். இராணுவ வேலையை ஒப்பந்த காலத்துக்கு முன்பாகவே துறக்கிறாள்.

2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்திரிகை ஒன்றிற்காக பேட்டியளித்த கிம்பெர்லி, இவ்வாறு சொல்கிறாள் – “போரை பிரத்யட்சமாகக் கண்ட எனக்குள் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நமது தேசத்தின் பேராசைகளுக்காக மக்கள் அநியாயமாக உயிரிழக்கிறார்கள். போரிலிருந்து ஊர் திரும்பும் வீரர்கள் மனச்சோர்வினாலும், மன அழுத்த நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் போதைப் பழக்கத்துக்கும் மதுவுக்கும் அடிமையாகிறார்கள். சிலர் உடல் ஊனமாகித் திரும்புகிறார்கள்; இன்னும் சிலரோ திரும்புவதேயில்லை…”

கிம்பெர்லி ரெ வேராகனடாவின் டொரான்டோ பகுதியில் கணவரோடு தங்கிய கிம்பெர்லி, அந்நாட்டு அரசிடம் அதிகாரபூர்வ குடியுரிமை கோரி விண்ணப்பிக்கிறாள். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவளது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதை எதிர்த்து செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறாள், கிம்பெர்லி.

“செய்யும் காரியங்களின் மேல் அறம் சார்ந்த ஆட்சேபணைகளும் விருப்பமின்மையும் இருந்தாலோ, இன்னொரு மனிதரை தாக்கிக் காயப்படுத்துவதை ஒருவரின் மனசாட்சி ஏற்கவில்லையென்றாலோ அந்த வேலையிலிருந்து வெளியேற மக்களுக்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும்” – அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டதால் மன அழுத்த நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் இராணுவ வேலையைக் கைவிடுவோருக்காக துவங்கப்பட்டுள்ள “மறுப்பதற்கான வீரம்” (courage to resist) என்கிற அமைப்பிடம் பேட்டியளித்த கிம்பெர்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட கிம்பெர்லி இராணுவ விசாரணையை எதிர்கொள்கிறாள். அந்த இடைப்பட்ட காலத்தில் கார்ஸன் கோட்டையிலிருக்கும் இராணுவ முகாமில் பணியமர்த்தப்படுகிறாள். மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட தனது அனுபவம் குறித்து சொல்லும் கிம்பெர்லி, “ஆயுதங்களைத் துடைத்து சுத்தம் செய்யும் தற்காலிக வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். என்னால் ஆயுதங்களைத் தொடவோ பார்க்கவோ கூட முடியவில்லை. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனக் கொதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் நான் ஆயுதங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்து விட்டேன்” என்கிறாள்.

கடந்த மாதம் 29-ம் தேதி இராணுவ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது நான்கு குழந்தைகளின் தாயாகவும், கருவில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டும் இருக்கும் கிம்பெர்லிக்கு பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது அடுத்த குழந்தையை சிறையில் பெற்றெடுக்க காத்திருக்கிறாள் அந்தத் தாய்.

கிம்பெர்லி ஈராக்கில் சந்தித்த தருணங்கள் நமக்கு அந்நியமானவையல்ல. நமது பணியிடங்களில், அலுவலகங்களில், ஆலைகளில் நாள் தோறும் நம் மனசாட்சியை உரசிப் பார்க்கும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பின் தன்மை நமது எதிர்வினையைத் தீர்மானிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மெளனமாய் முணுமுணுக்கிறோம் அல்லது சகித்துக் கொண்டு கடந்து விடுகிறோம் அல்லது அபூர்வமான தருணங்களில் எதிர்த்து போராடவும் செய்கிறோம். பெரும்பாலும், சகித்துக் கொண்டு கடந்து செல்வதே நடக்கிறது.

குடிநீர் வினியோகம் நடக்கவில்லை என்பதற்காகவோ, மின் தட்டுப்பாட்டை எதிர்த்தோ போராடும் மக்களை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கம் ஏவி விடும் காவல் துறையின் தாக்கும் முனை, அதன் கீழ்மட்டப் பணியிடங்களில் அமர்ந்துள்ள உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட காவலர்கள் தான். அன்றாடம் நிலப்பறிப்புக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை அடக்கி ஒடுக்க முன்வரும் கீழ்மட்டக் காவலர்களும், துணை ராணுவப்படை, ராணுவம் உள்ளிட்ட அரசின் அதிகாரப்பூர்வ குண்டர்படைகளில் பணிபுரிபவர்களும் சாமானிய குடும்ப பின்னணி கொண்டவர்கள் தான். காஷ்மீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும், சட்டீஸ்கரிலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையாக நிற்பவர்கள் இவர்கள்தான்.

மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்துவதையும் வாய்ப்புக் கிடைக்கும் போது பூட்ஸ் காலின் கீழ் போட்டு நசுக்குவதையும் எவ்வாறு நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது இவர்களால்? இது சம்பளத்துக்காக செய்யும் வேலை. இதில் மனசாட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் இவர்கள் அனைவரும் கூறும நியாயம்.

ஆனால், தனது ஏழ்மையின் காரணமாக இராணுவப் பணியில் சேரும் கிம்பெர்லியோ, தனது செயலின் பின்விளைவு குறித்து எண்ணி அஞ்சிப் பின் வாங்கவில்லை. வேலை இழப்பினால் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடிகளை அவள் எண்ணிப் பார்க்கவில்லை. தனது குழந்தையின் வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்காக, இன்னொரு தேசத்தின் இன்னொரு தாயின் குழந்தை செத்து மடியட்டும் என்று கருதவில்லை. பிறருடைய துன்பத்தையும் தன்னுடையதாக கருதினாள். தனது மனசாட்சிக்கும் தாய்மை உணர்ச்சிக்கும் நேர்மையாக நடந்து கொண்டாள்; இந்த நேர்மைக்கான விலை சிறைத் தண்டனை என்றாலும் கூட அவள் கலங்கவில்லை.

ஒரு வேளை அவள் அறிவுஜீவியாக இருந்திருந்தால், இராக்கில் பத்து குழந்தைகளை துப்பாக்கிக்கு இரையாக்கி விட்டு, அமெரிக்காவுக்கு திரும்பி வந்து தனது மன அவஸ்தையை புத்தகமாக்கி விற்றிருப்பாள். அல்லது, கொலை என்பது அறம் கொன்ற செயல் அல்ல, அது என் பிழைப்பு என்று பின் நவீனத்துவ தத்துவ விளக்கம் அளித்திருப்பாள். ஆனால் கிம்பர்லியோ மிகவும் சாதாரணமான ஒரு பெண்.

செய்யும் வேலையும் ஏற்றுக் கொண்ட கொள்கையும் நேருக்கு நேர் முரண்பட்டு நின்றாலும், அவை இரண்டும் இருவேறு பாதைகளில் சிக்கலின்றி பயணிக்க முடியும் என்று பலர் கருதுகிறார்கள். அல்லது இந்நிலையை எதிர்த்துப் போராடுவது சாதாரணர்களால் முடியாது என்றும் அதெல்லாம் விதிவிலக்கான மனிதர்களின் சாதனை என்பதாகவும் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள்.

கிம்பெர்லி வெகு சாதாரணமான பெண்மணி தான். அவளிடம் வெளிப்பட்டிருக்கும் பண்பு உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களிடம் வெளிப்படும் பண்பு. அதனால் தான், மொழி தெரியாத நாட்டில், அந்நிய இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் கண்ணீரில் தனது குழந்தையின் கண்ணீரை கிம்பெர்லியால் காண முடிந்தது.

கிம்பெர்லி தனது இதயத்தை வயிற்றுக்கு மேல் வைத்திருந்தாள். இதயத்தின் மீது வயிறு அமையப் பெற்றவர்களால் அவள் அனுபவித்த வேதனையைப் புரிந்து கொள்ள இயலாது.

– நாசர்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

  1. நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை. ஏழைகளுக்கு பேராசை எல்லாம் இல்லை. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்காகவே உழைக்கிறார்கள். அதனால்தான் ஈராக்கிய குழந்தைகளின் துயரத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

    • இது தவறான வாதம். எப்படியும் பணம் சம்பாதித்து வாழலாம் என்று செயல்படும் பல ஏழைகளை எனக்குத் தெரியும்

  2. //எப்போதெல்லாம் வீரர்களுக்கு மனசாட்சி உறுத்துகிறதோ அப்போதெல்லாம் அதை ஆன்மீக ரீதியாக தடவிக் கொடுத்து, மனச்சாட்சியை மரத்து போக வைக்கும் குரு‌ஷேத்திர கிருஷ்ணனின் பாத்திரம் தான் இந்த மதகுருமார்களுக்கும்.//

    Poisonous…

  3. // ஏழைகளுக்கு பேராசை எல்லாம் இல்லை. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்காகவே உழைக்கிறார்கள்.//

    நம்ம ஊர் மத வெறியர்களும், ஆதிக்க வெறியர்களும் சிந்திக்க வேண்டும்!

    • // ஏழைகளுக்கு பேராசை எல்லாம் இல்லை. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்காகவே உழைக்கிறார்கள்.//

      அதனால்தான் இஙுகு மத மாற்றம் வெகு சுலபம்

  4. கணத்த மனதுடன் நிறைவடைந்த கட்டுரை….இது போல எத்துனை எத்துனை பேர் இப்படி தானும் செத்து மற்றவரையும் கொள்கின்றனர்….அமெரிக்கா செய்யும் செயலுக்கு அப்பாவி அமெரிக்க பிரஜைகளை பொருப்பு சாட்டி குற்றம் சுமத்துவதும் குற்றம் என்பதை அழுத்தமாக திருத்தமாக இலைமறையாக சுட்டிகாட்டியது அருமை சகோ….எந்த தேசிய இனமாக இருந்தாலும் தய்மை உணர்வு என்பது ஒன்று தானே….

  5. //….எந்த தேசிய இனமாக இருந்தாலும் தய்மை உணர்வு என்பது ஒன்று தானே….// சரியாக சொன்னீர்கள் மீரான்! இனவெறி, மதவெறி , மொழிவெறி இவை எல்லாமே ஆதிக்க வெறியின் கூறுகள்தான் ! இதையெல்லாம் தாண்டி மனிதனேயமுள்ள மக்கட்பண்பு இன்னமும் இருக்கிறது என்பதே சற்று ஆறுதலாக இருக்கிற்து! கடமை என்ற பெயரில் பொலீச் தனது மனசாட்சியை மீறக்கூடாது என்ற ஜெயபிரகாசரின் கருத்து சரியானதே! ஆனால் யார் உண்ர்கிரார்கள்?

  6. இங்கே இன்னுமொரு அறவியல் பிரச்சினை எழுகிறது. பணம்||தேசபக்தி|| கடமை என்ற அடிப்படையில் அரசின் கூலிப்படையாக பலர் கொலைகளை செய்கின்றனர். பிற்பாடு வாழ்க்கையின் ஒரு சந்தர்ப்பந்தத்தில் தாம் முன்பு செய்தவை தவறு என்று உணரும் போது அந்த கொலைகளுக்கு யார் பொறுப்பேற்பது?

    கிம்பர்லி தனது மனசாட்சி உறுத்தத் தொடங்கிய உடனே முடிவை எடுத்துவிட்டார். இருநாட்களுக்கு முன்னர் நியூஸ் எக்சில் மாவோயிஸத் தாக்குதலுக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முறுக்கு மீசை மனிதர் ( ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி) என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ராணுவத்தை இறக்க வேண்டும் என்ற மற்றவர்களின் கருத்துக்கு எதிராக பேசியது ஆச்சரியமளித்தது. அவர் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராம். ஆர்.எஸ்.என் சிங் என்ற ஆளும்வர்க்கக் கூலி அவரை பேசவே விடவில்லை. இன்று மாவோயிசப் பிரச்சினைக்கு சமூக ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்ய சொல்லும் அந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, பணிக்காலத்தில், எத்தனை போராளிகளின் நெஞ்சை துளைத்திருக்கும் அவரது துப்பாக்கி.

    உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். போராளிகள் கணக்குப் பார்த்தால் …..?

  7. மனசாட்சிக்கு விரொதமாக எந்த மனிதனும், எந்த செயலையும் செய்யவெண்டியதில்லை! செய் அல்லது செத்துமடி போன்ற வீர வசனஙகள் அயொக்கியத்தனமானவை! மேல்னாட்டினர் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர், கூலிப்படையாக போரிட யாரும் முன்வருவதில்லை! அதனால்தான் கசாப் போன்ற வறுமையில் வாடும் மத மூடனம்பிக்கையாளர்களை வைத்து தீவிரவாதம் வளர்க்கப்படுகின்றது! ஆப்கானிச்தானிலும், அமெரிக்க,அய்ரோப்பிய படைகளுக்கு மாற்றாக இந்திய அமைதிபடை என்ற பெயரில் கூலிப்படையை அமெரிகா கோருகிறது!நல்ல வேளையாக இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை! மாற்றாக சிவில் கட்டுமான பனியாளர்களை அனுப்பியிருப்பதாக தெரிகிறது! இலங்கையில் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களும், கச்மீரில் நடத்தும் அட்டூழியஙளும் சர்வ தேச அளவில் காந்தி பிறந்தநாட்டை பெருமை படுத்துவதாக இல்லை!

  8. ஒரு பெண்ணின் வாழ்க்கை. அவளுடைய மனம். அவளுடைய உணர்வுகள். அவளுடைய குடும்பப் பிண்ணனி. அவளுடைய வேலை. அவள் எதிர்கொண்ட பிரச்சினைகள். அதற்கு அவள் கண்ட தீர்வுகள். இவற்றின் ஊடாக நம் சமகால வாழ்வும், அதற்கு எதிரான மனித முயற்சிகளும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற கட்டுரைகளில் ஒரு சராசரி மனிதர்கள் இயல்பாகவே ஒன்றிவிடுவார்கள். இதில் கட்டுரையாளரின் இடையீடுகள் தொன்னுாறு சதவீதமும் தேவையற்றதாகவே இருக்கிறது. அப்படியே கட்டுரையாளர் இடையீடு செய்தாலும், அது வாசகனை ஒரு படி மேலே உயர்த்தக் கூடியதாகவும், அவனை தானும் அப்பெண் போல மாறத் துாண்டுவதாகவும் அமைய வேண்டும். ஆனால், நாம் வாசகனின் குறைகளை, பலவீனங்களை குத்திக் காட்டுவதன் வழியாக அவன் அப்பெண்ணின் வாழ்க்கை குறித்து குறை சொல்லவும், விலகிச் செல்லவும் துாண்டுவதாக அமையக்கூடாது, வாசகனை எரிச்சலுாட்டுவதாக அமையக் கூடாது. யுத்தம் போன்ற தொழில்களில் ஈடுபடுவர்கள் எதிர் கொள்ளும் மனசாட்சி, அறக் கேள்விகள் போன்றவற்றைப் போல பிறவற்றில் நேரடியாக உடன் அந்தச் சிக்கலை எதிர் கொள்ள முடியாது. முற்போக்கான சிந்தனையுடையவர்கள், ஏகாதிபத்தியங்களுக்கும், பிற முதலாளிகளுக்கும் சேவை செய்யும் பிற தொழில்களும் எப்படி போர் போன்ற கொடூரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதை மனதில் படும்படி விளக்க வேண்டும்.

Leave a Reply to மீரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க