ஜெயமோகன்

சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில் ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.

மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?

ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும். பொறுக்கமாட்டாமல், “போதும் தல ரொம்ப போரடிக்கிறது” மாதிரி ஏதாவது பேசிவிட்டால் விஷ்ணுபுரம் குருகுலத்திலிருந்து மெமோ இல்லாமலேயே நீங்கள் நீக்கப்படுவீர்கள்.

ஏன் வினவு, ஜிங்குச்சாதான் அண்ணனுக்கு பிடித்த இசை என்று ஒருவரியில் முடிப்பதை விட்டு இழுக்கிறீர்களே என்று கோபப்படாதீர்கள், இனி விசயத்திற்கு வருவோம்.

பாண்டிச்சேரி திருமண நாயகனான சுனில் கிருஷ்ணன் லேசுப்பட்ட ஆளல்ல. ‘அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் கவரப்பட்டு பிறகு அதற்கென்று ஒரு இணைய தளம் ஆரம்பித்து இன்று அதை காந்தியின் பெயரில், தமிழில் ஒரு முக்கிய இணைய தளமாக மாற்றி காந்தி குறித்த வார்த்தைகளை சலிப்பில்லாமல் ஏற்றி வருபவர். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிபவர்’. குடும்பமே ஆயுர்வேத பரம்பரைதானாம்.

அண்ணா ஹசாரேவை பார்க்க வரும் நகரத்து அம்பிகளை நம்பி அவரது மகாராஷ்டிரா ராலேகான்சித்தி கிராமத்தில் நாலைந்து டீக்கடை போட்டவர்களே திவாலான நிலையில் சுனிலின் விடாப்பிடியான போக்கு ஆச்சரியமானதுதான். அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலை பார்ப்பேன், பார்க்க மாட்டேன், அவரது கட்சிக்கு வாக்கு கேட்பேன், கேட்கமாட்டேன் என்று காமடி கைப்புள்ளையாக டீம் அண்ணா பலூன் புஸ்ஸாகி விட்ட நிலையில் அவரையும், காந்தியையும் உலக அளவில் 18 இலட்சமாவது இணைய தள பிரபலத்துடன் நடத்துவது போற்றுதலுக்குரியது.

சுனில் திருமணம் குறித்த ஜெயமோகன் பதிவைப் படித்த போது சட்டென்று தோன்றியது, திருமணத்தின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம். ஒரு ஆயுர்வேத மருத்துவர், காந்தியவாதி, ஜெமோவின் சீடர் எப்படி தோற்றமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. ஆள் பாதியென்றால் ஆடை பாதியல்லவா! மடிசாரா, கச்சமா, வேட்டியா, காந்தி குல்லாயா, குர்தாவா, பைஜமாவா என்றெல்லாம் யூகித்தவாறு சுனிலைப் பார்த்தால்… ஐயோ என்ன கொடுமை இது, கிறித்தவ ஐரோப்பிய மையவாத காலனியாதிக்கத்தின் கொடையான சூட்டு, கோட்டு, டை, ஷூ (புகைப்படத்தில் ஷு இல்லையே என்று கேட்காதீர்கள், சூட்டு போட்டுவிட்டு ஹவாய் செருப்பு போடமாட்டார்கள் என்று நம்புவோம்) சகிதம் காட்சியளிக்கிறார்.

இவ்வளவுதானா காந்திய, ஆயுர்வேத, ஜெயமோகன, பாரத அபிமானம் என்று வெறுத்துப் போனது. சரி சரி, தலயே மங்காத்தாவில் “இன்னும் எவ்வளவு நாளைக்கு நல்லவனாகவே நடிப்பது” என்று வில்லனாக பொளந்து கட்டும் போது காந்தியெல்லாம் எம்மாத்திரம் என்று சமாதானம் செய்தபடி இந்த திருமணத்தின் சிறப்பு என்ன என்று கண்டுபிடிக்க முனைந்தேன்.

ரொம்ப நுண்ணுணர்வோடு, சலித்துப் பார்த்தாலும் இரண்டு சங்கதிகள்தான் கிடைத்தன. ஒன்று சுனிலுக்கு மணப்பெண்ணை பிடித்திருந்ததால் மகிழ்ச்சியுடன் காட்சியளித்தார். இரண்டு, தேங்காய் போட்ட தாம்பூலப்பையில் ஜெயமோகனது நூல் ஒன்றையும் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். பிறகு, இலவசமாக நூல் கொடுத்தால் படிப்பார்களா, பரணில் வைப்பார்களா என்றெல்லாம் ஜெயமோகனது தத்துவ விசாரணைகள்.

தீவிர கம்யூனிஸ்ட் எனும் காட்டானாக விதிக்கப்பட்டதனாலோ என்னவோ சாதி மறுப்புத் திருமணமா, வரதட்சணை இல்லையா, தாலி இல்லையா, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லையா அல்லது குறைச்சலா, எளிய முறையில் திருமணம் நடந்ததா என்று முன்முடிவுடன் தேடிப்பார்த்தால் எதுவும் எழுதப்படவில்லை. ஜெமோவைப் பொறுத்தவரை அவருடைய நூல் கொடுக்கப்பட்டதே மாபெரும் புரட்சிகர நடவடிக்கை. ஜெயமோகன் எந்த விசயத்தை பார்த்தாலும், கேட்டாலும், கலந்து கொண்டாலும் அதில் தனக்கு என்ன இடம் என்று மட்டும் பார்ப்பார் போலும். இந்தப் பார்வைதான் இனி வர இருக்கும் பிரச்சினைக்கு ஒரு முன்னோட்டம்.

என்ன பிரச்சினை? திருமணம் முடிந்த பிறகு புதுச்சேரியில் ஒரு நண்பரை சந்திக்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் சகிதம் சென்றிருக்கிறார் அண்ணன் ஜெயமோகன். அந்த நண்பர் யார்? ஜெயமோகன் ஸ்டைலில் சொன்னால் வாசிப்பு, ஓவியம், இசை என்று நுண்ணுணர்வு மிக்கவர். இந்த நுண் இல்லாத பன்னுகளுக்கெல்லாம் அண்ணனது நட்பு வட்டத்தில் அனுமதி இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

அந்த நுண்ணுணர்வு மிக்க நண்பரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு எழுபது வயது பெரியவர், புதுச்சேரியில் எழுந்தருளியிருக்கும் படைப்பாளிகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டு விரும்பி வந்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லியிருக்கும் விசயங்களின் படி பார்த்தால் அந்த பெரியவர் ஏதோ சில திமுக கூட்டங்களுக்கு, அதுவும் அண்ணாத்துரை காலத்தில் சென்று கேட்டவர், சில பல நூல்கள், சேதிகள் அறிந்தவர். முக்கியமாக தான் கற்றவற்றை கொட்டுவதற்கு மைக்கோ, ஆம்பிளிஃபயரோ, ஸ்பீக்கரோ குறைந்த பட்சம் ஃபேஸ்புக்கில் கணக்கோ கொண்டவரல்ல. எழுத்தாளர்கள் என்றதும் அவர்களிடம் தனது திறமையை பறைசாற்ற விரும்பியிருக்கிறார்.

ஜெயமோகன் புரிந்து கொண்ட விதப்படி சொன்னால் இந்தப் பெரியவர் சரக்கே இல்லாமல் பேசி பிளேடு போடக்கூடிய ஒரு மொக்கை. (டிஸ்கி: இதை எல்லாம் ஜெயமோகன் சொன்ன ஒருதரப்பான விவரங்கள் அடிப்படையில் மட்டும் பேசுகிறோம். உண்மையில் அந்த பெரியவர் தரப்பு வாதம் என்ன என்று கேட்டுப் பெறும் வாய்ப்பு நமக்கில்லை. அதனால் அந்தப் பெரியவர் மன்னிக்க வேண்டும். முக்கியமாக, இங்கு விவாதப் பொருள் அவர் அல்ல.)

இத்தகைய பிளேடு மொக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள் என்று பொதுவில் சொல்லலாம். எனினும் யார் மொக்கை, எது மொண்ணைத்தனம் என்ற அளவு கோல் வர்க்கத்திற்கேற்ப மாறுபடும். அண்ணன் ஜெயமோகனோ, இல்லை அண்ணன் அதியமானோ, ஏன் தம்பி வினவு கூட சமயத்தில் சிலருக்கு மொக்கையாகத் தோன்றலாம். இங்கே நாம் அது குறித்து ஆராயவில்லை.

அந்த பெரியவர் முதலில் நாஞ்சில் நாடனிடம் பிளேடு போடுகிறார். பொறுக்கமாட்டாமல் நாஞ்சில் முடித்துக் கொண்டு வெளியேறுகிறார். அப்போது உள்ளே வரும் ஜெயமோகன், அடக்கப்பட்ட கோபத்தை தணிப்பதற்காக தீர்த்தம் சாப்பிடப் போகும் நாஞ்சிலின் துயரார்ந்த முகத்தைப் பார்த்து சினம் கொள்கிறார். பெரியவர் வெற்றிகரமான தனது பிளேடை ஜெயமோகனிடமும் போடுகிறார். காஞ்சிக்கு என்ன அர்த்தம், தூங்குதலா, தொங்குதலா, வட்ட எழுத்து, பிராமி எழுத்து என்று ஏதேதோ கேட்கிறார். ஆரம்பத்தில் சட்டு பட்டென்று சரியான பதில் சொல்லும் ஜெயமோகன் இறுதியில் இது சரிப்பட்டு வராது என்று அறம் பாடுகிறார்.

எழுபது வயசிலும் மூளையை காலிசட்டியாக வைத்திருக்கும் முட்டாளே என்று வசைபாடி, எழுத்தாளர்களெல்லாம் எவ்வளவு படித்து எழுதியவர்கள் என்று வகுப்பெடுத்துவிட்டு, என்னையோ, நாஞ்சிலையோ ஒரு வரியாவது படித்திருக்கிறாயா என்று சீறிவிட்டு கற்றாய்ந்த சான்றோரை மதிக்கத் தெரியாத முண்டமே என்று விரட்டுகிறார்.

பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.

இங்கே ஒரு மொக்கையிடம் ஜெயமோகன் கோபம் கொண்டது கூட பிரச்சினை இல்லை. அது ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கும் ஜெயமோகன் தனக்கு அந்தப் பெரியவரால் நேர்ந்திருக்கும் அபகீர்த்தியின் பொருட்டு முழு தமிழகத்திற்கும் சாபம் விடுகிறார். எழுத்தாளனை மதிக்கத் தெரியாத, முட்டாள்தனம் நிரம்பி வழியும், அறிவை தெரிந்து கொள்ள விரும்பாத என்று உண்டு இல்லையென பிய்த்து விடுகிறார். இவர்கள்தான் தமிழ் இணையத்தையும் நிறைக்கிறார்கள் என்றும் சேர்க்கிறார். இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பெரியவரது பிளேடாவது கொஞ்சம் எரிச்சலைத்தான் தருகிறது. ஜெயமோகனதுவோ உடலையே அறுத்து இரத்தம் வரவழைக்கிறது. எனில் எது ஆபத்தான பிளேடு?

ஏற்கனவே ஒரு முறை கேரளம் சென்ற ஜெயமோகன் ஒரு ஓட்டலுக்குச் சென்று அலட்சியமாக “எந்தா வேண்டே” என்று கேட்ட ஒரு பரிசாரகரை வைத்து முழு கேரளத்தின் அடிமைத்தனம், தாழ்வு மனப்பான்மை, அதற்கு காரணமான இடது சாரி வரலாறு, தொழிற்சங்க ஆதிக்கம் என்று பெரும் தத்துவ ஆய்வு செய்து படுத்தி எடுத்திருக்கிறார். அது குறித்து வினவில் வந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். இப்போதும அதுவே மீண்டும் நடக்கிறது. ஒரு மொக்கையிடம் கோபப்படும் ஜெயமோகன் முழு தமிழ்நாடும் மொக்கையே என்று சாபம் விடுகிறார். அதுவும், தான் ஒரு எழுத்தாளன் என்பதை வெள்ளைக்காரர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் அது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளிக்கிறார்.

தனது அப்பாவின் சர்வாதிகாரத்தை வைத்து உலக சர்வாதிகாரிகளை ‘ஆய்வு’ செய்த சுந்தர ராமசாமியின் மாணவர் வேறு எப்படி பேசுவார்? எனில் ஜெயமோகனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாமரர்கள் அவருக்கு ஏதாவது குறைகளை அறிந்தோ அறியாமலோ செய்து விட்டால் அதன் விளைவுகளை முழு சமூகமும், மக்களும் சுமக்க வேண்டியிருக்கும். நாகர்கோவில் நகரசுத்தி தொழிலாளி என்றாவது ஒருநாள் ஜெமோவின் பார்வதிபுரத்து வீட்டின் குப்பையை எடுக்க மறந்துவிட்டார் என்றால் இந்த உலகை குப்பைக் கூளமாக்கி வரும் மனித குலத்தின் அழுக்கு சாரம் குறித்து ஒரு தத்துவவிசாரம் புகழ்பெற்ற அந்த கீபோர்டில் உதிப்பது உறுதி. குப்பை எடுக்குற அண்ணே, பாத்து குப்பையை எடுத்து நம்ம மக்களோட மானத்தை காப்பாத்துங்கண்ணே!

இனி நமது குறுக்கு விசாரணையை தொடங்குவோம்.

அந்த மொக்கை பெரியவரை அறிமுகப்படுத்திய ஜெமோவின் நுண்ணுணர்வு மிக்க புதுச்சேரி நண்பரை விசாரிப்போம். இவ்வளவு நுண்மாண் புலத்து அறிவார்ந்த நண்பர், எழுத்தாளர்கள் அந்த பிளேடு பெரியவரை சந்திக்க ஏன் அனுமதிக்கிறார்? உலகம் போற்றும் உத்தம எழுத்தாளரை கடித்துக் குதறும் அந்த அற்பத்தை அற்பமென்று ஏன் மதிப்பிடத் தெரியவில்லை? இதற்கு ஜெயமோகன் கூறும் சமாதானம், “இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக் கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.” சரி இதுதான் உண்மையென்றால் ஜெயமோகனும் கூட அந்த அப்பாவியின் காதை ஏறிக்கடித்துதானே இமேஜை திணித்திருக்க வேண்டும்?

அல்லது, இவ்வளவு நாட்கள் அந்த நண்பர் ஜெமோவை வாசித்து எதையும் பெறவில்லை என்றாவது கூறவேண்டும். ஒரு மனிதன் நல்லதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெறும்போது அவன் ஏன் கெட்டதை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி வருகிறதல்லவா? அந்த கெட்டதை மதிப்பிடும் அளவுக்குக் கூட அந்த நல்லது லாயக்கில்லை என்றால் அந்த நல்லதின் யோக்கியதை என்ன? நியாயமாக, அந்த மொக்கையிடம் இந்த எழுத்தாளர்களை தவிக்க விட்ட குற்றத்திற்காக அந்த நண்பரை விஷ்ணுபுரம் சிஐடி அரங்கசாமியை விட்டு விசாரித்து, குறைந்த பட்சம் மெமோவாவது கொடுத்திருக்க வேண்டுமே? சாரமாகச் சொன்னால் அந்த நண்பர் ஜெயமோகனையும் ரசிக்கிறார், அந்த பெரியவரையும் ரசிக்கிறார். இதையே “நான் பாலகுமாரனையும் ரசிப்பேன், ரமணி சந்திரனையும் ரசிப்பேன், ஜெயமோகனையும் ரசிப்பேன்” என்று ஒரே போடாக நம்ம ராம்ஜி யாஹூ போட்டதும் பின்னூட்டப் பெட்டி ஒரே புண்ணூட்டப் பெட்டியாகவிட்டது என்று அழுது கொண்டு அண்ணன் ஜெயமோகன் மறுமொழி ஜனநாயகத்தையே தூக்கவில்லையா?

ஆகவே அந்தப் பெரியவர் மொக்கை இல்லை என்று ஜெயமோகனது நுண்ணுணர்வு மிக்க நண்பரே கூறிவிட்டார். எனவே அந்த பெரியவரையும், தமிழர்களையும் கடித்துக் குதறுவதற்குப் பதில் நண்பரை திருத்தும் வேலையை பார்ப்பது சாலச்சிறந்தது. இப்படியெல்லாம் திருத்தப் புகுந்தால் விரைவிலேயே விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஜெயமோகானந்தா எனும் மூலவர் மட்டும் அனாதையாக அம்போவென உலாவரும் இடமாவது உறுதி.

அந்தப் பெரியவர் தன்னை சிறுமைப்படுத்தியதற்கு கூட ஜெயமோகன் கோபப்படவில்லையாம். முக்கியமாக நாஞ்சில் நாடனை வறுத்தெடுத்ததுதான் அவரது ஆத்திரத்தை அடக்கமாட்டாமல் பொங்க வைத்ததாம். அப்படி என்ன நடந்தது? அந்தப் பெரியவர் தலித்துக்களை பற்றி இழிவாக பேசினாராம். இது பொறுக்காமல் நாஞ்சில் நாடன் சிலவற்றை கடுமையாக பேசினாராம். இறுதியில் பெரியவர் “நீ என்ன சாதி” என்று நாஞ்சிலைக் கேட்க “அதைச் சொல்லும் உசிதமில்லை” என்று மறுத்து விட்டாராம். பிறகுதான் தீர்த்தம் அடித்து சினத்தை குறைக்க வெளியேறியிருக்கிறார்.

இங்கே ஒரு முற்போக்கு சென்டிமெண்ட் தந்திரம் உள்ளது. அதாவது தனது கோபம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் அநீதியை எதிர்த்து எழும்பியிருக்கிறது என்று காட்டுகிறார் அண்ணன் ஜெமோ. பரவாயில்லை இந்துத்துவவாதிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து இத்தகைய நேயத்தை காட்டுகிறார்களே என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். கருவாடு எந்த காலத்திலும் மீனாகாது (உபயம் : காளிமுத்து), இதிலும் நிறைய உள்குத்து அடங்கியிருக்கிறது. முதலில் நாஞ்சில் நாடன் தனது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் எனும் சாதியையோ அது தரும் சலுகைகளையோ துறந்தவர் அல்ல. இந்த சாதி பார்ப்பனியத்தின் கொடிய வழக்கங்களை இன்றும் பின்பற்றும் ஒரு ‘உயர்’ சாதி. இப்படி இருக்கையில் அந்தப் பெரியவர் கேட்கையில் சாதியை சொல்லாமல் விட்டது ஒன்றும் சாதி மறுப்புக் கொள்கையின் பாற்பட்டதல்ல.

முக்கியமாக தனது மகள் 600க்கு 596 (கட் ஆஃப்பா தெரியவில்லை) எடுத்தும், தான் பிறந்த சாதி காரணமாக அவளுக்கு மருத்துவர் படிப்பு கிடைக்கவில்லை என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் நாஞ்சில் நாடன். பிறகு கவிஞர் அப்துல் ரகுமானைப் பார்த்து எழுத்தாளர் கோட்டாவில் (திமுக செல்வாக்கு) எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு ஆண்மையுள்ள கவிஞர் என்ற வேறு முதுகு சொறிந்திருக்கிறார். இதை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவரது தளத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக அந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருந்திருந்தாலாவது நாஞ்சில் நாடனைப் பற்றிய மதிப்பு குறையாமல் இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறார் கவிதா. நமது எழுத்தாளர்களுக்கும் அவர்களது புகழுக்கும் கவிதாவைப் போன்றவர்கள் பெருந்தன்மையுடன் அளித்து வரும் சலுகையைப் பாருங்கள்!

போகட்டும், நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கும் இந்த ‘உயர்’ சாதியில் பிறந்ததால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை எனும் ஒப்பாரி உண்மையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திர மக்கள் மீதான சாதி ஆதிக்க வன்மமாகும். நாஞ்சில்நாடன் மகளுக்கு மருத்துவர் சீட்டுதான் கிடைக்கவில்லை. அதுவும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கிடைத்து விடுகிறது. ஆனால் சேலம் கட்டியநாயக்கன்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட சிறுமி தனத்திற்கு பள்ளியில் குடிநீரே கிடைக்கவில்லை. ஆதிக்க சாதியினர் குடிக்கும் பானையில் மொண்டு குடித்தாள் என்று ஆசிரியரால் தாக்கப்பட்டு கண் போகும் நிலையில் இருந்தாள் தனம். அந்த நேரம் அந்த கிராமத்திற்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறேன். இன்று தனம் ஏதோ விவசாய வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறாள். நாஞ்சில் நாடன் மகள் டாக்டராகி மருத்துவம் பார்க்கிறாள். தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விரட்டப்படுகிறார்கள். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள், மருத்துவம் மறுக்கப்பட்டால் கணினி படித்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். இதுதான் உண்மை.

ஆக தாழ்த்தப்பட்ட மக்களை இட ஒதுக்கீட்டின் பெயரில் இழிவுபடுத்தியது அந்த பெரியவர் மட்டுமல்ல, நாஞ்சில் நாடனும் கூடத்தான். இப்பேற்பட்ட மனிதன் மீது ஜெயமோகன் கொண்டிருக்கும் அபிமானத்தின் தரம் என்ன என்பது இப்போதாவது புரிகிறதல்லவா? சாதி மத பிற்போக்குத் தனங்களோடுதான் இவர்கள் வாழ்கிறார்கள்.

ஏதோ நாஞ்சில் நாடன் மட்டும்தான் பார்க்கவேண்டியவர்களை பார்த்து முதுகு சொறியவேண்டியவர்களை சொறிந்து காரியம் சாதித்துக் கொள்கிறவர் என்று நினைத்துவிடாதீர்கள். அநேக சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் அப்படித்தான். ஜெயமோகனது மலேசியா, ஆஸ்திரேலியா பயணங்களுக்கு புரவலர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்று பார்த்தாலும் அது நிரூபணமாகிறது.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஈழத்தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட நாட்களில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டைப் பற்றி உருகி மருகி தொடரே எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவரை வரவேற்று உபசரித்த டாக்டர் நோயல் நடேசன் எனும் ஈழத்தமிழர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர், போருக்கு பிந்தைய வன்னி முகாம்களைப் பார்த்து விட்டு அவை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டியவர் என்று இனியொரு தளத்தில் அசோக் யோகன் என்பவர் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் அளவுப்படி ஒருவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளராக இருப்பது குற்றமில்லை, அவர் விஷ்ணுபுரத்தை படித்திருக்கிறாரா என்பதுதான் முக்கியமானது. மலேசியாவில் ஒருவர் ஊழல் செய்திருக்கிறாரா என்பது பிரச்சினையல்ல, அவர் அறம் கதைகளை கொண்டாடுகிறாரா என்பதுதான் அளவுகோல். எனில் ஜெயமோகனது அறம் எது, அதன் தரம் என்ன என்பதை வாசகரே முடிவு செய்து கொள்ளலாம்.

இதே பெரியவரை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருந்தால் அறைந்திருப்பேன் என்று எழுதும் ஜெயமோகன் இன்று நிறையவே பக்குவம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

இறுதியாக “அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்து கொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித் தமிழனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவனுடைய அசட்டுத் தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்து சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான். இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்…. ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்து கொள்ள எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன, அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?” என்று முடிக்கிறார்.

jeyamohan-ooty

மேற்கண்ட தத்துவ முத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. காலஞ்சென்ற சுந்தரராமசாமியிலிருந்து, “நானெல்லாம் ஷிட்னி ஷெல்டனோடு காபி சாப்பிட வேண்டிய ஆள், ஃபூக்கோ, தெரிதாவோடு ரெமிமார்ட்டின் அருந்த வேண்டிய ஆள், இங்கே வேறுவழியின்றி தமிழ் சுண்டக்கஞ்சியை குடிக்கிறேன்” என்று புலம்பும் சாருநிவேதிதா வரை அனேக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் கூறிவரும் அரதப்பழசான கருத்து. புலவனை மதிக்கத்தெரியாத மன்னன், ஊர், மக்கள் என்று இந்த அறிவு மற்றும் கோமாளித்தனமான மேட்டிமைத்தனம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் உண்டு. ஓரளவு ஜனநாயகத்திற்கு பழக்கப்பட்ட மேற்குலகில் இத்தகைய அசட்டுத்தனங்கள் தற்போது குறைந்திருக்கலாம். அடிமைகள் அதிகம் வாழும் நம்மைப்போன்ற ஏழை நாடுகளில் அதுவும் அறிவை சாதிரீதியாக பிரித்து வைத்திருக்கும் பார்ப்பனியத்தின் மண்ணில் இந்த அறிவுப் பணக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுதப்பட்ட வினவு கட்டுரைக்கு நள்ளிரவில் அழைத்து ஒருமையில் திட்டிய கவிஞர் செல்மா பிரியதர்ஷன் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி, “உனக்கு கவிதை, இலக்கியம் குறித்து என்ன தெரியும்? லீனா மணிமேகலையின் கவிதை குறித்து விமரிசிக்க நீ யார்?”

இதையே சினிமா குறித்து உனக்கு என்ன தெரியும், ஓவியம் குறித்து என்ன தெரியும் என்று பலமுறை வேறு வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். இவை குறித்து நாம் ஏதும் விமரிசித்தால் அந்த விமரிசனத்திற்கு பதில் தராமல் கேள்வி கேட்பவனது தரம் என்ன என்று கேட்கிறார்கள் இந்த அறிவாளிகள். ஒரு படைப்பு குறித்து வரும் விமர்சனங்களை பரிசீலிக்கும் ஜனநாயகம் இவர்களிடம் இல்லை. மாறாக, விமர்சனம் எழுதுபவனின் தரம் என்ன, அவனுக்கு என்ன உரிமை உள்ளது என்று மறுக்கும் பாசிசத்தையே முன் வைக்கிறார்கள். இதற்கு அந்த காலத்து பார்ப்பனீயம் முதல் இந்தக் காலத்து சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை விதிவிலக்கல்ல.

உண்மையில், இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பது அவர்களது நூல்களைப்படித்து விட்டு மானே, தேனே என்று ஜால்ரா போடுவதை மட்டும். மீறினால் பாய்ந்து குதறி எடுத்துவிடுகிறார்கள்.

அந்தப் பெரியவர், குறிப்பிட்ட துறை சார்ந்து முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு ஆட்டம் போடுகிறார் என்று ஜெயமோகன் கோபப்படுகிறாரே அதே போல மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் ஜெயமோகன் மீது வரலாம் இல்லையா?

ஏன் இந்த வரலாம்? இதோ ஆதாரம். காரல் மார்க்ஸ் ஒரு காட்டுமிராண்டி, மனைவியையும், மகளையும் வெறி கொண்டு அடிப்பவர், இதனாலேயே அவரை காட்டுமிராண்டியெனும் பொருள் கொண்ட மூர் என்ற வார்த்தையால் அழைப்பார்கள் என்று ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார். முதலில் இது ஜெயமோகனது சொந்த சரக்கு அல்ல. மார்க்சியத்தை பற்றி பில்லியன் கணக்கில் இருக்கும் மேற்குலக அவதூறுகளை, அதுவும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற அற்பங்கள் எடுத்துக் கொடுத்ததை காப்பி பேஸ்ட் செய்கிறார். சொந்த முறையில் தெரிந்து கொண்டு எழுதும் எவரும் இத்தகைய அசட்டுத்தனங்களை செய்வதில்லை.

ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயினில் சில நூற்றாண்டுகள் இசுலாமியரது ஆட்சி நடக்கிறது. அங்கே கற்றறிந்த சான்றோர்களை மூர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இப்படித்தான் ஐரோப்பிய இலக்கிய வட்டாரங்களின் அறிஞர்களை குறிக்கும் சொல்லாக மூர் நுழைகிறது. அதன்படி கார்ல் மார்க்ஸ் நட்பு வட்டாரத்தில் அவரை மூர் என்று செல்லமாக அழைப்பார்கள். இப்படித்தான் மார்க்சின் மகள்கள் மட்டுமில்லை, எங்கெல்சும் கூட மூர் என்று அன்போடு அழைத்து பல கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

இதுதான் ஜெயமோகனது ஆய்வுத் திறம் என்றால், அந்த புதுச்சேரி பெரியவர் மட்டும் என்ன பாவம் செய்தார்?

வேறு எதனையும் விட உண்மையான கம்யூனிச அறிவே தனது (மேட்டிமைத்தனமான) ஆன்மாவை குறி வைத்து அடிக்கிறது என்பதால் ஜெயமோகன் மார்க்சியம் குறித்து மிக மிக வெறுப்புணர்வை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வெறுப்புதான் இத்தகைய அற்பத்தனங்களை எழுத வைக்கிறது; அறிவால் எதிர்கொள்ள முடியாத போது இத்தகைய பூச்சாண்டிகளை வைத்து சமாதானம் அடைகிறது. கம்யூனிசம் குறித்த ஜெயமோகனது உளறல்கள் இந்த ரகம். எனினும் இதற்காக நாங்கள் அவரை என்றைக்காவது அடித்திருக்கிறோமா, இல்லை டேய் முட்டாளே ஒரு புக்கு ஒழுங்கா படிச்சிருப்பியாடா, எடத்தை காலிபண்ணு என்றுதான் வசைபாடியிருக்கிறோமா? இல்லையே. சகித்துக் கொண்டு மரியாதையாகத்தானே எழுதுகிறோம்?

அதே போல அரசியல், மார்க்சியம் தவிர பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் கூட ஜெயமோகனைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பார்த்தால் அங்கே நார்சிசம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.

காரல் மார்க்ஸை மூர் என்று காட்டுமிராண்டித்தனமாக அழைத்து சுயஇன்பம் காணும் ஜெயமோகன், கைலாயம் சென்ற மூப்பனாரை மிகவும் நுட்பமான ரசனை உடையவர், அரசியல்வாதிகளில் ஒரு மாணிக்கம் என்றெல்லாம் சிவசங்கரி ரேஞ்சுக்கு வெண்பாவே பாடியிருக்கிறார். உண்மையில் மூப்பனாரின் ரசனை அல்லது பொறுக்கித்தனத்தின் யோக்கியதையை கோடம்பாக்கத்திலும், அவரது பண்ணையார்தனத்தை தஞ்சாவூரிலும் விசாரித்துப் பார்த்தால் தெரியவரும். எனினும் நம்மைப் போன்ற பாமரர்கள் மூப்பனார் குறித்து கொண்டிருக்கும் அறிவை விட ஜெயமோகனது மேம்பட்டது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமாம்.

உண்மையில் அறிவு தொடர்பாக மற்றவர்களிடம் பேசுவதும், அல்லது புரிய வைப்பது, ரசிக்க வைப்பது, கற்றுக் கொடுக்க வைப்பதும், இவையெல்லாம் கூட வர்க்க கண்ணோட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. சிறு பத்திரிகை எழுத்தாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதில் பாரிய அளவில் முரண்படுகிறார்கள்.

“மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு கற்பிக்கவும் செய்ய வேண்டும்” என்றார் மாவோ. காரணம் கம்யூனிஸ்டுகளின் சமூகம் குறித்த அறிவு நடைமுறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அது வெற்றியடைய வேண்டுமென்றால் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அதை மீளாய்வு செய்து கொள்ளும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதுதான் கற்பது, கற்பிப்பது என்று செயல்படுகிறது.

ஒரு சிறுபத்திரிகையாளனோ தனது அறிவு ரசிக்கப்பட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறான். மற்றவர்களை எப்படி ரசிக்க வைக்க முடியும், அதற்கான திறமை எது என தேடிப்பிடித்து கற்கிறான். பிறகு தன்னை ரசிப்பது எப்படி என்று பாடமும் எடுக்கிறான். அப்படியும் வரவேற்பு இல்லையென்றால் இந்த நாட்டின் ரசனை சரியில்லை, மட்டரகமான சமூகம், என்று இறுதியில் கோபம் கொள்கிறான். ஒருவேளை தன்னை ரசிப்பவன் பாபு பஜ்ரங்கி (குஜராத் இந்துமதவெறியன்) போன்ற பச்சைக் கொலைகாரனாகவோ, இல்லை பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சுரண்டல் முதலாளியாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களது சமூகக் குற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறான். அவர்கள் காசில் சுற்றுலாவும் போகிறான். விருதும் வாங்கிக் கொள்கிறான். இதுதான் காலம் தோறும் புலவர் மரபினர் செய்து வரும் பிழைப்பு வாதம்.

ஒரு நாட்டின் தரம் அதாவது மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டம் தற்போது பின்னடைவு கண்டிருக்கிறது என்பதற்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்? ஈழத்தின் போராட்டம் குறித்தோ அதன் பின்னடைவு குறித்தோ ஒருவர் கதை எழுதலாம். ஆனால், அப்படி கதை எழுதுவதின் ஊடாக ஈழப் போராட்டம் வளர்ந்து விடாது. அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அரசியல், சமூகப் போராட்டங்களின் தரம், மக்கள் எந்த அரசியலின் கீழ் எந்த அளவு அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. சரி, அரசியலுக்கு இது பொருந்துமென்றால் பண்பாடு குறித்த அறிவுக்கு எழுத்தாளர்கள் தேவைதானே என்று கேட்கலாம்.

இல்லை, இங்கேயும் அது நிபந்தனை அல்ல என்கிறோம். தமிழகத்தில் சுந்தர ராமசாமியோ இல்லை நாஞ்சில் நாடனோ இல்லை ஜெயமோகனே கூட பிறக்கவில்லை என்றால் இங்கே ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அவர்கள் இல்லை என்பதால் இங்கே இப்போது மக்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஒன்றும் மாறிவிடாது. இல்லை என்றால் இத்தகைய எழுத்தாளர்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் என்ன மாற்றத்தை எங்கே யாரால் என்னவிதமாக மாற்றினார்கள் என்று விளக்க வேண்டும். மாறாக, நாங்கள் இல்லை என்றால் மக்கள் காய்ந்து போய் கதறுவார்கள் என்று உளறக்கூடாது. நாங்கள்தான் தாம்பூலப் பையில் இலவசமாக புக் போடும் பழக்கத்தை கொண்டு வந்தோம் என்று கூட சொல்ல முடியாது. இவையெல்லாம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றோ சாதித்தவை. குறிப்பாக தற்போதைய புரட்சிகர திருமணங்களில் பரிசுப் பொருட்கள் என்பதே புத்தகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

பண்பாட்டு அறிவு என்பது சமூகம் கூட்டுத்துவமாக இருந்தால் மட்டுமே இருப்பும், முன்னேற்றமும் சாத்தியம் என்பதை பண்படுத்தும் நோக்கில் வளரும், விரியும் தன்மை கொண்டது. அது அரசியல், பொருளாதார போராட்டங்களிலிருந்தே வலிமை பெறுகிறது. பண்பாடு என்பது ஓய்வுநேரத்தில் ஒயினை பருகியவாறு கம்ப ராமாயணத்தையோ இல்லை விஷ்ணுபுராணத்தையோ இல்லை ஜீனத் அமனையோ ரசிப்பது அல்ல. இவையெல்லாம், துண்டிக்கப்பட்ட இயக்க நிலையிலிருந்து கற்பித்துக் கொண்ட மயக்கங்களை வைத்து, சுய இன்பம் அடையும் மூளையின் மூடுண்ட நிலை. அந்த நிலையிலிருந்து, திட்டமிடப்பட்ட படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தரும் புதிரின் அளவுக்குத்தான் ரசிக்க முடியும். பிறகு அந்த புதிர் உடைபடும் போது ரசனை மாறிவிடும்.

அல்லது ஒரு நூல் அல்லது கதை அல்லது கவிதையை வைத்து பண்பாட்டின் வேர் வளருவதில்லை. சரியாகச் சொன்னால் அப்படி வளரும் வேரைத்தான் ஒரு இலக்கியம் பிரதிபலிக்குமே அன்றி தன்னளவில் அவற்றிற்கு அப்படி ஒரு சக்தி கிடையாது.

இன்னும் எளிமையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் சாதி வெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், வர்க்க சுரண்டல், இவற்றினை எதிர்த்து நாம் எப்படி மாறியிருக்கிறோம் அல்லது மாறவில்லை என்பதுதான் நமது பண்பாடு குறித்த தரமே அன்றி தமிழகம் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்பதல்ல. அதனால்தான் மார்க்சியமோ அல்லது பெரியார், அம்பேத்காரோ ஒரு சில தனி மூளைகள் தவம் செய்து சூப்பர் பவரால் தோற்றுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் காலம் தோற்றுவிக்கும் சமூக உந்து நிலையிலிருந்து அவர்கள் தவிர்க்க முடியாமல் பிறக்கிறார்கள். அனைத்திற்கும் அடிநாதமான அரசியல் வாழ்க்கையின் விதியே இதுதான் எனும் போது அதன் செல்வாக்கில் இருக்கும் இலக்கியம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதனால் இலக்கியம் இன்னபிற அறிவுத்துறைகளை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் இல்லை. அல்லது அனைவரும் இவற்றை புறந்தள்ளி வாழவேண்டும் என்றும் பொருள் அல்ல. அறிவு சார்ந்து கிடைக்கும் எதனையும் படிக்க வேண்டும், அப்படி படிக்க முடியாத படி முதலாளித்துவத்தின் பாப்கார்ன் தலைமுறையாக நாம் மாற்றப்படுகிறோம் என்பதே நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. ஆனால் ஒரு நாட்டுமக்களது அரசியல் போராட்டத்தின் வீச்சோடுதான் இத்தகைய அறிவு வாசிப்பு வளருவதோ, பலனளிப்பதோ இருக்குமே அன்றி வாசிப்பே முதல் நிபந்தனை அல்ல.

முகநூலில் பலரும் ஜெயமோகனது அகங்காரத்தை அழகாகவும், நுட்பமாகவும் கண்டித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல ஒரு சமூகத்தில் டீ மாஸ்டர், நகர சுத்தித் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி போல எழுத்தாளனும் ஒரு அங்கம். அங்கங்களில் உயர்வு தாழ்வு காண்பது பார்ப்பனியம் மட்டுமே உருவாக்கியிருக்கும் வர்ண பேதம். சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இன்னமும் அப்படித்தான் பார்ப்பனியத்தின் செல்வாக்கில்தான் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதனால்தான் ஜெயமோகனது சூப்பர் ஈகோ எழுத்தாளர் நிலையை எளியவர்கள் மறுக்கும்போது இந்துத்துவ வெறியர்களான ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் களத்திற்கு வருகின்றனர்.

இப்படி இணையம் முழுவதும் நமது செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதே ஜெயமோகனது ஆத்திரத்திற்கு காரணம். இப்படி பலரும் கேள்வி கேட்பது, விமரிசிப்பது எல்லாம் அடிமைத்தனம் விதிக்கப்பட்டிருக்கும் நமது சமூகத்தில் ஜனநாயகம் வளர வழிவகுக்கும் என்ற எளிய பாடம் கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் இணையத்திலோ இல்லை சமூகத்திலோ மொக்கைகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் படிப்பு, ஆர்வம், அரசியல் அனைத்தும் அனைவரிடமும் இப்படி மொக்கையாகத்தான் ஆரம்பிக்கின்றன என்பதால் இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிலை. சமூகத்தை மாற்ற விரும்பவர்கள் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

மொக்கைகள் கூட பரவாயில்லை. ஜெயமோகனது எழுத்தை படித்து விட்டு வாழ்க்கைப் பிரச்சினை குறித்து கிரிமினல்கள் அருளுரை கேட்டால் கூட அவர் மறுப்பதில்லை. திமுகவிலோ, இல்லை அதிமுகவிலோ முப்பது வயது வரை தீவிரமாக செயல்பட்ட ஒருவர் அதைத் துறந்து ஆன்மீகம், ஜோசியம் என்று மாறி, பிறகு தொழில் செய்து சம்பாதித்து குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு தற்போது புதிய தலைமுறை – எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு மாத ஊதியத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு விட்டு வாழ்க்கையில் நான் எதை இழந்தேன் என்ற குழப்பம் அவருக்கு வருகிறது. இதனால் தன்னை அருச்சுனனாகவும் ஜெமோவை கிருஷ்ணாகவும் நினைத்து கீதை கேட்கிறார். ஜெமோவும் வாழ்க்கையென்றால் இப்படித்தான், இங்கே ஒற்றைப்படையான நோக்கம் கொண்டு ஒருவர் வாழ்ந்து விளைவை தேட முடியாது, அது இது என்று அடித்து விடுகிறார். ஜெயமோகன் என்ன கூறினார் என்பது பிரச்சினையில்லை. ஒரு கிரிமினலை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது.

திமுக, அதிமுக போன்ற ஆளும் வர்க்க கட்சிகளில் குறிப்பிட்ட பொறுப்புகளில் இருக்கும் ஒருவன் நிச்சயம் பிழைப்புவாதியாகத்தான் இருப்பான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் ஆயுட்கால சேமிப்பை பிடுங்கிக் கொண்டு கல்லூரியும், கட்சியும் நடத்தும் பச்சமுத்துவின் கட்சியில் வெட்கம் கெட்டு இருக்கிறான். இடையில் ஜோசியம் எனும் உலக மகா ஃபிராடு தொழிலிலும் ஈடுபடுகிறான். இத்தகைய அப்பட்டமான சந்தர்ப்பவாதிக்கு வந்திருக்கும் குழப்பம் என்னவாக இருக்கும்? மற்றவனெல்லாம் மாளிகை, இனோவா, ரியல் எஸ்டேட் என்று பிச்சு உதறும் போது எனக்கு ஏன் அவை கிடைக்கவில்லை என்பதுதான்.

ஆயுசு முழுக்க உழைத்துப் பிழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய ஒட்டுண்ணிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், அந்த கிரிமினலை அரவணைத்து உச்சி முகர்ந்து ஆறுதல் சொல்கிறார் ஜெயமோகன். இதுதான் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் உருவாக்கியிருக்கும் அறிவார்ந்த சமூகத்தின் லட்சணம்.

எங்களைப் போன்ற ‘பாமர’ கம்யூனிஸ்டுகள் சேர்ந்து இயங்கும் சமூகமும், மனிதர்களும் எப்படி இருப்பார்கள்?

மே 19 அன்று எங்களுக்கு வந்த மின்னஞ்சலை பெயரை தவிர்த்து இங்கே தருகிறோம்.

“வினவு தோழர்களுக்கு வணக்கம்,

கடந்த மூன்று வருடங்களாக தங்களின் தளத்தை படித்து வருகிறேன். பிற்போக்கான நிலையில் இருந்த என் சிந்தனையை மாற்றி அமைத்ததில் தங்களின் தளத்திற்க்கு பெரும் பங்கு உண்டு. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டு தளத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிந்தனை மாற்றம் ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல், பெளதீக மாற்றமும் பெற்றது. ஆம், வரும் ______(தேதியில்) எனக்கு திருமணம். சாதி சடங்குகள் எதுவுமின்றி எளிமையான முறையில், தங்கள் அமைப்புத் தோழர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் எனக்கு இம்மாதிரியான திருமணம் நடைபெறும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பேன். இன்று இத்திருமணம் என் வாழ்வில் நடைபெறவிருப்பதிற்கு தங்களின் தளத்திற்ககும் ஒரு மிகமுக்கிய பங்குண்டு. இத்துடன் திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். என் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு வினவு தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்.”

கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.
______________________________________________________
பின்குறிப்பு : தலைப்புக்கு என்ன பொருள்? கட்அவுட் என்பது ஜெயலலிதாவையும் கீபோர்ட் என்பது ஜெயமோகனையும் குறிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கட்அவுட்டை கீபோர்டு முந்தியிருக்கிறது. ஏன், எப்படி என்பதை ‘அறிவார்ந்த’ வாசகர்களே புரிந்து கொள்ளலாம்.