privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபயங்கரவாதத் தடுப்பு மையம் : ஜெயாவின் கடுப்பு ஏன் ?

பயங்கரவாதத் தடுப்பு மையம் : ஜெயாவின் கடுப்பு ஏன் ?

-

திமுக பொதுக்குழுவோ, செயற்குழுவோ, அமைச்சரவை கூட்டமோ அனைத்திலும் இடுப்பு வளைய குனிந்தும், மூளை பயந்து வணங்கியும், அம்மா புகழ் போற்றி மந்திரங்களை கேட்டு ரசிப்பவர் ஜெயா. அப்பேற்பட்டவரை சென்ற ஆண்டு தில்லிக் கூட்டத்தில் கொடுத்த நேரத்திற்கும் அதிக நேரம் பேசினார் என்று மணியடித்து ‘அவமானப்படுத்தியதை’ அவர் மறக்கவில்லை. அதனாலேயே இந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய மாநில முதல்வர்கள் மாநாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜெயா சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் முனுசாமி கலந்து கொண்டு அம்மாவின் உரையை வாசித்தார். அந்த உரையில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் எதிர்த்திருக்கிறார் ஜெயா.

jayalalithaஇந்தத் தடுப்பு மையம் வரும் பட்சத்தில் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் இந்தியாவெங்கும் சந்தேகத்துக்குரிய நபர்களைக் கைது செய்யவும், பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றிருப்பார்களாம். இதை மாநில அரசுகளை மதிக்காத பெரியண்ணன் போக்கு என்றும், ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் ஜெயா கூறுகிறார்.

சட்டசபையில் அதிமுக அடிமைகளைப் போலவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆடவேண்டும், இல்லையேல் சஸ்பெண்ட், வெளியேற்றம் என்று தூள் பறத்தும் நடவடிக்கைகளெல்லாம் எந்த ஊர் ஜனநாய முறையில் வருகிறது? ஜெயாவை ஏதாவது எதிர்த்து பேசி விட்டால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்தாலும் சரி உடனே அவதூறு வழக்கு பாய்கிறதே, இந்த ‘ஜனநாயகம்’ கூட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்த அளவு இல்லை.

கைது செய்யும், விசாரிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதாலேயே ஜெயா விரும்பும் எவரையும் அவர்கள் சசிகலா உறவினர்கள் என்றாலும் கூட நினைத்த போது ஏதாவது ஒரு போண்டா வழக்கு போட்டு கைது செய்து சிறையிலடைக்க முடிகிறது. அல்லது சுதாகரன் வீட்டில் பிரவுன் சுகர் இருந்தது என்றெல்லாம் வழக்கு போட முடிகிறது.

கூட்டணிக்கு ஒத்து வராத கட்சித் தலைவர்களையோ, இல்லை திமுகவின் பழம்பெரும் பெருச்சாளிகளையோ மிரட்டுவதற்கும் போலீஸ்தான் ஜெயாவின் உற்ற கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தடுப்பு மையம் வந்தால் இந்த அதிகாரம் நமக்கு மட்டும் இருக்காது என்பதே ஜெயாவின் பயம். நாளையே காங்கிரசோ, பாஜகவோ மத்திய அரசில் இருந்து கூட்டணிக்கு முயற்சி செய்து அம்மா ஒத்துழைக்கவில்லை என்றால் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் அதிகாரத்தை வைத்து அதிமுகவை டார்ச்சர் செய்தால் என்ன செய்வது? இதுவும் ‘அம்மாவின்’ கவலைதான்.

‘அம்மாவின்’ கவலையில் நியாயமில்லை என்றும் கூறிவிட முடியாது. நிலக்கரி ஊழல் வழக்கில் சிபிஐயின் குற்றப் பத்திரிகையையே காங்கிரசு தலைவர்கள் திருத்தித்தான் தாக்கல் செய்தனர் எனும் போது புதிதாக வரும் பயங்கரவாதத் தடுப்பு மையம் மட்டும் மத்தியில் ஆளும் கட்சியின் கூஜாவாகத்தான் இருக்குமென்பதில் அய்யமில்லை.

“உளவு சேகரித்தல் என்பது மாநில காவல் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய பணியாகும். அந்தப் பணியில் மாநிலத்தின் மொழி, உள்ளூர் நிலைமை அறியாத மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக ஈடுபடுவதால் பொது ஒழுங்கும் அமைதியும் பாதிக்கப்படும்”, என்கிறார் ஜெயா.

இப்போதே கூட நமது மொழி, நிலைமை அறியாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்தான் தமிழக மாவட்டங்களை ஆண்டு வருகின்றனர். அதே போல தடுப்பு மையத்திற்காக வரும் அதிகாரிகளுக்கு மட்டும் என்ன பிரச்சினை வந்து விடும்? தமிழகத்தின் வறட்சியை பார்க்க வரும் மத்திய அரசு அதிகாரிகள் கூட ஓரிரு நாட்களில் பலமாவட்டங்களை பார்த்து விட்டு மதிப்பீடு செய்கிறார்களே, இவர்களுக்கு மட்டும் தமிழக சூழலைப் பற்றி என்ன தெரியும்? அப்போதெல்லாம் ஜெயா இவர்களை எதிர்த்திருக்கிறாரா?

“மாநில காவல் துறையைத் தனிமைப்படுத்தி விட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு நியமிக்கும் அமைப்பு நாளைக்கே ஏதாவது ஒரு செயலில் ஈடுபடலாம். அதில் பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து சரியான பதில் இல்லை.” என்று பயப்படுகிறார் ஜெயா.

பரமக்குடியில் தலித் மக்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீசுக்கு இதே ஜெயா பொறுப்பேற்றுக் கொண்டாரா? அதெல்லாம் நியாயம் என்றுதான் அறிக்கை விட்டார். வீரப்பன் இருந்த போது அதிரடிப்படை செய்த அட்டூழியங்களுக்கு வக்காலத்து வாங்கியதும் இவர்தானே? போலீசால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண்கள் அரசு நிவாரண நிதி பெறுவதற்காக பொய் சொல்லுகிறார்கள் என்றுதானே இவர் கூறியிருக்கிறார். ஆக இவரது போலீசு எது செய்தாலும் நியாயம் என்றால் அந்த நியாயம் மத்திய அரசுக்கு இருக்காதா என்ன? உண்மையில் தனது அதிகாரத்திற்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதுதான் ஜெயாவின் கவலையே அன்றி மாநில அரசின் உரிமையெல்லாம் இல்லை.

chief-ministers“மத்திய உளவுத் துறை, ரா உளவுப் பிரிவு, ராணுவ உளவு இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இடையே நிலவும் அதிகாரப் போர் யாவரும் அறிந்த ஒன்றுதான். அதையே சரி செய்ய முடியாதபோது, உள்ளூர் மொழி, கட்டமைப்பை அறியாத நபர்கள் உளவு சேகரிப்பில் ஈடுபட்டால் அதுவே புதிய அச்சுறுத்தலை உருவாக்கக் காரணமாகி விடும். எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பாக விரிவாக விவாதம் நடத்தித் தீர்வு காணும் வரை தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைக்கக் கூடாது.”, இதுதான் ஜெயாவின் இறுதிக் கவலை.

மத்திய அரசின் உளவுத்துறைகளுக்கிடையான போட்டியை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம்? ஜெயாவே அடுத்த முறை பிரதமரானாலொழிய இதற்கு வேறு தீர்வில்லை. தமிழகத்தில் கூட பல துறைகள் இருந்தாலும் அனைத்தும் அம்மாவின் மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக பணிபுரிகின்றன. இத்தகைய உடும்புப்பிடியில் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அசுர பலத்துடன் கூடிய பெரும்பான்மை வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை முழு அதிகார வர்க்கமும் ஜெயவின் ஆணையை நிறைவேற்றுவதில் முழு அடிமைத்தனத்தோடு செயல்படுகின்றது. மத்தியிலும் அத்தகைய ஒழுங்கு பெறவேண்டுமென்றால் மத்திய அரசு ஜெயாவின் ஆட்சியை ஆய்வு செய்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை எதிர்த்து மம்தா பானர்ஜி, மோடி உள்ளிட்ட சிலரும் பேசியுள்ளனர். அதே நேரம் இத்தகைய மையத்தை கொண்டு வரவில்லை என்றால் நாடு பெரும் அபாயத்தில் சிக்கிவிடும் என்று ப.சிதம்பரம், மன்மோகன் சிங் முதலானோர் கூறுகின்றனர்.

உண்மையில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இவர்களுக்கிடையே உள்ள அதிகாரப் போட்டிதான் அந்த மையத்தை கொண்டு வருவதில் பிரச்சினையாக இருக்கிறது. இதே மோடியோ, ஜெயாவோ நாளை பிரதமரானால் இந்த மையத்தை இதைவிட அதிக அதிகாரம் கொண்டு அமல்படுத்துவார்கள்.

ஆக, இந்த மையம் இன்று வருகிறதா இல்லை நாளை வருகிறதா என்பதோடு புரட்சிகர ஜனநாயக சக்திகளையும், சிறுபான்மை மக்களையும் ஒடுக்குவதற்கே பயன்படும் என்பதுதான் பிரச்சனை. அரசு மென்மேலும் பாசிசமயமாகி வருவதற்கு இந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் ஒரு சான்று.