privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !

-

மெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அதன் மக்களை உளவு பார்க்கும் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் இப்போது ஹாங்காங்கில் புகலிடம் தேடியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த அவரிடம்  கிளென் கிரீன்வால்டும் ஏவன் மெக்ஆஸ்கில்லும் எடுத்த பேட்டி இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.

பேட்டியின் சில பகுதிகளின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

எட்வர்ட் ஸ்னோடன்
எட்வர்ட் ஸ்னோடன் (படம் : நன்றி கார்டியன்)

கேள்வி :  நீங்கள் விசில்புளோவர் (அம்பலப்படுத்துபவர்) ஆக ஏன் முடிவு செய்தீர்கள்?

பதில் :  “எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும்படியான ஒரு கட்டமைப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியிருக்கிறது. அதன் மூலம் குறிப்பான தேவையின் அடிப்படையில் இல்லாமல், தகவல் பரிமாற்றங்கள் பெரும்பகுதி தானாகவே ஒட்டுக் கேட்கப்படுகிறது. உங்கள் மின்னஞ்சல்களை அல்லது உங்கள் மனைவியின் தொலைபேசியை நான் பார்க்க விரும்பினால் அந்த ஒட்டுக் கேட்பை செயல்படுத்த வேண்டியதுதான் தேவை. உங்கள் மின்னஞ்சல்கள், கடவுச் சொற்கள், தொலைபேசி பதிவுகள், கடன் அட்டைகள் எதை வேண்டுமானாலும் நான் அணுக முடியும்.

“இது போன்ற விஷயங்களை செய்யும் சமூகத்தில் நான வாழ விரும்பவில்லை. நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பதிவு செய்யப்படும் ஒரு உலகில் நான் வாழ விரும்பவில்லை. அத்தகைய ஒன்றை ஆதரிக்கவோ, அல்லது அத்தகைய அமைப்பின் கீழ் வாழவோ நான் விரும்பவில்லை.”

கேள்வி :  ஆனால், போஸ்டன் நகரில் நடந்தது போன்ற பயங்கரவாத செயல்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதற்கு வேவு பார்ப்பது அவசியமில்லையா?

பதில் :  “பயங்கரவாதம் ஏன் புதிய அச்சுறுத்தலாக இப்போது உருவாகியிருக்கிறது என்று நாம் பரிசீலிக்க வேண்டும். பயங்கரவாதம் எப்போதுமே இருந்திருக்கிறது. போஸ்டனில் நடந்தது ஒரு குற்றச் செயல். அத்தகையவற்றை தடுப்பதற்கு வேவு பார்ப்பதை விட, வழக்கமான, பாரம்பரியமான போலீஸ் கண்காணிப்புதான் தேவை.

கேள்வி :  உங்களை நீங்கள் இன்னொரு பிராட்லி மேனிங் ஆக பார்க்கிறீர்களா?

பதில் :  “மேனிங் ஒரு சிறப்பான அம்பலப்படுத்துபவர். அவர் பொது நலத்தினால் தூண்டப்பட்டார்.”

கேள்வி :  நீங்கள் செய்தது ஒரு குற்றம் என்று நினைக்கிறீர்களா?

பதில் :  “அரசாங்கத்தின் தரப்பில் போதுமான குற்றங்களை நாம் பார்த்து விட்டோம். இந்த நிலையில் எனக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை வைப்பது போலித்தனமானது. அரசு அமைப்புகள் பொதுமக்களின் உரிமை வட்டத்தை பெருமளவு குறுக்கியிருக்கின்றன.”

கேள்வி :  உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் :  “எதுவும் நல்லது நடக்காது.”

ஹாங்காங் அமெரிக்க தூதரகம்
ஸ்னோடன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் அமெரிக்க தூதரகம் (மற்றும் உளவு அலுவலகம்) – படம் : நன்றி தி ஹிந்து

கேள்வி :  ஏன் ஹாங்காங்?

பதில் :  “குறைவான சுதந்திரம் உள்ளதாக கருதப்படும்  இடத்துக்கு ஒரு அமெரிக்கன் இடம் பெயர வேண்டியிருப்பது எவ்வளவு சோகமானது!  சீன மக்கள் குடியரசுடன் இணைந்திருந்தாலும் ஹாங்காங் சுதந்திரத்துக்கு பேர் பெற்றது. வலுவான பேச்சுரிமை பாரம்பரியம் உடையது”

கேள்வி :  வெளியிடப்பட்ட ஆவணங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?

பதில் :  “அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேவு பார்த்தல் பற்றிய கேள்விகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து பொய்யான தகவல்களை தந்திருக்கிறது என்பதை அவை தெரிவிக்கின்றன. செனட்டர் ரான் வைடனும் செனட்டர் மார்க் உடல்லும் வேவு பார்த்தலின் அளவைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் சொல்வதற்கு தேவையான வசதிகள் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். வசதிகள் நிச்சயம் எங்களிடம் இருக்கின்றன. எந்தெந்த இடங்களில் மக்கள் அதிக அளவு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடங்கள் என்னிடம் இருக்கின்றன. ரஷ்யாவிலிருந்து சேகரிப்பதை விட அதிகமாக அமெரிக்காவிலிருந்து தகவல் பரிமாற்றங்களை  ஒட்டுக் கேட்கிறோம்.”

கேள்வி :  சீனாவினால் நடத்தப்படும் கணினி தாக்குதல்கள் குறித்து ஒபாமா நிர்வாகம் தெரிவிக்கும் கண்டனங்கள் பற்றி?

பதில் :  “நாம் எல்லோரையும் எல்லா இடத்திலும் தாக்குகிறோம். கூடவே, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட முயற்சிக்கிறோம். ஆனால், நாம் போரிட்டுக் கொண்டிருக்காத நாடுகளில் கூட, கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறோம்.”

கேள்வி :  அரசின் வேவு பார்த்தலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளை ஒருவர் அமல்படுத்திக் கொள்வது சாத்தியமா?

பதில் :  “எதெல்லாம் சாத்தியம் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியாது. அவர்கள் செய்ய முடிபவற்றின் வீச்சு திகிலூட்டக் கூடியது. உங்கள் கணினிகளில் வேவு மென்பொருளை புகுத்த முடியும். நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்கள் கணினியை அடையாளம் கண்டு கொள்ள முடியும். எத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் செயல்படுத்தினாலும், நீங்கள் பாதுகாப்பாக இருக்கவே முடியாது.

கேள்வி :  நீங்கள் இதை திட்டமிட்டது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?

பதில் :  “இல்லை. என்ன நடக்கிறது என்று என் குடும்பத்துக்கு தெரியாது. என்னுடைய அடிப்படை பயமே அவர்கள் என் குடும்பத்தையும், நண்பர்களையும், என் துணைவியையும் குறி வைப்பார்கள் என்பதுதான். நான் தொடர்பு வைத்திருக்கும் யாரையும்…”

“எஞ்சியிருக்கும் என் வாழ்க்கை முழுவதும் நான் இதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். அவர்களுடன் நான் தொடர்பு கொள்ள முடியாது. என்னைத் தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு எதிராக அதிகார வர்க்கத்தினர் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள். அது என் தூக்கத்தை கெடுக்கிறது.”

ஸ்னோடனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ஸ்னோடனுக்கு ஆதரவு தெரிவித்து நியுயார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி தி ஹிந்து)

கேள்வி :  ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?

பதில் :  “உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களை நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் பார்க்கும் போது அவற்றுள் சில முறைகேடானவை என்று உணர்கிறீர்கள். நடப்பது தவறானது என்ற உணர்வு படிப்படியாக வளர்கிறது.. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்து நான் இதை முடிவு செய்யவில்லை. அது இயல்பாகவே நடந்தது.”

“2008-ல் பலர் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். நான் அவருக்கு வாக்களிக்கவில்லை. மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்தேன். ஆனால், நான் ஒபாமாவின் வாக்குறுதிகளை நம்பினேன். அப்போது நான் உண்மைகளை வெளியிட நினைத்திருந்தேன், ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் காத்திருந்தேன். அவர் தொடர்ந்து அதே கொள்கைகளை பின்பற்றினார்.”

கேள்வி :  ஒபாமா, இந்த அம்பலப்படுத்தலை கண்டித்து விட்டு, பாதுகாப்புக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் இடையேயான சமநிலை பற்றிய விவாதத்தை வரவேற்பதாக சொன்னதற்கு உங்கள் எதிர்வினை என்ன?

பதில் :  “என் உடனடி எதிர்வினை, அவரால் தனது செயல்களை நியாயப்படுத்த முடியவில்லை என்பதுதான். நியாயப்படுத்த முடியாததை அவர் நியாயப்படுத்த முயல்கிறார், அவருக்கும் அது தெரிகிறது.”

கேள்வி :  இந்த அம்பலப்படுத்தல்கள் பற்றிய மக்களின் எதிர்வினை பற்றி?

பதில் :  “பாதுகாப்பு என்ற பெயரில் பறிக்கப்படும் தமது உரிமைகளுக்காக பொதுமக்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்வினை புரிந்தது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போல இல்லா விட்டாலும், ஜூலை 4-ம் தேதி நான்காவது திருத்தத்துக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி போராடும் “நான்காவது திருத்ததை மீட்போம்” என்ற இயக்கம் ரெட்டிட் மூலமாக வளர்ந்திருக்கிறது. இணையத்தின் வழியான எதிர்வினை மிகப்பெரிதாகவும், ஆதரவு தெரிவிப்பதாகவும் இருக்கிறது.

கேள்வி :  வாஷிங்டனைச் சேர்ந்த வெளியுறவுத் துறை நிபுணர் ஸ்டீவ் கிளெமன்ஸ், தலைநகரில் டல்லஸ் விமான நிலையத்தில் நான்கு பேர் அவர்கள் அப்போது கலந்து கொண்ட உளவுத் துறை கருத்தரங்கு குறித்து பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டிருக்கிறார். இந்த அம்பலப்படுத்தல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவர்களில் ஒருவர், இதில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர், அம்பலப்படுத்துபவர் இரண்டு பேரையுமே மறைந்து போகச் செய்ய வேண்டும் என்று சொன்னதாக கிளெமன்ஸ் சொல்கிறார். நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :  “அந்தச் செய்தியைப் பற்றி கருத்து சொன்ன ஒருவர் ‘உண்மையான உளவாளிகள் அப்படி எல்லாம் பேச மாட்டார்கள்’ என்றார். நான் ஒரு உளவாளி, நான் சொல்கிறேன், இப்படித்தான் அவர்கள் பேசுவார்கள். குற்றங்களை எப்படி கையாள்வது என்று அலுவலகத்தில் விவாதிக்கும் போதெல்லாம் அவர்கள் சட்டப்படியான நடைமுறைகளை ஆதரிப்பது இல்லை – அவர்கள் முடிவான ஒரு நடவடிக்கையை ஆதரிப்பார்கள். ஒருவரை விமானத்திலிருந்து தள்ளி விடுவது, அத்தகைய நபர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு கொடுப்பதை விட சிறந்தது என்பார்கள். அது ஒரு சர்வாதிகார மனநிலை.”

கேள்வி :  நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில் :  “நான் செய்ய முடிவது இங்கே உட்கார்ந்து கொண்டு ஹாங்காங் அரசு என்னை நாடு கடத்தாது என்று எதிர்பார்ப்பதுதான். மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில் புகலிடம் கோருவதுதான் எனது விருப்பம். இதை பெருமளவு கடைப்பிடிக்கும் நாடு ஐஸ்லாந்து. இணைய சுதந்திரம் பற்றிய விவகாரத்தில் அவர்கள் மக்களுக்காக நின்றார்கள். என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்கு எந்த திட்டமும் இல்லை.”

“அவர்கள் ஒரு இன்டர்போல் அறிவிப்பை வெளியிடலாம். ஆனால், அமெரிக்க சட்டங்களுக்கு வெளியில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பானது என்பது தெளிவாகும் என்று நினைக்கிறேன்.”

கேள்வி :  நீங்கள் ஒருவேளை சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில் :  “சிறைக்குப் போகும் சாத்தியத்தை கருத்தில் கொள்ளாமல் நான் இதை செய்திருக்க முடியாது. உலகின் மிக சக்தி வாய்ந்த உளவுத் துறைக்கு எதிராக நிற்க முடிவு செய்த பிறகு இந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் என்றாவது ஒரு நாள் அதை செய்து விடுவார்கள்.”

கேள்வி :  முதல் வெளியீட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில் :  “இது தொடர்பான ஆவேசமான கோப உணர்வுகள் நியாயமானவை என்று நினைக்கிறேன். எனக்கு என்ன நடந்தாலும் சரி, அமெரிக்காவுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அவை எனக்கு தந்திருக்கின்றன. என் வீட்டை நான் மறுபடியும் பார்க்க முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதைத்தான் நான் விரும்புகிறேன்.”

ஸ்னோடனின் நேர்காணல் வீடியோ:


__________________________
– தமிழாக்கம்: அப்துல்
__________________________