privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காயார் இந்த ஸ்னோடன் ?

யார் இந்த ஸ்னோடன் ?

-

மெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலையில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $2,00,000 (சுமார் ரூ 1.2 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக வீடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்னோடன்.

ஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.

அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்
அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்

29 வயதான ஸ்னோடன் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்தவர். அவரது குடும்பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லூரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.

2003-ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வதில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக்கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

ஒரு விபத்தில் இரண்டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.

இணையம் பற்றிய அறிவும், மென்பொருள் உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர் வெகு வேகமாக முன்னேற உதவின. 2007-ம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கு அனுப்பியது. கணினி இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்த 3 ஆண்டுகள் சிஐஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின.

அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை
அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை

ஒரு ஸ்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஓட்ட வைத்து, அவர் போலீசில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது சிஐஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கைகள் சிதைந்து போயின. நல்லதை விட பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தார்.

2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார்.

2009-ம் ஆண்டு சிஐஏவை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார்.

மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, “வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயல்படுவதுதான் தலைமைப் பண்பு” என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன். அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். உலகில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

உடா கணினி மையம்
உடாவில் உள்ள அமெரிக்க உளவுத் துறை கணினி மையம்

அமெரிக்க உளவுத் துறை உலகெங்கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்திரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

“பணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்” என்கிறார் அவர்.

“நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது. அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஸ்னோடன்
அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஸ்னோடன்

இப்போது ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைக்கிறார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

தன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம்; அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம்; அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சிஐஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம்; சிஐஏ உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளோ அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல வைக்கலாம்.

அவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவலகம் (ஹாங்காங் அமெரிக்க தூதரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது.

வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

(இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் கிளென் கிரீன்வால்த், ஏவன் மெக்ஆஸ்கில், லாரா போய்ட்ராஸ் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)