privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மரக்காணம் 'கலவரம்' விரிவான அறிக்கை !

மரக்காணம் ‘கலவரம்’ விரிவான அறிக்கை !

-

(இது மரக்காணத்தில் நடைபெற்ற சாதிவெறித் தாக்குதல் பற்றி மக்கள் கலை இலக்கியம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் நேரில் சென்று திரட்டிய அறிக்கை.)

இராமதாசு – காடுவெட்டி குரு தலைமையிலான வன்னிய சாதி வெறியர்கள் மரக்காணம் காலனி தலித் மக்கள் மீது நடத்திய சாதிவெறியாட்டம்

25.04.2013 அன்று வன்னிய சாதி வெறியனும் பா.ம.க நிறுவனரும் ஆன இராமதாசு வன்னியர் சங்கம் எனும் வானர சேனையின் தலைவருமான காடுவெட்டி குரு ஆகியோரின் தலைமையில் நடந்த சித்திரை முழு நிலவு கொண்டாட்டமும் அதை ஒட்டி வன்னிய சாதி வெறியர்களின் மரக்காணம் சாதி வெறியாட்டம் பற்றி 29.04.2013 அன்று எமது தோழர்கள் நேரில் சென்று திரட்டிய விவரங்கள் அடிப்படையிலான அறிக்கை.

சம்பவம் நடந்தேறிய விதம்

சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டம்

கடந்த சில வருடங்களாக ராமதாசால் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு வருகிற சித்திரை முழு நிலவுக் கொண்டாட்டங்கள் வன்னிய ஆதிக்கச் சாதி வெறியைத் தூண்டுபவையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. 2002 ல் மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார். பல காலங்களாக அக்கொலைக்குப் பழி தீர்க்க இப்பகுதியில் திட்டமிட்டே சாதிக் கலவரத்தை ஏற்படுத்த ராமதாஸ் வகையறாக்கள் முயன்றுள்ளனர்.

marakanam-12011-ல் நடந்த இக்கொண்டாட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட முயன்ற பொழுது அப்பாதைகளில் இருந்த தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் மீனவ மக்களின் கடும் எதிர்வினையால் இவர்கள் எண்ணம் ஈடேறாமல் போனது. மீண்டும் 2012-ல் பெரிய அளவில் கலவரங்கள் நடக்கவில்லையென்றபோதிலும் அக்கூட்டத்தில் பேசிய காடு வெட்டி குருவின் வன்மம் நிறந்த பேச்சால்தான் தருமபுரி, அதைத் தொடர்ந்த சாதிக் கலவரங்கள் நடந்தேறின.

இவ்வருடம் இக்கொண்டாட்டத்தில் சாதி வெறியோடு பாண்டிச்சேரி சரக்கின் போதை வெறியையும் ஏற்றிக்கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் மரக்காணம் சாதிவெறியாட்டம்.

சம்பவம் நடந்த அன்று இந்த கொண்டாட்டத்திற்காக தமிழகம் முழுவதும் இருந்து வந்த சாதி வெறிக்கும்பல்கள், வண்டிகளின் மேற்கூரைகளில் ஏறிக்கொண்டும், கைலிகளை இடுப்புவரை ஏற்றி கட்டிக் கொண்டும், ஆபாசமான முறையில் கை, கால், உடல் அசைவுகளைச் செய்து காட்டிக் கொண்டும் ஆபாசமாக கூச்சலிட்டுக்கொண்டும் வந்திருக்கின்றனர். மஞ்சள் பனியன்களை அணிந்துகொண்டும் நெற்றியில் ரிப்பன்களைக் கட்டிக் கொண்டுமிருந்தவர்களைப் பார்க்கும் பொழுது விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினரைப் போலவும், பாபர் மசூதி இடிப்பு கர சேவகர்களைப் போலவும், குஜராத் கலவரத்தின் மத வெறியர்களைப் போலவும் வெறிக்கூச்சலிட்டு கொண்டுச் சென்றுள்ளனர். இது பீதியூட்டுவதாக இருந்ததென மக்கள் தெரிவித்தனர்.

இவர்களின் சித்திரைக் கொண்டாட்டத்திற்காக தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வழியாக, மாமல்லபுரத்தை நோக்கி மதியம் 1.30 மணியளவில், ஈசி ஆர் ஒயின் ஷாப், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி போன்ற இடங்களிலிருந்து பெட்டி பெட்டியாக சாராயத்தை வாங்கிக் கொண்டு பல நூறு வேன்களில் வந்த வன்னியர்கள் சாலையின் இரு மருங்கிலும் திறந்திருந்த கடைகளை நொறுக்கியும், சில இடங்களில் வன்னியர் கடைகளைக் கூட சூறையாடிக் கொண்டும் சாரைசாரையாக மரக்காணத்தை நோக்கி விரைந்தனர்.

இவர்களின் அட்டூழியங்களை முன் கூட்டியே அறிந்திருந்ததால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த பெரும்பாலான கடைகளும் உணவகங்களும் மூடியிருந்தன. மீறி திறந்திருந்த கடைகளிலும் ஓட்டல்களிலும் கூட அடாவடித்தனமாக பொருட்களை எடுத்துக்கொண்டும், சாப்பிட்டு பணம் தராமலும் இருந்துள்ளனர். பணம் கேட்டவர்களை அடித்தும் மிரட்டியும் தங்கள் ’வீரத்தை’ நிரூபித்துள்ளனர். புதுவையின் இடையில் உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள இஸ்லாமியச் சமூகத்தினரின் கடைகள் மற்றும் உணவகங்களிலும் அட்டூழியம் செய்துள்ளனர். அங்கிருந்த மதரசாவில் இருந்து வந்த இஸ்லாமியப் பெண்களின் முன் கைலியை அவிழ்த்துக் காட்டியுள்ளனர். பொறுமையின் எல்லை வரை சென்ற இஸ்லாமிய மக்களோடு அப்பகுதி தலித்துகளும், மீனவர்களும், வன்னியர்களும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். கோட்டக்குப்பத்தை தாண்டி பொம்மியாபளையம், பிள்ளைச்சாவடி, கூனிமேடு போன்ற பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

அனுமந்தையில் பெரும்பான்மையாக வன்னியர்கள் இருப்பதால் வந்திருந்த பல நூறு வேன்களுக்கும் அங்குள்ள வன்னியர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வேன்களில் வந்தவர்கள் ஓய்வெடுக்கவும், அங்குள்ள வன்னியர்கள் சில யோசனைகள் சொல்லுமிடமாகவும் அனுமந்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிருந்தவர்கள் கொடுத்த யோசனைப்படிதான் கழிக்குப்பத்திலும், மரக்காணம் காலனியிலும் வீடுகள் கொளுத்தப்பட்டதாக கூனிமேடு மக்கள் கூறினர்.

ஈசிஆர், மரக்காணத்தில் பல பெட்டிக்கடைகளையும் சில கறிக்கடைகளையும் கொளுத்தியுள்ளனர். மரக்காணத்தில் ரோட்டில் இருசக்கர வாகனங்களில் வந்த பெண்களை அசிங்கமாக பேசிக் கேலி செய்து, துப்பட்டாவை இழுத்தும் கலாட்டா செய்தனர். அதையடுத்து குடிவெறியில் காலி பீர் பாட்டில்களை அங்குள்ள கடைகளில் வீசியடித்தனர். கவுண்டர் ஊர்த்தெரு முடிந்து காலனி தொடங்குவதற்கு சில நூறு மீட்டர் தூரத்திலேயே – காலனிக்குள் நுழையும் சந்தினருகிலேயே இந்த வன்னிய வெறிக்கும்பல், எஸ்பி தலைமையிலான வெறும் 15 போலிசாரால் மேற்கொண்டு போகவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத இந்த கொலைவெறிக்கும்பல் வாகனங்களை கவுண்டர் ஊர்ப்பகுதியின் முன்னிருக்கும் முந்திரித்தோப்பிற்குள் நிறுத்திவிட்டு, அங்கே குவிந்துள்ளனர்.

இவ்விடத்தில்தான் அவர்களின் சதித்திட்டம் கச்சிதமாகச் செருகப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்திலேயே ஒர் பள்ளிச்சிறுமியின் தாவணியை உருவி அப்பெண்ணை இழுத்ததும், பார்த்துக் கொண்டு நின்ற காலனியைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ரமேஷ் என்ற இளைஞரை காலனிக்கு செல்லும் தார்ச்சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுக்க திராணியற்ற மற்றவர்கள் காலனிக்குள் வந்து உறவினர்களிடம் விவரம் கூறியதும், ஊர்மக்கள் அவரைக் காப்பாற்ற பதறியடித்துக் கொண்டுச் சென்றனர். முந்திரி காட்டிற்கும் – காலனி ரோட்டிற்கும், ஈசிஆர் ரோட்டிற்கும் – காலனிக்கும் இடையே சில 100 ஏக்கரில் மத்திய அரசின் வனத்துறையினரால் ஆளுயர தைல மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்நேரத்தில் மஞ்சள் பனியன் உடுத்தி தலையில் காவி ரிப்பனும் கையில் பெட்ரோல் பாம், வீச்சரிவாள், கற்கள், கத்தி, பீர் பாட்டிலுடன், இவ்வனப்பகுதி வழியாக உள்ளே நுழைந்த சமூக விரோதக் கும்பல் முதலில் பெண்களை நோக்கி கெட்டவார்த்தைகளைப் பேசி உறவுக்கு அழைத்து, ஜட்டியை கழற்றி தலையில் போட்டு நிர்வாண வெறியாட்டம் ஆடியுள்ளனர். ஆண்களை ”பறப் பொட்டப் பயலுகளா வாங்கடா” – என்று கேவலப்படுத்தியுள்ளனர். பயந்த பெண்கள் வீட்டிற்குள் இருந்த குழந்தைகளை ஒரு கையிலும் உயிரை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டே கடற்கரையை நோக்கி ஓடியுள்ளனர். அதற்குள் காலனிக்குள் நுழைந்தது கொலைவெறிக்கும்பல். பெட்ரோல் பாம்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிக் கொண்டிருந்த தலித் மக்கள் திரும்பிப் பார்த்த போது அவர்கள் குடிசைகள் நிமிடங்களுக்குள் எரிந்து சாம்பலாகி விட்டன. பொருட்கள் வெடித்து சிதறின. காய்த்துக் குலுங்கிய மரங்கள் கரிக்கட்டைகளாயின.

தன் அண்ணன் மகன்களின் குழந்தைகளையும் பெண்களையும் தாக்குதலிலிருந்தது தடுக்கச் சென்ற கலைவாணன் என்பவரையும் ஏகாம்பரம், அல்லிமுத்து ஆகியோரையும் பிடித்து தலையில் அரிவாளால் கொத்தி, நாக்கை அறுத்து கோரதாண்டவமாடியது. அதன் பின்னரே, அதுவரை கையில் துப்பாக்கியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எஸ்பி மூன்று பேரை முட்டிக்கு கீழ் சுட்டு இக்கொலைவெறிக்கும்பலை விரட்டியடித்துள்ளார். கலைவாணன் முதலானோர் தங்கள் உயிரை பணயம் வைத்து தடுக்கவில்லையென்றால், அக்காலனியிலுள்ள அத்தனை குடிசைகளையும் எரித்து சாம்பலாக்கியிருப்பர். எரிக்கப்பட்ட முதல் வீடு கவுண்டர் குடியிருப்பின் எல்லையிலிருக்கும் முதல் காலனி வீடு. அதற்கு அடுத்திருக்கும் ஒரு மாட்டுத்தொழுவம், வைக்கோல் போர், ஏழு குடிசைகள், ஒரு கோயில், ஒரு பெட்டிக்கடை, போன்றவையும், பல மாமரங்களும், பனை மரங்களும், தென்னை மரங்களும், பலா மரங்களும் பெட்ரோல் பாம் வீசி சாம்பலாக்கப்பட்டன. கலைவாணனின் குடிசைக்கு தீ வைத்ததை உடனே தண்ணீரூற்றி அணைத்ததால் அக்குடிசை காப்பாற்றப்பட்டது.

marakanam-map

தாக்கப்பட்ட காலனிப்பகுதி ஈசிஆர் ரோட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ளே இருக்கிறது. ஈசிஆர் ரோட்டிற்கும் காலனிக்கும் இடையே மத்திய வனத்துறையால் தைல மரக் கன்றுகள் வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டிலிருந்து பார்த்தால் உள்ளே வீடுகள் இருப்பதற்கான அறிகுறிகளே தெரியாது. அப்படியிருக்கையில் எங்கு கவுண்டர் குடியிருப்பு முடிந்து காலனி எல்லை தொடங்குகிறது என்பதை அசலூரிலிருந்து ரோடு வழியாகச் செல்லும் எவருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால் இத்தாக்குதல் காலனியின் பின்பகுதிவழியாக நடத்தியிருப்பது இதை ஒரு திட்டமிட்ட கொலைவெறித்தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துகிறது (பார்க்க படம்). ஏனென்றால், மரக்காணம் காலனி மக்கள் ஏற்கனவே 2002-லும் 2011-லும் இச்சாதிவெறிக்கும்பலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். அப்படி இருக்கையில் எஸ்பி தலைமையிலான வெறும் 15 போலீசார் பல நூற்றுக்கணக்கான வாகனங்களை காலனி வாசலிலேயே தடுத்து நிறுத்தி இந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்துள்ளனர் என்றே சொல்லலாம். இத்தாக்குதலை திட்டமிட்டு கொடுத்தது மரக்காணம் பாமக ஒன்றியக் கவுன்சிலரான வன்னியர் சாதியைச் சேர்ந்த சேதுவும் தாக்கிய கொலைவெறிக்கும்பலை பத்திரமாக வழியனுப்பியது அதிமுகவை சேர்ந்த வன்னியரான ரவிவர்மாவும் என்று காலனி மக்கள் கூறினர். இவை ஆளும் அதிமுகவிற்கும் காவல்துறைக்கும் தலித் மக்கள் மீதான இந்த திட்டமிட்ட தாக்குதலில் உள்ள பங்கை பறைசாற்றுகிறது.

மரக்காணம் காலனியில் ராமதாசு – காடுவெட்டிக் கும்பல் நடத்திய இவ்வெறியாட்டத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகளால் அம்மக்கள் சொல்லெணாத் துயரத்தை அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு நேர்ந்ததை பீதியுடன் சொல்வதை கீழே அப்படியே தருகிறோம்.

ஆனந்த் (40)

2.30 லிருந்து 3.00 மணியிருக்கும், போலீசு மெயின் ரோட்டில மறிச்சதும் கூட்டம் கூடியிருச்சு. வேனில வந்தவங்க எல்லாம் முந்திரித்தோட்டம் பக்கத்தில குமிய ஆரம்பிச்சிட்டாங்க. அப்பிடியே உள்ள புகுந்து வந்திட்டாங்க. ஆனா எல்லார் கவனமும் ரோட்டுமேல இருந்ததால யாரும் இங்க நடந்தத கவனிக்கல்ல. பீர் பாட்டில், ஜல்லி கல், பெட்ரோல் பாம்ப், வீச்சரிவாள், கத்தி எல்லாத்தையும் வச்சிருந்தாங்க. முழுக்க திட்டமிட்டு வந்தால் மட்டுமே அப்பிடி எடுத்து வந்திருக்க முடியும். முந்நூறு பேருக்கு மேல காடு வழியா வந்தாங்க. பலா மரத்தை பெட்ரோல் பாம்ப் போட்டு கொளுத்திட்டாங்க (முழுக்க காய்த்து குலுங்கும் அம்மரம் காய்களோடு கருகி நிற்கிறது, கொத்துகொத்தாக பலாக்காய்கள் வெம்மையால் வெடித்து பால் வடிந்து வாடி நிற்கிறது). சினை மாடு ஒன்று தீயில் கருகி இறந்தது. போலீசும் அதிகாரிகளும் பார்வையிட்டுவிட்டு மட்டும் சென்றுள்ளனர். ஆனால் இனிமேலும் இதுபோன்று நிகழாது என்பதற்கு யாரும் உத்தரவாதம் கொடுக்கவில்லை.

இந்த ஊரில பெரும்பாலனவங்க உப்பளத்தொழிலாளிகள். பெண்களும் ஆண்களும் உப்பளத்தில் தான் வேலை செய்கின்றனர். காலையில 6 மணியிலியிருந்து 2 மணி வரைக்கும் வேலை. வருடத்தில் ஆறு மாதம் தான் வேலை. மீதிநாள் வேலையில்லை. இங்க வேற தொழிலும் இல்ல. விவசாய நிலங்கள் பிளாட் போட்டு வித்ததால விவசாயக் கூலிவேலையும் இல்ல. அதனால மீனவர்களுக்கு கொடுக்கற மாதிரி ஏதாவது நிவாரணம் இப்பகுதி மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் தொடர்ச்சியா கேட்டுகிட்டிருக்கோம். இந்த சம்பவம் நடந்த அன்றைக்கு பெரும்பாலானவங்க வேலைக்கு போயிருந்தாங்க. வீட்டிலிருந்த பெண்களும் குழந்தைகளும் வயசானவங்களும் பயந்து உயிர கையிலப்புடிச்சுகிட்டு கடற்கரையை நோக்கி ஓடிட்டாங்க. எதிர்த்து நிற்க இளவட்டங்கள் யாருமில்ல.

தேவி (35)

எங்க வீடு தான் சேரியின் எல்லையில இருக்கு. அதுக்கு அப்புறம் கவுண்டர்களோட வீடு ஆரம்பிக்குது. எங்க வீடு தான் முதலில தாக்கப்பட்டது. பெட்ரோல் பாம் போட்டதில மாட்டுக்கொட்டாயும், வைக்கோல் போரும் வீடும் எரிஞ்சுது. நல்ல வேளையாக மாடுகள் வெளியே மேயவிடப்பட்டதால அவற்றிற்கு ஒண்ணும் ஆகல. காய்ச்ச மாமரம் 2 எரிஞ்சுது (ஏராளமான மாங்காய்கள் கரிந்து கீழே விழுந்து கிடக்கிறது). ஒரு பலா, 4 தென்னை மரங்களும் முழுதாக எரிந்தது. வீடு எரிந்து 5 நிமிடத்தில் சம்பலாயிற்று. உயிர கையில புடிச்சிட்டு ஓடினோம். பொருட்களெல்லாம் வெடிக்கிற சவுண்ட் கேட்டிச்சு. எதுவுமே எடுக்கல. பெட்ரோல் பாம் போட்டதால தான் இவ்வளவு வேகமா எரிஞ்சுது.

(தேவி வீட்டின் எதிர்புறம் முன்னாள் இராணுவத்தில் இருந்தவரின் மாடி வீடும் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். வீட்டின் உட்பகுதியில் கண்ணாடிசில்லும், உடைந்த பீர்பாட்டிலும் இறைந்து கிடக்கின்றன.)

அங்காளம்மாள் (53) (உப்பளத்தொழிலாளி, விதவை)

மக (அனுஷியா (23)) திருமணம் மே மாசம் 27 ஆம் தேதி. கல்யாணத்துக்கு சேத்து வச்ச காசு 3 லட்சமும் 15 பவுன் நகையையும் வீட்டஒடச்சு திருடிட்டாங்க. கூட்டமா சத்தம் போட்டிட்டே திபு திபுன்னு வந்தாங்க. திருடினப்புறம் பெட்ரோல் பாம் போட்டு வீட்டக் கொளுத்திட்டாங்க. மாடு வெந்து செத்துபோச்சு. ஒருபொருளும் எடுக்க முடியல. கல்யாணத்துக்கு சேத்து வச்ச துணியெல்லாம் எரிஞ்சுது. உயிருக்கு பயந்து ஓடிட்டோம். ஒரு மகன் கல்யாணமாகி தனியா இருக்கான். போன பொருள் திரும்பி வருமா? நீங்கெல்லாம் டீவிலயும் பேப்பரிலயும் எழுதுவீங்க? யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க. கலியாணம் நடத்துறதுன்னா சும்மாவா? போனது போனது தான்.

அனுஷியா (23) (மணப்பெண்)

மாப்பிள வீட்டிலேருந்து இதுவரைக்கும் யாரும் வரல. போலீசு எங்க பசங்களையும் அரஸ்ட் பண்ணப்போறதா சொல்றாங்க. அதுக்கு பயந்து தான் வரல.

(இவர்களின் எதிர்வீடான சீனிவாசனின் ஓட்டுவீடு பீர்பாட்டிலாலும் ஜல்லியாலும் தாக்கப்பட்டுள்ளது. ஓடு உடைந்து வீட்டினுள் பீர்பாட்டில் சில்லும் ஓட்டு சில்லும், ஜல்லியும் இறைந்துள்ளது. தாக்குதல் ஆரம்பித்ததும், குழந்தைகள் அனைவரும் வீட்டைவிட்டு ஓடி விட்டனர். எனவே உயிர்சேதம் இல்லை.)

marakanam-4

வேலு மனைவி முள்ளியம்மாள் (28)

எனக்கு 4 புள்ளைங்க இருக்குதுங்க, என் வீட்டுக்காரருக்கு ஆக்ஸிடண்ட் ஆனதால வேலைக்கு போகாம வீட்டுலதான் இருக்காரு, நான் தான் கூலி வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கிறேன். சம்பவம் நடந்த அன்னைக்கு வேலைக்குப் போய்ட்டு வந்துட்டு காலையில சாப்புடலயே இப்பயாவது கொஞ்சம் கஞ்சிக்குடிக்கலாமுன்னு வந்தப்ப தான் ஐயோ அவனுங்க வரானுக வரானுகன்னு எல்லாரும் கத்தினாங்க வெளில எட்டிப் பார்த்தா ஒரு நூறடி தூரத்துல அவனுங்க கத்தி, கபடா அது இதுன்னு எல்லாத்தையும் தூக்கினு ஓடி வந்துகினு இருந்தானுங்க, ஜட்டிய தலைல போட்டுகிட்டு, கைலிய தூக்கி வாங்கடி, வாங்கடி, கத்தியவுட்டு கிழிச்சுடுறேன் வாங்கடின்னு அசிங்க அசிங்கமா கத்திகிட்டே ஓடி வந்தானுங்க. போலீசெல்லாம் நின்னாங்க. எங்க ஆட்கள் போனா கம்ப வச்ச (போலீசு) விரட்டியடிச்சாங்க. ஆனா அவனுகள ஒண்ணும் சொல்லாம வேடிக்க பாத்தாங்க. ஐயோ நம்ம புள்ளைங்களுக்கு எதாவது ஆயிடுமோன்னு எல்லாத்தையும் வாரி தூக்கிகிட்டு, முடியாத எம் புருஷனையும் இழுத்துகிட்டு அப்படியே பீச்சாங்கரை பக்கமா ஓடிட்டு இருந்தோம், கொஞ்ச நேரத்துல பெருசா வெடி வெடிக்கிற மாதிர சத்தம் வருதேனு பாத்தா என் வீடு பக்கத்து வீடுன்னு எல்லா எடமும் பெட்ரோல் குண்டால எரிய ஆரம்பிச்சுது, கொஞ்ச நேரத்துல கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சு. என் ஊட்டுகாரோட சைக்கிளு, ரேஷன் கார்டு, எங்க எல்லாரோட சர்டிபிகேட், எம் புருஷனுக்கு ஆக்ஸிடண்ட ஆனப்ப கொடுத்த ரெண்டு லச்சம், 5 சவரன் நகை எல்லாமே சாம்பலாயிடுச்சு, ரெண்டு நாளா வெளியில தான் பயந்து பயந்து படுத்துனு இருக்கிறோம். மாத்து உடை இல்ல, எதுவுமே இல்லங்க. மறுநாள் கலெக்டர் வந்து பாத்தாங்க. எல்லாம் வராங்க பேசுறாங்க. ”நல்லது நடக்கும் என்கிறாங்க”. தட்டு, பாய், பிளாஸ்டிக் குடம் குடுத்தாங்க. ஆனா நஷ்டஈடு குடுப்போம்னு எதுவும் சொல்லல.

பதினோரு வருசமாச்சு கலவரம் நடந்து. எம்பொண்ணு அப்பொ 3 மாசம். ஆனா அதுக்கப்பறம் அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. மகாநாடு அன்னைக்கு தான்னு தெரியவே தெரியாது எங்களுக்கு. இவங்க மகாநாட்டுக்கு போகப் போறாங்கண்ணு தெரிஞ்சிரிந்தா எங்க ஆட்களெல்லாம் வேலைக்கு போகாம வீட்டில இருந்திருப்பாங்க. அவங்க கத்தி கம்பெல்லாம் கொண்டுவந்தாங்க. பத்து தடி கிட்ட இந்தா எடுத்து போட்டிருக்கோம். திட்டமிட்டு தான் வந்திருக்காங்க. இந்த மூணு வீட்டில நாங்க ஒரு பொருள் எடுக்கல. கட்டுன துணியோட ஓடிப் போயிட்டோம். இந்த பச்சப்புள்ளைக்கு ஒரு ஜட்டிகூட இல்ல. என் ரெண்டு புள்ளைங்களுமே பயந்து ஓடிட்டாங்க. நைட்டு புல்லா தேடியும் அடுத்த நாளைக்கு காலையில தான் கிடச்சாங்க (பதினோரு வயது பொண்ணும் ஐந்து வயது பையனும்). ஆலம்பாட்டில போய் இருந்தாங்க. புள்ளைங்க பயந்துகிட்டு ஸ்கூல் போக மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு தான் கடைசி நாள். எங்களோட சாதின்னா அவ்ளோ கேவலம். இவங்களப் போய் நாங்க கொடுமப்படுத்துறோமா? நாங்க உழைக்கிறோம்; சம்பாதிக்கிறோம்; சாப்பிடுறோம்; நாங்க எப்பிடியோ காலத்த ஓட்டுறோம். எங்களுக்கு உக்கார இடமில்லாம ஆக்கிட்டாங்க பாருங்க. நாங்க இன்னைக்கு நடுத்தெருவுல உக்காந்துக்கிட்டிருக்கிறோம்.

அவ்ளோ மரமும் போயிடுச்சு. ஒரு மரம் வச்சு வளர்த்த எவ்வளோ நாளாகும். செஞ்வங்க செஞ்சிட்டு போயிட்டாங்க. மழ பெஞ்சா கூட இதெல்லாம் வருமோ வராதோ?

இத்தின வருசமா போறாங்க. ரோட்டுமேலெயே அலப்பற பண்ணிட்டு போறாங்க. ஆனா இப்பொ தானே உள்ள வந்திருக்காங்க. அப்பொ இவங்க (உள்ளூர் வன்னியர்கள், கவுண்டர், கிராமணி போன்றவர்களை இங்கே குறிப்பிடுகின்றனர்) ஆதரவு குடுக்காமலா வந்திருப்பாங்க. உள்ள காலனி இருக்குன்னு எப்பிடி தெரியும். காலனிக்கு அந்தப்பக்கம் பிரச்சன கிடையாது. கிராமணி, கவுண்டர் புல்லா அங்க இருக்காங்க. இதுவரைக்கும் எங்களுக்கும் அவங்களுக்கும் பிரச்சன கிடையாது. நாங்க ஊருக்குள்ள போவோம் வருவோம். கிராமணி தான் கடை வச்சிருக்காங்க, அங்க தான் பொருளெல்லாம் வாங்குவோம். ஆனா இந்த பிரச்சனைக்கப்புறம் நாங்க போய் பொருள் கேட்ட தர மாட்டேங்கிறாங்க. நேத்தைக்கு கூட தக்காளி வெங்காயம் வாங்க போனப்பொ இல்லைன்ண்ட்டாங்க. ஆனா எங்க கண்ணு முன்னாடியே சாக்கில வெங்காயம் இருந்தது. அப்புறம் வெயிலில போய் 2 கி.மீ அந்தாண்ட மகராச கோயில் பக்கம் போய் வாங்கி வந்தாங்க. இம்மாம் நாளும் குடுத்துக் கிட்டு இருந்தவங்க இப்பொ குடுக்கமாட்டேன்றாங்க.

முருகன் (37) மனைவி நதினா (34)

S. P. வண்டிய பா. ம. க வினர் அடிச்சு நொறுக்குகிறாங்க. போலீசு அத வேடிக்கை பார்த்துக்கொண்டு நிக்குது, ஆனா எங்களை தற்காத்துக் கொள்ள நாங்கள் எதிர் தாக்குதல் செய்யும் போது மட்டும் தடுக்குறாங்க அடிக்குறாங்க. தினமும் வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சாப்பாடு, ஆனா இந்த கலவரத்தினால யாரும் வேலைக்கு போகல. போலீசு வேற எங்கள கைது பண்ண ராத்திரி நேரத்தில வராங்க. போலீசு துரத்துவதினால் இரவு நேரங்களில் ஆம்புளைங்க ஊரவிட்டு வெளியே போயிடறாங்க. 5 புள்ளைங்களை வெச்சுக்கிட்டு பொம்புள நான் எப்படி தனியா இருக்கமுடியும்? ரொம்ப பயமா இருக்கு. ஒரு நாளைக்கு வேலைக்கு போகலேனா, எங்களுக்கு சாப்பாடு இல்ல. அவசரத்திற்கு அம்மா தான் பணம் கொடுத்தாங்க, அவங்க பெட்டிக் கடையையும், கோயிலையும் கொளுத்திட்டு போய்ட்டானுங்க. பொருளெல்லாம் எரிஞ்சு போச்சு. மாத்திக்க ஒரு துணி கூட இல்ல. 4 நாளா ஒரே துணியத் தான் குழந்தைக போட்டிருக்காங்க. எங்களுக்கு பத்து பவுன் நக இருந்துது, பெரிய பொண்ணுக்கு சடங்கு பண்ண ஒரு லட்சம் பணம் கடனா வாங்கி வெச்சிருந்தோம், முக்கியமா பசங்களோட சர்டிபிகேட், அவங்களுக்கு அடுத்த வருஷம் தேவையான யூனிஃபாம், ஷூ, பை, புத்தகம் எல்லாம் எரிஞ்சி போச்சு. பொதுவா நாங்க எல்லாத்தயும் இழந்து நிக்கிறோம். இப்போதைக்கு எம் பசங்களப் படிக்க வெக்க ஏதாவது உதவி செஞ்சீங்கனா நல்லா இருக்கும்.

marakanam-11

கலைவாணன் (45)

அரசு பேருந்து ஓட்டுநராக இருந்தேன். ரண்டு கண்ணும் இப்பொ தான் ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. அண்ணன் மருமகளையும் குடும்பத்தையும் தாக்குவதைத் தடுக்க போனபோது ஏழு பேரு சுத்தி வளைச்சு அருவாவால தலையில கொத்தி நாக்க அறுத்திட்டாங்க. தலையில 35 தையல்களும் நாக்கில் 7 தையல்களும் போட்டிருக்காங்க. ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணாமல் வீட்டிற்கு அனுப்பினாங்க. மருத்துவச் செலவிற்கு அரசாங்கம் பணம் எதுவும் கொடுக்காததால என்னுடைய சொந்த பணத்தைத்தான் செலவு செய்தேன்.

சாதிவெறிக்கும்பலால் தாக்கப்பட்டு இறந்த சேட்டு

குடிசை வீடுகளை எரித்து நாசமாக்கிய இக்கும்பல், மக்களைத் தாக்க அவர்களை துரத்திக் கொண்டு வந்தனர். இத்தாக்குதலால் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதில் சேட்டு என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேட்டு இரண்டு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

அனுமந்தை

வன்னியர்கள் அதிகமாகவும் ஆதிக்கமாகவும் வாழும் அனுமந்தையில் 30 சேரிக் குடும்பங்கள் உள்ளன. சித்திரைத் திருவிழாவிற்கு போன வழியில் காலனிகளை தாக்கிய வன்னியர்கள் வந்த வாகனங்கள் இங்குதான் நிறுத்தப்பட்டு. வாகனங்களில் வந்தவர்கள் இளைப்பாற வசதி செய்துகொடுக்கப்பட்டது. மீனவர்களாலும் இஸ்லாமியர்களாலும் பதிலடி கொடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட வன்னியர்களை இவ்வூர் வன்னியர்கள் தான் மாற்று வழியில் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளனர். இங்கு சென்று ஒரு வன்னியரிடம் விசாரித்த போது ”காலனிமக்கள் மஞ்ச சட்டை போட்டுக் கொண்டு வந்து வன்னியர்களைத் தாக்கிய”தாகக் குற்றஞ்சாட்டினார்.

கூனிமேடு

கூனிமேடு பேருந்து நிருத்தத்தில் உள்ள சில கடைகளில் இச்சம்பவம் பற்றி கேட்டபொழுது பெரும்பாலானவர்கள் பேச விரும்பாதவர்கள் போலக் காணப்பட்டனர். பட்டும் படாமலும் பேசினர். காலனிப்பக்கம் போனபொழுது கூட அங்கிருந்தவர்கள் இதுகுறித்துப் பேச அச்சமுற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் காலனியின் மற்றொரு இடத்தில் இருந்த சில இளைஞர்களிடம் பேசியபொழுது அவர்களிடம் கோபக்கனல் தெரிந்தது. அவர்களின் மொழியில் முக்கியமான சிலவற்றை மட்டும் கொடுக்கிறோம்.

“பிரச்சினை நடந்த அன்னைக்கு இந்தப் பக்கம் ரோட்டு முழுக்க, இங்கருந்து அனுமந்த வரைக்கும் சுமாரா ஆயிரத்துக்கும் அதிகமா வண்டி போச்சு. மது ஒழிப்ப பத்தி பேச ஒரு சதவீதம் கூட தகுதி இல்லாத ஆளு ராமதாசு, வண்டியில போன அவன் சாதிக்காரனுங்க எல்லாம் 100 சதவீதம் குடிச்சிட்டுதான் போனானுங்க. ரோட்டுபக்கம் இருந்த முஸ்லீம், மீனவங்கன்னு எல்லாரையும் அசிங்கசிங்கமா பேசிக்கிட்டு இருந்திருக்கானுங்க, ஒரு கட்டத்துல எல்லாரையும் அடிக்கற அளவுக்கு போய்ட்டானுங்க, அங்க இருந்த முஸ்லீம், மீனவங்க திருப்பி தாக்க ஆரம்பிச்சாங்க, அப்புறம் ஓடி வந்து எங்களையும் உதவிக்கு கூப்பிட்டாங்க, நாங்க யாரும் பயந்துக்கிட்டு போகல, நாங்க மட்டும் அன்னைக்கு போயிருந்தா பெரிய கலவரமாயிருக்கும் அவனுங்க சேரிக்குள்ள வந்து எல்லாரையும் வெட்டி போட்டுட்டு போயிருப்பானுங்க. மரக்காணத்திலயே 15 போலிசதான் போட்டுருந்தாங்க, இங்கயும் வெறும் மூனு போலிசுதான் இருந்துச்சு. உயிரே போகுதுன்னு சொன்னாக்கூட மூனு போலிச வெச்சுகிட்டு ஒன்னும் பண்ணியிருந்திருக்க முடியாது. அதான் வருஷா வருஷம் இவனுங்க வரும்போது பிரச்சின நடக்குதுல்ல, அத தெரிஞ்சாவது கொஞ்சம் அதிகமா போலிச போட்டிருக்கலாம். போலிசு மொதக்கொண்டு எல்லாரும் பிளான் பண்ணிதான் இது நடந்த மாதிரி இருக்கு.

அவுங்க பிளானே ஈ.சி.ஆர் பக்கத்துல இருக்குற தலித் மக்கள எதாவது செய்யனுங்கிறதாதான் இருந்திருக்கு. ரோட்டுல போனப்ப கூட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியோட கொடிய பாத்துட்டு இங்க காலனி எங்க இருக்குன்னு கேட்டுட்டே போயிருக்கானுங்க. காலனி கொஞ்சம் உள்ள இருந்ததால, எங்க உள்ள போய் மாட்டிக்குவோமோன்னு இங்க வராம வெளியிலயே அடிச்சுட்டு போயிருக்கானுங்க. இதுல என்ன ஒரு கூத்துன்னா பிள்ளைச்சாவடி, பொம்மியாப்பாளையம் பகுதியில அவனுங்க சமுதாயத்து மக்களையே தாக்கிருக்கானுங்க. அப்புறம் அந்தப்பகுதியில இருந்த வன்னியர்களே வந்து நாலஞ்சு வண்டிய ஒடச்சுப்போட்டு, ரோட்டுல மரத்த வெட்டி, மறியல் செஞ்சு, வந்தவங்கள மெரட்டி அனுப்பியிருக்காங்க.

கடந்த முப்பது நாப்பது வருஷமா நாங்க எல்லாம் அண்ணன் தம்பியாதான் பழகினு இருக்கிறோம். ஏதாவது பிரச்சன வந்தாக்கூட நாங்களே பேசி முடிச்சிக்குவோம். ஆனா இப்பல்லாம் நாங்க ரோட்டுக்கு வந்தாலே அவனுங்க ஒரு மாதிரியா பாக்குறானுங்க. அவனுங்களே பாக்கலனா கூட நாங்க ஒருமாதிரியா பாக்கவேண்டிய சூழ்நிலை இருக்குது. நான் அன்ணா தி.மு.க காரந்தான், பிரச்சினை நடந்தப்ப கூட இத பத்தி இந்த தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அரிதாஸ் கிட்ட சொன்னோம், பிரச்சினை நடந்த மரக்காணம் பகுதிக்கு கூட வந்து பாக்கல, எதுவும் செய்யல. திருமாவளவன் மட்டும் வந்து பாத்துட்டு கட்சிகாரங்க கிட்ட இருந்து கொஞ்சம் நிதி வாங்கி கொடுத்துட்டு, எல்லாரையும் பதிலுக்கு திருப்பி அடிக்காதிங்க, எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. இது அவரோட பெருந்தன்மையைத்தான் காட்டுது. இன்னைக்கி கூட முதலமைச்சர் எல்லாருக்கும் நிதி வழங்கறதா அறிவிச்சிருக்காங்க, இதுல பாதிக்கப்பட்டவங்களுக்கும், பிரச்சினை பண்ணவங்களுக்கும் ஒரே நிதிதான் குடுக்கப் போறாங்களாம். இத யாரு கிட்ட போயி சொல்றது? காலனில அ.தி.மு.க, தி.மு.க, அப்புறம் வி.சி.கன்னு மூனு கட்சிதான் இருக்குது. அம்மா பா.ம.க கூட கூட்டணி வக்கிறதுக்காகத்தான் இப்படி சமாதானமா போராங்கன்னு சொல்றாங்க. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா நாங்களும் பறயனுக்காகத்தான், வி.சி.கவுக்குதான் ஒழைப்போம், ஓட்டுப்போடுவோம்.

பிரச்சன பண்ணவங்க போயிட்டானுங்க ஆனா போலிசு அடாவடிதான் தாங்க முடியல. இப்ப கூட தெனமும் போலிசு வந்து ஆம்பிளைங்கள கைது செய்யறதுக்கு தேடிட்டு இருக்கிறதா சொல்றாங்க. வன்னியங்கள கொஞ்சம் பேரக் கைது பண்ணதால பதிலுக்கு எங்களையும் கைது பண்ணனுமாம். நாங்க எல்லாரும் பயந்து, பதுங்கிட்டு தான் இருக்கோம். நேத்து ராத்திரி கூட இப்படி எங்கள்ல கொஞ்சம் பேரு பயந்து காட்டுபக்கம் தலதெறிக்க ஓடி கை, கால ஒடச்சிகிட்டோம். எத்தன நாள் இப்படி போகும்னு தெரியல. எல்லாம் பண்ணவங்க ஊர்த்தெருவுல நிம்மதியா இருக்காங்க ஒன்னும் பன்ணாத நாங்க தலமறைவா ஒளிஞ்சி வாழறோம்.”

இந்துக் கோயிலை சாம்பலாக்கிய வன்னிய சாதிவெறி

marakanam-13

கடந்த சித்திரா பவுர்ணமி மாநாட்டில் ராமதாஸ் பேசும் போது “இவங்கெல்லாம் (தலித்துகள்) காதல் நாடகம் ஏன் நடத்துகிறார்களென்றால் சாதியை ஒழிப்பதற்காகவாம். சாதிய எப்படி ஒழிப்பீங்க என்று கேட்டால் இந்து மதத்தை ஒழிப்பேன்றாங்க” என்று RSS ன் பினாமியாக தலித்துக்கள் மீதும் சாதி ஒழிப்பு அரசியல் மீதும் விஷத்தைக் கக்கிய ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் இந்து மதத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இவர் இப்படி பேசுவதற்கு சில மணிநேரத்திற்கு முன் தான் போதையினாலும் சாதியினாலும் வெறியூட்டப்பட்ட ராமதாஸின் அடிப்பொடிகள் மரக்காணம் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது செல்வியம்மாள் (56) என்ற பெண்மணி பூசை செய்து வந்த அங்காளபரமேஸ்வரி கோயிலில் சாமிக்கு போடப்பட்டிருந்த ஏழு பவுன் நகையையும் 36,000 ரூபாய் பணத்தையும் திருடி விட்டு அக்கோவிலின் மீது பெட்ரோல் பாம் வீசி எரித்துள்ளனர். அங்கிருந்த பாத்திரங்களும் பூஜைசாமன்களும் வெடித்துள்ளது. மூலஸ்தானத்திலிருக்கும் அங்காளபாமேஸ்வரி பாதி எரிந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இங்கு திருவிழா விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமானம் அதையொட்டி இருந்த பெட்டிக் கடை வருமானத்தையும் வைத்து தனது மகளுக்கு அவ்வப்போது உதவி வந்தார் செல்வியம்மாள். இந்து மதக்காவலன் ராமதாஸ் தூண்டிய சா’தீ’ அங்காளபாமேஸ்வரி அம்மனை எரித்துச் சாம்பலாகியதுடன் அவளை நம்பி வாழ்ந்த ஆறு ஜீவன்களையும் பட்டினி போட்டுள்ளது. இந்துமதத்தை அழிப்பது சிங்கங்களா? சிறுத்தைகளா?

பேண்டவன விட்டுட்டு பீயை வெட்டும் போலீசுக்கும்பல்!

மரக்காணம் பகுதியில் மட்டுமன்றி ஈசிஆர் முழுக்க சாலையின் இருமருங்கிலும் பல்வேறு அட்டுழியங்களை நடத்தி சென்றுள்ள சாதிவெறிக்கும்பல் மீது குறிப்பிட்டளவு எந்த நடவடிக்கையும் போலிஸ் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் சம்பவம் நடந்த அன்றிலிருந்து இன்றுவரை மரக்காணம் காலனி மக்களை தினமும் இரவு கைது செய்வதாக கூறி போலீசே புரளியை உலவ விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள ஆண்கள் – குறிப்பாக இளைஞர்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தங்க பயப்படுகின்றனர். மரக்காணம் காலனிப் பகுதியில் மட்டுமன்றி கூனிமேடு கழிக்குப்பம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்களும் கைதுக்கு பயந்து இரவில் சிறு அரவம் கேட்டால் கூட கண்மண் தெரியாமல் ஓடி ஒளிவதை பார்க்க முடிந்தது. தென்மாவட்டத் சாதி மோதல்கள் நடந்த போது போலீஸ் ஆதிக்க சாதியினரை விட்டுவிட்டு படித்த தலித் இளைஞர்கள் மீது – குறிப்பாக வேலைக்கு தேர்வாகி நின்ற இளைஞர்கள் மேல் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவர்கள் எதிர்காலத்தையே சீரழித்ததை இங்கே ஒப்புநோக்க வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான தலித்துகளையே கைது செய்வதும் மிரட்டுவதும் ஆனால் தாக்கிய சாதிவெறியர்களை கண்டுங்காணாமல் இருப்பதும் போலீசின் ஆதிக்கசாதி சார்பை பறைசாற்றுகிறது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் மரக்காணம் பகுதியில் வெறும் பதினைந்து போலீசாரும் கூனிமேட்டில் மூன்று போலீசாருமே பாதுகாப்புக்கு நின்றுள்ளனர். ஆனால் தாக்குதலுக்குபின் இப்பகுதிகளில் ஊடுருவியுள்ள கியூ பிரிவு போலீசாரும், உளவுத்துறையும் போலீசும் உண்மையறிய இம்மக்களை சந்திக்க வரும் பல்வேறு அமைப்பினரையும், உதவ முன்வரும் தனி நபர்களையும் அடையாளம் காண்பதிலும் அவர்களை விசாரணை செய்வதிலும் அவர்களின் சுய விவரங்களை திரட்டி ஆவணப்படுத்துவதிலுமே முனைப்புடன் செயல்படுகின்றனர். போலீசின் உள்ளூர் கைக்கூலிகளாலேயே (இன்ஃபோர்மர்களாலேயே) பெரும்பான்மையான உண்மையறியும் குழுக்கள் ’வழிநடத்தப்படுவதையும்’ பார்க்க முடிந்தது. இதனால் ஒரே வகைப்பட்ட தகவல்களையே (Stereo type) பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இத்தகைய நபர்கள் வலிந்து வந்து முந்திரிக் கொட்டைத் தனமாகப் பேசுவதையும் பார்க்க முடிந்தது.

ஈசிஆருக்கும் காலனிக்கும் இடையே உள்ள வனத்துறையின் தைல மரக்காடு தான் மரக்காணம் தாக்குதலை இவ்வளவு வெற்றிகரமாக நடத்த சாதிவெறியர்களுக்கு உதவியுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அடுத்த நாளே வனத்துறை அதிகாரிகள் தைலமரங்களை கணக்கெடுத்துள்ளனர் (பெட்ரோல் பாம்ப் வீசப்பட்டு சாம்பலாக்கப்பட்ட தென்னை, பலா, மா, பனை போன்ற மரங்கள் எந்த கணக்கிலும் சேர்க்கப்படவில்லை). தலித்துகளை தாக்குவதற்கு வெறிக்கும்பலுக்கு தோதாக இருந்த இக்காட்டை தலித்துகள் அழித்துவிடுவார்கள் என்று வனத்துறை நினைக்கிறார்கள். அதனால் இந்த மரங்களில் கைவைத்தால் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவதாக தலித் மக்களை மிரட்டியுள்ளனர். தலித்துகள் ஒன்றுபட்டு நின்று எதிர்த்த பின்னரே பின்வாங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிகமான பாதிப்புக்குள்ளான முருகன் – நதினா குடும்பம் இந்த தைலக் காட்டின் எல்லையில் உள்ளது. 12 வயதிற்கு கீழுள்ள நான்கு பெண்குழந்தைகளுடனும் ஒரு கைக்குழந்தையுடனும் பீதியில் வாழும் நதினா மீண்டும் தாங்கள் இந்த தைலக்காட்டின் வழியாக இரவில் தாக்கப்படலாம் என்று பயப்படுகிறார். இருக்கும் ஒரே ஆண்துணையான நதினாவின் கணவர் முருகனோ கைதிற்கு பயந்து இரவில் தன் மனைவி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கமுடியாமல் தலைமறைவாகிறார். இவர்களின் மூன்று வயது மகள் ஜனனியும் வயதிற்கு வந்த 12 வயது மகளும் இரவானால் சாம்பலாகிய வீட்டில் அருகில் வரவே பயப்படுகின்றனர். தாக்குதலின் பீதியிலிருந்து ஜனனி என்ற மழலை இன்னும் விடுபடவே இல்லை. தாக்கிய சாதிவெறியர்கள் சுதந்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் நிவாரணங்கேட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருகிறார்கள்; தாக்கப்பட்ட தலித்துகளோ உளவுத்துறை, கியூ பிராஞ்ச், போலீஸ், வனத்துறைக்காவலர்கள் என சட்டத்தின் அனைத்து பாதுகாவலர்களாலும் பயமுறுத்தபட்டு பீதியில் தைலமரக்காட்டின் அசைவுகளை வெறித்துப் பார்த்து சாம்பலான குடிசைகளின் அருகில் இரவை கழிக்கின்றனர்.

தாக்குதலின் பின்புலம்

தமிழகத்தில் தனது அரசியல் எதிர்காலமே சூன்யமாகப் போகிறது என்பதை உணர்ந்த ராமதாஸ், இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்க சாதி வெறி என்கிற ஆயுதத்தை தர்மபுரியில் எடுத்ததை நாம் அறிவோம். தர்மபுரி வன்னிய சாதிவெறி அட்டூழியத்திற்குப் பிறகான இதன் புதிய பரிணாமம் தலித் அல்லாதவர்களின் ஒருங்கிணைப்பு என்பதில் முடிந்துள்ளது. இதன் மூலம் அனைத்து சாதி இந்துக்களையும் தனது தலைமையில் திரட்டி தமிழகத்தை சாதிவெறியர்களின் கூடாரமாக்கி ஓட்டுப்பொறுக்கலாம் என்பதே இத்தாக்குதலின் உள்நோக்கமாக இருந்துள்ளது. அதன் ஒரு முன்னோட்டமாகவே மரக்காணத்தில் நிகழ்ந்த இக்கலவரத்தைப் பார்க்க முடிகிறது. கலவரம் நடந்த பகுதி ஓப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதும், தர்மபுரியில் தலித்துக்கள் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் போலவே இங்கும் நடந்தேறியுள்ளது. அங்கு தேர்ந்தெடுத்த யுக்திகளையே இங்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஈ.சி ஆரில் மரக்காணம் சம்பவம் மட்டுமே தலித்துகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாக உள்ளது. ஆனால் கோட்டைகுப்பம், பொம்மியாபாளையம், பிள்ளையார்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, கழிக்குப்பம் போன்ற இடங்களில் போதை வெறியிலும் சாதிவெறியில் மிதந்த இக்கும்பல் தலித்துகள், மீனவர்கள், இஸ்லாமியர்கள், வன்னியர்கள் முதலான எல்லா தரப்பினரையுமே தாக்கியுள்ளனர்; கடைகளை சேதிப்படுத்தியுள்ளனர்; பெண்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர்; ஆபாசமாக பேசி கேவலப்படுத்தியுள்ளனர். பொறுமையிழந்த மீனவர்களும் இஸ்லமியர்களும் திருப்பி தாக்குதலில் ஈடுபட்ட பின்னர் மட்டுமே இந்த சமூகவிரோதக்கும்பல் பின்வாங்கி ஓடியுள்ளது. பொம்மியாபாளையம், பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் தன் சொந்த சாதியான வன்னியர்களிடமும் இதே முறையில் நடந்ததால், இவர்களை பல மணிநேரம் அப்பகுதி வன்னியர்கள் தாக்கி துரத்தியடித்துள்ளனர். தங்கள் பகுதி வழியாக மேற்கொண்டு செல்ல விடாமல் வேன் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இச்சம்பவங்களை தொகுப்பாகப் பார்த்தால், மாநாட்டிற்கு சென்ற இச் சமூக விரோதக் கும்பலுக்கு சாதிவெறி மதவெறி போதைவெறி மட்டுமன்றி கும்பலாகச் சேர்ந்தால் வரைமுறையற்ற கண்மண்தெரியாத அளவு வன்முறையில் ஈடுபடலாம் என்ற லும்பன்களின் கும்பல் வன்முறை (Mob violence) மனோபாவம் தான் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய கும்பல் வன்முறையின் விளைவான கட்டுக்கடங்காத வெறியாட்டம் தலித்துகள் மட்டுமன்றி பெண்கள், இஸ்லாமியர்கள், பிற சாதிகளுக்கும், அவர்களின் சொந்த சாதிக்கும், ஏன், ஒட்டுமொத்த சமூகத்திற்குமே எதிரானது. எனவே வெறியூட்டப்பட்ட இத்தகைய கும்பல்கள் ஒன்றுசேரும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவதை எதிர்காலத்தில் தடுக்கவில்லையென்றால், இது சாதி வெறியர்களின் தற்போதைய இலக்கான தலித்துகளுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள்
____________________________________