privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !

பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !

-

த்தம் காலனியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே மரக்காணம் தாக்குதலும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில், மாமல்லபுரம் வன்னியர் விழாவுக்குச் சென்ற கும்பல் எந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்று அது முறியடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் இப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவைப்பு, கொள்ளை உள்ளிட்ட அனைத்தும் நத்தம் காலனி தாக்குதலை அப்படியே ஒத்திருக்கின்றன.

கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே இருப்பதும், இடையில் இருக்கும் அடர்த்தியான தைலமரக் காட்டினால் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருப்பதுமான தாழ்த்தப்பட்டோர் காலனியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உள்ளூர் பா.ம.க.வினர்தான் உடன் இருந்து திட்டமிட்டுக் கொடுத்துள்ளனர். இது தன்னெழுச்சியாகவோ, தற்செயலாகவோ நடந்த தாக்குதல் அல்ல. பிரச்சினைக்குரிய இடம் என்று தெரிந்தும் அந்த இடத்தில் மாமல்லபுரம் செல்லும் வண்டிகள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டதும், அங்கே பெயருக்கு சில போலீசார் மட்டுமே நின்றிருந்ததும், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற போலீசு ஒத்துழைத்துள்ளதையே காட்டுகிறது. இந்த விசயத்திலும் நத்தம் காலனி தாக்குதலின்போது போலீசு நடந்து கொண்டதற்கும், மரக்காணத்தில் நடந்துள்ளதற்கும் அதிக வேறுபாடு இல்லை.

கட்டையன் தெரு
மரக்காணத்திற்கு அருகிலுள்ள கட்டையன் தெரு என்ற ஊரில் வன்னிய சாதிவெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு.

மாமல்லபுரம் விழாவாகட்டும், மரக்காணம் தாக்குதலாகட்டும் இரண்டின் நோக்கமும் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு ஆதிக்க சாதிவெறிதான். இருப்பினும் வன்கொடுமை குற்றம் என்ற அடிப்படையில் கையாள்வதற்குப் பதிலாக, பொதுச்சோத்துக்கு சேதம், வன்முறை என்ற சட்டம்-ஒழுங்கு கோணத்திலேயே பெரும்பாலான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது ஜெ அரசு. நத்தம் காலனி தாக்குதலிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதிவெறியர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், முதல் சுற்றில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கினால் கைது செய்யப்பட்ட 141 பேருக்கு மேல் வேறு யாரும் அதன் பின்னர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

சாதி வெறியர்களாக இருக்கட்டும், இந்து மதவெறியர்களாக இருக்கட்டும் அவர்கள் மீது உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதுமில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதுமில்லை. மாறாக, “தடையை மீறியது, உரிய நேரத்தில் கூட்டத்தை முடிக்காதது” போன்ற உப்புப் பெறாத விசயங்களுக்காக அப்போதைக்கு கைது செய்து சில நாட்கள் சிறை வைக்கப்படுகின்றனர். அந்த கைது நடவடிக்கையையே பெரும் சாதனை போல ஊடகங்கள் மூலம் காட்டப்படுகின்றன. அல்லது ஒரு சிலர் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு ஓரிரு மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். தற்போது நடந்து வருவதும் அதுதான்.

மாமல்லபுரம் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் சரி, ராமதாசின் தாக்குதல் கருணாநிதியையும் தலித் மக்களையும் நோக்கியே இருந்தது. “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இத்தகைய சாதிவெறிப் பேச்சுகள், நடவடிக்கைகளுக்காக ராமதாசு, காடுவெட்டி குரு ஆகியோர் மீது டஜன் கணக்கில் வன்கொடுமை வழக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெ. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

“வன்னியனைத் தவிர வேறு யாரையும் ஜெயிக்க விடமாட்டோம், நாங்க கண்ணசைத்தா என்ன நடக்கும் தெரியுமா, நாங்க கலவரம் பண்ணா தமிழகம் தாங்காது”என்ற மாமல்லபுரம் பேச்சுகள் தலித் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டி மொத்த சமூகத்துக்கும் சவால் விட்டன. வெறியூட்டும் பேச்சுகளால் முடுக்கி விடப்பட்ட வன்னிய குல சத்திரியக் கொழுந்துகள், தமிழகத்தை ஆளப்பிறந்த பல்லவ மன்னர் பரம்பரை என்ற தோரணையில், மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களைத் தமது பிதுரார்ஜித சொத்தாகக் கருதி, அவற்றின் மீது உரிமையோடு மஞ்சள் கொடியேற்றி நடனமாட, இந்தச் சூழலால் போதை தலைக்கேறிய ராமதாசு, “முடிந்தால் வழக்குப் போடு” என்று ஒரு பேச்சுக்கு சவால் விட்டார். இதன் விளைவுதான் கத்திரி வெயிலில் திருச்சி சிறையே அன்றி, அது சாதிவெறி நடவடிக்கைக்கான வழக்கோ, தண்டனையோ அல்ல.

இருப்பினும், அந்தக் கைதுக்கும் பயன் இல்லாமல் இல்லை. கைது நடவடிக்கைகள் தொடங்கியவுடன் “தமது கண்ணசைவில் ஒரு மாவட்டத்துக்கே தீ வைக்கும் ஆற்றல் பெற்ற” ஆண்ட பரம்பரை சாதிச்சங்கத் தலைவர்கள் தெறித்து ஓடி ஒளிந்து, முறுக்கு மீசைகளின் “வீரத்தை”அம்பலப்படுத்திக் கொண்டனர். அதேநேரத்தில் ராமதாசு கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் மூலம், தாங்கள் தலித் மக்களுக்கு மட்டுமின்றி மொத்த சமூகத்துக்குமே எதிரிகள் என்பதை பா.ம.க. சாதி வெறியர்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்.

ராமதாசு கைதுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் உயிரைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் பா.ம.க. காலிகள் ஓடும் பேருந்தின் ஓட்டுநரைக் குறிவைத்து இரவு நேரத்தில் கல் வீசியிருக்கின்றனர். ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். என்ன ஏதென்று தெரியாத பயணிகள் எகிறிக் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர். லாரிகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்திருக்கின்றனர். அரியானா மாநில ஓட்டுநர் ஒருவர் தீக்காயத்தால் இறந்திருக்கிறார். பாலங்கள், குடிதண்ணீர்க் குழாய்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நியாய விலைக்கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

சாதிவெறியர்களின் இந்த “எதிர்ப்பு” நடவடிக்கைகள் அனைத்திலும் பொதுமக்களும் பொதுச்சொத்துக்களுமே இலக்காகியிருக்கின்றன. ஓடும் பேருந்தின் ஓட்டுநர் மீது கல்வீசிய அந்தக் கும்பல், பேருந்து தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்தால் உயிரிழக்க கூடிய மக்களைப் பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை. தீக்கிரையான ஓட்டுநரைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த சமூக விரோதத் தன்மை, ஐயா “கைது” தோற்றுவித்த கோபத்தினால் ஏற்பட்ட பிறழ்வு அல்ல. ராமதாசின் வக்கீல்களான பின்நவீனத்துவ அறிஞர்கள் கூறும் “கொண்டாட்ட” மனோநிலையிலும் அவர்கள் சமூகவிரோதிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த செல்வம்
ராமதாசுக் கைதைக் கண்டிப்பது என்ற பெயரில் பா.ம.க. ரவுடிகள் பேருந்து மீது நடத்திய கல்வீச்சில் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த செல்வம்.

மரக்காணம் காலனியைத் தாக்குவதற்கு முன்னரே, பல இடங்களில் இருபுறமும் இருந்த கடைகளை களவாடிக் கொண்டும், சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல்காரர்களைத் தாக்கிக் கொண்டும், கோட்டக்குப்பம் மதரசாவிலிருந்து வெளியில் வந்த இசுலாமியப் பெண்களை நோக்கி கைலியை அவிழ்த்துக் காட்டி நடனமாடிக்கொண்டும்தான், சத்திரிய குலக்கொழுந்துகள் மாமல்லபுரம் நோக்கி சென்றிருக்கிறார்கள். பிள்ளையார் குப்பம், கூனிமேடு, அனுமந்தை போன்ற பல ஊர்களில் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட வன்னியர்கள், மீனவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் சேர்ந்து இவர்களைத் திருப்பித் தாக்கியிருக்கிறார்கள்.

ராமதாசு தூண்டிவரும் வன்னிய சாதிவெறி என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும்தான் தாக்கும் என்று யாரேனும் எண்ணினால் அது தவறு. சாதி என்பது தன் இயல்பிலேயே ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதித் திமிரும், லும்பன் கலாச்சாரமும், வெறியூட்டப்பட்ட கும்பல் மனோபாவமும் சமூக விரோத சக்தியாக மட்டுமே நடந்து கொள்ள முடியும். இந்த விசயத்தில் வன்னியர் சங்கம் மட்டுமல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.

முத்தரையர் சங்கத்தினர் சென்ற ஆண்டு திருச்சியில் ரவுடித்தனம் செய்து மக்களிடம் அடிவாங்கினர். தேவர் குருபூசை, மருது குருபூசை என்றால் அந்தக் கும்பல் போகும் பாதை முழுவதும் கடையடைக்கப்பட்டு ஊர்களெல்லாம் சுடுகாடுகளாகி விடுகின்றன. பயந்து ஓடுவது மொத்த சமூகமும்தான். சாதிச் சங்கங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் சமூகவிரோத சக்திகள். இவர்கள் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கான நியாயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துலக்கமாகியிருக்கிறது.

– தொரட்டி

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________