privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?

ஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?

-

நுகர்வுக் கலாச்சாரம் தோற்றுவித்திருக்கும் அழகு குறித்த வணிகத்தில் அழகு நிலையங்கள் முக்கியமானவை. அழகு, முக அலங்காரம் அனைத்தும் பெண்ணைப் போகப்பொருள் ஆக்கும் அடிமைச் சிந்தனையாக இருந்தாலும் இன்றைய காலத்தில் சாதாரணப் பெண்கள் கூட அழகு நிலையங்களுக்கு சென்று குறைந்த பட்ச முகப்பூச்சுக்களை செய்து கொள்கிறார்கள். பெண்ணின் ஆளுமைக்கு இத்தகைய அழகு நடவடிக்கைகள் தேவை என்பதாக எளிய பெண்கள் நினைக்கிறார்கள். அதிலும் திருமணங்கள் என்றால் மணமகள் அழகு படுத்திக் கொள்ளுவது எங்கும் அவசியமான ஒன்று.

காபூல் அழகு நிலையம்
காபூல் அழகு நிலையம்

தாலிபானின் காட்டாட்சியில் இருந்த ஆப்கானில் பெண்கள் கல்வி, தொழில் அனைத்திலும் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். காபூலில் அழகு நிலையம் நடத்தி வந்த சோரயாவின் கதையைப் பார்ப்போம். 1996-ம் ஆண்டு தாலிபான் காட்டுமிராண்டிகள் அவரது அழகு நிலையத்தை அடித்து நொறுக்கினார்கள். அதன் பிறகு சோரயா தனது அழகு சேவையை ரகசியமாக நடத்தி வந்தார். பெண்கள் யாருக்கும் தெரியாமல் வந்து அழகு படுத்திக் கொண்டு சென்றார்கள்.

2001-ம் ஆண்டு அமெரிக்கப் படை வந்ததும், தாலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். எனவே சோரயா மீண்டும் தனது அழகு நிலையத்தை காபூலில் திறந்தார். தற்போது அவரது அழகு நிலையத்தில் 6 பெண்கள் வேலை செய்கிறார்கள். தாலிபான் ஆட்சியில் அழகு நிலையம் மட்டுமல்ல, பெண்கள் இப்படி வெளியே வேலைக்கு வருவதும் சாத்தியமற்றது. சோரயாவின் கடை நகரின் முக்கியமான, பிரபலமான அழகு நிலையமாக விளங்குகிறது.

சோரயாவின் அழகு நிலையம் ஆப்கான் பெண்களுக்கு அளித்திருக்கும் மாற்றம் முக்கியமானது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவது, வேலைக்குச் செல்வது, சொந்தமாக கடை வைப்ப்பது என்று சமூக வாழ்வில் மெல்ல மெல்ல கலப்பதை அது சாத்தியமாக்குகிறது. அதே நேரம் இந்த நல்ல மாற்றம் நிலையாக இருக்குமா, நிறுத்தப்படுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

2014-ல் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசப் படைகள் ஆப்கானை விட்டு நீங்கியதும் என்ன நடக்கும்? அழகு நிலையத்தில் வேலை செய்யும் பெண்கள் இது குறித்து நிறையவே அஞ்சுகிறார்கள். மீண்டும் தாலிபானின் கற்கால காட்டுமிராண்டித்தனங்களுக்கு திரும்ப வேண்டுமோ என்று சோர்ந்து போகிறார்கள்.

“அமெரிக்கர்கள் சென்று விட்டால் தாலிபான் திரும்பி விடுவார்களா? வெளிநாட்டவர்கள் இருக்கும் வரையிலும் எங்களது தொழில் நன்றாக நடக்கும். நாங்களும் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர்கள் சென்று விட்ட பிறகு 2014-ல் என்ன நடக்கும் என்பது பயமாக உள்ளது” என்கிறார் சோரயா.

இது சோரயாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான ஆப்கான் மக்களுக்கும் உள்ள கருத்தாக இருக்கிறது. அதேநேரம் இதே ஆப்கான் மக்கள் அந்நியப் படைகள் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் எனவும் விரும்புகிறார்கள். அல்லது அமெரிக்காவும் வேண்டாம், தாலிபானும் வேண்டாம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால் இரண்டையும் தவிர்ப்பது எப்படி?

சோரயாவின் அழகு நிலையம் இருக்கும் தெருவில் இன்னும் ஐந்து அழகு நிலையங்கள் இருக்கின்றன. அனைத்திலும் பெண்கள் வந்து போகுமளவு தனியிட வசதி கொண்டவைகளாக இருக்கின்றன. இத்தகை கடைகளுக்கு ஆப்கான் பெண்கள் வந்து போகிறார்கள் என்பதே அங்கு மிகப்பெரும் சமூக முக்கியத்துவம் கொண்ட செய்தி.

நபிலா எனும் பெண்மணி நடத்தும் அழகு நிலையத்திலும் ஆறு பெண்கள் வேலை செய்கின்றனர். ” தாலிபான் தோல்விக்குப் பிறகு இந்தக் கடையை ஆரம்பித்தோம். அதன் பிறகு எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என நினைத்தோம். தற்போது 2014-ஐ நினைத்தால் அந்த நம்பிக்கை இல்லை” என்கிறார் நபிலா. அவரது கடை பெண்களுக்கும் அதே கருத்துதான்.

ஏனெனில் நாட்டில் இப்போது இருக்கும் அரசியல் அமைப்புதான் ஊழல், ஜனநாயகத்தின் தோல்வி, அனைத்திற்கும் காரணமாகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தாலிபான்கள் மீண்டும் வரக்கூடும் என மக்கள் பயப்படுகிறார்கள். அடுத்த ஆண்டு வர இருக்கும் அதிபர் தேர்தல், தாலிபான்கள் தமது அலுவலகத்தை கத்தாரில் துவக்கியது எல்லாம் அவர்களது வருகையை வதந்தியாக அறிவிக்கின்றன.

அதே நேரம் எல்லோரும் அப்படி அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல. முகமதா சோனியா இக்பால் எனும் தொழில் முனைவர் பெண்மணி, ஆப்கான் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் அகற்றிவிடமுடியாது என்கிறார். கடந்த பத்து வருடங்களாக கல்வி, தகவல் தொழில்நுடபம், செல்போன்கள் அனைத்தும் முற்றிலும் வேறுபட்ட அனைத்தும் அறிந்த மக்களை உருவாக்கியிருக்கின்றன. அவர்களை அத்தனை சுலபம் ஏமாற்ற முடியாது என்று அவர் நம்புகிறார். அதே நேரம் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளை பாதுகாகப்பதற்கு ஒரு ஏற்பாடு அவசியம் என்றும் அவர் நினைக்கிறார்.

எனினும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் கர்சாயிக்கு பதிலாக யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவேளை தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து பெண்களை ஒடுக்கும் நிலை வந்தால் சோரயா என்ன செய்வார்? ஆப்கானை விட்டு வெளியேறி வேறு எங்கு சுதந்திரமாக வாழமுடியுமோ அங்கு செல்வேன் என்கிறார்.

அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் ஆப்கான் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

நன்றி: அல்ஜசிரா