privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

-

என்எல்சின்.எல்.சியின் 5% பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அந்நிறுவன ஊழியர்கள் கடந்த வாரம் புதன்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். ஏறக்குறைய 14 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 11 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பங்கேற்கும் இந்த மாபெரும் வேலை நிறுத்தம் நெய்வேலி மக்களின் போராட்டமாகவும் மாறத் துவங்கியுள்ளது. வியாபாரிகள் கடையடைப்பு நடத்துகின்றனர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

முன் அறிவிப்பு கொடுத்து 14 நாள் அவகாசம் கொடுத்த பிறகே வேலைநிறுத்தம் துவங்க வேண்டும் என்ற இந்திய தொழில் தகராறு சட்ட விதிமுறை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 4-ம் தேதி தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சங்கங்கள் மாத்திரம் வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கின. எனினும், நிரந்த தொழிலாளர்களுடன் இணைந்து எந்த அரசு சலுகைகளும் இல்லாத 11 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாள்ர்களும் இந்த தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக தமது வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கம்ஆண்டுதோறும் சுமார் 6 சதவீதம் இலாப வளர்ச்சி காணும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. அது ஆண்டுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டுகிறது. ஆண்டுக்கு 24 மெட்ரிக் டன் லிக்னைட் நிலக்கரியை வெட்டியெடுத்து அதன் மூலமாக 2740 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கிறது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் என தென் மாநிலங்கள் அனைத்துக்கும் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய இந்நிறுவனம் உதவுகிறது. இப்போதைய வேலைநிறுத்தம் காரணமாக உற்பத்தி கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. நிலக்கரி சுரங்க வேலைகள் நடைபெறுவது அடியோடு நின்று விட்டதால் சுரங்கங்களின் உட்புறம் நீர் நிரம்ப வாய்ப்புள்ளது.

இங்குள்ள 3 சுரங்கங்களில் ஏறக்குறைய 33,000 கோடி டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பயன்படக் கூடிய அளவு இருப்புள்ள இச்சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது எனப் போராடுபவர்கள் எந்தப் பணிப் பாதுகாப்பும் இல்லாத சுரங்கத் தொழிலாளர்கள். நிலக்கரி ஊழல் புகழ் மன்மோகன் சிங் வகையறாக்கள் இத்தனியார்மய நடவடிக்கையில் பின்வாங்குவது போலத் தெரியவில்லை. ஏற்கெனவே 6.44 சதவீத பங்குகளை விற்றுவிட்ட அவர்கள் தற்போது விற்கவுள்ள 5 சதவீத பங்கின் மதிப்பு 500 கோடி ரூபாய். இப்போது நெய்வேலி போராட்டத்தை முடக்குவதற்க்காக நிர்வாகம் அனுபவமற்ற நபர்களை வைத்து விலை உயர்ந்த இயந்திரங்களை இயக்குவதால் ஏற்படும் பழுதை சரிசெய்யவே இதனை விட அதிக செலவாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொதுத் துறை நிறுவனங்களில் 10% பங்குகள் மக்களிடம் (அதாவது, தனியார் முதலாளிகளிடம்) இருக்க வேண்டும் எனும் மத்திய பங்குச் சந்தை ஆணையத்தின் விதிகளின்படி பங்குகளை விற்றே தீர வேண்டும் என்று சட்டம் பேசுகிறது மத்திய அரசு. அந்த விதிகளை உருவாக்கியதே இதே மத்திய அரசுதான் என்பதையும் உருவாக்கிய அவர்கள் தேவைப்பட்டால் அதை மாற்ற முடியும் என்பதையும் மறைத்துவிட்டு நாடகமாடுகின்றனர்.

என்எல்சிஎன்.எல்.சி இன் பெரிய தொழிற்சங்கமான திமுகவின் தொமுச மற்றும் அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, ஐஎன்டியூசி என அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சில சங்கங்கள் பின்வாங்க நினைத்த போதிலும் தொழிலாளி வர்க்கம் உறுதியாக இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்க்கிறது. இடையில் ஜெயலலிதா தமிழக அரசு நிறுவனங்களே 5 சதவீத பங்குகளை வாங்க செபி (பங்குச் சந்தை ஆணையம்) அனுமதி தரக் கோரி இருக்கிறார். அவரும், கருணாநிதியும் இதனை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

மத்திய அரசின் பங்குகளை மாநில அரசிடம் விற்பது என்பது பின்னர் கைமாற்ற தோதாக அமையும் என இவர்கள் எதிர்பார்க்கக் கூடும். அப்படி கைமாற்ற அனுமதிப்பது என்பதே புறவாசல் வழியாக தனியார்மயத்தை மீண்டுமொரு முறை அமல்படுத்துவதேயாகும். மேலும் மக்கள் சொத்தான நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பங்குகளை மீண்டும் மக்கள் பணத்தில் வாங்குவது என்பது கடைந்தெடுத்த மோசடியாகும்.

இதற்கிடையில் ஜெயாவின் எதிர்ப்புக்கு லாவணியாக, “டிஎன்பிஎல் பங்குகளை மறைமுகமாக விற்ற ஜெயாவுக்கு நேரடியாக நாங்கள் என்.எல்.சி பங்குகளை விற்பதை எதிர்க்கத் தகுதியில்லை” என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என இவர்கள் ஊர்ச்சொத்தைத் திருடுவதிலும் கூட போட்டி போடத் துவங்கியுள்ளனர். பா.ஜ.க வின் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு சீக்கிரம் கூடங்குளத்தை ஆரம்பித்தால் நல்லது என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

நிலக்கரி வயல்களை குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு விற்று ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்த கல்லுளிமங்கள் மன்மோகன் சிங், இப்போது ஏற்கெனவே உள்ள வயல்களை வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்கத் துவங்கியுள்ளார். இப்போது வெறும் 90 காசுக்கு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்.எல்.சி நிறுவனத்தை டாடாவிடமும், அம்பானியிடமும் கொடுத்தால் 18 ரூபாய் கொடுத்துதான் யூனிட் மின்சாரத்தை வாங்க வேண்டும். அதன்பிறகு மின்சாரத்தில் சுயசார்பை இந்தியா நினைத்தாலும் பெற முடியாது.

நாட்டுப்பற்று மிக்க என்.எல்.சி தொழிலாளிகளும், அப்பகுதி மக்களும் தனியார்மயத்திற்கு எதிராக தங்களது போராட்டத்தை துவக்கியுள்ளனர். வரும் 9-ம் தேதியன்று 15 தொழிற்சங்கங்களும் இணைந்து என்.எல்.சி முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. தேசப்பற்றுள்ள அனைவரும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.