privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !

திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !

-

1. அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம் தெருமுனைக் கூட்டம்

னைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், (இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) சார்பில் 04-07-13 அன்று மாலை 6 மணிக்கு தொழிலாளர் ஒற்றுமையை கட்டியமைப்போம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!  என்ற தலைப்பில் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் தெரு முனைக் கூட்டம் நடத்தது. சங்கத் தலைவர் தோழர்.மகாலிங்கம் தலைமை தாங்க, சிறப்புத் தலைவர் தோழர். சேகர் சிறப்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் தோழர். இலியாஸ் நன்றி கூறினார். 40க்கும் மேற்ப்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தோழர். சேகர் தனது உரையில்

“முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் ஒன்று பட வேண்டும். முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது, அரிசி விலை ஏறுது. நெல் விலை குறையுது! உற்பத்தி செய்த விவசாயிக்கும் லாபம் இல்லை! வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கும் லாபம் இல்லை! இடையில் முதலாளி தான் கொள்ளையடிக்கிறான். சேவைத் துறையாக இருந்த கல்வித்துறையை கைப்பற்றி, கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி, பால்வாடிக்கு சேர்க்கும் போதே ரூ 10,000 ரூ 20,000 என கொள்ளையடிப்பதுதான் கல்வி முதலாளிகளின் வேலையாக இருக்கிறது. குடிக்கிற தண்ணீரைக் கூட பாட்டிலில் அடைத்து, அதிலும் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

அதனால்தான் முதலாளிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறோம். இதற்கு அடிப்படையான தனியார்மயக் கொள்கைகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக அளவில் மின்சாரம் தரக் கூடிய நெய்வேலி அனல்மின் நிலையம் இருக்கிறது. அதையும் தனியாரிடம் விற்க காங்கிரஸ் அரசு துடிக்கிறது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அது அவர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல! ஆலையையும் காப்பாற்றுவதற்காகத்தான். தமிழக மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.

ஆலையில் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக முதலாளி, தொழிலாளர்களில் சிலரை கருங்காலிகளாக்கி, சங்கம் அமைப்பான். அதைப் போலவே தரைக்கடை வியாபாரிகளில் சிலரை கருங்காலிகளாக்கி, சங்கம் அமைத்து, வியாபாரிகளின் ஒற்றுமையை குலைக்கிறது போலீசு. எனவே சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் இணைந்து முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலக வர்த்தகக் கழகம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தையே சுற்றி வளைக்கிறார்கள். எனவே, இவர்களை எதிர்கொள்ள சிறு முதலாளிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இங்கே சாரதாஸ், மங்கள் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக போக்குவரத்து நெருக்கடி எனக் காரணம் காட்டி, தரைக்கடை வியாபாரிகளை போலீசு விரட்டுகிறது. ஒரிசாவில் போஸ்கோ முதலாளிக்காக ஒரிசா விவசாயிகளை நிலத்தை விட்டே விரட்டுகிறது ஒரிசா போலீசு. எங்கேயும் போலீசும், அரசாங்கமும் முதலாளிகளுக்காகவே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதை எந்த கட்சிகளும் எதிர்ப்பதில்லை -நக்சல்பாரிகளைத் தவிர. முதலாளிகளிடம் கையூட்டு வாங்கவே மற்ற ஓட்டுகட்சிகள் அலையாய் அலைகிறார்கள். அதற்கு கைமாறாக காடு, மலை, ஆலை, சாலை அனைத்தையும் பங்கிட்டுக் கொடுக்கிறான். இது முதலாளித்துவ பயங்கரவாதம் மட்டுமல்ல! நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கையாகும். எனவே இதை முறியடிக்க உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்”

என்று பேசினார்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி : பு.ஜ.தொ.மு., திருச்சி

2. பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கம்

தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் திருச்சியில் 7-7-13 அன்று மாலை 5.30 மணிக்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. நகரம் முழுவதும் இதற்காக விளம்பரம் செய்யப்பட்டது.

மாலை 5 மணி முதலே தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் நிகழ்ச்சி நடத்த திருவரம்பூர் பாரத் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர்.சுந்தராஜ் அவர்கள் இக்கூட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக வந்த புதுதில்லியின் தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தோழர் அசோக்ராவ் அவர்கள் 15 வருடமாக நமக்கு ஆதரவு தெரிவித்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நினைவு படுத்தினார்.

“முதலில் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன், இப்படிப்பட்ட இந்தியாவை உங்களிடம் ஒப்படைத்து செல்வதற்காக.

கடந்த காலத்தில் இந்த நாடு இப்படி இருக்கவில்லை. ஆனால் சோசலிச வீழ்ச்சிக்கு பின் குளிர் விட்டுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் மூலமாக கடன் கொடுப்பதன் மூலமும், அடிமை ஒப்பந்தங்களின் மூலமாகவும் ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்துகின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அத்தகைய அடிமை ஒப்பந்தங்களின் மூலமாகத்தான் இந்த நாட்டில் நுழைந்தன. தற்பொழுது இந்த நாட்டில் கல்வி, மருத்துவம் இவற்றை அவர்கள் கையில் ஒப்படைத்ததன் மூலம், மக்களின் படிப்பையும், ஆரோக்கியத்தையும் அடுத்தவன் கையில் ஒப்படைத்துள்ளது.

கனிமவளம், தண்ணீர் என ஒவ்வொன்றிலும் அவர்களின் உத்தரவுபடியே நடக்கிறது. இந்த உத்தரவு இந்தியாவின் ‘தலைநகரான’ வாசிங்டனில் இருந்து வருகிறது.

பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலம் விழுங்கப்படுகிறது. இதை மோடி சிறப்பாக செய்வதால் அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக அறிவிக்கப்படுகிறார். இந்தியாவின் விதை பன்னாட்டு கம்பெனிகளின் கையில் சென்றுவிட்டது. சரத்பவார் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் காலத்தின் தேவை என்கிறார்.

மேலும் சில்லறை வணிகத்திலும் அன்னிய மூலதனம் வந்துள்ளது. வால்மார்டில் சட்டை மிக மலிவாக கிடைக்கும் என்று காரணம் சொல்கின்றனர். இந்த மலிவான சட்டை கிடைக்கத்தானே வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர் விட்டனர். இது அவர்களின் ரத்தம் என்று புரியவில்லையா. இந்தக் கடைகளில் விற்பதற்கான காய்கறிகளை விளைவிக்க விளைநிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் பொருள் வாங்க வேண்டும் என்பதற்காகவே ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டம். இதன் விளைவு இந்த நாட்டின் உணவு கலகத்தில் கொண்டுபோய்விடும்.

இதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலைமை, கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஏன் அமெரிக்க மக்கள் கூட இதற்கு எதிராய் போராடுகின்றனர். உலகம் கம்யூனிசத்திற்காக ஏங்குகிறது. அதை நம் மண்ணில் விதைப்பது நமது தொழிலாளி வர்க்கத்தின் கடமை, அதை நாம் செய்ய வேண்டும்.”

என்று பேசினார்.

அடுத்து பேசிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் தோழர் தங்கராசு அவர்கள்,

“கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளிகள் 8 மணி நேர வேலை, சமவேலைக்கு சம ஊதியம், வாரம் ஒரு நாள் விடுமுறை என்று என்னென்ன  கோரிக்கைகளை வைத்து போராடினார்களோ அதே கோரிக்கைகளுக்காக இன்று போராட வேண்டி உள்ளது.

அன்று தொழிலாளிகளை ஜாதி பெயரை சொல்லி திட்டக் கூடாது என்று போராடினார்கள். மாருதி தொழிற்சாலையில் தொழிலாளியை ஜாதியை சொல்லி திட்டியதாலேயே போராட்டம் வெடித்தது.

அன்று சங்கம் துவங்கிய திரு.வி.க போன்ற சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றும் அதே நிலைமை. ஒரு தொழிற்சாலையில் சங்கம் துவங்க முன்னணியாக செயல்பட்டவரை மற்ற தொழிலாளிகள் அடித்தால்தான் நான் எல்லோருக்கும் வேலை தருவேன் என்று மிரட்டி அடிக்க வைத்து உள்ளான்.

முன்பாவது தொழிலாளர்கள் தங்களது கஷ்டத்தை தணித்துக் கொள்ள ரேசன், அரசுப் பள்ளி, E.S.I மருத்துவ வசதி, P.F என்று இருந்தது. இன்று அவை எல்லாம் பறிக்கப்பட்டு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். அப்படி வேலைக்குச் செல்லும் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது.

இதை எல்லாம் பாரளுமன்றத்தில் தீர்ப்பதாக சொல்பவர்கள் மக்களிடம் ஓட்டுவாங்கி கொண்டு, முன்பு 7 பேர் சேர்ந்தால் சங்கம் துவங்கலாம் என்று இருந்த சட்டத்தை 100 பேர் இருந்தால்தான் சங்கம் துவங்க முடியும் என்று மாற்றி உள்ளனர்.

இந்த இயக்கத்தின் நோக்கம் என்பது இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது என்பதுதான். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முடிவு கட்ட வேண்டும் என்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும். முதலாளி சமுதாயத்தை அழிக்கிறான், பாட்டாளி சமுதாயத்தை படைக்கிறான். முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போரிடாமல் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. அது தான் நமக்கும் மற்ற சங்கங்களுக்குமான வேறுபாடு. நாம் நமது நோக்கத்தை தொழிலாளிகளிடம் கொண்டு சென்று அவர்களை அமைப்பாக்கி புதிய வரலாற்றை எழுத வேண்டும்”

என்று கூறினார்.

இறுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காலுக்கடியில் பூமி நழுவுது காலனியாக்கம் கண்ணில் தெரியுது என்று தோழர்கள் பாடிய பொழுது இசைக்கு ஏற்றவாறு மக்களும் கைதட்டி ரசித்தனர்.

இக்கூட்டத்தை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனைச் சேர்ந்த தோழர்.பொன்னுசாமி நன்றியுரை கூறி முடித்து வைத்தார். பல நபர்கள் பு.ஜ.தொ.முவில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் தந்தனர். இவை எல்லாம் திருச்சி மண் சிவக்க தொடங்கி உள்ள அடையாளமாக தெரிந்தன.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, திருச்சி பகுதி