privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீரில் 6 பேர் துணை இராணுவத்தால் சுட்டுக் கொலை !

காஷ்மீரில் 6 பேர் துணை இராணுவத்தால் சுட்டுக் கொலை !

-

ம்ஜான் – உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்தியப் படைகள் அம்மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியிருப்பது தற்செயலான ஒன்றல்ல.

போலீஸ் தாக்குதல்
போராடும் மக்களை தாக்கும் போலீஸ்

புதன் கிழமை மாலை ஜம்மு காஷ்மீரின் தாராம் என்ற இடத்தில் உள்ள எல்லைக் காவல் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் அருகில் உள்ள மசூதியின் இமாமின் சகோதரரை அழைத்து ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு நாள் மாலையும் நோன்புக்குப் பிறகான பிரார்த்தனையை தொடர்ந்து செய்யப்படும் தரூத் மற்றும் தரவீ ஓதுவதை நிறுத்தும் படி உத்தரவிட்டனர். அவர் அதைக் கண்டித்து அருகில் இருந்த ஒரு பழைய பாலத்தில் அமர்ந்து குரானை ஓதத் தொடங்கியிருக்கிறார்.

கட்டுக்கடங்கா அதிகாரங்களுடன் குவிக்கப்பட்டுள்ள எல்லைக் காவல் படை அதிகாரிகள், தமது ஆணையை ஒரு சாதாரண காஷ்மீரி மீறுவதா என்ற ஆத்திரத்துடன் அவரை குண்டுக் கட்டாக தூக்கி எறிந்திருக்கின்றனர். அதில் அவர் கையில் இருந்த குரான் சேதமடைந்ததாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் முகாமை முற்றுகையிட்டு மத சுதந்திரத்தில் காவல் படைகள் தலையிடுவதாக முழக்கம் எழுப்பினர். புதன் கிழமை இரவில் முகாமைச் சேர்ந்த படையினர் மசூதியில் புகுந்து அங்கு வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள்.

ஓமர் அப்துல்லா
பொம்மை முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ராணுவ அதிகாரியுடன் சந்திப்பு. (படம் : நன்றி தினமணி)

அதனால் கோபம் கொண்ட மக்கள் சுமார் 1,000 பேர் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்க முகாமை நோக்கிச் சென்றனர். கூடியிருந்த மக்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர், 42 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் துப்பாக்கி ஏந்திய காவல் படையினரும், முகாம் அதிகாரிகளும் ஒவ்வொரு ஊரிலும் தாமே வகுக்கும் சட்டங்களின்படி தமது விருப்பப்படி அதிகாரம் செலுத்துகின்றனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. அடிப்படை ஜனநாயக நடைமுறைகள் எதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.

எல்லைக் காவல் படையின் ஐஜி, கூட்டத்திலிருந்து சிலர் முகாமை நோக்கிச் சுட்டதாகவும், அதில் ராம் ஹரி என்ற காவலர் காயமடைந்ததாகவும் அதற்கு எதிர்வினையாகத்தான் காவல் படையினர் 4 பேரை சுட்டு படுகொலை செய்ததாகவும் விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால், 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் செயல்படும் ஜனநாயகத்தின் லட்சணம் இதிலிருந்து புரிகிறது. ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய படைகளை மக்களை ஒடுக்குவதற்காக நிரப்பி, அவர்களுக்கு சிறப்பு அதிகாரங்களையும், பாதுகாப்பையும் கொடுத்து ஜனநாயக ஆட்சி நடத்துவதாக பிரச்சாரம் செய்யும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொய்கள் இதன் மூலம் அம்பலப்பட்டு நிற்கின்றன.

ஊரடங்கு
ஸ்ரீநகரில் ஊரடங்கு (படம் : நன்றி தி ஹிந்து)

டெல்லிக்கு யாத்திரை போயிருந்த, மாநிலத்தின் சட்ட ஒழுங்குத் துறையை கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத பொம்மை முதல் அமைச்சர் ஓமர் அப்துல்லா, இந்த கொலைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று ‘கண்டித்திருக்கிறார்’.

இந்த கொலை பாதக சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்களுடன் மோதினர். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற அமைப்புகளின் தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்து அமைப்புகளும் வெள்ளிக் கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தும்படியும் ஸ்ரீநகரின் லால் சௌக்கை நோக்கி பேரணி நடத்துவதற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

எல்லைக் காவல் படையினருக்குப் பொறுப்பான மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே “இந்த துரதிர்ஷ்டவசமான இறப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக” கூறியிருக்கிறார். இதைப் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். கொலை செய்தவர்கள் யார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் விசாரணை நடத்துவதுதான் இந்திய மனுநீதியின் சட்டம்.

ஆனால் காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையை இத்தகைய அடக்குமுறையும், கொடுங்கோலாட்சியும் தணித்து விடாது. இன்னும் எத்தனை இலட்சம் படைகளை இறக்கினாலும் அம்மக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது.

மேலும் படிக்க