privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் - சதிகள் !

மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள் !

-

குஜராத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது சக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லாததால், அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனக் கடந்த ஆண்டு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கைக்கு எதிரான மனுவொன்றை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாகியா ஜாஃப்ரி, “சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்; ஒரு சுதந்திரமான கமிசனை அமைத்து மோடி மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரியிருக்கிறார்.

ஜாகியா ஜாஃப்ரி, தீஸ்தா சேதல்வாத்
இந்து மதவெறி பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தண்டிக்கக் கோரிப் போராடி வரும் ஜாகியா ஜாஃப்ரி (நடுவில்) மற்றும் வழக்குரைஞர் தீஸ்தா சேதல்வாத் (இடது).

ஜாகியா ஜாஃப்ரி இந்த மனுவைத் தாக்கல் செய்தது கூட எளிதாக நடந்து விடவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது அறிக்கைகள்-சாட்சியங்கள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டு அனைத்தையும் ஜாகியா ஜாஃப்ரிக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருந்த போதும், அக்குழு இந்த உத்தரவை மதித்து நடக்கவில்லை. ஜாகியா ஜாஃப்ரி தனது அறிக்கைக்கு எதிராக எதிர் மனு தாக்கல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அந்த ஆவணங்களை முழுமையாக அவருக்கு வழங்க மறுத்து வந்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு. ஜாகியா ஜாஃப்ரி இச்சட்டவிரோத அடாவடித்தனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்று, அதன் பிறகுதான் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் காப்பாற்றுவதற்கு எத்துணை கீழ்த்தரமான வேலையிலும் இறங்கும் என்பதற்கு இது இன்னொரு சான்று.

நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை முழுமையாக விடுவித்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது என ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, குஜராத்தின் முன்னாள் போலீசு தலைமை இயக்குநர் ஆர்.பி. சிறீகுமார், மோடி அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் உளவுத் துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், குஜராத் முசுலீம் படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய தெகல்கா வார இதழ் நிருபர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்டுப் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்விசாரணையின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்த பொழுது, “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என அந்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததோடு, இவ்வழக்கு விசாரணையைக் கண்காணிக்க ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரே) நியமித்தது.

மோடி மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முகாந்திரமில்லை எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்திருப்பதற்கு மாறாக, “மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக மோடி மீது வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாக” அறிக்கை அளித்திருக்கிறார், ராஜு ராமச்சந்திரன். மேலும், மோடி பிப்.27, 2002 அன்று இரவு நடத்திய உயர் அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” எனக் கூறியது தொடர்பாக போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நம்பகத்தன்மையற்றது எனக் கூறி ஒதுக்கிவிட்டது. ஆனால், “சஞ்சீவ் பட் சாட்சியத்தின் உண்மைத்தன்மையை நீதிமன்ற விசாரணையின் மூலம்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், ராஜு ராமச்சந்திரன்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரியிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அவர், தனது எதிர் மனுவில் இணைத்துள்ள ஆதாரங்கள், குஜராத் முசுலீம் படுகொலைக்கான சதித் திட்டமும் ஆலோசனையும் கோத்ராவில் ரயில் பெட்டிகள் தீக்கிரையான செய்தி மோடிக்குத் தெரிந்த மறுநிமிடமே தொடங்கிவிட்டதை எடுத்துக் காட்டுகிறது; சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கைத்தடியாகச் செயல்பட்டு வந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

நரேந்திர மோடி, ஜெய்தீப் படேல்
குஜராத் முசுலீம் படுகொலையின் சதிகாரர்கள் : நரேந்திர மோடி மற்றும் விசுவ இந்து பரிஷத்தின் குஜராத் மாநிலச் செயலர் ஜெய்தீப் படேல்

2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க., தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ப்புப் பிராணியான நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இத்தோல்விகளிலிருந்து மீள்வதற்கு முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியைத் தூண்டிவிடும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அமைப்புகள் அனைத்தும் அச்சமயத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நேரத்தில்தான் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் கோத்ரா ரயில் நிலையத்தில் தீக்கிரையாகின.

இந்தச் செய்தி அகமதாபாத்தை எட்டியவுடன், நரேந்திர மோடி உள்துறை அதிகாரிகளுக்கு அப்பால், அம்மாநில விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலர் ஜெய்தீப் படேலோடும் (தொலைபேசி வழியாக) உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல் ஒரு பெரும் சதித் திட்டத்தின் தொடக்கம் என்பதை பின்னால் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

கோத்ரா சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, “இது பாகிஸ்தான் உதவியோடு முசுலீம்கள் நடத்திய திட்டமிட்ட சதிச் செயல்” எனச் சட்டசபையில் நாக்கூசாமல் அறிவித்த கையோடு கோத்ராவுக்குக் கிளம்பிச் சென்ற மோடி, தீக்கிரையாகி இறந்துபோன கரசேவகர்கள் மற்றும் பிறரின் உடல்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டவெளியில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் கண்முன்பாக, பிரேதப் பரிசோதனை நடத்திட உத்தரவிட்டார். ஒருபுறம் பிரேதப் பரிசோதனை நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் அமைச்சரவைக் கூட்டம் என்ற பெயரில் சதியாலோசனைக் கூட்டமும் நடந்தது. மோடியோடு பேசி வைத்திருந்தபடி கோத்ராவுக்கு வந்திருந்த ஜெய்தீப் படேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதே, இது கலவரத்தைத் தூண்டிவிடுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது. இக்கூட்டத்தில் இறந்து போனவர்களின் உடலை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கவும், அவர் அச்சடலங்களை கோத்ராவிலிருந்து 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள அகமதாபாத்திற்குச் சாலை வழியாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அரசைச் சாராத வெளிநபரும் இந்து மதவெறி பயங்கரவாதியுமான ஜெய்தீப் படேலிடம் சடலங்களை ஒப்படைக்கும் முடிவை கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி எதிர்த்த போதும், மோடி இச்சட்டவிரோத முடிவை நடைமுறைப்படுத்தினார். சடலங்களைச் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துவருவதன் மூலம் இந்து மதவெறியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய முடியும் என்பதுதான் மோடியின் கணக்கு. அன்றிரவே அகமதாபாத் திரும்பிய நரேந்திர மோடி உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்கக் கூடாது” என்றும் கட்டளையிட்டார். கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படாமல், தந்திரமாகவும் சதித்தனமாகவும் நடத்தி முடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் மூலம் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்பது வெளிப்படையாக, அதேசமயம் சட்டவிரோதமான முறையில் உறுதி செய்யப்பட்டது.

12-cartoonஇதற்கு மறுநாள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்தை, மோடி அரசின் முழு ஆசியோடு அறிவித்து நடத்தின. அன்று ஜெய்தீப் படேல் நரோடா காவ் தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினான்; மோடி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானி நரோடா பாட்டியா தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினார்.

ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்த குஜராத் முசுலீம் படுகொலையின் தொடக்கம் இப்படித்தான் அமைந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ கோத்ரா ரயில் பெட்டி தீக்கிரையான பிப்.27 மற்றும் நரோடா காவ், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த பிப்.28 ஆகிய இரு தினங்களிலும் மோடிக்கும் ஜெய்தீப் படேலுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டது. “இறந்து போனவர்களின் சடலங்களை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கும் முடிவை, மோடி எடுக்கவில்லை; மாஜிஸ்ட்ரேட் ஒருவர்தான் எடுத்தார்” எனச் சட்ட பாயிண்டுகளைக் காட்டி, மதவெறியையும், கலவரத்தையும் தூண்டிவிட்ட குற்றச்சாட்டிலிருந்து மோடியை நயவஞ்சகமாகத் தப்பவைத்தது. பிப்.27 அன்று இரவில் மோடி அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனக் கூறி மோடியைச் சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் தப்ப வைத்துவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோத்ராவில் தீக்கிரையாகி இறந்து போனவர்களின் சடலங்கள் அகமதாபாத்திற்கு எடுத்து வரப்பட்டு எரியூட்டப்பட்ட அன்று, அதே நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மாநிலம் தழுவிய பந்த் நடத்தியபொழுது, குஜராத் மாநிலம் முழுவதும் எவ்வித வன்முறையுமின்றி அமைதியாக இருந்ததென்று அறிக்கை அளித்திருக்கிறது. இதன் மூலம் அப்படுகொலைகள் திட்டமிட்ட முறையில் தூண்டிவிடப்பட்டோ, அரசின் ஒத்துழைப்போடோ நடத்தப்படவில்லை; மாறாக, அவை இந்துக்களின் தன்னெழுச்சியான ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் எனக் காட்ட முனைந்திருக்கிறது. ஆனால், அந்த இரு நாட்களிலும் எதார்த்த நிலைமை குறித்து உளவுத் துறை போலீசார் அனுப்பிய செய்திகளே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன.

  • சடலங்கள் அகமதாபாத்திற்குக் கொண்டுவரப்படும் செய்தியைக் கேள்விப்படும் ஒரு உளவு அதிகாரி, தனது மேலதிகாரிக்கு பிப்.27 அன்று மதியம் அனுப்பிய தந்திச் செய்தியில், “அகமதாபாத்தில் மதக் கலவரம் நடக்கும்; எனவே, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஜெய்தீப் படேல், கௌசிக் மேத்தா, திலீப் திரிவேதி உள்ளிட்ட விசுவ இந்து பரிஷத்  தலைவர்கள், “கோத்ராவில் இந்துப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டதாக” வதந்தியைப் பரப்பி மதவெறியைத் தூண்டிவருவதாகவும்; வாபி, பாவ்நகர், கேத்பிரம்மா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும்; “இரத்தத்துக்குப் பதில் இரத்தம்” என ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலைவெறியோடு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துவருவதாகவும் உளவுத் துறை அனுப்பிய தந்திச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
  • அகமதாபாத்தில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த சோலா சிவில் மருத்துவமனையிலிருந்து பிப்.28 அதிகாலை முதல் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தந்திச் செய்தியும், அம்மருத்துவமனை 3,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதைக் குறிப்பிடுவதோடு, மருத்துவமனைக்கு சிறப்பு போலீசு படையை அனுப்புமாறும் கோருகிறது. அம்மருத்துவமனையிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, அப்பகுதியில் கலவரம் வெடித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது.
  • சபர்கந்தா மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, கேத்பிரம்மா ஊரில் நடந்த சவ அடக்க ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டு, இரண்டு முசுலீம்கள் கத்தியால் குத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

அகமதாபாத் நகர போலீசு கட்டுப்பாடு அறையிலிருந்தும், மாநில முழுவதுமுள்ள பல்வேறு போலீசு நிலையங்களிலிருந்தும் அந்த இரண்டு நாட்களில் இவை போன்று நூற்றுக்கணக்கான தந்திச் செய்திகள் போலீசு தலைமை அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சரான மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மோடி அரசோ முசுலீம்களுக்கு எதிரான படுகொலையைத் தொடர்ந்து நடத்தும் திட்டப்படி செயல்பட்டு வந்ததால், இந்தத் தந்திகளில் பெரும்பாலானவற்றை அழித்து, ஆதாரமில்லாமல் செய்தது. சிறப்புப் புலனாய்வுக் குழுவோ தனது கைக்குக் கிடைத்த மிச்சம் மீதி தந்திச் செய்திகளிலிருந்து உண்மையைக் கண்டறிய மறுத்து, மோடியைக் காப்பாற்றியது.

குஜராத் முசுலீம் படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிப்பதற்கு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கேட்பது கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கொண்டு வரச் சொல்வதைப் போன்றது. எனினும், போதுமான ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்த பிறகும் மோடியின் மீது ஒரு பெட்டி கேஸைப் போடுவதற்குக் கூட இந்திய நீதிமன்றங்கள் தயாராக இல்லை. தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படும் அப்பாவி முசுலீம்களை எவ்வித ஆதாரமும் இன்றித் தூக்கு மேடைக்கு அனுப்பத் தயங்காத இந்திய நீதிமன்றங்கள், மோடிக்கு அளித்துவரும் இந்தச் சலுகை அநீதியானது. ஊழலோ, அதிகார முறைகேடுகளோ அம்பலமாகும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என சவுண்டு விடும் மேல்தட்டு பார்ப்பனக் கும்பலும் அவர்களின் ஊதுகுழல்களான தேசியப் பத்திரிகைகளும் இத்துணை கொடூரமான, பெருந்திரள் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மோடியைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

இத்தகைய அநீதியும் போலித்தனமும் ஓரவஞ்சனையும் நிறைந்த இந்த அரசியல் அமைப்பிற்குள், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் மைய நீரோட்டமாக மாறியுள்ள நிலையில் மோடியைத் தண்டித்துவிட முடியும் என நம்பிக்கை கொள்ள முடியுமா? ஆனாலும், இவற்றை எதிர்கொண்டுதான் ஜாகியா ஜாஃப்ரி போராடி வருகிறார். இத்தகைய போராட்டம் இல்லையென்றால், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் குஜராத் படுகொலைக்கு என்றோ மங்களம் பாடியிருக்கும்.

– செல்வம்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________