privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !

கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !

-

கோவை மாநகர காவல் துறையின் பல்வேறு தடைகளை முறியடித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கருத்தரங்கம் 21.07.2013 அன்று வெற்றிகரமாக நடந்தது.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

எனும் தலைப்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் அடிப்படையில் கோவையில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்தோம். 07.07.2013 அன்று கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த சரவணம்பட்டி பி-9 காவல் துறையிடம் 20.06.2013 அன்றே விண்ணப்பம் செய்தோம்.

உள்ளரங்க கூட்டங்களுக்கு காவல் துறையிடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனும்போதிலும், கோவையில் அதுபோல செய்ய வேண்டி உள்ளது. ஏன் என்றால், கோவை மாநகரில் உள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களை காவல்துறை அழைத்து மண்டபங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மண்டப உரிமையாளர்களும் காவல்துறையின் அனுமதியை எழுத்து பூர்வமாக வாங்கி வாருங்கள். அப்போதுதான் முன்பணம் பெற்றுக் கொள்வோம் எனக் கூறிவிட்டனர். சரவணம்பட்டி பி-9 காவல் துறை ஆய்வாளரும், ”உள்ளரங்க கூட்டம்தானே தாரளமாக நடத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனுவை மாநகர காவல்துறைக்கு அனுப்பிவிட்டோம்” என்றனர்.

மண்டபம் உறுதியானால்தான் பேச்சாளருக்கு தகவல் சொல்லவேண்டும். துண்டு பிரசுரம் அச்சிடவேண்டும், சுவரொட்டி அடிக்கவேண்டும். மக்கள் மத்தியில்பிரச்சாரம் செய்யவேண்டும் . இதுபோன்ற வேலைகளுக்கு அமைப்புக்கு குறிப்பிட்ட காலம் வேண்டும் , இதுவும் காவல்துறைக்கு தெரியும். அதனை சீர் குலைக்கவே காலம் கடத்தினர். மீண்டும் , மீண்டும் போய் சரவணம்பட்டி காவல் துறையினரிடம் கேட்டால். மிகவும் அன்பாக உள்ளரங்க கூட்டம்தானே ஒன்றும் பிரச்னை இருக்காது என்று சிரித்தபடியே நயவஞ்சக நாடகம் ஆடினர். ஆனால் எழுத்து பூர்வமான அனுமதி வந்தபாடி இல்லை. கடைசியில் கொடுக்கிறீர்களா? இல்லையா? என கறாராகக் கேட்டால் மாநகர காவல்துறையிடம் நீங்களே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மிகக் கனிவாகக் கூறினார்கள்.

இதற்கிடையில் , ”உளவுத்துறையினர் மண்டப உரிமையாளரிடம் சென்று அவர்கள் கேட்ட தேதிக்கு வேறொருவருக்கு கொடுத்து விட்டதாக சொல்லி விடுங்கள்” என்று மிரட்டி விட்டனர். மண்டப உரிமையாளரும் , உளவுத்துறையினரும் நைச்சியமாக உள்ளரங்க கூட்டம்தானே நடத்திக்கொள்ளுங்கள். என நாடகமாடி கொண்டிருந்தனர். கொடுக்கிறேன் என்று சொல்லியே இழுத்தடித்தனர் இதனால் பேச்சாளரை உறுதிபடுத்த இயலவில்லை! அணிதிரட்டலை உறுதியாக கூற இயலவில்லை.

07.07.2013 தேதி நடக்கவிருக்கும் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு 7- ம் தேதி காலை 10.00 மணிக்கு எழுத்து பூர்வ அனுமதி கொடுத்தனர். அதை வைத்து என்ன செய்வது ? பின்னர் 14.07.2013 அன்று குஜராத் சமாஜ் பவனில் , கருத்தரங்கம் நடத்த பி-2, RS புரம் காவல் நிலையத்திலும் அனுமதி கோரினோம். அவர்களும் அனுமதியை இழுத்தடித்து தான், அனுமதி இல்லை என கடிதம் கொடுத்தனர்.

இறுதியாக புறநகர் பகுதி துடியலூரில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்தோம். மண்டபத்துக்காரரும் வாடகை ஏதும் வராத காரணத்தால் நம்மிடம் முன்பணம் வாங்கிக்கொண்டார். எனவே , உடனே காவல் துறையிடம் அனுமதி கேக்காமல் துண்டு பிரசுரம் , சுவரொட்டி போன்ற அனைத்தையும் செய்து முடித்து கருத்தரங்கம் நடைபெறும் 21.07.2013 தேதிக்கு முந்தின இரவு காவல் நிலையத்தில் அனுமதி கேட்காமல், தகவல் மட்டும் தெரிவித்தோம். அவர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

கருத்தரங்கம் 21.07.2013 தேதி காலை 10.30 மணிக்கு துவங்கியது தோழர்கள் 400 பேருக்குமேல் வந்திருந்தனர். பெண்தோழர்கள் 30 பேர் பங்கேற்றனர்.

தலைமையுரையாற்றிய தோழர் விளவை ராமசாமி காவல் துறையின் நயவஞ்சகத்தை பகிர்ந்து கொண்டார். கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழிற்சங்கமும் , எந்த ஒரு முதலாளியையும் எதிர்த்து சாதாரண ஆர்ப்பாட்டம் கூட செய்வதில்லை. முதலாளிகளை எதிர்த்து அவர்கள் நிறுவனங்களில் சங்கமே துவக்காமல், சாந்தமாக இருந்து தேர்தல் நிதி மட்டும் பெற்றுக்கொள்ளும் அவலமான நிலையுள்ளது.

முதலாளிகளை எதிர்த்தால்தானே முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றி தெரியமுடியும். முதலாளிகளை எதற்காக நாம் எதிர்க்க வேண்டும் என்று சாதுர்யமாக ஒதுங்கிக்கொண்ட துரோகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.

பின்னர் உரையாற்றிய மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேசுகுமார் அவர்கள் ஆலைக்குள்ளே நடைபெறும் முதலாளித்துவ பயங்கரவாதம் குறித்து விரிவாக பேசினார். கோவை , சென்னை, ஓசூர் மற்றும் மாருதி தொழிற்சாலையிலும் நடைபெற்ற முதலாளித்துவ பயங்கரவாதம் குறித்து விரிவாக ஒருமணி நேரம் பேசினார். தொழிலாளர்கள் கைதட்டி உற்சாகத்துடன் கேட்டனர்.

இறுதியாக மாநில பொதுச்செயலாளர் தோழர் சு.ப. தங்கராசு அவர்கள் ஆலைக்கு வெளியே மற்றும் நாட்டில் நடைபெறும் முதலாளிகளின் பயங்கரவாதம் குறித்து புதிய தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் பேசினார். உங்கள் பணம் உங்கள் கையில் எனும் மோசடித்திட்டம் குறித்து எள்ளல் நடையில் பேசினார். ஆதார் அடையாள அட்டை மோசடி, PF பணம் பங்கு மார்க்கட்டில் சூதாட அனுமதிப்பது, ESI மோசடி என மறுகாலனியாதிக்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் விளக்கிப் பேசினார்.

மாவட்ட தலைவர் தோழர் பி.ராஜன் நன்றி உரையாற்றினார் கருத்தரங்கில், இடையில் ம.க.இ.க கோவை கிளையின் சார்பில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது .

பிரியாணி , பிராந்தி ,வாகனவசதி இல்லாமல் கோவையில் 400-க்கு மேற்பட்ட தொழிலாளர்களை திரட்டும் வல்லமை பு.ஜ.தொ.மு. வுக்கு மட்டுமே உள்ளது என்பதை இக்கருத்தரங்கம் மெய்ப்பித்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
:- புஜதொமு, கோவை பகுதி