privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் - சேகர்

கருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் – சேகர்

-

என் பார்வையில் வினவு –  24 : சேகர்

வினவு தோழர்களுக்கு, வணக்கம். தற்செயலாக கூகுளில் எதையோ தேடப்போய்தான் வினவின் அறிமுகம் கிடைத்தது. பல பேர் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல ‘ஏன் வினவு மாதிரி ஒவ்வொரு விசயத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை’ என படிக்கப் படிக்க கேள்வி எழுந்தது.

மறுமொழிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கொட்டித் தீர்த்ததைப் போல “உமக்கு எத எடுத்தாலும் குறை சொல்வதே வாடிக்கை” என்பது போன்ற எண்ணங்களும் வந்து செல்லாமல் இல்லை. பொறுமையாக யோசித்த பின்னர் தான் சமச்சீர் கல்வி, சேது சமுத்திர திட்டம் போன்றவைகளை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதில்லை எனப் புரிந்தது.

போராடும் தருணங்கள்
தொடர்ந்து வினவைப் படித்துவந்த நிலையில் “வினை செய்” என்பதன் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சொல்வது எல்லாம் சரியாகத்தான் உள்ளது. எதன் மீது அமர்ந்துகொண்டு இந்த சமூகத்தினை அலசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள் என ஆரம்ப சில நாட்களில் எனக்கு புரியவில்லை.ஆனால் ஏதோ ஒன்று அவர்களை இயக்குகிறது என்பது மட்டும் உறுதியாகத் தோன்றியது. அதன் பெயர் கம்யூனிசம். ‘ஓ! அது வேறு நாட்டிற்கான தத்துவமாயிற்றே!’ என்பன போன்ற பாமரத்தனமான புரிதல்தான் அன்று இருந்தது. அந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானத்தை வறட்டுத்தனமாக அல்லாமல் நடைமுறையோடு பொருத்தி எளிதாக கிரகித்துக் கொள்ளும் வண்ணம் பிசைந்து கொடுப்பதில்தான் வினவின் சிறப்பு அடங்கியுள்ளது.

தோழர் மருதையன் அவர்களின் கட்டுரையால் அதிகம் ஈர்க்கப்பட்ட நான் சமச்சீர் கல்விக்காக புமாஇமு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு அவர் பேச வருவதை அறிந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து தோழர்கள் அனைவரின் உணர்வு பூர்வமான செயல்களை நேரில் கண்டேன்.

அவை என்னையும் பரிசீலிக்க வைத்தது. இதுநாள் வரை சமூகத்தின் அனைத்து நலன்களையும் பயன்படுத்தி ஒரு வளமான இடத்தை தக்கவைத்துக் கொண்ட நான் குற்றவுணர்வுக்கு உள்ளானேன்.உழைப்பின் பலனை ஒட்டாக உறிஞ்சிக் கொண்டு லாபத்தின் ஒரு சிறு துண்டை வெட்டி கூலியாக வீசி எறியும் முதலாளி போல சமூக உழைப்பில் இருந்தே ஒவ்வொன்றையும் கற்று மேலேறிய நான் கடை நிலையிலுள்ள மனிதருக்கு பிச்சை போட்டு மன நிம்மதியைத் தேடிக்கொள்வதையே மாபெரும் சாதனையாக நினைத்து வாழ்நாளை கம்பீரமாக கழித்து வந்தேன்.

ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது சில நாட்கள் அமைதியான நேரங்களில் கண்ணீர் சிந்தியதுண்டு.

மக்களின் நிலை கண்டு வருந்துவதனாலோ கழிவிரக்கம் கொண்டு பொருளுதவி செய்வதனாலோ – அது தவறில்லை என்றாலும் – எந்த மாற்றமும் வரப்போவதில்லை எனவும் அது ஒரு இயலாமையின் வெளிப்பாடு எனவும் வினவு உணர்த்தியது.

இந்த அநீதியான சமூகத்தை தக்க வைக்கும் செயல்கள், கருத்துக்கள் எவை, அவற்றை மாற்றுவதற்கான செயல்கள், கருத்துக்கள் எவை எனவும் தெளிவாக விளக்கிக் காட்டியது. எந்த நம்பிக்கையில் மாற்றம் நிகழ்த்தமுடியும் என செயல்படுகிறார்கள் என்று எண்ணிய போதெல்லாம் எந்த நம்பிக்கையில் சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என அது திருப்பிக்கேட்டது.

வினவினை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தலானேன். எனக்கு முன்பாக அவர்கள் வினவைப் படித்துவிட்டு ஏதாவது கட்டுரையினை எனக்கு அறிமுகம் செய்தால்.. மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதே சமயம் என் வட்டத்தில் நான்தான் முதலில் வினவின் ஒவ்வொரு கட்டுரையையும் படிக்க வேண்டும் என்ற வீண் கர்வமும் இருக்கும். வினவு, தினம் ஒரு கட்டுரை என வளர ஆரம்பித்து புதிய தளம், தினசரி செய்திகள் என வளர்ச்சியின் ஒவ்வொரு படியினை எட்டும்போதும் அதை என்னுடைய வெற்றியாக வரித்துக்கொண்டு நண்பர்கள் மத்தியில் மிடுக்காக நடந்து திரிவதுண்டு.

இத்தனை நாள் வாழ்ந்து என்னத்தடா செஞ்சிட்டோம் எனக்கேட்கும்போது “அதான் இந்தியா வேர்ல்டு கப்பு வாங்குறத பாத்துட்டோம்ல” எனப் பேசித் திரிந்த நண்பர்கள் இப்போது அதே கேள்விக்கு “அதான் வினவை படித்து பொறுப்பாக பேஸ்புக்ல ஷேர் பண்றோம்ல” என்பதோடு நிற்காமல் போராட்டங்களுக்கு நிதியும் தவறாமல் கொடுக்கிறார்கள்.

கீழைக்காற்று சென்று புத்தகங்கள் வாங்கி வார விடுமுறை நாட்களை உருப்படியாகக் கழிக்கத் தூண்டியது. போராடும் தருணங்கள், கேளாத செவிகள் கேட்கட்டும் போன்ற புத்தகங்கள் கீழான சிந்தனைகள் எழும்போதெல்லாம் என்னை அவற்றிலிருந்து காக்கின்றன.

தொடர்ந்து வினவைப் படித்துவந்த நிலையில் “வினை செய்” என்பதன் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தது. மீதமுள்ள என் வாழ்நாளை சரியான வழியில் தோழர்களுடன் வினைபுரியக் காத்திருக்கும் ஒரு தோழனாக என்னை மாற்றியிருக்கிறீர்கள். வினவுக்குக் நன்றிகள் மற்றும் ஆறாம் ஆண்டு புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.