privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

-

630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடைய உலகின் மிகப்பெரிய கடல் பரப்பில் இயங்கும் காற்றாலை (offshore Wind farm) தொகுப்பை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்துள்ளார். லண்டன் வரிசை (London Array) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுப்பு கடல் மட்டத்திலிருந்து சுமார் 87 மீட்டர் உயரமுள்ள 175 தூண்களில் ஒவ்வொரு தூணிலும் 3.5மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி திறனுடைய விசையாழிகளுடன் தேம்ஸ் நதியின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கென்ட் கடற்கரையிலிருந்து 12-மைல் தொலைவில் கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள இத்தொகுப்பு சுமார் 40 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாகும்.

கடல் பரப்பில் காற்றாலை
லண்டனுக்கு அருகில் கடற்பரப்பில் காற்றாலை (படம் : நன்றி கார்டியன்)

இன்றைக்கு உலகின் மொத்த மின்சார தேவை 12.5 டெரா வாட் (1.25 கோடி மெகா வாட்) என்றும் 2030-ல் அது 16.9 டெரா வாட்டாக (1.69 கோடி மெகா வாட்) இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy) இன்றைய மின் தேவையை விட பலமடங்கு இருக்கின்றன என்றும் அவற்றை சரிவர திட்டமிட்டு பயன்படுத்தினால் தேவையை விட உபரியாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும் சைன்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) இதழில் வெளியான கணிணி மாதிரிகளையும், செயற்கைக்கோள் தகவல்களையும் வைத்து தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு தெரிவிக்கிறது. குறிப்பாக, 40-லிருந்து 85 டெரா வாட் (4 கோடி முதல் 8.5 கோடி மெகாவாட்) காற்று ஆற்றலும், 580 டெரா வாட் (58 கோடி மெகாவாட்) சூரிய ஆற்றலும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கின்றன. அதாவது தேவையை விட 30-40 மடங்கு மின்சாரத்தை காற்றாலைகள் மூலமாகவும், சூரிய ஆற்றலை பயன்படுத்தியும் உற்பத்தி செய்ய முடியும்.

காற்று ஆற்றல் வருடம் முழுவதும் கிடைக்காது என்று வாதிடப்படுகிறது. ஆனால், வருடத்தில் ஒரு பகுதியில் காற்று இல்லாத போது மற்றொரு பகுதியில் வீசும். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது வடகிழக்கு பருவ காற்று வீசுவதில்லை, வடகிழக்கு பருவக்காற்று வீசும் போது தென்மேற்கு பருவ காற்று வீசுவதில்லை. தொலைநோக்குடன் திட்டமிட்டு பயன்படுத்தினால், இருக்கும் காற்று மற்றும் சூரிய ஆற்றலைக்கொண்டே நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆனால் இன்று உலகில் காற்றாலை மூலம் சுமார் 20,000 மெகாவாட் (சாத்தியமாகக் கூடியதில் வெறும் 0.8 சதவீதம்) மின்சாரமும் சூரிய ஆற்றல் மூலம் சுமார் 8,000 மெகாவாட் மின்சாரமும் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகள்
படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன்

ஒட்டு மொத்த உலகின் மின் தேவையை பூர்த்தி செய்ய தோராயமாக 38 லட்சம் காற்றாடிகளும், 89,000 சூரிய தகடுகள் தொகுப்பும் தேவைப்படலாம் என்று அதே திட்ட மாதிரி வரைவு தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை மிகப் பெரிதாக தோன்றலாம். ஆனால், போர்த்தளவாடங்களின் உற்பத்தியையும், கார்களின் உற்பத்தியையும் கணக்கிலெடுத்து பார்த்தால் இது ஒன்றுமே இல்லாத எண்ணிக்கைதான். உதாரணமாக, உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 7.3கோடி கார்களுக்கு மேல் உற்பத்தியாகின்றன. அவற்றை ஓட்டுவதற்கு எரிபொருள், ஓட்டுவதற்கான சாலைகள் என்று பெருமளவு இயற்கை வளங்களும், மனித முயற்சியும் ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகின்றன.

ஆனால், அருகிப் போய்க் கொண்டிருக்கும் நிலக்கரிக்கும், பெட்ரோலுக்கும் மாற்றாக புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் வளங்களை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் முன்னேற்றமும் இதுவரை ஏன் நடக்கவில்லை?

சந்தைப் பொருளாதார கட்டமைப்பில் சந்தையில் பொருளை விற்று லாபம் சம்பாதிப்பதுதான் தனியார் நிறுவனங்களின் அடிப்படை குறிக்கோளாக இருக்கிறது. காரை விற்று லாபம் உருவாக்க முடிந்தால், கார் விற்பனைக்கான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் என்று தேவையில்லாதவர்களுக்குக் கூட காரை விற்று விடும் திறன்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த கார்களை ஓட்டுவதற்கு எரிபொருள் எங்கிருந்து வரும், அவை வெளியிடும் நச்சு வாயுக்களால் புவி மண்டலம் மாசு படுவதற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் தனியார் நிறுவனங்களுக்கும் சந்தைக்கும் கவலையில்லாத விஷயங்கள்.

அந்த நோக்கில்தான் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நிலக்கரி, கச்சா எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தும் தனிநபர் நுகர்வுப் பொருட்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, அவற்றின் விளைவாக ஏற்பட்ட மாசுபடுதல், பருவநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. அதனால், சூழலை மாசுபடுத்தும் அனல் மின்நிலையங்களுக்கும், கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணு உலைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதனால் அங்கு புதிதாக அனல் மற்றும் அணு மின்நிலையங்களை திறக்க முடியவில்லை. இப்படி கழுத்தில் கத்தியை வைத்து சொன்ன பிறகுதான் முதலாளித்துவ உலகை சீரழிக்கும் முயற்சிகளை கைவிட்டு புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்தும் திசையில் செலுத்த முடிகிறது.

இந்தப் பின்னணியில் புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் மாசடைவு இவற்றைத் தவிர்க்க மேற்கத்திய நாடுகள் காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், கடல் அலைஆற்றல் போன்ற புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களைக் கொண்டு மின்னுற்பத்தி செய்வதில் கவனத்தை திருப்பியுள்ளன.

இந்தத் தீர்வை முதலாளித்துவ சந்தைப் போட்டி தானாக கண்டுபிடித்து செயல்படுத்தி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இத்திட்டங்களில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்ற கோட்பாட்டை வகுத்துக் கொண்டிருந்தாலும், இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தனியார் முதலாளிகளுக்கு பெருமளவு மானியங்களை மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசுகள் வாரி வழங்குகின்றன. லண்டன் காற்றாலை வரிசை நிறுவனம் டென்மார்கின் டாங் எரிசக்தி (50%), ஜெர்மனியின் E.On (30%) மற்றும் அபுதாபியின் மஸ்டர் (20%) ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க பட்டுள்ளது. இத்திட்டத்தில் தனது பங்கை முதலீடு செய்ய டாங் எரிசக்தி மட்டும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியமிருந்தும், டென்மார்க்கின் ஏற்றுமதி கடன் நிதியத்திடமிருந்தும் 2.2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் கடனாக பெற்றுள்ளது.

கூடுதலாக, லண்டன் வரிசை காற்றாலை நிறுவனத்திடமிருந்து 1,000 யூனிட்டுகள் மின்சாரத்துக்கு 155 பவுண்டுகள் விலை கொடுத்து வாங்கிகொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டனில் மின்சாரத்தின் தற்போதைய சராசரி விலை 1,000 யூனிட்டுகளுக்கு 50 பவுண்டுகளாகும். இதன்படி, கடல் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை தற்போதைய சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிகப்படியான விலையை அரசு அந்நிறுவனத்திற்கு மானியமாக கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அடுத்த இருபதாண்டுகளுக்கு லண்டன் வரிசை காற்றாலை நிறுவனம் அரசிடமிருந்து மானியங்களை பெறும். அதாவது மக்கள் வரிப்பணம் மானியமாக காற்றாலை தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டுக்கு போகும்.

மாற்று எரிசக்தி
மார்க் ஜேகப்சன் என்ற விஞ்ஞானியின் கணிப்புப்படி நியூயார்க் மாகாணம் முழுக்க முழுக்க காற்று, நீர், சூரிய மின்சக்திக்கு மாற முடியும். (படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன்)

இதே போல 1990-களில் மஹாராஷ்ர மாநில மின்வாரியம் என்ரான் நிறுவனத்திடமிருந்து சந்தை விலையை விட அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதனால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 2000-ம் ஆண்டுகளில் லாபத்தில் இயங்கிவந்த தமிழ்நாடு மின்வாரியம், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சந்தை விலையை விட பலமடங்கு அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் கொடுத்ததில் இன்று நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

புதிய தொழில்நுட்பத்தை, திட்டங்களை செயல்படுத்தும் போது அவற்றிலிருக்கும் நிச்சயமின்மை காரணமாக இம்மாதிரியான சலுகைகளை கொடுக்க வேண்டியுள்ளது என தனியார் மய, தாராள மய ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இதன்படி சந்தையில் கிடைக்கும் லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, அதிலுள்ள நிச்சயமின்மையும், பாதகமான பின்விளைவுகளும் சமூகத்துக்கு என்பதுதான் முதலாளித்துவ கோட்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் வெட்டி மானியங்களை குறைத்து வரும் உலக நாடுகளின் அரசுகள், தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துவரும் சலுகைகளில் துரும்பளவு கூட குறைப்பதில்லை என்பது மட்டுமல்ல முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வித விதமான கலர் கலரான திட்டங்களை கொண்டு வருகின்றன. உலகத்தில் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளின் அரசுகளும் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், எந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினாலும் அவை தனியால் லாப வேட்டைக்கு படியளக்குமாறு பார்த்துக் கொள்கின்றன.

பிரிட்டன் மட்டுமின்றி ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் 2020-க்குள் தமது பசுமை இலக்கை அடைய மறுசுழற்சி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை திறந்து வருகின்றன. ஜப்பான்-புக்குசிமா விபத்தை தொடர்ந்து ஜெர்மனி அடுத்த பத்தாண்டுகளுக்குள் தனது அணு உலைகளை மூடிவிடுவதாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் இப்போது 3,300 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் கடல் காற்றாலைகளை இயக்குகிறது. அதை 2020-ம் ஆண்டிற்குள் 18,000 மெகாவாட்டாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் 44,733 மெகாவாட், அமெரிக்காவில் 40,180 மெகாவாட், ஜெர்மனியில் 27,215 மெகாவாட், ஸ்பெயினில் 20,676 மெகாவாட் மின்சாரம் காற்றாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 19,051 மெகாவாட் (தமிழகத்தில் 7,134 மெகாவாட்) காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த மின் தேவையில் 1.6% மட்டுமே.

இத்தகைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் ஒதுக்கித் தள்ளப்பட்ட அனல் மின் நிலைய, அணு மின் நிலைய தொழில் நுட்பங்களை மக்கள் எதிர்ப்புகள் வலுக்காத இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிப்பதிலும் முதலாளிகள் இறங்கியிருக்கின்றனர். நம் நாட்டிலோ ’ட்ரீம் பாய்’ அப்துல் கலாம் 2020க்குள் நாடு வல்லரசாகி விடுமென்று கனவு காணச்சொல்லியும் அதற்கு நாடு மூழுவதும் அணு உலைகளை நட்டுவைக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அரசு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்களை பயன்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாறாக மற்ற அனல் மற்றும் புனல் நிலையங்களை விடவும் அபாயகரமான, காலாவதியான தொழில்நுட்பத்தில் உருவான அணு உலைகளை நாடுமுழுவதும் நட்டு வைக்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக, பாதுகாப்பற்ற உலைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளை போட்டுள்ளதுடன் மக்களின் எதிர்ப்பையும் மீறி அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது.

இந்தியாவிலும் புதுப்பிக்க கூடிய – மாற்று ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவையும் கூட பன்னாட்டு கம்பெனிகளும், இந்திய முதலாளிகளும் மானியம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் காற்றாலைகளில் பெரும்பகுதி தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சந்தை விலைக்கு மின்சார வாரியத்துக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். அந்த கூடுதல் சுமை மக்களின் தலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணமாக விடிகிறது.

மக்கள் நலனுக்காக நாட்டின் வளங்களை பயன்படுத்தவும், அணு உலைகளை இழுத்து மூடுவதற்கும், மாற்று எரிசக்தி மின்னுற்பத்தி திட்டங்களை கொண்டு வருவதற்கும் அவற்றில் தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளையை தடுப்பதற்கும் தனியார்மய தாராளமய கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

– மார்ட்டின்

மேலும் படிக்க