privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !

வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !

-

“உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியதுதானே” என்று கேட்டால்,

  • அன்னிய முதலீடு மூலம்தான் வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டுக்கு வந்து சேரும்.
  • அன்னிய நிறுவனங்களின் புதுமையான வணிக முறைகளால் உள்ளூர் தொழில்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • போக்குவரத்து, பொருள் சேமிப்பு போன்ற நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படவும் அன்னிய முதலீடு தேவை.

என்று புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

வால்மார்ட்
சில்லறை வணிகத்தின் அமெரிக்க பெரு நிறுவனம் வால்மார்ட்.

‘இந்தியாவின் சில்லறை வணிகத் துறை மிகவும் பிற்போக்காக உள்ளது, காய்கறிகளையும், பழங்களையும் குளிர்பதனப்படுத்தி சேமிக்கவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் தேவையான உள் கட்டமைப்புகள் இல்லாததால், பெருமளவிலான விவசாய விளைபொருட்கள் வீணாக்கப்படுகின்றன. எனவே இந்தத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என்று பன்னாட்டு நிறுவனங்களின் விசுவாச சேவகர்களான காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. தமது ஆட்சியின் போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கொள்கை வகுத்த பாஜகவோ இந்த முடிவுகளை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமில்லாமல், அவற்றுக்கு மறைமுக ஆதரவையும் தெரிவித்தது.

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமான சிறு வணிகர்களும் அவர்களைச் சேர்ந்த 20 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்டதற்கு,

  • 10 லட்சம் பேருக்கு அதிகமான பேர் வசிக்கும் நகரங்களில் மட்டுமே அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
  • அன்னிய நிறுவனங்கள் தாம் விற்கும் பொருட்களில் 30% உள்நாட்டில் சிறு தொழில்களிடமிருந்து வாங்க வேண்டும்

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூடவே மொத்த முதலீட்டில் 50%-ஐ கிராமங்களில் குளிர் பதன சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற உள் கட்டமைப்பு வசதிகளில் அன்னிய நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நாட்டின் சில்லறை வினியோக உள் கட்டமைப்பு மேம்படுவது உறுதி செய்யப்படும் என்று அரசு நியாயம் பேசியது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் வால்மார்ட், பார்தி (ஏர்டெல்) குழுமத்துடன் சேர்ந்து கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த சில்லறை விற்பன பெரு நிறுவனம் டெஸ்கோ டாடா குழுமத்துடன் கை கோர்த்துள்ளது. பிரான்சைச் சேர்ந்த கேரஃபோர் இன்னமும் இந்திய தரகு முதலாளி கூட்டாளியை அடையாளம் காணவில்லை. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய இப்படி எல்லாம் நிபந்தனை விதித்தால் நாங்கள் இந்தியாவில் கடை திறக்க மாட்டோம் என்று வால் மார்ட், கேரஃபோர், டெஸ்கோ போன்ற அன்னிய சில்லறை வணிக நிறுவனங்கள் சொல்லி விட்டிருக்கின்றன.

மத்திய அமைச்சரவை
மக்கள் முகத்தில் கரியைப் பூசிய மத்திய அமைச்சரவை (கோப்புப் படம்)

இந்நிலையில் மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.

முதலாவதாக, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உடைய நகரங்களிலும் மாநில அரசுகள் அனுமதித்தால் அன்னிய நிறுவனங்கள் கடை திறக்கலாம்.

இரண்டாவதாக, 30% பொருட்கள் வாங்குவதற்கான நிபந்தனைக்காக, ரூ 12 கோடி வரை மூலதனம் உடைய நிறுவனங்களையும் சேர்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது அமைச்சரவை. இதற்கு முன்பு ரூ 6 கோடி வரை மூலதனம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே சிறு நிறுவனங்களாக கருதப்பட்டன.

மேலும், அன்னிய நிறுவனம் வாங்க ஆரம்பிக்கும் போது மட்டும் மூலதன மதிப்பு ரூ 12 கோடிக்குள் இருந்தால் போதும் என்றும், பின்னர் அதன் கூடுதல் முதலீடு செய்யப்பட்டாலும் 30% நிபந்தனைக்கு அதே நிறுவனத்தை கணக்கு காட்டலாம் என்றும் சொல்லி இந்த நிபந்தனையை நடைமுறையில் ரத்து செய்து விட்டிருக்கிறது அமைச்சரவை

தினமணி 5-8-2013 தேதியிட்ட தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, இதன் மூலம் அன்னிய நிறுவனங்கள் ரூ 12 கோடி முதலீட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து நிபந்தனையை நிறைவேற்றுவதாக சொல்லி விட்டு அடுத்தடுத்து அவற்றில் மூலதனத்தை அதிகரிப்பது சாத்தியமாகிறது.

மூன்றாவதாக, மொத்த முதலீட்டில் 50%-ஐ உள்கட்டமைப்பில் செலவிட வேண்டும் என்ற நிபந்தனை, முதல் முறை கொண்டு வரும் $100 மில்லியன் (சுமார் ரூ 600 கோடி) முதலீட்டில் மட்டும் 50% செலவிட்டால் போதும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ரூ 2,000 கோடி முதலீடு செய்ய வரும் நிறுவனம் முதல் தவணையில் ரூ 600 கோடி மட்டும் கொண்டு வந்து விட்டு அதில் ரூ 300 கோடியை மட்டும் உள்கட்டுமானத்தில் செலவிட்டதாக காண்பித்து விடும். அதன் பிறகு மீதித் தொகையை தன் விருப்பப்படி விளம்பரங்கள், கடைகள் உருவாக்குதல், விற்பனை சலுகைகள் என்று செலவழிக்க பயன்படுத்த முடியும்.

தரகு முதலாளிகள்
நாட்டை கொள்ளயடிக்கும் அன்னிய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்று ஒரு அன்னிய சில்லறை விற்பனை நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். இப்போது அனுமதிக்கப்படும் அன்னிய முதலீட்டு வரம்பு 49%-ஐ 74% உயர்த்துவதை அன்னிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மாநில அரசுகள் கடைகள் திறப்பதை கட்டுப்படுத்தலாம் என்ற நிலைமையையும் அன்னிய நிறுவனங்கள் விரும்பவில்லை. குறைக்கப்பட்டு விட்டாலும் இன்னும் கணிசமான தொகையை உள் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளையும் படிப்படியாக, தீர்த்து வைத்து அன்னிய முதலீட்டாளர்கள் அவர்களது விருப்பம் போல முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க மத்திய அமைச்சரவை வழி செய்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அமைச்சரவை அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான இந்திய தரகு முதலாளிகளின் உத்தரவுகளை சிரமேற் கொண்டு செயல்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. இவர்களுக்கு மாற்றாக வைக்கப்படும் நரேந்திர மோடியின் சாதனையாக, அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதில் ஈட்டிய வெற்றிதான் வைக்கப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கும் போது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடின்றி இந்தியாவை மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பதற்கு இவர்கள் தயாராகியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

மேலும் படிக்க