privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவில் வரதட்சணை கொலைகள் - புள்ளி விவரங்கள் !

இந்தியாவில் வரதட்சணை கொலைகள் – புள்ளி விவரங்கள் !

-

ரதட்சணை மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. வரதட்சணை என்ற சமூக நோய்க்கு எதிராக பலரும் பிரச்சார இயக்கங்கள் நடத்துகின்றனர். இருப்பினும் கடந்த 12 ஆண்டுகளில் இந்த கொடிய பழக்கம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வரதட்சணை கொடுமைஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 84,013 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியவை விசாரணை கட்டத்திலோ அதற்கு முன்பாகவோ அரசால் கைவிடப்பட்டன. 5,801 வழக்குகள் விசாரணைக்குப் பிறகு பொய்யானவை என்று பதிவு செய்யப்பட்டன.

21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில், உலகமயமாக்கல் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிருக்கின்றது. வரதட்சணை தொடர்பாக 2001-ம் ஆண்டில் 6,851 மரணங்களும், 2006-ல் 7,618 மரணங்களும், 2012-ல் 8,233 மரணங்களும் நடந்திருக்கின்றன. இது தொடர்பான போலீஸ் விசாரணைகளைத் தொடர்ந்து 2001-ல் 6,539 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6,060 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. 2012-ல் இந்த எண்ணிக்கைகள் முறையே 8,022 மற்றும் 7,537 ஆக உயர்ந்தன. 2001-ம் ஆண்டு துவக்கத்தில் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 21,922 ஆக இருந்தது. 2012-ம் ஆண்டு எண்ணிக்கை 29,669 ஆக உயர்ந்தது.

12 ஆண்டு கால கட்டத்தில் 1,389 வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் 44,668 வழக்குகளில் மட்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதாவது மொத்த வரதட்சணை தொடர்பான மரணங்களில் 48 சதவீதம் வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற தீர்ப்பு குற்றம் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. எஞ்சியவை போலிஸ் விசாரணையின் பலவீனம், அரசுத் தரப்பின் உறுதியின்மை இவற்றால் நீர்த்துப் போயிருக்கின்றன.

மாநில வாரியான புள்ளிவிபரங்களின் படி இந்தி பேசும் பகுதியில் உள்ள பின் தங்கிய மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மிக அதிகமான வரதட்சணை இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன (23,824 அவற்றில் 19,702 நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன). அடுத்தபடியாக பீகார் மாநிலம் உள்ளது (13,548 வழக்குகளில் 9,984 நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன). குற்றம் உறுதியாகும் வீதம் உத்தர பிரதேசத்தில் சுமார் 50 சதவீதமாகவும், பீகாரில் சுமார் 30 சதவீதமாகவும் உள்ளது. எல்லா மாநிலங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது, தண்டனை வழங்கப்படுவதை விட அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்ததாக கருதப்படும் மகாராஷ்டிராவில் நீதிமன்ற குற்ற நிரூபண வீதம் மிகக் குறைவாக உள்ளது. நடத்தப்பட்ட 3,485 வழக்குகளில் 3,066-ல் (88 சதவீதம்) குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மை ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ விட அதிகமாக இருந்தது. பீகாரில் 1,000-க்கும் அதிகமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை ஆய்வுக் காலத்தின் ஆரம்பத்தில் சுமார் 600-க்கும் அருகில் இருந்தது பின்னர் உயர்ந்து சுமார் 800 ஐ கடந்தது.

பார்ப்பன இந்து மத திருமணங்கள்
பார்ப்பன இந்து மத திருமணங்கள் – மணம் செய்தவர்கள் பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்யப்படுகிறார்கள்..

நாட்டின் தலைநகரான டெல்லியில், அரசியல் தலைவர்களும், தொழில் துறை பெரிய மனிதர்களும் வசித்து வந்தாலும், 12 ஆண்டு காலத்தில் வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை 1,582 ஆக இருந்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலிலும் நாகாலாந்தும், யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் மட்டுமே ஒரு வரதட்சணை சாவு கூட பதிவாகாத பகுதிகள். மற்ற இந்திய பகுதிகள் அனைத்திலும் பிற்போக்கான கிரிமினல் கலாச்சாரம் இன்னும் தாக்கம் செலுத்துகிறது என்று தெரிகிறது.

பார்ப்பனிய இந்து மதத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. நவீன காலத்திலும் கூட அத்தகைய கொடிய பழக்கங்கள் குறைந்து விடவில்லை. பெண்களை மணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை கொடுத்து செய்ய வேண்டும் என்பது இந்தியா முழுவதும் வழக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் பெண்களை சக மனிதர்களாக பார்க்காமல் பணம் கொடுத்து வாங்கி விற்பனை செய்யும் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். பெண் சிசுக் கொலை நடப்பதற்கும் இதுவே காரணம். வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் உரிய வயது வந்தும் திருமணம் செய்ய முடியாமல் வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். மணம் செய்தவர்களோ பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளான இந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்று பெண்கள் அதிகம் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தாலும் வரதட்சணையின் அளவு மாறிவிடவில்லை. பெண்களுக்கும் சுய மரியாதை கிடைத்து விடவில்லை. இந்து மதவெறியர்களை அரசியல் ரீதியில் எதிர்த்து போராடுவது போல பார்ப்பனியத்தை பண்பாட்டு ரீதியிலும் நாம் முறியடிக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் நமது நாட்டு பெண்கள் வரதட்சணைக்காக கொல்லப்படுவது நின்று விடாது.
__________________

இந்து நாளிதழில் வெளியான செய்தியை தழுவி எழுதப்பட்டது.