privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுண்படாமல் பேசச் சொன்ன போலீசு - உசிலை பொதுக் கூட்டம் !

புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !

-

மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கை – 2012
நமது நாட்டை மறுகாலனியாக்கும் அடையாளமே!

என்ற தலைப்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முருகன் கோவில் அருகில் 14.08.2013 அன்று மாலை 6.30 மணி அளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விவிமு இணைச் செயலாளர் தோழர் அ சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலை வட்டார விவிமு செயலாளர் தோழர் குருசாமி துவக்க உரையும், மகஇக மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையும் வழங்கினார்கள்.

தோழர் குருசாமி தனது உரையில், காவல்துறை தனது பொதுக்கூட்ட அனுமதி கடிதத்தில் எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் போது அவர்கள் மனம் புண்படாத வகையில் பேச வேண்டும் எனக் கூறியிருந்ததை குறிப்பிட்டு, மக்கள் எதிரி மன்மோகன் சிங் நாட்டையே கூறு போட்டு விற்றாலும், “ஐயா, மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களே, நாட்டை விற்காதீர்கள்” என்று மரியாதையாக கெஞ்சி பேச வேண்டுமா? போலீஸ்காரர்கள் திருடனிடம் அவர்கள் மனம் புண்படாத வகையில் மரியாதையாகத்தான் பேசுவீர்களா? என கிண்டலடித்தும், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், மக்கள் சாராயக் கடை வேண்டாம், கல்வி, மருத்துவம் மற்றும் சில்லறை வணிகத்தில் தனியார்மயம் வேண்டாம், அணு உலை வேண்டாம் என்றால் கொண்டு வருவதும், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போது அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இதுதான் சுதந்திர நாட்டின் லட்சணமா என்று போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தியும், தேசிய நீர்க்கொள்கை என்றால் என்ன? அதன் பாதிப்பு என்ன? என்பதை சுருக்கமாக விளக்கியும் பேசினார்.

தோழர் காளியப்பன் தனது சிறப்புரையில் காவல்துறை அனுமதியில் “எதிர்க் கட்சிகளின் மனசு புண்படாமல் என்று குறிப்பிடத் தேவையில்லை, ஏனெனில் ஓட்டுசீட்டு அரசியல்வாதிகள் யாரும் நாங்கள் விமர்சனம் செய்து பேசுவதால் மனம் புண்படும் அளவுக்கு சொரணை உள்ளவர்கள் இல்லை” என்றும் “தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது “நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்” என்று கூறுவதாகவும், “கல்வி, மருத்துவம், சில்லறை வணிகம் என ஒவ்வொன்றும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு இருப்பது போல இன்று நிலத்தடி நீரும் தனியார் பன்னாட்டு முதலாளிகள் வசம் ஒப்படைக்க இருக்கிறது” என்றும் விளக்கினார்.

“நடிகர் விஜய் படம் வெளி வராமல் தடை செய்ததை தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடிய முட்டாள்கள் இருக்கக் கூடிய இந்த தமிழ்நாட்டில் வாழ வேண்டிய கேவலத்தையும், கஞ்சிக்கு வழியில்லாத நாட்டில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆடம்பர பொருட்கள் பல கோடி ரூபாய் மதிப்பில்  இறக்குமதி செய்யப்படுகின்றன.”

“நமது பணம் மதிப்பு சரிந்து விட்டது என்று சொல்வதில் என்ன அர்த்தம்? இருந்தும், சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு கிராமங்களில் ரூ 27, நகரத்தில் ரூ 36 வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று திட்டக் கமிஷன் தலைவர் மான்டேக் சிங் கூறுகிறார். அதே சமயம் மான்டேக் சிங் தனது அலுவலகத்தில் ஒரு கழிப்பறைக்கு ரூ 30 லட்சம் செலவு செய்து கட்டியுள்ளார். இதற்கு எதிராய் நாமோ, ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளோ போராடாமல் இருக்கிறோமே, இதை என்னவென்று சொல்வது? நான் ஒரு நாளைக்கு ரூ 50 தருகிறேன் அவரோ, மன்மோகன் சிங்கோ அவர்களின் ஒரு நாள் தேவையை அதில் பூர்த்தி செய்வார்களா” என்று கேள்வி எழுப்பினார்.

வலது கம்யூனிஸ்ட் தா பாண்டியன் ஒரு தொலைக்காட்சி உரையில் தமிழ்நாட்டில் மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை விசாரித்து அதற்கு எங்கள் கட்சியில் விவாதித்து தீர்வு கொண்டு வருவதற்கு முன்பே அம்மா அவர்கள் நடைமுறைப்படுத்தி விடுகிறார்கள் என்று ஜெயாவை புகழ்ந்து கூறியதை வன்மையாக கண்டித்து, “ஐயா நல்லக் கண்ணு அவர்களே நீங்கள் உங்கள் கட்சியை கலைத்து விடுங்கள்” என்று கூறியது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தோழரின் ஒன்றரை மணி நேர எளிமையான உரை யாரையும் இடையில் எழுந்து செல்லாமல் அமைதி காத்து இருந்து ஆர்வத்துடன் கவனிக்கச் செய்தது. படிப்பறிவு இல்லா மக்களும் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது என்று பலர் கருத்து கூறினர்.

இந்தப் பகுதியில் மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை 2012-ஐ கண்டித்து எந்த ஒரு ஓட்டுக் கட்சி அமைப்புகளும் பேசாத நிலையில் நாம் அதை அம்பலப்படுத்தியும் தனியார்மயத்தை விரட்ட மக்கள் திரளாக அமைப்பாக போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இறுதியாக நடந்த மகஇகவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. புதிய பாடல்களான “அம்மா இட்லி ஒத்த ரூபா, விக்கினா தண்ணி பத்து ரூபா” “காலமு கலாமு” பாடல்கள் மிகவும் உற்சாகமாய் இருந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளார்கள்.

பொதுக்கூட்டத்தில் ஆதரவாளர்கள், நிதி கொடுத்தவர்கள் என்ற நிறைய பேர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அரசுத் துறையினர் என சிலர் கூட்டத்திற்கு சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

உளவுத் துறையினர் வழக்கமாய் இரண்டு, மூன்று பேருக்கு பதிலாக ஏழு பேருக்கு மேலாக தென்பட்டனர். அவர்களில் ஒருவர், “இருக்கிற அரசியல் கூட்டத்திலேயே நீங்கதான் ரொம்ப நல்லா பேசுறீங்க, ஆனா மேலே இருந்து உங்களைத்தான் முழுசா படம் புடிச்சிட்டு வரச் சொல்றாங்க, இன்றைக்கு எங்களுக்கு இரண்டாயிரம் வரைக்கும் செலவு” என ஆதங்கப்பட்டார்.  தோழர் காளியப்பனிடம், “அரசுத் துறை, பன்னாட்டு நிறுவனங்கள் என நிறைய பேர் பற்றி நிறைய விபரங்கள் சொல்றீங்க, எங்களால் வேகமாக குறிப்பு கூட எடுக்க முடியவில்லை” எனச் சொன்னார்.

இந்த பொதுக்கூட்டச் செய்தியை தெருமுனைப் பிரச்சாரமாக அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் கருத்து கூறினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள், சிறு வணிகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. மக்கள் பிரச்சனைகளை எடுத்து நியாயத்தை பேசியது விவிமு மீது நல்ல அபிப்பிராயத்தையும் சங்கமாக சேர்ந்து செயல்படுவதற்கு பொருத்தமான அமைப்பு வி.வி.மு.தான் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புஜ செய்தியாளர்,
உசிலம்பட்டி.