privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !

கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !

-

கோவை பகுதியில் ரியல் எஸ்டேட் தரகோடு கட்டப் பஞ்சாயத்தும் செய்பவர்கள் சிலர் பல்வேறு இந்துமதவெறி இயக்கங்களை வைத்திருக்கின்றனர். சங்க பரிவாரங்களின் வானரங்களோடும் அவைகளுக்கு போட்டியாகவும் பல்வேறு வானரங்கள் அங்கே செயல்படுகின்றன. அதில் ஒன்று அகில பாரத அனுமன் சேனா. கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்த குரங்கு சேனாவின் மாநில அவைத் தலைவர் சக்திவேல் வசிக்கிறார். கடந்த மாதம் 29-ம் தேதி இவர் நடத்திய சுய கடத்தல் நாடகம் அங்கிருக்கும் நாய், குரங்குகளைக் கூட சந்தி சிரிக்க வைத்து விட்டது.

குரங்கு வேலை

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் சேனாவின் கொடியேற்றும் விழாவுக்கு செல்ல 29-ம் தேதி கிளம்பிய சக்திவேலுடன் பாதுகாப்புக்கு வந்த கோவை போலீசார், மாநகர எல்லையில் நின்று விட்டனர். இனிமேல் நாங்கள் வர மாட்டோம் என்றும், திரும்பும் வழியில் நகர எல்லைக்கு வந்தவுடன் தகவல் தெரிவித்தால் வந்து மீண்டும் பாதுகாப்பளிக்கிறோம் என்று கூறியுள்ளனர். குரங்குகளுக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! கொடியேற்றுவதற்கோ, குடிப்பதற்கோ இவர்கள் வெளியில் வந்தால் போலிசும் பாதுகாப்பிற்காக வருகிறது!

எனினும் கோத்தகிரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி புஷ்பா கலவரமாகி போலீசில் புகார் தரவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் 31-ம் தேதி வீடு திரும்பிய சக்திவேல் தன்னை போலீசு உடையில் இருந்த சிலர் துடியலூர் அருகே வரும்போது மயக்க மருந்து கொடுத்து கடத்தியதாகவும், திருவனந்தபுரம் கொண்டு போய் அங்கே கடலில் தூக்கி எறிய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தான் அவர்களை ஏமாற்றி தப்பிவிட்டதாகவும் போலீசிடம் கூறியிருக்கிறார். ஏற்கெனவே இந்துமதவெறி அமைப்புகளின் தலைவர்கள் சிலர் சொந்த காரணங்களுக்காக கூலிப்படையால் கொல்லப்படுவதற்கு கண், காது, மூக்கு வைத்து கதைகள் உருவாக்கப்படுவதால் எரிச்சலில் இருக்கும் போலீசார் வேறுவழியின்றி இதுபற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க துவங்கினர்.

சக்திவேலுடன் கோத்தகிரி சென்ற அவரது நண்பர் ராமராஜை விசாரிக்கும்போது போலீசாரிடம் உண்மையை சொல்லி விட்டார். அதாவது நகர எல்லையைத் தாண்டிய பிறகு பாதுகாப்புக்கு வர மாட்டோம் எனக் கறாராக சொல்லி விட்ட போலீசாருக்கு தக்க பாடம் புகட்ட விரும்பிய சக்திவேல் அதற்காக ஒரு கடத்தல் நாடகம் ஆடினாராம். 29-ம் தேதி மாலையில் கோத்தகிரியில் கொடியேற்றிய அவர் நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரி சென்றாராம். விவேகானந்தர் மண்டபம், பகவதி அம்மன் கோவில், சூரிய உதயம், அஸ்தமனமெல்லாம் பார்த்திருக்கிறார். இதற்கிடையில் மனைவி கணவனை காணவில்லை எனப் புகார் தந்து விடவே அதற்கு தோதாக கடத்தல், திருவனந்தபுரம், கடல் என கதையை அள்ளி விட்டிருக்கிறார்.

இந்நாடகம் போடுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் கடந்த மாதம் 24ம் தேதி அவர் நடத்தும் பேக்கரி மீது பெட்ரோல் குண்டை அவரே போட்டு விட்டு போலீசில் இசுலாமிய தீவிரவாதிகள் குண்டு போட்டு விட்டதாக புகார் தரவே முகமது அலி, ஜாபர் சாதிக், அஷ்ரப் ஆகிய அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இந்து முன்னணி, பிஜேபி உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் தங்களது தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக சொல்லி போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்தார்கள், பந்த் எல்லாம் நடத்திப் பார்த்தார்கள். அவர்கள் செல்வாக்காக உள்ள பகுதிகளில் கூட ஓரளவுதான் மக்கள் ஆதரவு கிடைத்தது.

மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால் வழக்கம் போல இப்போது போலித் தாக்குதல்கள், கடத்தல்களை நடத்த துவங்கி விட்டனர். சம்சௌதா விரைவு வண்டியில் நடந்த குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு, தென்காசி குண்டு தயாரிப்பின் போது நடந்த விபத்து என இந்துமத வெறி பாசிஸ்டுகள் பலமுறை தாங்கள் வைத்த குண்டுக்கு இசுலாமியர்களை பொறுப்பேற்க வைக்கும் விதமாக கதையை திசை திருப்பியுள்ளனர் என்பதை வாசகர்கள் அறிந்திருக்க கூடும். அதன் ஒரு சோறு பதம் தான் அனுமன் சேனாவின் சக்திவேல் நடத்திய இரண்டு நாடகங்களும்.

இது வரை நாடு முழுதும் நடைபெற்றுள்ள பெரும்பான்மை மதக் கலவரங்களில் இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். தேசப் பிரிவினைக்கு முன்னரே கூட இதனை பரிவாரங்கள் நடத்தியிருக்கிறார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் லவ் ஜிகாத் நடக்கிறது என்ற தமிழகத்தில் அவர்களது புரளி வரை இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.

மேலும் படிக்க