privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ?

ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ?

-

லைமையேற்க முடியாமல் தேம்பி விழுந்த தலைவாவின் காலத்தில் வந்த படமிது. இங்கேயும் தேம்புதலுக்கு குறைவில்லை. இப்படத்தில் காதலுக்கு ஆட்படும் இன்றைய தலைமுறை குறித்து முதல் பாதியில் ‘கிண்டலும்’ பிற்பாதியில் அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் பாசமலர் உணர்ச்சியுமாய் வந்து போகிறது. படம் பார்த்தவர்கள் இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்தை என்னவாய் உள் வாங்கிக் கொண்டார்கள்? இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்துதான் என்ன?

முதலில் கதை.

ஆதலினால் காதல் செய்வீர்ஸ்வேதாவும் கார்த்திக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள். இருவருமே ஒரே நண்பர்கள் குழுமத்திலிருக்கிறார்கள். கதை நடக்கும் காதல் களம் சமகாலம் என்பதாலும், காதலின் ‘காலம்’ ராமதாசு வகையறாக்களின் துன்புறுத்தலில் இருப்பதாலும் காதல் இங்கே பேசுபொருளாக இருக்கிறது. இந்த நண்பர் வட்டத்தின் உள்ளேயும், வெளியேயும் அவர்கள் புழங்கும் உலகில் காதல் மிக எளிதாக கிடைக்கும் வஸ்துவாக விளங்குகிறது.

கார்த்திக்கின் நண்பன் ஜெய் நவீன காதலர்களின் ஞானகுருவாக இருக்கிறான். பார்த்தவுடன் ’பிக்கப்’ செய்வது, ’பிக்கப்’ செய்ததை ’பேக்கப்’ செய்வது, பேக்கப் செய்ததை டிராப் செய்வது உள்ளிட்டு ஏராளமான அரிய தகவல்களின் கலைக்கலைஞ்சியமாகவும் அதை நடைமுறைப்படுத்தும் மெக்கானிக்காகவும் விளங்குகிறான். இப்படி ஒரு நண்பன் உடனிருக்கும் போது கார்த்திக் காதலித்தே ஆக வேண்டுமல்லவா? காதலிக்கிறான்.

சொல்லப் போனால் இந்த நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் ஸ்வேதாவை காதலிப்பதற்காகவே அவன் இந்த குழுமத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறான். இது ஒரு எதிர்பாராத திருப்பம். தோழியின் காதல் தோல்வியினால் காதலிப்பது கூடாது என்று இருக்கும் ஸ்வேதா – இது அடுத்த எதிர்பாராத திருப்பம். பார்வையாளர்கள் இந்த இரண்டு எதிர்பாராத திருப்பங்களுக்கிடையே திண்டாடிக் கொண்டிருக்கும்  போதே காதல் குறித்து ஜெய் முன் வைக்கும் ஏராளமான தத்துவ விசாரணைகளைக் கடந்து கார்த்திக் தனது காதலை ஸ்வேதாவிடம் தெரிவிக்கிறான்.

தமிழ் சினிமா என்பதால் அதன் நாயகிகளுக்கு உரிய அதே ஃபார்முலா படி ஸ்வேதா துவக்கத்தில் கார்த்திக்கின் காதலை ‘தயக்கத்துடன்’ மறுக்கிறாள். பின், அவனது தற்கொலை முயற்சிக்காக ‘மனதை’ப் பறிகொடுக்கிறாள். இடைவேளைக்கு முன்பே உடலையும் விரும்பிக் கொடுக்கிறாள். காதலர்கள் காதலிக்க ஆரம்பித்து, கடற்கரை, காபி ஷாப் திசையில் மகாபலிபுரம் சென்று தனி அறையில் சேர்கிறார்கள். பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் தங்கை பாத்திரம்தான் இப்படி ஒரு விரைவுப் பாதையில் ‘கற்பி’ழப்பார்கள். தற்போது அது நாயகர்களுக்கே நடக்கிறது என்ற வரையில் தமிழ் சினிமா ‘முன்னேறி’யிருக்கிறது.

மகாபலிபுரம் எபிசோடுக்கு முன்பேயே மனசாட்சியை பறி கொடுக்கிறாள் நாயகி. தனது காதலை வீட்டாரிடம் மறைக்க விழையும் ஸ்வேதா வாயைத் திறந்ததும் காற்றையும் ஒலியையும் முந்திக் கொண்டு பொய்கள் ஒரு ஆசுகவியின் ‘கவிதை’யாய் வந்து விழுகின்றன. எந்தத் திட்டமிடலோ யோசனையோ இன்றி அவள் தாயிடம் பொய் சொல்லும் வேகம் அசாத்தியமானது. ஆனால் இயக்குநரோ, இல்லை பார்வையாளர்களோ இதை காதல் தோற்றுவிக்கும் ஒரு விடலைப் பருவ பொய் என்று மட்டும் முடிவு செய்கிறார்கள்.

இல்லை, இது ஒரு இளந்தலைமுறையின் ஆளுமையிலிருந்து விளைவது. அந்த ஆளுமை இத்தகைய கிரிமினல் தனங்கள், பொய்கள், சதிகள், சமாளிப்புகள் சகிதம் எப்படி வளர்கிறது என்பதே நாம் கவனம் கொள்ள வேண்டிய அக்கறை. ஏனனெனில் இத்தகைய விழுமியங்களோடு வளரும் இளைய தலைமுறைதான் நாளை தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், போலிசு- இராணுவ பதவிகள், ஊடக-சினிமா வாய்ப்புகள் என்று அனைத்திலும் கீழிலோ இல்லை மேலாகவோ ஆக்கிரமிக்கப் போகிறார்கள். அவர்களது சமூகப் பார்வை அத்தகைய பதவிகளில் என்னவாய் நடந்து கொள்ளும் என்று பார்த்தால் அதற்கு இந்தக் காதல் கதை ஒரு பானையில் இருக்கும் ஒரு சோறு.

அத்தகைய பார்வையில் இந்தப் பாத்திரங்களும், கதையும் கொண்டு செல்லப்பட்டிருந்தால் உண்மையிலேயே ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும். ஆனால் லொள்ளு சபா காமடி, பா வரிசைப்பட சென்டிமெண்ட் இரண்டிலும் விழுந்திருக்கும் இயக்குநருக்கு அதைத் தாண்டி பார்க்கவே, பேசவோ, காட்டவோ முடியவில்லை.

இதற்குள் இடைவேளை விடும் நேரம் வந்து விட்டது என்பதால் இன்னுமொரு எதிர்பாராத திருப்பம் தேவைப்படுகிறது, ஸ்வேதா கருவுறுகிறாள். இடைவேளைக்குப் பின் காதலைப் போலவே கர்ப்பத்தையும் மறைக்க முயற்சிக்கிறாள். வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைக்க காதலனோடும் அவனது நண்பன் ஜெய்யோடும் சேர்ந்து முயற்சித்துப் பார்க்கிறாள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு ஸ்வேதா புதிது என்பதால் மசக்கை வாந்தியை மறைப்பதில் உள்ள சிக்கல்களை அறியாதவளாகவே இருக்கிறாள் – எனவே ஒரு சந்தர்ப்பத்தில் தன் அம்மாவிடம் வாயும் வாந்தியுமாக மாட்டிக் கொள்கிறாள்.

நிலைமையை எதிர்கொள்ள முடிவெடுக்கும் ஸ்வேதாவின் நடுத்தர வர்க்க பெற்றோர் எப்படியும் கார்த்திக்கோடு அவளுக்குத் திருமண ஏற்பாட்டை செய்து விட முயற்சிக்கிறார்கள். கார்த்திக்கின் நடுத்தர வர்க்கப் பெற்றோர் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆங்… அவ்வப்போது கார்த்திக்கின் அப்பா அவனை ’உருப்படாத பயலே’ என்று ஏசியவாறே அடிக்கிறார் என்பதையும் சேர்த்துச் சொல்லி விடுகிறோம்.

பெண்ணின் வயிற்றில் கருவளர்ந்து கொண்டிருப்பதால் திருமணத்திற்கு மறுப்பது சட்டரீதியில் தொல்லையாக கைது, சிறையாக முடிந்து விடும் என்று அஞ்சும் பையன் வீட்டார் சில சமயம் ஒப்புக் கொள்வது போல் பேசுகிறார்கள், சில சமயம் பெண்ணின் ஒழுக்கத்தை அவளது தந்தையின் முன்பு வைத்தே கேலி பேசுகிறார்கள். இதை எதிர் கொண்டு போராடத் தெரியாத கார்த்திக் திருமணத்தை வலியுறுத்தி தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான். பேருந்தில் இருந்து விழுந்து காதலியின் மனம் கவர்ந்த கார்த்திக் மணிக்கட்டை அறுத்ததன் மூலம் பெற்றோரை ‘வழிக்கு’ கொண்டு வருகிறான்.

இறுதியாக திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் கார்த்திக்கின் பெற்றோர், திருமணத்திற்கு முன்பே ஸ்வேதா தனது கருவைக் கலைத்து விட வேண்டும் என்கிறார்கள். கார்த்திக்கின் கருத்தும் அதுதான். ஆனால், இதற்குள் அந்தக் கரு கலைக்க கூடிய நாட்களைத் தாண்டி விட்டது. இனி கலைத்தால் உயிருக்கு ஆபத்து. அதை நம்பாத கார்த்திக், தனது வீட்டாரை திருப்திப்படுத்த கலைத்துவிடச் சொல்லி வலியுறுத்துகிறான். ஸ்வேதா யாரோ சொல்லிக் கொடுத்து பொய் சொல்லுவதாகவும் விமரிசிக்கிறான்.

இதற்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தை ஒன்றில் ஸ்வேதாவின் அப்பாவிடம் “கூப்பிட்டதும் வந்து படுத்தவ தானே உங்க மக?” என்று கார்த்திக்கின் உறவினர்கள் ஏசுகிறார்கள். வெகுண்டெழும் ஸ்வேதாவின் அம்மா கார்த்திக்கின் வீடு தேடிப் போய் ஏக வசனத்தில் சண்டையிடுகிறார். இந்தச் சண்டை ஒரு பெண்ணைப் பெற்ற தாயின் தார்மீக கோபத்தில் எதார்த்தமாகவே நடக்கிறது. என்றாலும் அதில் ‘காய’ப்படுத்தப்பட்ட அல்லது ஸ்வேதாவின் காயத்தைக் கண்டு பதறாத கார்த்திக் இப்போது முழுதாக தனது வீட்டாரின் நிலைப்பாட்டை ஆதரித்து நிற்கிறான். ஸ்வேதா அவனை சுயநலவாதி என்று சாடி விட்டுப் பிரிகிறாள். போலிஸ், வழக்கு ஏதும் தேவையில்லை என்று தனது பெற்றோரிடம் சமாதானப்படுத்துகிறாள்.

இறுதிக் காட்சி. வெளியூரிலிருக்கும் பெயர் தெரியாத மருத்துவமனை ஒன்றில் ஸ்வேதா ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அவளது தந்தை அந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறார். ஒரு சோகப்பாட்டு. அந்தக் குழந்தை கொஞ்சுவாரின்றி சிரிக்கிறது. அரவணைப்பு இன்றி அழுகிறது. ஊட்டுவாரின்றி சாப்பிடுகிறது. வெயில் சூடு பொறுக்காமல் அலறுகிறது. பார்வையாளர்கள் உள்ளம் பதறுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த ஆண் குழந்தையின் முகம் மங்கி மறைகிறது.

அடுத்த காட்சியில் ஸ்வேதா மணப்பெண் கோலத்தில் யாரோ ஒரு ’அமெரிக்க மாப்பிள்ளையின்’ முன் எதுவும் நடக்காத மாதிரி சிரித்தவாறு அமர்ந்திருக்கிறாள். இரசிகர்களில் ஒரு சிலர் அந்த அமெரிக்க மாப்பிள்ளையிடம் ஸ்வேதா கதை தெரிவிக்கப்பட்டிருக்குமா என்று ‘ஜனநாயகமாக’ யோசிக்கிறார்கள். ஒரு சிலர் அவனை ‘தியாகி’ என்று கொண்டாடவும் வாய்ப்பிருக்கிறது. கார்த்திக் காஃபி ஷாப் ஒன்றில் புதிய காதலியோடு அமர்ந்திருக்கிறான். இதிலிருந்து கார்த்திக் யாரை கல்யாணம் செய்வான் என்று இயக்குநருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்பதால் இங்கே கல்யாணக் காட்சிகள் இல்லை போலும்.

***

இறுதிக் காட்சியில் நிகழ்த்தப்பட்ட இந்த அதிரடி சென்டிமெண்ட் தாக்குதலில் இருந்து மொத்தப் படத்தையும் மதிப்பிட்டு சிலாகிக்கிறார்கள் இரசிகர்கள். முதல் பாதியில் தாங்களே இரசித்துச் சிரித்த ஸ்வேதாவின் சின்னச் சின்ன பொய்களும், கள்ளத்தனங்களும் இந்த குழந்தைச் சிறுவனின் சிரிப்பில் வந்து நிறைவுற்றதை அவர்களால் ஜீரணித்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் இப்படி அனாதைக் குழந்தைகளை உருவாக்கக் கூடாது என்று நினைக்கும் அவர்கள் முதல் பாதிக் காட்சிகளின் நகைச்சுவைகளையும் விரும்புகிறார்கள். இரண்டுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்திய அந்த அனாதைக் குழந்தை மட்டும் இல்லையென்றால் யாருக்கும் பிரச்சினை இல்லை. கண்ணீரோ, கருவோ தராத வரை காதலில் ஜாலியாக, காமடியாக ஏன் காமமாக இருப்பது தவறில்லை எனும் இந்தக் கருத்தின் பின்னணி என்ன?

அல்லது அனாதைக் குழந்தையின் அவலத்தை பார்த்து விட்டு வெளியேறும் இரசிகர்கள் என்ன மனநிலையில் செல்கிறார்கள்? வேறு ஒன்றுமில்லை, கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு ‘பேசாம காண்டம் யூஸ் பண்ணியிருக்க வேண்டியது தானே’ என்றவாறு திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள். விடலைக் காதல், முதிர்ச்சியற்ற காதல்களின் பிரச்சினைக்கு ஐந்து ரூபாய் காண்டத்தில் தீர்விருக்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படம் சிந்தனையில் வேறு பரிமாணங்களில் நுழையவே வாய்ப்பில்லை.

ஆனால், எதார்த்தத்தில் “கலவி கொள்ளலாம் வா” என்று அழைக்கும் காதலனை மறுக்க முடியாத அளவுக்கு துணிவும், அதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு மகாபலிபுரம் கிளம்பும் அளவுக்கு தைரியமும் கொண்ட ஸ்வேதா ஆணுறையின் அவசியம் அறியாத அளவுக்கு அப்பாவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கதை நடப்பது எங்கோ குக்கிராமத்தில் அல்ல. கதையின் பின்னணியும் வயல்காடும் அல்ல, கதையின் நாயகி கொத்து வேலை செய்பவரும் அல்ல.

மேலும் படத்தில் காட்டப்படுவது போல கருக்கலைப்பு ஒன்றும் அவ்வளவு கடினமானதாக யதார்த்தத்தில் இல்லை. திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்யும் பெண்கள் பலர் இறந்து போகிறார்கள் என்ற அனுபவத்திற்கு பிறகு அரசே இப்போது கருக்கலைப்பை எளிதாக மாற்றியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் கூட பெரிய தடைகள் ஏதுமின்றி யாரும் கலைப்பு செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக உறவு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் கிடையாது என்று யாருடனும் உறவு வைக்கலாம் அளவுக்கு அரசு மாறியிருப்பது இயக்குநருக்கு தெரியாது போலும். தாராளமயமாக்கலின் அரசை அவர் லைசன்ஸ் கோட்டா ராஜ்-ஆக புரிந்திருக்கிறார்.

காதல் குறித்த பிரச்சினைகளை காமம், குழந்தை தொடர்பானவையாக மட்டும் ஒருவிதமான ஒழுக்கவாதப் பார்வையுடன் பார்க்கும் இத்திரைப்படம் சாத்தியமற்ற எதிர்மறை மிரட்டல் மூலம் பார்வையாளரிடம் பேசுகிறது. இதனால் நேர்மறையில் காதல் குறித்து பரிசீலிக்கும் பண்பையோ, பார்வைகளையோ நாம் பெற முடியாது.

ஸ்வேதாவை ஒரு பெண் என்ற முறையில் பரிசீலித்தால் அவளது தடுமாற்றங்களும், அச்சங்களும் அவளை ஒழுக்கம் கெட்டவள் என்று கார்த்திக்கின் உறவினர்கள் பேசும் போதும் ஆணாதிக்க சமூகத்தினால் பாதிக்கப்படுவது பெண்தான் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து போராடும் வழியையோ இல்லை அவலத்தையோ கூட ஸ்வேதாவின் பாத்திரம் கொண்டிருக்கவில்லை. அவள் சடுதியில் நட்பு, கோபம், காதல், பிரிவு கொள்ளும் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, தனது பிரச்சினைகளை தீர்க்க முடியாத போது சாலையில் குதித்து தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறாள்.

ஒரு பெண் நேர்மறையில் இந்த சமுதாயத்தில் வாழ முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்றால் அதன் எதிர்மறைகளின் அயோக்கியத்தனத்தையாவது உணர்த்த வேண்டும். இங்கோ அதை ஒரு அனாதைக் குழந்தையின் கண்ணீர் எடுத்துக் கொண்ட படியால் படம் பார்க்கும் பெண்கள் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுவாக மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மாறாக வாழ்க்கை என்பது எப்போதும நீதிக்கான போராட்டத்தில் விடுதலையாகும் என்பதே அடிமைகளாக விதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான ஒன்று.

இதனால் விடலைப்பருவ மாணவி ஒருத்தியை போராளியாக காட்ட முடியாது. ஆனால் அவள் போராடத் தேவை உள்ளதை உணர்த்துவதையே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

அப்படி ஒரு பார்வை இருந்தால் தனது காதலுக்கு கிரிமினல் போல யோசிக்கும் ஸ்வேதாவை பொருத்தமாக இடித்துரைக்கும் பார்வையை பார்வையாளர்கள் பெற்றிருப்பார்கள். ஏனெனில் ஸ்வேதாவின் ஆளுமையில் காதல் என்பது ஒரு அம்சம்தான். அந்த ஒரு அம்சம் காதல் வயப்பட்டிருக்கும் காலத்தில் ஏனைய நேர்மறை பண்புகளை காதலின் பொருட்டாவது கொண்டு வந்திருக்கும். ஆனால் காதலின் பொருட்டு இருக்கும் நேர்மையும் பறிபோகிறது என்றால் இங்கே ஸ்வேதாவை வளர்க்கும் பெற்றோரும், பள்ளியும், கல்லூரியும், சமூகமும் யார், என்ன விழுமியங்களை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது.

அதனால்தான் மீண்டும் சொல்கிறோம். இது வெறும் அனாதைக் குழந்தை குறித்த பிரச்சினை அல்ல. ஸ்வேதா, கார்த்திக் போன்ற காரியவாதிகளை உருவாக்கும் நடுத்தர வர்க்கம் குறித்த பிரச்சினை இது. மகன் கேட்டவுடன் என்ன எதற்கு என்று கேட்காமல் அதன் தேவை பற்றி ஆராயாமல் பைக் வாங்கிக் கொடுக்கும் கார்த்திக்கின் அப்பா, பிற்பகுதியில் தலையில் அடித்துக் கொள்கிறார். என்றாலும் ஸ்வேதாவை எப்படியாவது வெட்டி விடுவது என்பதில் கருத்தாக இருக்கிறார். இந்த கிரிமினல்தனம் நடந்த சம்பவங்களின் விளைவுகளில் இருந்து மட்டும் வந்ததல்ல; அது மகனின் மேல் எந்தக் கண்காணிப்பும் அற்று அவன் ஊதாரியாய்த் திரிய ஏதுவான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போதே முளைவிடத் துவங்கியது தான்.

விடலைப் பருவ காதலில் தனது மகன் தவறிழைத்து விட்டான். எனினும் அது ஒரு பெண்ணுக்கே அதிக பிரச்சினைகளை கொண்டு வரும். இந்நிலையில் தனது மகனது எதிர்காலம், அந்த பெண்ணினது எதிர்காலம் இரண்டுக்குமான போராட்டத்தில் நீதியுடன் இருப்பதை கார்த்திக்கின் தந்தை விரும்பவில்லை. எப்படியாவது மகனை வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்றே அவரும், உறவினர்களும் குறியாக இருக்கிறார்கள். இந்த ஊழலை விடவா கார்த்திக்கின் காமம் தீயது? இங்கு முதிர்ச்சியற்று இருப்பது பெற்றோரா, பையனா? ஒரு தீய விளைவை அகற்றுவது பிரச்சினையல்ல, அதை நேர்மறையான போராட்டத்துடன் எதிர் கொள்கிறோமா என்பதே அடிப்படையானது.

தனது வாரிசுகளுக்கு எல்லா வசதிகளையும், ஆடம்பரங்களையும், செலவுகளையும் அனுமதிக்கும் நடுத்தர வர்க்கம் பதிலுக்கு தனது வாரிசுகள் இலட்சுமணன் கோட்டை மட்டும் தாண்டக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. அந்த கோடு என்பது சாதி, கௌவரம், அந்தஸ்து, சொத்து சம்பந்தமானது. அதனால் காதல் கூட அதற்கு உட்பட்டு பிரச்சினையில்லாமல் வந்தால் சரி. அல்லது கணக்கு பார்த்து வரும் காதலால் தனக்கு ஆதாயமென்றால் பெற்றோருக்கு பிரச்சினை இல்லை. இங்கே ஸ்வேதா ஒரு கோடிசுவரப் பெண் என்றால் கார்த்திக்கின் பெற்றோர் அதை கொண்டாடியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாற்றிப் போட்டால் ஒரு பணக்காரனோடு நாம் போராட முடியாது என்று ஸ்வேதாவின் பெற்றோர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கடக்க முயற்சி செய்வார்கள்.

சுருங்கக் கூறின் இன்றைய படித்த நடுத்தர வர்க்கம் தனது இளைய தலைமுறையினரை உழைக்கக் கற்றுக் கொடுத்து, சமூக உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தேவையற்ற வசதிகளை புறக்கணிக்கச்சொல்லியெல்லாம் வளர்ப்பதில்லை. கடைந்தெடுத்த காரியவாதிகளாகவே வளர்க்கிறார்கள். அதனால்தான் இளைய தலைமுறையின் காரியவாதமும், பெற்றோரின் காரியவாதமும் சில நேரங்களில் முரண்பட்டாலும் பல நேரங்களில் ஆச்சரியப்படும் விதத்தில் ஒன்றுபடுகிறது.

ஸ்மார்ட் போன், பைக், காபி ஷாப், மகாபலிபுரம் போன்றவையெல்லாம் இன்றைய நாகரீகத்தின் மைல்கற்களாகிவிட்டன. நுகர்வுக் கலாச்சாரத்தில் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக பிள்ளைகள் தேவையின்றி கேட்டாலும் பெரியவர்கள் தேவை கருதியும் மறுப்பதில்லை. மனிதர்களினூடாக பண்பட வேண்டிய விடலைப் பருவம் பொருட்களினூடாக அலைந்து திரிந்து ஆட்டம் போடுகிறது.

விடலைப் பருவத்தின் காதலை மட்டுமல்ல முதிர்ந்த பருவத்தின் காதலையும், வாழ்க்கையையும் பண்படுத்த வேண்டுமென்றால் நமது ஆய்வு காதல் குறித்து மட்டும் இருப்பதில் பலனில்லை. அதனால் இந்தப் படமும் பலனில்லாமல் கடந்து போகிறது.