privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை - வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

-

ண்ணா ஹசாரே கடந்த 19-ம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்தியா தின பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தால் கவரப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.

வித்யா பாலன்
நியூயார்க்கில் பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன் கலந்து கொண்ட இந்திய சுதந்திர தின கொண்டடாட்டங்கள். (படம் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

ஆண்டு தோறும் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்படும் இந்தியா தின கொண்டாட்டங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு குடிபெயரும் இந்தியர்கள் இந்தியாவுடனான தமது தொடர்புகளை கோயில்கள், பரத நாட்டியம், இந்திய உணவு இவற்றின் மூலம் பராமரித்துக் கொள்வது போல, தேசபக்தியை புதுப்பித்துக் கொள்ள ஆண்டு தோறும் இந்தியா தினம் நடத்தி இந்திய பிரபலங்களையும் அழைக்கின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்விற்கு வழக்கமாக அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஏ ஆர் ரஹ்மான், ராஜ் கபூர், ஷாரூக் கான், ஹேம மாலினி, மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் அனில் கும்ப்ளே, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பிரபலங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை அண்ணா ஹசாரே அழைக்கப்பட்டிருக்கிறார். கூடவே பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார், சின்னத் திரை நட்சத்திரம் ராதிகா ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சரத் குமார், ராதிகா
சரத்குமார், ராதிகா அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். (படம் : நன்றி கலாட்டா டாட் காம்)

அண்ணா ஹசாரேவுடன் கை குலுக்கி அவரது போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் வித்யா பாலன் தனது ரசிகர்களுக்கு கொடுத்த பறக்கும் முத்தத்தால் ஏற்பட்ட தள்ளுமுள்ளை சமாளிக்க போலீஸ் மிதமான பலபிரயோகம் செய்ய வேண்டி வந்திருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பு, கவர்ச்சிக்கு ஜே என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என அமெரிக்காவிற்கு வாக்கப்பட்ட இந்தியர்கள் எடுத்துச் சொல்கின்றனர் போலும்.

பேரணி நடந்த அடுத்த நாள், 20-ம் தேதி (திங்கள் கிழமை) காலை நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் உள்ள நேஸ்டாக் பங்குச் சந்தையை மணி அடித்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே கலந்து கொண்டிருக்கிறார். நேஸ்டாக் என்பது உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தை. நியூயார்க் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தை.

அண்ணா ஹசாரே
அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர் குழுவின் சார்பில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஓய்வு எடுக்கிறார். (படம் : நன்றி தி இந்து)

அண்ணா ஹசாரேவை விமர்சித்து “நான் ஏன் அண்ணாவாக விரும்பவில்லை” என்று கட்டுரை எழுதிய அருந்ததி ராய் 2011-ம் ஆண்டு அமெரிக்கா போன போது மக்களின் சேமிப்புகளை சூறையாடி பல லட்சம் மக்களை வேலையும் வீடும் இழக்கச் செய்து தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களை எதிர்த்துப் போராடிய வால் வீதி போராட்டக்காரர்களை சந்தித்தார். ஆனால் இப்போது அமெரிக்காவில் பயணம் செய்யும் அண்ணா ஹசாரேவோ அந்த நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார். ஊழலின் ஊற்று மூலமான பன்னாட்டு நிறுவனங்களின் கருவறையான இந்த பங்குச் சந்தையை துவக்கி வைப்பதில் அவருக்கு வெட்கமோ, சூடோ, சுரணையோ எதுவுமில்லை.

பிறகு அண்ணா ஹசாரே சவுத் கரோலினா மாநில ஆளுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக் ஹேலே, டெலாவேர் மாநில ஆளுநரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேக் மெர்கல் ஆகியோரையும் சந்திக்கவிருக்கிறார். அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து விட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாவதால், அவர்களது வாக்குகளை திரட்ட அமெரிக்க அரசியல்வாதிகள், அண்ணா போன்றவர்களுடனும் கை குலுக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக, ராலேகான் சித்தியில் ஆரம்பித்த அண்ணா ஹசாரேவின் ‘ ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்’, 2011-ன் ராமலீலா உண்ணாவிரத வழியைக் கடந்து இப்போது அமெரிக்க வால் வீதி முதலாளித்துவ நிறுவனங்களிடம் காலில் விழுவது வரை வந்திருக்கிறது.

இந்த கைப்புள்ளையை நம்பி ஏமாந்தோர் இப்போது என்ன சொல்வார்கள்?