privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

-

எதிர்கொள்வோம் – 3 !

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப் பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

சமரன் வெளியீடு
சமரன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் என்ற நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (கோப்புப் படம்).

இக்கேள்வியில் குறிப்பிடப்படும் நூலுக்குப் பதில் சொல்ல அவசியம், அதிலுள்ள அரசியல் பாமரத்தனம். ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் இந்த அரசியல் பாமரத்தனம் காரணமாகவே எழுகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரிடமும் காணப்படும் இந்த அரசியல் பாமரத்தனத்தைச் சந்தைப் படுத்துகின்றன, ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற கிசுகிசு ஏடுகள். தமது அரசியல் பாமரத்தனத்தைக் கோட்பாடாக்குகின்றனர், சமரன் வெளியீட்டகத்தின் கட்டுரையாளர்கள். நம் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் ஏற்கெனவே பலமுறை நாம் பதில் சொல்லியாகிவிட்டது. நமது பதில்களும் நிலைப்பாடுகளும் எவ்வளவு சரியானவை என்று நடைமுறையும் நிரூபித்து விட்டது. ஆனாலும், புலிகளின் ஆதரவாளர்களில் பலரும் எப்போதும் போல உண்மையை எப்படி இடித்துரைத்தாலும் பொய்மைப் போதையிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஈழத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் வெளியிலுள்ள சமரன் கட்டுரையாளர்கள் போன்ற அறிவு நாணயமற்றவர்கள்.

“1983-ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து” (1983-இல் எத்தனை ஆண்டுகள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!) வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும்” என்று சொல்லிக் கொண்டு “ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற ஒரு நூலை விழா நடத்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் வறட்டுக் கோட்பாடுகளும் சுயமுரண்பாடுகளும் தவறான செய்திகளும் நிரம்பி வழிவது அவ்விழாவில் பங்கேற்றுப் பாராட்டியவர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது! ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து எழுதிய சமரன் குழுவுக்கு ஈழத்தில் இறுதிக்கட்டப் போரும் ஈழ இனப் படுகொலையும் எப்போது நடந்தது என்பதுகூடத் தெரியவில்லை!

2005-ஆம் ஆண்டு நவம்பரில் இராஜபக்சே தலைமையிலான சிங்கள, பௌத்தப் பேரினவாத பாசிச அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. 2006 ஜூலையில் “பேச்சுவார்த்தை எனும் பேரில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திவருகிறது” என்று சமரன் குழு எழுதியது. அதன்பிறகு, இராஜபக்சே – புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிந்து, இராஜபக்சேவின் பாசிச அரசு நடத்தி வந்த இனவெறிப் போர், முள்ளிவாய்க்கால் – நந்திக் கடலோரம் 2009 மே மாத மத்தியில் ஈழத் தமிழினப் படுகொலையோடு முடிவுக்கு வந்தது. ஈழ இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டு, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, விழித்துக் கொண்ட சமரன் குழு 2011 ஜூலையில் கீழ்க்கண்டவாறு (பக். 320) எழுதியது.

“2009-ஆம் ஆண்டு இறுதியிலும் 2010-மே மாதம் வரையிலும் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இனஅழிவு குறித்து உலகத் தமிழர்கள்……” என்று 2011-ஆம் ஆண்டு சமரன் குழுவினர் எழுதியிருந்ததாக “ஈழமும் தேசிய இனப் பிரச்சி னையும்” என்ற நூலில் (பக்.320) பதிவு செய்துள்ளார்கள். கடைசிக் கட்டப்போரும் இனப் படுகொலையும் ஈழத்தில் எப்போது நடந்தன என்றுகூடத் தெரியாத இவர்கள், ஈழத் தமிழர்க்கெதிராக சிங்கள இராணுவம் நடத்திய ஈழத் தமிழினப் படுகொலையை “ஏற்பட்ட இனஅழிவு” என்று தன்னியல்பான நிகழ்வைப் போலவும் சித்தரிக்கின்றனர்.

யாழ் நூலகம்
1981, ஜூன் மாதம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலை மற்றும் கலவரத்தின் பொழுது எரிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட யாழ் நூலகம் (கோப்புப் படம்).
குறிப்பு : புதிய ஜனநாயகம் அச்சுப் பிரதியில் 1983 ஜூலை மாதம் என்று தவறுதலாக அச்சாகியுள்ளது.

2006 ஜூலை – 2011 ஜூலை ஆகிய இந்த ஐந்தாண்டு முக்கியக் காலகட்டத்தில், சமரன் குழு சொல்லுவதைப் போல “சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த” போதும், அதிலும் குறிப்பாக 2009 மே மாதத்தில் ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன்பிறகு இரண்டாண்டுகளாகவும், சமரன் குழு என்ன செய்தது என்பதற்கான பதிவு எதுவும் அந்நூலில் கிடையாது. ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன் பிறகும் இவ்வாறுதான் பெரும்பங்கு தமிழகமும் வெறும் பார்வையாளனாக அமைதி காத்தது. ஒருசில தமிழினவாதக் குழுக்கள், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அவற்றின் தலைமையிலிருந்த இருந்த மாணவர்கள், வழக்குரைஞர்கள் மட்டுமே ஈழத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முயற்சியால், ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் ஆகியன வந்தன; அதையொட்டி ஈழத்தின்பால் தமிழக மக்கள் கவனம் திரும்பிய பிறகுதான் சமரன் குழுவும் விழித்துக் கொண்டது. இதுதான் தமிழீழத்தின் மீதும், ஈழத் தமிழர்கள் மீதும் சமரன் குழுவுக்குள்ள அக்கறை. ஆனால், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழீழத்துக்கு எதிரானவை போலவும் சமரன் குழுதான் தமிழீழ விடுதலைக்கு தத்துவார்த்தத் தலைமை அளித்து வந்ததாகவும் கூசாமல், வெட்கமின்றி அந்நூலில் புளுகப் பட்டிருக்கிறது. இதற்குத் தமிழினவாதக் குழுக்கள் வழக்கம்போல மழுப்பாமலும், ஈழத் தமிழர்கள் தவறாமலும் கருத்துக் கூறவேண்டும்.

மார்க்சியம்-லெனினியம்- மாவோ சிந்தனையைத் தனது சித்தாந்த வழிகாட்டியாக சமரன் குழு கூறிக்கொள்கிறது. “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று மாவோ வலியுறுத்தினார். ஆனால், சமரன் குழு இவ்வாறு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இலங்கை மற்றும் ஈழம் குறித்து சமரன் குழு முன்வைக்கும் அல்லது அறிந்துள்ள விவரங்களில் பலவும் உண்மையானவைகளே அல்ல என்பதற்கு அவர்களின் இந்த நூலே தக்க ஆதாரமாக விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக, “1947 போலிச் சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின்………” (பக். viii) என்று குறிப்பிடுவதன் மூலம் 1947-ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகார மாற்றம் நடந்ததாக சமரன் குழு எழுதுகிறது. பிறகு அதே நூலில் 1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது அமைந்த இலங்கை அரசு, இரு இனங்களுக்கும் சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியம் அல்ல. (சிங்கள இன – தமிழின ஐக்கியம் மக்கள் விரும்பித் தாங்களாகவே முன்வந்து செய்து கொண்டதல்ல).” (பக்.37) இவ்வாறு இலங்கை எப்போது சுதந்திர நாடானதென்பதில் தெளிவற்ற சமரன் குழு, அந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை ஆதியிலிருந்து ஆய்வு செய்வதாகக் கருதிக் கொண்டு பிதற்றியுள்ளது.

இதோடு, இசுலாமிய வர்த்தகர்களுக்கு எதிராக 1915 -இல் தாக்குதல் நடத்திய சிங்களவர்களை ஆதரித்து பிரித்தானிய மகாராணியிடம் முறையீடு செய்த சர்.பொன் இராமநாதனை சிங்களவர்கள் தேரில் இழுத்து வந்து கௌரவித்ததை சமரன் குழு குறிப்பிடுகிறது. (பக்.vii)

காலனிய இந்தியாவில் நடந்ததைப் போலவே இலங்கையிலும் நடந்தது. ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்ற பார்ப்பன மற்றும் பிற மேல்சாதி, மேட்டுக்குடியினர் காலனிய அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். அதைப் போலவே, இலங்கையிலும் சிங்கள பௌத்த மேட்டுக் குடியினரும் யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக் குடியினரும் ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்று, காலனிய இலங்கையில் அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். இந்தவகையில் சிங்கள டான் சேனநாயகா, அவரது மகன் டட்லி சேனநாயகா குடும்பமும் ஈழத்தின் பொன்னம்பலம் அருணாச்சலம், அவரது மகன் பொன்னம்பலம் இராமநாதன் குடும்பமும் ஒன்றுபட்டுத் தலைமை வகித்தன. சிங்கள – ஈழத் தமிழ் சமூகங்களின் சார்பாக இவர்கள் ஒன்றுபட்டு நிறுவிக் கொண்டதுதான், அனைத்து இலங்கை தேசியக் காங்கிரசு கட்சி. இக்கட்சிக்கு தலைமையேற்றிருந்த பொன்னம்பலம் இராமநாதன் (இப்பெயர் சமரன் குழு சொல்வதைப்போல இராமநாதன், பொன்னம்பலம் என்ற இரண்டு நபர்களைக் குறிப்பதில்லை, ஒரே நபர்தான்) இசுலாமியர்கள் மீதான 1915 தாக்குதலில் சிங்களவருக்கு வக்காலத்து வாங்கியதில் சிறப்பு ஏதுமில்லை.

யாழ் மேட்டுக்குடி
யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலம் அருணாச்சலம் (இடது), இராமநாதன் பொன்னம்பலம்.

காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

இந்தியாவைப் போன்று காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக காந்தி-காங்கிரசு தலைமையிலான தரகு முதலாளிகளின் சமரசப் போராட்டங்களோ, உண்மையான விடுதலைக்கான மக்கள் போராட்டங்களோ இலங்கையில் நடைபெறவில்லை. காலனிய அரசு நிர்வாகத்தில் பங்கேற்று ஆதாயம் அடைவதற்கான போட்டிதான் சிங்கள மற்றும் ஈழ(உண்மையில் கொழும்பு/யாழ்ப்பாண)த் தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளிடையே நடந்தது.

“காலனித்துவ நாடாக இருந்த இலங்கை, ஒரு அரைக்காலனித்துவ நாடாக மாறியபோது அந்நாட்டின் அதிகாரம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சிங்கள-தமிழினத் தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவக் கூட்டுத் தலைமையிடம் மாறிற்று. பேரினமாகிய சிங்கள இனத்தின் அதிகார வர்க்கத் தரகு முதலாளித்துவமும் அரைநிலப்பிரபுத்துவச் சக்திகளும் அந்நாட்டின் (அரசு இயந்திரத்தை தமது பிடிக்குள் கொண்டுவர விரும்பி) அதிகாரத்தை முழுவதுமாக அபகரித்துக் கொள்ள விரும்பின. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பல திட்டமிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டன” (பக்.37) என்கிறது, சமரன் குழு.

சரிதான்; இதன்படி சிங்கள-தமிழினத் தரகு முதலாளிகளுக்கிடையே அதிகாரப்போட்டியால்தான் ஈழ, மலையகத் தமிழர்களுக்கெதிரான குடியுரிமைப் பறிப்பு, மொழி உரிமைப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம் மூலம் வாழ்வாதாரப் பறிப்பு, கல்வி – மற்றும் அரசு வேலைவாய்ப்புப் பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஆளும் சிங்களத் தரகு முதலாளிகள் ஈடுபட்டது. அதே சமயம், தமிழினத் தரகு முதலாளிகளோ தமது அதிகாரத்தைத் தக்க வைத்து கொள்வதற்காகவே தமிழினப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கேடாகப் பயன்படுத்தினர்.

இலங்கையின் சுதந்திரப் பிரகடனத்தின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் ஈழப் போராளிக் குழுக்கள் தோன்றி, அவை ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்கும்வரை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசிடம் பேரங்கள் நடத்தி ஆதாயங்கள் அடைந்தவர்கள், ஆளும் சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இலண்டனில் சட்ட உயர்கல்வி பயின்ற, வடக்கின் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் கிழக்கின் மக்களையும் கீழானவர்களாகக் கருதிய யாழ் மையவாத, யாழ்ப்பாண ஆதிக்க வேளாள சாதித் தலைவர்கள்தாம்.

கிறித்தவத் தொண்டு நிறுவனங்களின் பலனாய் பெருமளவு கல்வி பயின்ற ஈழ நடுத்தர வர்க்கத்தினர் காலனிய காலத்திலிருந்தே உயர்கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் 60 விழுக்காடிற்கு மேல் பிடித்துக் கொண்டிருந்தனர். சிங்கள மக்கள் இதை ஈழத்தமிழர் ஆதிக்கமாகப் பார்த்தனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் சிங்களப் பேரினவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டன. ஈழத் தமிழரின் நியாயமான பொருளாதார, அரசியல், பண்பாட்டு உரிமைகளைக்கூடப் பறிப்பதிலும், அவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் போட்டிபோட்டன. அந்நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் கடுமையாகவே, அவை சிங்கள சமூகத்திற்கே எதிரான பாசிசக் கட்சிகளாக பரிணமித்தன. இனவாதத்தின் தீவிரவாதம் பாசிசம்!

50-க்கு 50 விழுக்காடு கோரிக்கை பிரபலம் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரசுக் கட்சி, கூட்டாட்சிக் கோரிக்கை பிரபலம் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (தமிழில்தான் இந்தப் பெயர், ஆங்கிலத்தில் அதன் பெயர் கூட்டாட்சிக் கட்சி) ஆகிய இரண்டுமே வட்டுக்கோட்டை மாநாட்டு தனியரசுத் தீர்மானம் வரை இப்படித்தான் இருந்தன. அதன்பிறகும் ஈழத்தில் தனியரசு அமைப்பதற்கான திட்டமோ முயற்சியோ எதுவும் அவற்றிடம் கிடையாது.

வவுனியாவிற்குத் தெற்கே தமது வர்க்க நலன்களையும் தமது சொந்தத் தொழிலையும் கொழும்பில் குவித்திருந்த தலைமையினருக்கு செல்வத்தையும் பாதுகாக்க ஒரு அரசியலும், வவுனியாவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலும் தேவைப்பட்டன. அதற்கேற்பவே இவ்விரண்டு கட்சிகளும் தமிழீழச் சிக்கலைக் கையாண்டன.

சேனநாயகா
சிங்கள பௌத்த மேட்டுக் குடியைச் சேர்ந்த டான் சேனநாயகா (இடது) மற்றும் அவரது மகன் டட்லி சேனநாயகா.

ஆனால், காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

1958 முதல் 1983 வரை தமிழீழத் தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்ட ‘கலவரம்’ என்கிற ஆயுதத்தைப் பின்வருமாறு சமரன் குழு பட்டியலிடுகிறது.

“1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான ‘கலவரம்’, 1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை, 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை…….. ”

“இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது; 1980 தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” (பக்.viiiix)

இங்கே பல தவறான விவரங்களை சமரன் குழு முன்வைக்கிறது:

(1)”1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது. மோட்டார் வாகன இலக்கத் தகடுகளில் ‘சிறீ’ என்று ஆங்கிலத்தில் இருந்ததை சிங்களத்தில் எழுத வேண்டும் என 1958-ஆம் ஆண்டு புகுத்தப்பட்டது. இதை எதிர்த்து ‘சிறீ’ என்பதற்கான தமிழ் வடிவத்தைப் பயன்படுத்தும் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது.

அதற்கு முன்னதாக வேலையை இழப்பதாக இருந்தாலும் அரசு ஊழியர்களாக உள்ள தமிழர்கள் சிங்களம் கற்கக் கூடாது; வடமாகாணப் பாடசாலைகளில் சிங்களத்தை விருப்பப் பாடமாகக் கற்பிப்பதை நிறுத்துமாறும் தமிழரசுக் கட்சி பிரச்சாரம்; இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தப்படி குடியேற்றத் திட்டங்களில் தமிழருக்கு உரிமை, மாவட்ட சபைகளில் சுயாட்சி உரிமை, சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாகக் கொள்வது ஆகிய ‘சலுகைகள்’ கிடைத்தன.

ஆனால், ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வாகன இலக்கத் தகடுகளில் மட்டுமல்ல; ஊர்கள், கடைகள், தெருக்களின் பெயர்ப் பலகைகளிலுள்ள தமிழ் எழுத்துக்களைத் தார்பூசி சிங்கள வெறியர்கள் அழிக்கும் இயக்கத்தைத் தொடங்கி முடிவில் 1958-இல் முதலாவது நாடளாவிய இனப் படுகொலையை நடத்தினர். ஏற்கெனவே, “தனி சிங்களச் சட்டம் – 1958 கலவரம்” என்று சொன்னதையே மீண்டும் 1961 – இல் சிறீ எதிர்ப்புக் கலவரம் என்று கணக்குக் காட்டுகிறது, சமரன் குழு.

(2) 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : 1977-இல் நடத்தப்பட்டது, சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் அல்ல. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது 1976 வட்டுக்கோட்டை தனியரசு தீர்மானத்தை முன்வைத்து 1977-இல் நடந்த இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்னதாக ஒரு வாரம் போலீசுக்கு விடுமுறை கொடுத்த ஜெயவர்த்தனே அரசு, குண்டர்களை ஏவி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறியாட்டம் போட்டது. லங்கா சம சமாஜக் கட்சியைச் சேர்ந்த 9000 குடும்பங்களை விரட்டி வீடுகளை அழித்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈழத்தில் 35 விழுக்காடு வாக்குகள் பெற்று நியமன உறுப்பினர்களோடு 18 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியானது. அதைத் தொடர்ந்து தனியரசு அமைக்கப் போவதாக வதந்தி பரப்பப்பட்டு ஈழத் தமிழர்கள் மீது கொலை வெறியாட்டம் நடந்தது.

பதவிக் காலம் முடியவிருந்த இலங்கை நாடாளுமன்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு 1982-இல்தான் நடந்தது. சர்வஜன வாக்கெடுப்பையும் அதில் ஜெயவர்த்தனே அரசின் தீர்மானத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உட்பட இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தபோதும் கலவரம் எதுவும் இலங்கையில் நடைபெறவில்லை.

(3) “1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : முதலாவதாக 1981 -இல் மாகாண சபைத் தீர்வு எனும் ஒன்றை யாரும் வைக்கவேயில்லை. செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சனுக்கும் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேரங்களின் விளைவாக உள்ளூராட்சிக்குரிய அதிகாரமே கொண்ட மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மனமுவந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், விடுதலைப் புலிகள் போன்ற போராளிக் குழுக்கள் ஏற்கவில்லை. ஓரிரு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1981-இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அரசு அப்பட்டமான முறைகேடுகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டது. யாழ்ப்பாணத்தில், 1981-மே 31 அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நடத்திய பேரணியின்போது சிங்களப் போலீசார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் படுகாயமுற்றார்.

அன்று இரவிலிருந்து மூன்று நாட்கள் சிங்களப் போலீசும் துணை ராணுவமும் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாட்டம் போட்டன. தமிழர் பலர் கொல்லப்பட்டனர்; த.ஐ.வி.கூ. தலைமையகம், அக்கட்சி எம்.பி. வீடு, ஒரு இந்துக் கோவில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம் ஆகியன தாக்கி அழிக்கப் பட்டன. ஜூன் 1 அன்று புகழ்பெற்ற யாழ் பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

(4) 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை என்று இங்கே குறிப்பிடும் நிகழ்வை “தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சி” (பக். xxviii) என்றும் பீற்றிக் கொள்கிறது சமரன் குழு. ஈழத்தின் வரலாற்றில் “கறுப்பு ஜூலை” என்று முதலாளிய அறிவுஜீவிகளே குறிக்கும் கோரமான, துயரமான ஒரு நிகழ்வை எழுச்சி என்று எப்படி அதனால் கருத முடிகிறது?

(5) 1983 ஜூலை இனப்படுகொலை காரணமாக வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியது; “1980 தேர்தலில் ஈழத்தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” என்கிறது, சமரன் குழு. முதலாவதாக 1980 -இல் சமரன் குழு குறிப்பிடுவதைப் போலத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. 1977-இல் தான் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடந்தன. 1982, 1983 ஆகிய பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் முற்காலத்திலேயே செயல்படுவது (1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வந்தது என்பது போன்ற) சிந்தனை சமரன் குழுவைப் போன்ற புரட்சிக் கோட்பாட்டாளர்களுக்குத்தான் தோன்றும்! வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை சமஷ்டிக் கட்சி என்ற ஒரு கட்சி மட்டுமே நிறைவேற்றியது; அதுவே அத்தீர்மானத்தை முன்வைத்து, அந்தத் தேர்தலில் 100 சதவீத இடங்களைப் பிடித்தது என்பதும் உண்மையல்ல. ஒரு கட்சி மட்டும் தமிழர் கூட்டணி ஆகிவிடுமா என்றுகூட சமரன் குழு சிந்திக்கவில்லை!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 100 விழுக்காடு ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்; அதுவே இப்போதும் தமிழீழத்தையும் புலிகளின் தலைமை யையும் ஒருமனதாக ஈழத் தமிழர்கள் ஏற்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்று புலிகளும் புலி ஆதரவாளர்களும் நீண்ட காலமாகக் கூறிவருகிறார்கள். இதுவும் உண்மையல்ல. வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களும் கிழக்கிலுள்ள திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களும் சேர்ந்தவைதாம் தமிழீழம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து த.ஐ.வி.கூட்டணி சந்தித்த 1977 பொதுத் தேர்தல்களில் மேற்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்கள் உத்தேசத் தமிழீழத்தில் மொத்தம் 23 தொகுதிகளைக் கொண்டவை. அவற்றில் த.ஐ.வி. கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களைக் கொண்ட வடக்கில் மட்டுமே 100 விழுக்காடு-அதாவது அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களைக் கொண்ட கிழக்கில் மொத்தம் 10-இல் 3 தொகுதிகளில், அதாவது 30 விழுக்காடு மட்டுமே த.ஐ.வி. கூட்டணி பெற்றது. வாக்கு எண்ணிக்கைப்படி பார்த்தால் வடக்கில் 41 விழுக்காடு, கிழக்கில் 26 விழுக்காடும் மொத்தமாகப் பார்த்தால் தமிழீழத்தில் 35 விழுக்காடும் வாக்குகள்தாம் த.ஐ.வி. கூட்டணி பெற்றது. ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஈழத் தமிழர் ஆதரவு குறித்து சமரன் குழு உட்பட புலிகளும் புலி ஆதரவாளர்களும் உரிமை பாராட்டி கொள்வது தவறான அடிப்படையிலானது.

இவ்வாறு இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களையே அறியாத சமரன் குழுதான், ஈழ விடுதலைக்குத் தத்துவார்த்தத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொண்டு வந்திருக்கிறது!

(தொடரும்)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________