privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இப்படியும் வளர்கிறார்கள் !

இப்படியும் வளர்கிறார்கள் !

-

ம் அன்றாட வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகளை கடந்து செல்கிறோம். சில நிகழ்வுகள் நாம் பார்த்த கணத்தில் பல விதமான எண்ணங்களை கொண்டு வரும். ஒரு சில நிகழ்வுகள் சில மணி நேரம் வரை நிழலாடும். பின்பு மறைந்து விடும். ஒரு சில நிகழ்வு மட்டும் நம் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்து விடும். அவற்றில் குழந்தைகள் பற்றிய விசயத்திற்கு நிச்சயம் இடமுண்டு.

குழந்தை என்றாலே அது ஒரு வரப்பிரசாதம், தவமாய் தவமிருந்தாலும் குழந்தைச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது என்பது சமூகத்தில் குடிகொண்டிருக்கும் ஆழமான கருத்து. அப்படி அபூர்வமாக கொண்டாடிதான் குழந்தையை வளர்ப்போம், ரசிப்போம். தரையில நடக்க விடமாட்டோம். ஒரு தடவைக்கு நாலு தடவை வீட்டை சுத்தம் செஞ்சு குழந்தையை விளையாட விடுவோம். குளிக்க வைக்கிறது, பவுடர் பூசறது, சட்ட மாத்துறதுன்னு பாத்து பாத்து வளர்ப்போம். ஆனால் பல குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யோசிக்கத் தூண்டும். அப்படி நான் பார்த்த சில நிகழ்வுகள்தான் இவை.

1. உழைக்கும் தாய்வீட்டுக்கு பக்கத்துல ஒரு கோயில் இருக்கு. அங்கு ஏதோ திருவிழா நடந்தது. வேடிக்கை பார்க்க என் குழந்தையுடன் போயிருந்தேன். கோயில் வாசல்ல ஒரு அம்மா கைக்குழந்தைய வச்சுகிட்டு நெய் எடுத்து அகல் விளக்கில் நிரப்பி  வித்துகிட்டு இருந்தாங்க. ஒரு வயசுகூட நிரம்பாத அந்த குழந்தையை பக்கத்துல துணிய விரிச்சுப் போட்டு அதுல குழந்தைய உக்கார வச்சுட்டு, குழந்தை கையில இரண்டு அகல் விளக்கை விளையாட கொடுத்துட்டு தன் வியாபாரத்துல கவனமா இருந்தாங்க.

நேரம் பாத்து குழந்தை கக்கா போய் வச்சிருச்சு. அவசர அவசரமா யாரும் பாக்றதுக்குள்ள துணிய எடுத்து தொடச்சு சுத்தம் செஞ்சுட்டு, சாமிக்கு புரியும் நம் சிரமம் என்பது போல், அந்த பீயெடுத்த கையால நெய்யெடுத்து அகல் விளக்குல நிரப்புற தன் வேலையில ஈடுபட ஆரம்பிச்சாங்க. நான் பாத்தத தெரிஞ்சுகிட்ட அவங்க சினேகமா சிரிச்சாங்க.

2. பக்கத்து வீட்டுல முதல் மாடி கட்டிட வேலை நடந்துகிட்டு இருக்கு. ஒப்பந்த முறைப்படி கட்டிட்டு இருக்காங்க, சித்தாள் வேலை செய்பவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அதுல இரண்டு வயது நிரம்பாத ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு ஒரு அம்மா வேலை செய்றாங்க, பிள்ளைய இடுப்புல வச்சுகிட்டு சிமெண்ட் பூசப்பட்ட இடத்துக்கு தண்ணி ஊத்துறாங்க. கொத்தனாருக்கு செங்கல் எடுத்து தலைக்கு மேல கொடுக்குறாங்க, இடுப்புல இருக்குற குழந்தை எடுக்கறதையும் கொடுக்குறதையும் பாத்துகிட்டே இருக்கு. சாக்க விரிச்சுப் போட்டு குழந்தைய உட்கார வச்சுட்டு சிந்துற சிமெண்ட பெருக்கி அள்றாங்க. கனத்த மனதுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், இறக்கி விட்டஎன் குழந்தை அழுததும் தான் உணர்ந்தேன் குழந்தையை தூக்கி வைத்திருப்பதால் வரும் இடுப்பு வலி அந்த பெண்ணுக்கில்லையா?

3. வேலை காரணமா ஒரு பைண்டிங் ஆபீஸ்சுக்கு போயிருந்தேன். அந்த பைண்டிங் செய்ற இடம், பத்துக்கு பத்துல ஒரு அறையும், கிச்சன் போல சின்னதா ஒரு அறையுமா இரண்டு அறைகள் கொண்டதா இருக்கும். அதுல பைண்டிங் உரிமையாளரையும் சேர்த்து ஏழு தொழிலாளிகள் இருப்பாங்க. தேவையான மிஷின்களும் இருக்கும். சொந்த அச்சகம் இல்லாத பத்திரிகைகள் பலவும் அங்கதான் பைண்டிங் செய்றாங்க. பைண்டிங் தொழில் சொந்தக்காரருக்கு ஆறு வயசு, அஞ்சு வயசுல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, பசங்க திரும்பி வந்தா சாப்பிட சாப்பாடு எடுத்துக் கொண்டு அவங்களும் ஒரு தொழிலாளியா வேலைக்கு வந்தர்ராங்க.

பள்ளிக்கூடம் முடிஞ்சு நேரா பைண்டிங் செய்ற இடத்துக்குத்தான் அந்த குழந்தைகள் வர்ராங்க. அங்கேயே சாப்பிட்டு விட்டு, பேப்பர் தூசிய சுவாசிச்சுகிட்டே, ஓடுற மிஷின்களுக்கு மத்தியில் புகுந்து விளையாடுறாங்க, பைண்டிங் செய்து வெட்டிப் போட்ட காகித துண்டுகளுக்கு நடுவுல, வெட்டப்படாத முழு ஃபாரத்தை எடுத்துப்போட்டு, அந்த குப்பைகளுக்கு நடுவுலயே தூங்குறாங்க.

4.ஏழை குழந்தை இடுப்புல குழந்தைய வச்சுகிட்டு ஒரு அம்மா, தலையில தொடப்பத்த சுமந்துகிட்டு வித்துகிட்டு வந்தாங்க. அபார்மெண்டு குடியிருப்பு பகுதியில் நிறுத்தி தொடப்பத்தோட விலையை விசாரிச்சாங்க மாடி வீட்டு மகராசிங்க. “ஒரு தொடப்பம் நாப்பத்தி அஞ்சு ரூபா, இடுப்புல குழந்தைய வச்சுக்கிட்டு தலையில சுமை தூக்க முடியல, அதுவும் தவிர குழந்தை பாலுக்கு அழுவுது அதனால ரெண்டா எடுத்துக்கங்க எண்பது ரூபா கொடுங்க” என்றார். ‘’இது நல்லா கூட்டுமா, இல்ல எல்லாம் கொட்டி போகுமா, இரு கொட்டுதான்னு பெருக்கிப் பாப்போம், சரவணா ஸ்டோர்ல நின்னு கிட்டே கூட்டலாம் அந்த அளவு நீட்டமா இருக்கும். கொட்டவும் கொட்டாது அவங்களே நாப்பது ரூபாய்க்குதான் குடுக்குறாங்க. நீ என்னா ஒரு அடி நீளத்த வச்சுக்கிட்டு இவ்வளவு விலை சொல்ற’’ என்று வாங்கும் எண்ணம் இல்லாமல் பொழுது போக்காக அரட்டை அடித்தார்கள்.

அவள் குழந்தைக்குப் பசியாத்தும் மன நிலையில், “கொடுக்கறத கொடுத்துட்டு எடுத்துக்கங்கம்மா” என்றார். அவள் சுமையை குறைக்கும் விதமாக நான் போய் ஒரு துடப்பம் வாங்கினேனே தவிர அவள் உழைப்புக்கு மரியாதை கொடுத்து, மற்றவர்களை விமர்சிக்க தயங்கிய நானும் அவளது துன்பத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டேன் ?

5. வீட்டோட தங்கி வேலை செய்யும் ஒரு பெண், தன்னோட ஒன்றரை வயசு குழந்தையை இரண்டாவது மாடியில் தனி அறையில் விட்டுட்டு, பக்கத்தில் ஒட்டுனாப் போல இருக்கும் முதலாளியின் வீட்டுக்கு வேலை செய்ய போய்விடுவாள். துணி துவைப்பதற்கும், காயப் போடுவதற்கும் மாடிக்கு வரவேண்டும். அப்படி வரும்போது இந்த குழந்தை சன்னல் வழியாக பார்த்தால் அம்மா முதலாளி வீட்டு மாடியில் வேலை செய்வது தெரியும். முதலாளியின் பேரப்பிள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதற்காக மாடிக்கு அழைத்து வருவார் முதலாளியம்மா.  வீட்டு வேலை செய்யும் பெண்ணோ இந்த குழந்தைக்கு ஆடிப் பாடி விளையாட்டு காண்பிக்க வேண்டும். அம்மா ஆடிப்பாடுவதை சிரித்த முகத்துடனும், நமக்காக அம்மா ஒரு போதும் இப்படி செய்யவில்லையே என்ற ஏக்கத்தோடும் அம்மாவின் புடவையை அணைத்துக் கொண்டு சன்னல் வழியாக பார்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சம்.

6. பணக்கார குழந்தைஇது ஒருபுறம் மனதை கலங்கடிக்க, மறுபுறம் இதற்கு எதிரான வேறு ஒரு உலகத்தோடு புழங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் பேரப்பிள்ளையின் வருகையை கொண்டாடும் விதமாக, கோவிலுக்கு நான்கு லட்சம் செலவு செய்து உள்ளார்கள். அன்னதானம், நெய் அபிசேகம், பாலபிசேகம்னு, கண்டது கடையதுமான வேண்டுதலையும் செய்துருக்காங்க, சாமிக்கிட்ட நல்லா ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி, ஐயருக்கு பல்க்கா மொய் கொடுத்தும் கவனிச்சாங்க. அந்த குழந்தை உட்கார்ந்து டி.வி பார்ப்பதற்க்கு மட்டும் குழந்தைகள் சோபா செட் அம்பத்தி அஞ்சாயிரத்துக்கு வாங்கி இருக்காங்க. இன்னும் ஆறு மாசம் போனா அதை பயன்படுத்த முடியாது. அவ்வளவு சின்னதா இருக்கும்.

7. அந்த வீட்ல நாலு வயசுல இன்னெரு பெண் குழந்தையும் இருக்கு. அந்த குழந்தையை பார்த்துக்கறதுக்கு பதினஞ்சு வயசுல ஒரு வேலைக்கார குழந்தையும் இருக்கு. அந்த குழந்தை, மத்தியானமும், இரவும் சாப்பிடுவதற்காக வேலைக்கார குழந்தைதான் ஒரு கிலோமீட்டர் தொலைவுல உள்ள பார்க்குக்கு கூட்டிட்டு போகனுமாம். வீட்டிலேயே பாதாம், பிஸ்தான்னு விலை உயர்ந்த தின்பண்டங்கள் இருந்தாலும் தினமும் ஐஸ்க்ரீம், லேஸ், குர்க்குரே, இப்படி வாங்கிக் கொடுக்க நூறு ரூபா கொடுப்பாங்களாம். சொல்றத கேட்காம குழந்தை நடந்துக் கொண்டால், வேலை செய்யும் பெண் ஒரு வார்த்தை கடிந்து பேசக் கூடாதாம். நாம் எது செய்தாலும் வேலைக்கார பெண்ணைத் தான் திட்டுவாங்க என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட குழந்தை, பொழுது போக்கு போல அந்த பெண்ணை போட்டுக் கொடுத்து திட்டு வாங்க வைத்து ரசிக்குமாம். பெரியவர்கள் நடந்து கொள்ளும் பண்பில்தான் குழந்தையும் வளர்வார்கள்.

குழந்தைகளுக்கான நுகர்வுஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா. வீடெல்லாம் பலூன் கட்டி, கலர் பேப்பர் கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. உணவு வகைகளிலேயே அவர்கள் ‘பாசம்’ தெரிந்தது. சாப்பிட்ட பிறகு குழந்தையின் அப்பா பேச ஆரம்பித்தார். “என் குழந்தை இது வேணும், அது வேணும் என்று கேட்க தேவையில்லை. எதை பார்க்குதோ அதை உடனே வாங்கி கொடுத்துடுவேன். நாம் ஒன்னு ஆசைப்பட்டு கிடைக்கலயே என்ற ஏமாற்றம் குழந்தைக்கு வந்துட கூடாது. இந்த வயசுக்கே என் பொண்ணுக்கு மட்டும் அம்பது பவுன் நகை வாங்கி போட்டிருக்கேன். எந்த ஒரு விசேசம் என்றாலும் குழந்தைகளுக்கு புது ட்ரெஸ்சுதான் எடுப்பேன். ஒரு விசேசத்துக்கு போட்ட ட்ரெஸ்ச மற்றொரு விசேசத்துக்கு போடமாட்டாங்க. அவளே இது ஏற்கனவே போட்ட ட்ரெஸ்சு டாடின்னு கரைக்டா சொல்லிருவா.” என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் சிறிது நேரத்துக்கு முன்தான் அந்த குழந்தை அந்த உடையை அவுத்துப் போட்டுவிட்டு ஜட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தது. மூன்று கிலோவுக்கு குறையாமல் இருக்கும் அந்த உடை. குடை வடிவில் விரித்தாற் போல் இருந்தது. மணிகள், கற்கள், கண்ணாடி என்று உடம்பை உறுத்தும் அனைத்தும் அதில் இருந்தது. அடுக்கடுக்கா ஏழு எட்டு துணி வகைகளை கொண்டதாகவும் இருந்தது. ஓடி ஆடி விளையாடும் குழந்தை எப்படி இவ்வளவு வெயிட்டை தூக்கிக்கொண்டு இருக்கும். ஆடம்பரத்துக்காக குழந்தைக்கு பொருந்தாத ஒரு உடையை போட்டுவிட்டால் அது எப்படி அணிந்து கொள்ளும். அவுத்துப் போட்டுட்டு அம்மணமா திரியுது.

ஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.

உழைக்கும் பெண்செல்வாக்குடன் வளர்க்கப்படும் குழந்தைகள், பொருட்கள் மீது அதிக ஆவல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தியற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள். பணத்தை முன்னிலைப் படுத்திதான் எந்த முடிவும் எடுக்கிறார்கள். நம்ம சம்பாதிப்பது எல்லாம் குழந்தைகளுக்கு தான் அதுங்க ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியா வச்சுக்கிறதுதான் நல்ல வளர்ப்பு முறை என்று பலரும் கருதுகிறார்கள். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஓவர் செல்லம் கொடுப்பதன் விளைவு தன்னைத் தவிர நம் பெற்றவர்களுக்கு எதுவும் பெரிதல்ல என்ற மன நிலையைத் தந்து குழந்தையின் சிந்தனையையும் செயலையும் முடமாக்கி விடும்.

மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள். சிறுவயதில் கிடைக்க வேண்டிய தாயின் அரவணைப்பும், விளையாட்டும் பறி கொடுத்து விட்டு, பெற்றவர்களின் உழைப்பை வேடிக்கை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த பெற்றவர்கள் குழந்தைக்கு கார், பங்களா என்று பெருசு பெருசாக சொத்து சேர்ப்பதற்க்காக உழைக்க வில்லை. ஒரு வேள சோத்துக்காக. அள்ளி அணைத்து கொஞ்சி விளையாடி மகிழ வேண்டிய குழந்தைப் பருவத்தை, அனுபவிக்க முடியாமல் வறுமையின் சுமை குழந்தைகளுக்கும் சேர்த்து தண்டனை தருகிறது. குழந்தை பருவத்து மகிழ்ச்சியை விரயமாக்கி, வாழ்க்கையின் யதார்த்த இன்னல்களை சந்திக்க, ஆரம்ப பாடசாலையாக நினைத்துக்கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு சமூக மனிதர்களை வேடிக்கை பார்க்கின்றது.

குழந்தைக்கு அடுத்த வேளை சாப்பாட்டுத் தேவைக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இந்த மனிதர்களின் முக்கிய பிரச்சனை. வியர்வை சிந்தும் வேலைகளுக்கு நடுவில் பெற்றவர்களுக்கு குழந்தையின் மகிழ்ச்சியை பற்றி நினைத்துப் பார்க்க கூட முடிவதில்லை என்பதுதான் யதார்த்தம். எனினும் இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் சமூகத்திற்கு பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன். வாழ்க்கை பிரச்சினைகள், துயரங்கள், கொடிய வறுமை அனைத்தையும் இவர்கள் எதிர் கொள்ளும் நம்பிக்கையினை பெறுகிறார்கள். மறுபுறம் எல்லா வசதிகளும் தேவைக்கு அதிகமாய் இருந்தும் வசதி படைத்த குழந்தைகள் சுய நம்பிக்கை, தைரியமற்று இருப்பதோடு சின்னச் சின்ன விசயங்களுக்காகக் கூட அடுத்தவர்களை எதிர்பார்ப்பதும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள பணம் தேவை என்று கருதுவதும் என்று கோளாறாக வளர்கிறார்கள்.

எல்லாத்துக்கும் என்னவோ அதுதான் நமக்கு என்ற கூட்டுத்துவ உணர்வை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ரொம்ப முக்கியம். இது ஏழை பாழைங்கள் கத்துக் கொடுக்க முடியும். ஆனா நடுத்தர வர்க்கத்துக்கு காசு பணம் நிறைய இருந்தாலும் குழந்தைகளுக்கு இதை கத்துக் கொடுக்கிறது ரொம்ப கஷ்டம்.

– சரசம்மா

  1. I hate these stupid “Super Mom making Super Child” commercials on TV. Its very cheesy and emotional blackmail.

    One sample, a child will be not be taller, he will grow as per his age and genetic makeup. Can drinking something a child suddenly taller.

    I have seen in USA, African American kids from low income family with better body build up than white or Asian kids.

  2. So whats your point Mr.Comrade. This so called poor doesn’t have any job except unprotected sexual intercourse for that what rich people can do it. Dick is same for everyone but where you put that its matters

  3. “ஆரோக்கியமான ரத்தம்” என்று ஒரு விளம்பரம் வரும்….படு கேவலமான ஒன்று

  4. நல்ல கட்டுரை.இன்றைய நடுத்தர வர்க்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள்.பெற்றோரின் செல்லத்தால் கொஞ்சி கொஞ்சி வளரும் குழந்தைகள் கேட்டது கிடைக்க வேண்டும் என்று பிடிவாத குணம் கொண்டவர்களாக வளர்ந்து பின்னாளில் விரும்பியது கிடைக்க வேண்டும் என்ற தன்னல மனிதர்களாக வாழ்ந்து அதற்காக இலஞ்சம்,ஊழல்,மோசடி,நம்பிக்கை துரோகம் என தீய செயல்களை செய்ய தயங்காத கயவர்களாக மாறிப் போகிறார்கள்.அதே சமயம் கண் முன்னால் ஏதேனும் அநீதி நடந்தால் அது தனக்கே ஆனாலும் கூட தட்டிக் கேட்க துணிவற்ற கோழைகளாகவும் இருக்கிறார்கள்.

    வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கு இடையே இயல்பாக வளர்க்கப்படும் அல்லது வளரும் உழைக்கும் மக்களின் குழந்தைகள் அப்படி இருப்பதில்லை.அந்த நடுத்தர வர்க்க அல்பங்களை போலல்லாது துணிவும் நேர்மையும் கொண்ட மனிதர்களாக அவர்கள் பரிணமிக்கிறார்கள்.

    அண்மை காலமாக தமிழ் நாட்டில் ஒரு போக்கு நிலவுகிறது.ஓரிரு வயதுள்ள குழந்தைகளை கூட அவர்களின் பெற்றோர்கள் ”அவர்” ”இவர்” என ர் விகுதி போட்டு பேசுகிறார்கள்.அதை பார்த்து மற்றவர்களும் அப்படியே பேசுகிறார்கள்.அப்படி நடிக்க தெரியாதவர்கள் இயல்பாக டா போட்டு பேசினால் பெற்றோரின் முகம் எட்டு கோணலாகி விடுகிறது.அந்த குழந்தைகளை பார்க்கும்போது சிறு பிரச்னைகளை கூட தாங்கி கொள்ள முடியாத எப்படிப்பட்ட கோழையாக தக்கை மனிதனாக இது ஆக போகிறதோ என்று பாவமாக இருக்கிறது.

  5. இதை படிக்கும்போது மனதை உருக்கும் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

    ஆறு மாதத்திற்கு முன்பு பத்திரிகையில் படித்த செய்தி இது. பெங்களூரில் ஒரு சேரியில் வாழும் ஒரு குடும்பம், அப்பா, அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள். அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். அம்மா வீட்டு வேலைகளை செய்பவர். விடுமுறை நாட்களில் பிள்ளைகளை வீட்டில் பூட்டிவிட்டு இவர்கள் வேலைக்கு சென்று வருவர். ஒரு நாள் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு குழந்தைகளும் வெளிவர முடியாமல் செத்து மடிந்தது.

    – பாலாஜி, மின்னஞ்சலிருந்து…

  6. அப்பா அம்மாவால் கொஞ்சிக் கொஞ்சி வளர்க்கப்படும் மத்திய வர்க்கக் குழந்தைகள் முதலாளித்துவ நிறுவனங்களில் இடைநிலை மேலாளர்களாகவென்றே வளர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லலாம். வேறொரு குழந்தையின் ஒரு வருட மொத்தப் படிப்புச் செலவுக்கு (அ) நன்கைந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு மாத மொத்த செவவுக்குத் தேவையான பணத்தைத் தன் பிறந்த நாள் கேக்குக்குச் செலவழிப்பதைப் பார்த்து இறுமாப்புடன் வளரும் குழந்தைக்குத் தான் பிறந்ததே சமூகத்தின் பாக்கியம் என்று தோன்றினால் ஆச்சர்யம் இல்லை. மற்றவர்களின் கஷ்டம் பற்றிச் சிறிதும் இரக்கம் இன்றித் தனக்கு வேண்டியதை மட்டும் குறுக்கு வழியிலாவது பெற்று விடுகிற மனப்பாங்கு அவர்களுக்கு ரத்தத்திலேயே ஊறிவிடும். தொழிலாளர்களின் துன்பம் பற்றிய கவலை இன்றி முதலாளிகளுக்குக் கூஜா தூக்கும் இடைநிலை மேலாளர்களுக்கு அவசியமான பண்பல்லவா இது?

Leave a Reply to KK பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க