privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

-

தை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கரும்பலகையின் முன்பும் சில பெஞ்சுகள் போடப்பட்டு அதில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் பத்திலிருந்து இருபது மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பு. அது தான் மொத்த பள்ளிக் கூடமும். சுமார் 150 மாணவ மாணவிகளின் மத்தியில் ஒற்றை ஆளாக அங்குமிங்கும் ஓடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியை பத்மினி. அது சிதம்பரம் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி!

நாங்கள் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு வேளையின் போது சென்றடைந்தோம்.

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி
சிதம்பரம் நகரத்தின் மையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி

“சார், ஒரு பத்து நிமிசம் காத்திருங்க. உணவு இடைவேளை துவங்கியதும் நாம் பேசலாம்” என்று எங்களிடம் கத்தரித்துக் கொண்ட ஆசிரியை பத்மினி, வகுப்புகளின் இடையே ஓடியாடுவதைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடிக்கப்பட்டது. உரையாடத் தொடங்கினோம்.

“இங்கே நீங்கள் மட்டும் தான் ஆசிரியையா?”

“இன்னும் சில ஆசிரியைகள் இருக்காங்க. இப்ப அவங்கெல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்” என்றவர், பின்பக்கமாகத் திரும்பி தனது உதவியாளரிடம் “எல்லாரையும் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடத் துவங்குங்க. நான் இதோ வந்துடறேன்” என்றார்.

“ஏன் ரவுண்ட்ஸ் போக வேண்டும்?”

“ஒரு காலத்துல ரொம்ப நல்லா நடந்த பள்ளிக்கூடம் சார் இது. பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. இப்போ பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்கிறாங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க. மதிய உணவு சமயத்தில எங்க ஆசிரியைகள் இந்தப் பகுதியில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைப் பார்த்து எப்படியாவது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கப் போயிருக்காங்க”

பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கௌரவம் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட பத்மினி, தனியார் பள்ளிகளில் உடல் ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், இங்கே தாங்கள் அப்படியான பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். தனது பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவருமே ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

“போன வாரம் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை என்கிட்டே வந்து தொண்டை வலிக்குதுன்னு சொல்லி அழுதிச்சு சார். சாப்பிட்டியான்னு கேட்டேன். முந்தைய நாள் மதியம் இங்கே சாப்பிட்ட சத்துணவுக்குப் பின் எதுவும் சாப்பிடலைன்னு சொல்லிச்சி சார். மனசு கஷ்டமா போயிடிச்சு. நாங்க சாப்பிட வச்சிருந்ததை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னோம் சார்… பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளை ஏன் படிக்க அனுப்பறோம்னே தெரியலை. மாணவர்களுக்கும் ஏன் படிக்க வர்றோம்னு தெரியலை. இங்கே சுத்து வட்டாரத்தில் நிறைய கவரிங் பட்டறைகள் இருக்கு. திடீர்னு படிப்பை நிப்பாட்றவங்க, அந்தப் பட்டறைகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க. நாங்க அவங்க பெற்றோர்கள் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கிறோம் சார்.”

ஆசிரியை பத்மினி தழுதழுக்கும் குரலில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கவனம் முழுக்கவே குழந்தைகள் சாப்பிட்டார்களா என்பதிலேயே இருந்தது. இடையில் அவகாசம் கேட்டுக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்காணிக்கச் சென்று விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி பள்ளிக் குழந்தைகள்
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்

அந்த மாணவர்களில் பலரும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிந்தது. பல மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாகவே இருந்தனர். மாணவர்களும் ஒரு சில நாட்கள் பள்ளிக்கும் பெரும்பாலான நாட்கள் கூலி வேலைகளுக்கும் செல்வதாகத் தெரிவித்தனர். தங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகி விட்டதால் அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதில்லை என்றும், எனவே தாங்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.

சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.

உலக வங்கியின் கடன்  பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது.  21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது,  தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.

அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய தூண்கள் தான் மாணவ சமுதாயத்தை தாங்கி நிற்கின்றன. எனவே இவை மூன்றையும் சேர்த்துத்தான் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் இமையம்.

ஆசிரியர்களுக்குப் முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என்பதோடு சேர்த்து எந்த வரைமுறையுமின்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்துக் கொண்டிருக்கிறது அரசு. தனியார் கல்வி வியாபாரிகள், ஊருக்கு வெளியே – மக்கள் வாழ்விடங்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் – சில பத்து ஏக்கர்கள் அளவுள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தங்கள் கல்வித் தொழிற்சாலைகளைத் திறக்கிறார்கள்.

50 கிலோ மீட்டர்கள் வரை கூட பள்ளிப் பேருந்துகளை அனுப்பி மாணவர்களை அள்ளி வரும் இவர்கள், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிமான வசதிகளைக் கூட பள்ளிகளில் செய்து கொடுப்பதில்லை. தமிழகமெங்கும் நச்சுக் காளான்கள் போல் பரவியிருக்கும் தனியார் பள்ளிகளில் சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரமே இல்லை. தனியார் பள்ளிகளின் கல்வி முறையோ, பட்டியில் போட்டு பன்றிகளை வளர்ப்பதற்கு ஒப்பாக மாணவர்களை அணுகுவதாய் இருக்கிறது. எந்த சமூக அறிவோ, பொறுப்போ இல்லாத தக்கை மனிதர்களையே தனியார் பள்ளிகள் சமூகத்திற்குப் பரிசளிக்கின்றன.

கட்டணக் கொள்ளை அடிப்பது ஒருபுறமிருக்க, படிக்காத மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுப்பது, மாணவர்களுக்கு விளையாட்டை மறுப்பது, அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஓய்வு நேரத்தைக் கூடக் கூடக் களவாடுவது என்று அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானவைகளாக தனியார் பள்ளிகள் இருக்கின்றன. எனினும் பெற்றோர் அப்பள்ளிகளைத் தான் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்கள்.

அரசும் ஆசிரியர்களைக் கண்காணிப்பதிலோ, அவர்களை தரமுயர்த்துவதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சியாளர்கள் குறைவு என்பதோடு இருப்பவர்களும் எந்தவித வகுப்பறை அனுபவமும் இல்லாதவர்கள் என்கிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன். உதாரணமாக ஒரு பாடத்தைப் பற்றிய சிந்தனை வரைபடம் (Mind map) தயாரித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆற்றலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய இவர்களுக்கே அது தொடர்பான அனுபவ அறிவு இல்லை என்கிறார் அவர்.

“ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்” என்கிறார் இமையம்.

அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக வைத்துக் கொண்டு தனியே வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது என்று பல்வேறு வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்கிற பிழைப்புவாத கண்ணோட்டமே பல ஆசிரியர்களிடமும் நிலவுகிறது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை பத்மினி போன்றவர்கள் அபூர்வமான  விதிவிலக்குகள்.

சிதம்பரம் நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியை பத்மினி
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் மதிய உணவு நேரத்தின் போது – தலைமையாசிரியை பத்மினி

”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா?” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்? ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல?” என்று கேட்கிறார்.

மேலும், “மாணவர்களின் வாழ்க்கைக்கான ஆசான்களாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. முன்பு ஆசிரியர் என்பவர் பள்ளிக்கு அருகாமையில் வசிக்க வேண்டும் என்கிற விதி கறாராகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கும், ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் குடும்பத்தின் சமுகப் பொருளாதாரப் பின்னணி குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந்தது. தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 30 அல்லது 40 கிலோ மீட்டர் தூரத்தில், தள்ளி வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.“

“மாணவர்களின் மீது எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிடிப்புமற்று ஆசிரியப் பணியே கூலிக்கு மாரடிப்பது என்கிற அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது. மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏன் வருவதில்லை என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது. மாணவர்களின் சமுக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவற்ற ஆசிரியர்களால், அவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளின் மீது எந்த வகையான மேலாண்மையையும் செலுத்த முடிவதில்லை” என்று நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் இமையம்.

“சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளியொன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு மாணவிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக வகுப்பறையிலேயே பீர் குடித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் பீர் குடிக்கலாம் என்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இணையம், செல்போன் உள்ளிட்ட நவீன விஞ்ஞான சாதனங்கள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியில் வெகு வேகமாக சீரழிகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாஸ்மாக்” என்று  மாணவர்களிடையே பரவும் கலாச்சாரச் சீரழிவை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன்.

தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியில் அடைத்து பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களோ கட்டுப்பாடற்றவர்களாக சீரழிவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த சமூகப் பண்பாட்டு பின்புலத்தில், கல்வியை அரசு புறக்கணித்து வருவதன் விளைவுதான் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி. சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து போயிருப்பதையும், மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போவதையும் இந்தப் பின்னணியில் வைத்துதான் பரிசீலிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் அவல நிலைமையை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கொள்ளையடித்துக் கல்லா கட்டத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்ளைக்கு உதவும் விதத்தில் ஆண்டு தோறும் தமிழக அரசே கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கிறது. சென்னையில் ஒரு மழலையர் பள்ளிக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 30,000 க்கு மேல் என்று அரசே நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது.

இதுவும் போதாதென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் போல பன்மடங்கு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றன தனியார் பள்ளிகள். எந்தவித கணக்கோ, ரசீதோ இல்லாமல் பள்ளி முதலாளிகள் நடத்தும் இந்தக் கொள்ளைக்கு வழக்கம் போல கல்வித்துறை, அதிகார வர்க்கம் துணை நிற்கின்றன. கட்டணக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட பெற்றோர் சங்கத்தினரை காசுக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்பட்டாளத்தை வைத்து மிரட்டியிருக்கிறார், சிதம்பரம் வீனஸ் பள்ளியின் முதலாளி.

”தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால்.  1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கும் மக்கள், அரசுப் பள்ளிகள் நம்முடையவை என்பதையும், கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதையும், கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் உணர வேண்டியது அவசியம் என்கிறார் ராஜகோபால். மேலும், மக்கள் சாதாரணமாக வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையிலும் கல்விக்கான 2 சதவீத வரியும் சேர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் சீரழிகின்றது என்பதன் பொருள் தமது சொந்தப் பணம் பறிபோவது தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவது அரசின் கடமை என்பதையும் மக்களே மறந்து போகும் அளவுக்கு தனியார்மயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அரசும், ஆளும் வர்க்கமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது போய் பாட்டில் பத்து ரூபாய் அம்மா வாட்டர், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பதற்குப் பதில் இன்சூரன்சு திட்டம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று எல்லாத் துறைகளிலும் தனியார்மயமே நியதி என்று ஆக்கப்பட்டு வருகிறது.

இதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டப் பள்ளிகளில் நாம் பார்த்த நிலைமைகள்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. சென்னையிலும் கூட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய மிக மோசமான சூழலிலும், தங்களது அளப்பறிய ஈடுபாட்டின் காரணமாக சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மிகக் கடுமையாக உழைத்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

இருப்பினும் கல்வி உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்று தேவைப்படுவது ஒரு போராட்டம். தனியார் கல்வி முதலாளிகளையும், அவர்களது புரவலரான இந்த அரசையும் எதிர்த்த போராட்டம். மொத்தத்தில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான போராட்டம்!

 – புதிய கலாச்சாரம் செய்தியாளர்
____________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 2013

____________________________________________________________

  1. //இதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. //

    அப்படின்னு நீங்க தான் சொல்றீக. அதாவது இந்த சீரழிவு திட்டமிட்ட சதி என்ற பாரானிய வகை கருத்து. உண்மை என்னவென்றால் அலட்சியம், பொறுப்பற்ற தனம், ஊழல் போன்றவை நாமாக வளர்த்து கொண்டது. இதை புரிந்து கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற வகையில் தொடர்ந்து பேசினால், பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

    அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மற்று கற்பித்க்கும் திறன் குறைந்ததுக்கு இன்னொறு முக்கிய காரணி : எட்டாவது வரை ஆல் பாஸ் என்ற புதிய கொள்கை. எப்படி சொல்லிக்கொடுத்தாலும், எட்டாவது வரை யாரும் பெயில் ஆகப்போவதில்லை என்பதால் பொறுப்பற்ற தனம் ஆசியர்களிடம் உருவாகிவிடுகிறது. முன்பு இப்படி இல்லை.

    எல்லா கட்டமைப்புகளும், வசதிகளும், புதிய கட்டிடங்களும் உள்ள அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் சரியில்லை. ஏன் ? ஆசிரியர்கள் எப்படி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வேலை போகவே போகாது. மேலும் அவர்களின் சங்கங்கள் வலுவானவை. அவர்களை பகைத்து கொள்ள எந்த அரசும் தயாராக இல்லை. தனியார் பள்ளிகளில் பல குறைகள் இருந்தாலும், சம்பளம் கம்மியாக இருந்தாலும், ஒழுங்கா வேலை செய்யவில்லை என்றால் வேலை போய்விடும். இந்த முக்கிய அம்சத்தை புரிந்து கொள்ளாமல், பேசி பயனில்லை. அரசு ஊழியர்களை திருத்தவே முடியாது. நீங்க எத்தனை போராடினாலும் சரி. அமெரிகாவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் அரசு பள்ளிகள் தான் அதிகம். ஆனால் அங்கு ஆசிரியர்களுக்கு இங்கு போல் நிரந்தர வேலை என்ற முறை இல்லை. லோக்கல் கவுன்சிகளின் கட்டுபாட்டில் அவை இயங்குவதால், ஒழுங்க நடக்கின்றன. இதை ஒப்பிடுக.

  2. // போதிய நிதி ஒதுக்காமலிருப்பது,///

    இல்லை. ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீடு அதிகரித்தே வருகிறது. செலவிட்டும் பயன் இல்லை என்பதால் தான் இந்த அலட்சியம்.

    Government expenditure — both, state and central combined — on education has grown over the years, from about Rs.97,375 cr in 2004-05 to Rs.1,89,325 cr in 2008-09, according to data compiled by the Center for Budget and Governance Accountability (CBGA).

    மேலும் பார்க்கவும் :

    http://swaminomics.org/money-cant-teach-kids-to-read-write/
    Money can’t teach kids to read & write

    //In China , teachers are hired on three-year contracts by counties, and are fired if they do not perform. But in India teachers belong to trade unions that are accountable only to a distant state capital, not the people they serve. Reforms could include empowering panchayats or parents’ association to at least withhold the pay of absentee teachers, if not fire them. But this would antagonise trade unions, and so finds no mention in the CMP.

    An alternative is to give education vouchers to parents, which can be used to buy an education at competing private schools. An education voucher scheme works best in relatively big villages and towns where a multiplicity of schools is feasible.//

  3. அதியமான் அவர்களே இன்று கலெக்டர், சப்கலெக்டர், மாஜிஸ்டிரேட் என்று அரசு வேலையில் இருக்கின்ற எல்லோரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். உங்கள் எதிரியான அரசுதுறைகளில் ஒன்றான பள்ளிக் கல்வித்துறைகளில்தான் அந்நாள் பள்ளிக்கூடங்கள் நடந்தன. எனது தந்தையும் ஒரு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்தான். நல்லாசிரியருக்கான மாநில மத்திய் விருதுகளைப் பெற்றவர்.

    1990 க்கு பிறகு எப்போது அரசு உங்கள் தனியார்மைய தலைமையான உலகவங்கியின் திட்டபடி ஆடதுவங்கியதோ அதாவது 80 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் (79 வரை ஒரு ஆசிரியர்தான்) அப்போதிலிரிந்துதான் அரசுப் பள்ளிகளின் சீரழிவு ஆரம்பித்து விட்டது. ஆசிரியர்களும் சீரழிய ஆரம்பித்தனர்.

    தனியார் பள்ளிகளில் உள்ளது மாதிரி ஸ்வைப்பு இன், ஸ்வைப் ஒட் வைத்தல், 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மற்றும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று வைத்தல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமாக கண்காணிப்பு என்று வைத்தால் அரசு பள்ளிகள் உருப்படும்.

    உங்கள் தனியார்மைய தலையிடமான அமெரிக்காவிலேயே பள்ளிகளை ஏன் தனியார் மையமாக்க வில்லை ? உள்ளூராட்சி என்றாலும் அது அரசு அமைப்பு தானே ? பஞ்சாயத்து ராஜ் – லைசன்ஸ் ராஜ்ஜியம்தானே? ஏனென்றால், அமெரிக்கனுக்கு தெரியும் தனியார் முதலாளிகள் கல்வியையும் குட்டிச்சுவராக்கி விடுவார்கள் என்று – அதனால்தான் அமெரிக்க அரசு அஞ்சுகின்றது.

    • ///1990 க்கு பிறகு எப்போது அரசு உங்கள் தனியார்மைய தலைமையான உலகவங்கியின் திட்டபடி ஆடதுவங்கியதோ அதாவது ///

      இதெல்லாம் வீண் கதை. உலக வங்கி ‘திட்டப்படி’ கல்வி துறை உண்மையில் ஆடியிருந்தால் நல்லா தான் இருந்திருக்கும். ஒழுங்கா, நேர்மையா நடத்தபடுவதையே உலக வங்கியும் விரும்பியிருக்கும்.

      எல்லாத்தையும் தனியார்மயமாக்க சொல்லவில்லை. உலக வங்கியும் சொல்லவில்லை. அமெரிகாவில் 80 சதம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் இன்றும் என்று வினவும் எழுதுகிறது. எனவே வீணா..

      90களுக்கு பிறகு நம் அரசு பள்ளிகள் சீரழிந்துவிட்டன, காரணம் புதிய பொருளாதார கொள்கைகள் தான் என்று தொடர்ந்து பேசுபவர்களுக்கு : 90களுக்கு பின்பு தான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருமானம் பல மடங்கு அதிகர்த்துள்ளது. அதுக்கு முன்பு இருந்த வரி வசூல் தொகைகளை பற்றி படித்துப்பார்க்கவும். மிக முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு, அரசு ஆசிரியர்களுகு நிகர சம்பளம் அது வரை இல்லாத அளவு உயர்ந்தது. அய்ந்தாவது சம்பள் கமிசன் அளித்த பரிந்துரைகளுக்கு பிறகும்.
      60கள், 70களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில் பணி செய்தனர். தலைமை ஆசிரியர் சைக்கிளில் வந்தாலே பெரிய விசியம். இன்று பல உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கார் வைத்திருக்கும் அளவு சம்பளம் உயர்ந்துள்ளது. அன்று கிராமபுர ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வறுமை கோட்டிற்க்கு கொஞ்சம் மேலே இருந்தனர். அன்று கிடைத்த சம்பளம், அன்று நிலவிய விலைவாசி உயர்வு விகிதங்கள், பொருளாதார சாத்தியங்கள் அப்படி இருந்தன. பழைய கருப்பு வெள்ளை படங்கள், பழைய நாவல்களை மீண்டும் ஊன்றி கவனிக்கவும். அல்லது உங்க பெற்றோர்களை, வயதில் மிக மூத்தவர்களிடம் விசாரிக்கவும்.

      இன்று சம்பளம் எவ்வளவோ பரவாயில்லை. கல்வி துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்க்ப்படும் நிதியின் அளவு எத்தனை சதம் உயர்ந்துள்ளது என்பதையும் பார்க்கவும் :
      Government expenditure — both, state and central combined — on education has grown over the years, from about Rs.97,375 cr in 2004-05 to Rs.1,89,325 cr in 2008-09, according to data compiled by the Center for Budget and Governance Accountability (CBGA).

      ஆனாலும் தரம் சீரழிந்தே வருகிறது. இதற்க்கு யாரை காரணம் சொல்வீர்கள் அப்ப ?

      நிரந்தர வேலை கொடுத்தால் யாரும் ஒழுங்கா வேலை செய்யமாட்டாங்க என்பது மனித இயல்பு. ஒரு சிறு நிறுவனம் நடத்தி, அதில் எல்லோருக்கும் ‘நிரந்தர’ வேலை அளித்து பாருங்க. பிறகு புரியும்.

  4. என் அம்மா ஒரு அரசு ஆசிரியை, என்னை அவர் பள்ளியில் படிக்க வைத்தார். அவர் சக ஆசிரியர்கலும் அப்படியெ இருந்தனர். ஆனால் இப்பொது அப்படி இல்லை.

  5. Who says that the quality of education is good in private schools.There are many teachers in private schools who are good for nothing.Since the students studying there are from creamy layer,they themselves manage even without the help of “those”teachers.Moreover,these students can afford to go for tutions for every subject.In spite of lack of infrastructure,Chennai(Corporation)schools are showing good results.First of all,the Govt school teachers should not be given extra election duty,Census work etc.Govt school Headmasters are burdened with miscellaneous expenditure from their pockets in the absence of timely release of funds from Govt.Students/teacher ratio is not maintained.Thousands of vacancies are not filled up.In some reputed private schools,management has been taken over by vested interests.Teachers are nowadays appointed without any screening.

  6. We have to really appreciate Govt/Corporation students scoring high marks without attending tution classes.Simply they can not afford to pay for private tutions.We have read about some successful students of Chennai (Corporation)schools who attended school besides helping their parents in vegetable selling on platforms

  7. //அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக //

    ஆம். எனென்றால் எப்படி வேலை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் வேலை போகவே போகாது. யாராலையும் இவர்களை தட்டிக் கேட்க முடியாது. தனியார் பள்ளிகளில் இப்படி சாத்தியமில்லை.

    ///”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?” என்கிறார் இமையம். “///

    ஆம். தனி உடைமைக்கும் பொது உடைமைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இந்த உளவியல் தான். உரிமையாளர் என்று யாரும் இல்லாத அமைப்புகள் பொதுவாக இப்படி தான் இருக்கும். விதிவிலகான அமைப்புகள், மனிதர்கள் இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பான்மையில் பொறுபற்ற அலட்சிய மனோபாவம் தான் இருக்கும். ஒரு கலவரம் நடக்கும் போது அரசு பேருந்துகள் தான் கொளுத்தபடுகின்றனர். தனியார் பேருந்துகள் எப்படியோ ‘தப்பித்து’ கொள்ளும் விந்தைக்கும் காரணம் இதுதான். தன்னுடைய சொந்த பொருளை, சொத்தனை பொறுப்பாக பராமரிப்பது போல் பொதுவாக யாரும் பொது சொத்தை பராமரிக்க மாட்டார்கள். வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளும் இப்படி தான். பொது உடைமை எந்து வந்துவிட்டால் பிறகு : ‘‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான்’ என்று கட்டுரையாளர் எழுதியதே பொருந்தும். (விதிவிலக்குகளும் உண்டு).

  8. அதியமான் அவர்களே !!! அரசின் மொத்த வருமானம் மற்றும் மொத்த செலவீணத்தில் கல்விக்கான சதவீதம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? அதாவது 1960 லிருந்து ? அப்போது தெரியும் உங்கள் யோக்கியதை

  9. சதம் குறைந்துள்ளது தான். அதை மட்டும் வைத்து கொண்டு பேச கூடாது.Absolute terms தான் முக்கியம். அப்பறம் 1960 மற்றும் 90 வ்ரை ஜி.டி.பி யின் மொத்த அளவையும், இன்றைய அளவையும் ஒப்பிட வேண்டும். உங்களை போன்றவர்களின் ‘யோக்கிதையால்’ தான் அன்று வளர்ச்சியே இல்லாமல், வறுமை பரவலாகி, தேங்கி, ஊழல்மயமாவதற்க்கான விதை விதிக்கப்பட்டது.

    சரி, நிதி அளவு அதிகரித்தும், பலன்கள் அதே விகிதத்தில் இல்லை என்பது தான் இங்கு விவாதப்பொருள். உருப்படியான தீர்வு சொல்ல இயலாமல் சும்மா பேச கூடாது.

  10. அதியமான் அவர்களே !!!

    1960 இல் 100 ரூபாய் சம்பளம் என்று வைத்துக் கொண்டால், 10ரூபாய்க்கு பை கொள்ளாத அளவு மளிகை வாங்கலாம்.
    அதாவது 10% தான் உணவுப் பொருளுக்கு.

    ஆணால் ஜிடிபி அதிகரித்த இப்போது, 10000 சம்பளம் வாங்குகின்ற ஒரு குடும்பம் 5000 அதாவது 50% உணவுக்கு செலவழிக்குதே ? இதே நிலைமைதான் கல்வியிலும் !!!. உங்கள் ஜிடிபி தில்லாலங்கடி இப்போது தெரியும் யாருக்கான வளர்ச்சி என்று !

  11. பிரச்சனை:
    அரசு பள்ளிகளில் இலவச கல்வி, மதிய உணவு, தரமான ஆசிரியர்கள் (அதாவது தனியார் பள்ளி ஆசிரியர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் தகுதி உள்ளவர்கள் – We can safely assume that they excelled in teacher entrance exams over others who managed to made to private schools) இவ்வளவு இருந்தும் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வது.

    காரணம்:
    தனியார் பள்ளிகள் தரமாக உள்ளது (அல்லது அரசு பள்ளிகள் தரக்குறைவாக உள்ளன).

    உப காரணங்கள்:
    1. ஆசிரியர்களின் பொறுப்பின்மை. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு எந்த incentive-வும் இல்லை. பள்ளிக்கே வராமல் இருந்தால் கூட வேலை போகாது.
    2. உள்ளூர் மக்களுக்கு அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் எந்த கட்டுப்பாடும் இல்லை. மதிய உணவு சரியில்லை என்றாலோ, பள்ளியில் கணிப்பொறி பழுதாக இருந்தாலோ அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

    எவையெல்லம் காரணம் இல்லை:
    1. கண்டிப்பாக மக்கள் அரசு பள்ளிகளை கவுரவ குரைச்சலாக நினைப்பதில்லை (அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை)
    2. மொத்த உற்பத்தியில் கல்விக்காக அரசாங்கம் செய்யும் செலவு குறைகிறது. (Over the last 20 or so years, the % of public education over total GDP has decreased a bit, but the GDP growth is tremendous meaning in absolute terms the amount is increased).

    தீர்வுகள்:
    1.அதிகார பரவலாக்கல் – பஞ்சாயத்துகள் பள்ளிகளை நடத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அதிகார்ப்படுத்தப் பட வேண்டும்.
    2. நன்றாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருதுகள், சம்பள உயர்வு, பணி உயர்வு ஆகியன. (அமெரிக்காவில் வருடத்திற்கு 2 முதல் 3 சதம் ஆசிரியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கு அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது).
    4. ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.
    5. School choice coupons – Direct cash transfers. The parent can admit the child even in private schools. The Govt will reimburse them.

    எவையெல்லம் தீர்வுகள் இல்லை:
    1. கல்வியை முழுதும் அரசுடைமை ஆக்குவது. (ஏன் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும் அரசே செலவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு போக்குவரத்து துறையில் சந்தை பொருளாதார முறை (உங்க பாஷையில் முதலாளித்துவ பொருளாதாரம்) வந்தால் பெரிய ஊர்களுக்கு மட்டும் தான் பேருந்துகள் ஓடும். அவர்களுக்கு லாபமில்லாத சிறிய ஊர்களை புறக்கணிப்பார்கள் என்று சொல்வதுன்டு. இதற்கு தீர்வு சிறிய ஊர்களுக்கு மட்டும் அரசாங்கம் பேருந்து விடுவதே அன்றி நகரங்களிலும் அரசே பேருந்தை இயக்குவது அல்ல.)
    2. தனியாரை அதிகமாக அடக்குவது. (விருப்பத்தேர்வும், வாய்ப்பும் தரத்தை மேம்படுத்தும். அதிக கட்டுப்பாடுகளால் தான் லஞ்சம் அதிகரிக்கிரது). There is a huge demand for quality education and the current supply could not cater to it. Closure of private schools in the name of regulation will only add to the burden. There is a concept called ‘Public goods’ in economics. Provision of public goods can be given by the Government. However Production of public goods can be left to the market.

Leave a Reply to Aathavan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க