privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !

குரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !

-

குரோம்பேட்டை நெடுஞ்சாலை டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடல் !

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

என்கிற தலைப்பில் ‘பெண்கள் விடுதலை முன்னணி’ சார்பாக குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியில் கடந்த 31-ம் தேதி சனிக்கிழமை மாலை, தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு சென்னைப் பகுதி பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ராஜி தலைமையேற்றார். தோழர் தனது தலைமை உரையில் ஏரியாவுக்கு ஓரு ரேசன் கடை இருக்குதோ இல்லையோ தெருவுக்கு நாலு டாஸ்மாக் கடை இருக்கு. இதனால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்கு பெண்கள் எப்படி அமைப்பாக திரண்டு போராட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார் .

அடுத்ததாக ஜி.எஸ்.டி. புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் நலச் சங்கத்தின் செயலாளர் திரு. பக்தவச்சலம் அவர்கள் பேசினார். “மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும். காவல்துறை பொதுமக்களின் நண்பன்னு சொல்றாங்க, போராட்ட நாள் அன்று பெண்கள் வயதானவர்கள்னு எல்லோரும் வந்திருந்தாங்க, கடுமையான வெயிலா இருக்கேன்னு ஒரு சாமியானா பந்தல் போட்டோம், உடனே ஒடி வந்த காவல் துறை இதை உடனே எடுங்க இல்லன்னா நாங்க புடுங்கி போட்டுடுவோம்ன்னு மிரட்டுறாங்க. காவல் துறையும் அரசாங்கமும் ஒன்னா இருக்காங்க நாம தான் தனித்தனியாக இருக்கோம். நாமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்” என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக பெண்கள் விடுதலை முன்னணி சென்னைப்பகுதி செயலர் தோழர் உஷா பேசினார். தோழர் தனது உரையில், “பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடனும்னு போராடிட்ருக்கு, ஆனா கோவையில் ஒரு சங்கம் இருக்கு குடிகாரன்கள் எல்லாம் சேர்ந்து வைத்திருக்கும் சங்கம். இவர்களின் கோரிக்கை என்ன என்றால், விபத்தில் அடிபட்டவர்களை தூக்கிச்செல்ல 108 ஆம்புலன்ஸ் இருக்கிற மாதிரி, குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிற இவர்களை தூக்கிச் செல்ல 208 ஆம்புலன்ஸ் வேணுமாம். அதில் வேலை செய்வதற்கு பெண்கள் தான் இருக்கணுமாம் அதுவும் அந்த குடிகாரனுங்க வீட்டு பெண்கள் இருக்கணுமாம். ஏன்னா நாங்க எங்க விழுந்து கிடக்குறோம்னு அவங்களுக்குத்தான் தெரியும்னு சொல்றானுங்க. இதை எல்லாம் கேக்குறதுக்கு எங்களுக்கு முழு உரிமை இருக்கு, ஏன்னா நாங்க தான் இந்த அரசாங்கத்துக்கு 28 ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்டித் தருகிறோம் என்கிறார்கள்.

அரசாங்கத்தின் நோக்கமே இது தான் 208 ஆம்புலன்ஸ் வேணும்னு கோரிக்கை வைத்துக்கொள். வேறு எதைப் பத்தியும் சிந்திக்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக். இதை புரிந்து கொண்டு சிந்திப்போம் போராடுவோம் வாருங்கள்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்ததாக,  ஒருங்கிணைந்த நகர வளர்ச்சிக்கான சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. சிவசாமி பேசினார். “மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடக்கூடியவர்கள் இவர்கள் தான். இன்றைக்கு நேற்றல்ல திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்திலிருந்து சமச்சீர் கல்வி வரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் கவனித்து வருபவன் நான். திருவரங்கத்தில் நான் நகராட்சி தனி ஆணையராக இருந்தேன், அப்போது ஒரு அரசு அதிகாரியாக நான் கூட கருவறையில் நுழைய முடியாது ஆனால் ம.க.இ.க தோழர்கள் நுழைந்தே தீருவோம் என்று நுழைந்தனர். தில்லையில் தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழில் பாடியதும் தோழர்கள் தான். தீட்சிதன் என்பவன் யார் ? சென்னையில் உள்ள அயோத்திக் குப்பம் வீரமணி, பாஸ்கர் வடிவேலு, கபிலன், ஆசைத் தம்பி எல்லோரையும் ஒன்னா பாத்தா எப்படி இருக்குமோ அப்படி இருப்பான் தீட்சிதன் அவனையே எதிர்த்து சாதித்தவர்கள் தோழர்கள். இன்று டாஸ்மாக்கிற்கு எதிராகவும் போராடி சாதித்துள்ளனர். இதை மக்கள் இயக்கமாக கட்டி போராட வேண்டும். இந்த பணியை செய்கின்ற இவர்களோடு என்றும் இணைந்து நின்று போராடுவோம்” என்று கூறி முடிதார்.

இறுதியில் சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயக்குமார், சாராயம் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதனால் மட்டும் நாம் எதிர்க்கவில்லை என்று கூறி அதன் உள்ளே உள்ள அரசியலை அம்பலப்படுத்தினார். இது சமூகத்தின் மீது திருப்பப்படும் ஆயுதம். நம் மீது திணிக்கப்படுகின்ற மறுகாலனியாக்கத் தாக்குதலை எதிர்க்க கூடாது என்பதற்கு தான் சாராயக்கடை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சீன மக்கள் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையே உணராமல் அபினிக்கு அடிமைப்பட்டு கிடந்ததைப்போல, தமிழக மக்களை சீரழிப்பதற்காகவே திறக்கப்பட்டது தான் இந்த சாராயக்கடை. இதை கலைஞர் துவக்கி வைத்தார். ஜெயா அம்மையார் நடத்திக் கொண்டிருக்கிறார். மே 1 என்பது உழைப்பவர்களின் உரிமைக்கான நாள் ஆனால் அன்று கட்டாயம் தொழிலாளர்கள் சாராயம் குடிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் அடிமை நிலையைப் பற்றி அவர்களை சிந்திக்க விடாமல், போராடவிடாமல் தடுக்கிறது இந்த அரசு. மக்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர், கல்வி, மருத்துவம் எல்லாம் தனியாருக்கு, ஊத்திக்கொடுக்கும் வேலை மட்டும் அரசுக்கு. இதை புரிந்து கொண்டு ஓரணியில் திரண்டு நம் மீது தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிப்போம் வெற்றி பெறுவோம் என்று அறைகூவல் விடுத்தார்.

கூட்டத்தின் இடையிடையே பெ.வி.மு தோழர்களின் பாடல்களும் பு.ஜ.தொ.மு தோழர்களின் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டமும் தெருமுனைக்கூட்டமும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே போராடாமல் எதையும் எதையும் சாதிக்க முடியாது என்பதையும், போராட வேண்டும் என்கிற உணர்வை ஊட்டியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.