privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !

அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !

-

து நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது !
எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே நடக்கும்.
மகாபாரதத்தை
புரிந்து கொள்ள முடியாதவர்கள்
மன்மோகன் சிங்கை புரிந்து கொள்ளுங்கள்!

dollar-rupeesதனியார்மய – தாராள மய
தர்ப்பணக் கரையில்
இந்திய ரூபாய்க்கு
எள்ளும், தண்ணியும் இரைத்து விட்டு
ஏங்கி நிற்கும்
பங்குச் சந்தை அர்ச்சுனர்களுக்கு
பக்குவமாக விளக்குகிறார்.

“கருமம் டாலரில் உதித்தது
டாலர் பரமாத்மாவினின்றும் வந்தது
ஆகையால் எங்கும் நிறைந்துள்ள டாலர்
யாண்டும் அமெரிக்க யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது”

வினையின் விளை பயனைக் கணக்கிட்டு
சாங்கியம் பார்ப்பவர்களுக்கு,
பரமாத்மா ஒபாமா
பட்டென விடையறுக்கிறார்,
“இல்லாததற்கு இருப்பு கிடையாது
இருப்பது இல்லாமல் யாவதுமில்லை
உண்மையை அறிந்தவர்க்கே
இவ்விரண்டின் முடிவு விளங்கும்”

ரூபாய் என்னுடைய
கீழான பிரகிருதி
டாலர் என்னுடைய
மேலான பிரகிருதி
இரண்டும் நானே
முரண்டு பிடிக்காமல்
கடமையைச் செய்!
பலனை எதிர்பார்க்காதே!
அகம் பிரம்மாஸ்மி
அமெரிக்காவே உன் சாமி !

விழுந்து கும்பிட்டே
வில் வளைந்த பாஜக படை
ஆர்ப்பரிக்கிறது குருச்சேத்திரத்தில்,
“சூதாடத் தெரிந்தால் ஆடு !
இல்லையேல்,
சொக்காட்டானை விட்டு ஓடு!
பங்குச் சந்தையிலிருந்து
அழகிப் போட்டி வரை
‘பாரத மாதாவை’ வைத்து சூதாடி
சேர்த்த பணத்தை
மதிப்பிழக்க வைத்த நீயுமொரு மன்னனா?
என்னிடம் விடு பாரதமாதாவை!
இரண்டே மாதத்தில்
எத்தனை டாலருக்கு ஆடுகிறேன் பார் !” என
மோடி முறுக்குகிறார்.

சேலை,
துகிலுரியப்படுவதைப் பார்த்து
பீதி வேண்டாம் !
அதன் ‘ஆக்சுவல்’ நீளம்
அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு
அமைதியாய் இருங்கள் ! – என
ஆசுவாசிக்கிறார் சிதம்பர ஜீவாத்மா !

பொருளாதாரம்
ஆட்டத்தின் விதிப்படி டாலரோடு தேசத்தை அனுப்பி வைக்கும் மன்மோகனின் மன உறுதி

யார் என்ன சொன்னாலும்
ஆட்டத்தின் விதிப்படி
டாலரோடு தேசத்தை அனுப்பி வைக்கும்
மன்மோகனின் மன உறுதியைப் பார்த்து
காண்டீபத்தை எறிந்து விட்டு
‘தலைவா’ என காலில் விழுகிறான் அர்ச்சுனன்

நீரா ராடியாவின் டேப்பில்
அம்மணமாய் திரியும்
டாடாவின் ஆசைகள்
உலகுக்கு உபதேசிக்கிறது.
“…. பிரச்சனையே, அரசின் கொள்கைகளை
தனியார் சுய லாபத்துக்காக மாற்றுவதுதான்!!”
நித்ய கருமத்தின் பூஜா பலன்களை
சுத்த அயோக்கியன் சுலோகமாக்கும் வித்தை
டாடா பகவானுக்கும் வாய்த்திருக்கிறது.

அன்னிய முதலீடு
எனும் அஸ்த்திரம் ஏவியே
நாடு வளருது – வல்லரசாகுது
என கண்ணை மறைத்த கயவர்களின்
இப்போதைய கவலையும்,
ரூபாய்க்கு மதிப்பு குறைந்ததை விட
டாலரின் அழகு
கெட்டு விடக் கூடாது என்பதுதான்.

காய்ந்த வயல்கள்
கலர், கலராய் மொபைல்கள்,
முறிக்கப்பட்ட தொழில் இதயங்கள்
முதுகுக்குப் பின்னால் கணினிகள்
வாடிப்போன தாய் முலைகள்
வகைவகையாய் புட்டிப்பால்கள்!
அன்னிய முதலீட்டில் யாருக்கு லாபம்?

விவசாயிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
தொழிலாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
நெசவாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
மீனவருக்கு மதிப்பில்லாத நாட்டில்,
பணத்துக்கு மட்டும்
மதிப்பு வருமா என்ன?

தேசத்தின் மதிப்பை
உலகச் சந்தையில் விற்று விட்டு,
பணத்தின் மதிப்பை
பங்குச் சந்தையில் தேடும்
இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!

டாலர் - ரூபாய் மோதல்
டாலருக்கு நிகராக எகிற முடிந்த அடிமைகள் இப்போது எகிருங்கள் பார்க்கலாம்.

நடக்கும் நாடகத்தைப் பார்க்க
இது மகாபாரதம் அல்ல,
அதனினும் கொடிய மறுகாலனியம் !
உபதேசம்
இப்போது பகவத்கீதையான
உலகமயம்.

எல்லையில்
இரண்டு அடி வந்து விட்டானாம் பாகிஸ்தான்!
எகிறி குதிக்கும் அம்பிகளே
உன் தொண்ணையில் வந்து
‘ஆய்’ போய் விட்டான் அமெரிக்கா!
டாலருக்கு நிகராக
எகிற முடிந்த அடிமைகள்
இப்போது எகிறுங்கள் பார்க்கலாம்.

– துரை சண்முகம்