privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

-

முசாஃபர் நகர் மாவட்டம் உத்திர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கு முசுலீம்களுக்கெதிராக இந்து ஆதிக்க சாதியை சேர்ந்த ஜாட் சாதியினர் கடந்த 7-ம் தேதி முதல் நடத்தும் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி விட்டது. தற்போது தமது கிராமங்களில் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடிவரும் முசுலீம்களை நோக்கி இந்துமத வெறியர்கள் தம் தாக்குதலை துவக்கி உள்ளதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. சாம்லி பகுதியில் மசூதியின் இமாம் மௌலானா உமர் தின்-ஐ கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள்
கலவரத்தில் காயமடைந்தவர்கள்.

இந்துமத வெறியர்களை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள மாநில அரசு விரும்பவில்லை. தேர்தலில் முசுலீம்கள் வாக்குகளோடு இந்துக்கள் வாக்கும் சமாஜ்வாதிக்கு வேண்டும் என்பதால் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 9 வரை நடந்த சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் கமிசன் ஒன்றை அகிலேஷ் யாதவ் அமைத்துள்ளார்.

நகர்ப்புற பகுதிகளில் ராணுவமும், துணை ராணுவமும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன. சாம்லி, மீரட், சக்சேனா போன்ற பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. மாநில சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றி மத்திய அரசுக்கு ஆளுநர் பி.எல். ஜோஷி அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையும் கூட ஒரு கண்துடைப்பு என்றால் மாயாவதி, அஜீத் சிங், பாஜக போன்றோர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி வருவதும் அரசியல் காரணங்களை முன்வைத்தே.

ஆகஸ்டு 27 அன்று தங்களது சகோதரியை கேலி செய்த கலாப்பூர் கிராமத்தை சேர்ந்த முசுலீம் இளைஞர் ஒருவரை அவரது ஊருக்கே நேரில் சென்று இரு ஜாட் சாதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் முசுலீம் இளைஞர் கொல்லப்பட்டார். இதனைப் பார்த்த உள்ளூர் முசுலீம்கள் அந்த இரு ஜாட் இளைஞர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர். அதில் இரு இளைஞர்களும் இறந்து விட்டனர்.

கொலையுண்ட இரு இளைஞர்களின் சாவுக்கு நீதி கேட்டு ஆகஸ்டு 31 அன்று ஜான்சத் நகரில் ஜாட் சாதி பஞ்சாயத்து ஒன்று கூடியது. சில போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் படுகொலை பற்றி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென்றும் கோரிய அப்பஞ்சாயத்து அரசுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது. அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், பாஜக அவர்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 5 அன்று மாவட்ட அளவிலான பந்த்-க்கு அழைப்பு விடுத்தது. இந்த தனிப்பட்ட விவகாரத்தை வைத்து இந்துமதவெறியை கிளப்புவது பாஜகவின் திட்டம். தேர்தல் வேறு அருகாமையில் வரும் நிலையில் இருப்பதால் சங்க பரிவாரங்கள் இத்தகைய சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றன. இத்துடன் ஜாட் சாதியினர் தமது மகா பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்தனர்.

மகா பஞ்சாயத்து என்பது பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் ‘8 கோடி’ ஜாட்டுகளின் பிரதிநிதிகளது பஞ்சாயத்து. முசாஃபர் நகரில் உள்ள நக்லா மந்தர் என்ற இடத்தில் செப்டம்பர் 7 அன்று நடந்த மகா கப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள ஹரியானா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் ஜாட் சாதியை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனராம்.

ராணுவம்இம்மகா பஞ்சாயத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாயத், ராஜேஷ் திகாயத் போன்றோர் முக்கிய பங்காற்றினர். இவர்களுடன் ஹரேந்திர மாலிக் என்ற முன்னாள் காங்கிரசு எம்பியும், பாஜக-ன் சுரேஷ் ரானா, சௌத்ரி குஹ்கும் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் எனப் பலரும் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டு இசுலாமியர்களுக்கெதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் மீது முசுலீம்கள் தாக்குதல் என்று கதை கட்டி விட்டு இசுலாமியர்கள் மீது ஜாட்டுகள் தாக்குதலை துவங்கினர். இதனை படம் பிடித்த ஐ.பி.என் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா ஜாட்டுகளின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில் மீரட் மாவட்டம் சர்தானா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சோம் சங்கீத் என்பவர், 2010-ல் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இசுலாமிய மத அடையாளத்துடன் உள்ள இருவர் சேர்ந்து ஒரு இளைஞரை கொலை செய்யும் காட்சியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டி அதற்கு முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது பாருங்கள் எனத் தலைப்பிட்டுமிருந்தார். அதில் தங்களது சகோதரியின் மானத்தைக் காக்க போராடி உயிரிழந்த இந்து இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இப்படி போலியாக வீடியோ பதிவேற்றம் செய்து சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எனினும் அதற்குள் ஆயிரக்கணக்கில் செல்பேசி வழியாக அது பகிரப்பட்டிருந்தது. தற்போது அவரது ஃபேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருந்த போதிலும், சிடி போன்ற வடிவங்களில் கிராமப்புறங்களில் தொடர்ந்து அந்த ஃபோர்ஜரி வீடியோ வலம் வருகிறது. இந்துமதவெறி ஓநாயகள் எத்தகைய கீழ்த்தரமான வேலைக்கும் போவார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.

சோம் சங்கீத்
போலி வீடியோவை இணையத்தில் பரப்பிய பாஜக எம்எல்ஏ சோம் சங்கீத்.

இதுபோன்ற வதந்தி பரப்புவதில், இணைய பக்கங்களில் போலி வீடியோக்களை பதிவேற்றுவதில் சமூக விரோத சக்திகள் முன்னிற்கின்றன என்றும், சமூக அமைதியை சீர்குலைக்கும் வேலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில உள்துறை செயலர் கமல் சக்சேனா எச்சரித்துள்ளார். ஆனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், தவறாக அவர் மீது அரசு தரப்பு குற்றஞ்சாட்டுவதாகவும் பாஜக கூறியுள்ளது. அப்பட்டமாக பிடிபட்டும் இந்த பொறுக்கி எம்எல்ஏவை குண்டாசிலோ இன்னும் கடுமையான பிரிவுகளிலோ உள்ளே போடுவதற்கு மாநில அரசு அஞ்சுகிறது.

சந்தடி சாக்கில் ஆர்எஸ்எஸ்-ம் கலவரத்தை கண்டிக்கும் பெயரில் இந்துமதவெறியை தூண்டுவதற்கு முயல்கிறது. மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம், சம்ஜௌதா எக்ஸ்பிரசில் குண்டு வைத்தது, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர், தென்காசி குண்டுவெடிப்பு என இந்துமத வெறியர்களின் ஃபோர்ஜரி வேலைகள் ஊரறிந்த ரகசியம்தான். அதன் ஒரு பகுதிதான் இந்த ஃபோர்ஜரி வேலையும், அதைத் தொடர்ந்து இந்துமத வெறியர்கள் ஜாட்டுகளை கொண்டு நடத்தும் முசுலீம்களுக்கெதிரான கலவரமும்.

தற்போதைய தாக்குதல்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட அளவில் துப்பாக்கி உரிமங்கள் 1700-க்கும் மேல் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 366 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடமிருந்து துப்பாக்கி, வாள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பன்னிரெண்டு மணி நேரத்துக்கும் மாவட்ட நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்துமதவெறியர்களை தடை செய்வதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு துப்பில்லாத போது இந்த ‘ஜனநாயக’ நடவடிக்கைகளுக்கு என்ன பயன்?.

மாயாவதி
முன்னாள் உபி முதலமைச்சர் மாயாவதி.

மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி மற்றும் மாயாவதி ஆகியோர் குறிப்பிடுகையில், ஏற்கெனவே விஎச்பி-ன் 84 கோசி யாத்திரையை அனுமதித்து பின் தடை செய்ததை போலவே இப்போதும் நாடாளுமன்ற ஓட்டுக்களுக்காக சமாஜவாதி கட்சியும், பாஜக-ம் சேர்ந்து மகா பஞசாயத்தை கூட்ட வைத்து பின் கலவரத்துக்கு திட்டமிட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதே ஜாட் சாதியை பகைத்துக் கொள்ள இக்கட்சிகளும் தயாராக இல்லை என்பதோடு இவர்களது தலைவர்களும் கூட மகா பஞ்சாயத்தில் கலந்திருக்கின்றனர். மாயாவதியோ இந்துமத வெறியரோடு கூட்டணியே வைத்தவர்.

கடந்த வாரங்களில் தைனிக் ஜாக்ரான் என்ற இந்தி பத்திரிகையில் இசுலாமியர்கள் இந்துக்களை தாக்குவது தொடர்கிறது, இசுலாமியர்களால் இந்துக்களுக்கு ஆபத்து என்று முசாஃபர் நகர் பதிப்பில் தலைப்பிட்டும், அதன் பிற பதிப்புகளில் சாதாரணமாக தலைப்பிட்டும் செய்திகள் வெளி வந்தன. பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர். ஜாட்டுகள் நிறைந்த பகுதி என்பதால் இக்கலவரத்தை 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான விதைநிலமாக பாஜக பார்க்கிறது.

முசாஃபர் நகர் பகுதியில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. ஏறக்குறைய 18 சர்க்கரை ஆலைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இந்திய அளவில் விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட்டுகள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பதால் அவர்களுக்கு முக்கிய வருவாய் கரும்பு விவசாயம் வழியாகத்தான் வருகிறது.

அகிலேஷ் யாதவ்
உபி முதல்வர் அகிலேஷ் யாதவ்.

முசாஃபர் நகரின் முக்கியமான விவசாயிகள் சங்கத் தலைவரான பாரதிய கிசான் சங்கத்தின் மகேந்திர சிங் தியாகத் ஜாட் சாதியை சேர்ந்தவர். இச்சாதியின் மகா கப் பஞ்சாயத்துகளில் அவர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள ஜாட் சாதித் தலைவர்களுமே உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் சரண்சிங்-ன் மகனும், தற்போதைய மத்திய அமைச்சருமான அஜித் சிங் இச்சாதியை சேர்ந்த தலைவர்களில் ஒருவர். மகா பஞ்சாயத்துகள் எனப்படுபவை அரசு எந்திரத்திற்கு இணையாக செயல்படும் அதிகார மையங்கள் தான்.

ஏறக்குறைய தமிழகத்தின் தேவர் சாதியினரின் நாடு கூட்டமைப்பு போலவே ஆனால் மிகப் பரந்த அளவில் இருந்து வருகிறது இந்த மகா கப் பஞ்சாயத்து. கௌரவக் கொலைகளில் முன்னிற்கும் இப்பஞ்சாயத்து அச்சாதியினரின் பல்வேறு பிற்போக்குத்தனங்களுக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது. தங்களை சத்திரியர்கள் என அழைத்துக்கொள்வதில் ஜாட்டுகள் பெருமைப்பட்டாலும் விவசாயம்தான் அவர்களது பிரதான தொழில். தற்போது தான் இந்த சாதியினர் ஓரளவு படித்து வேலை வாய்ப்புகளைப் பெற்று நகரங்களுக்கு குடி வரத் துவங்கி உள்ளனர்.

இங்குள்ள தொழிற்துறை, ஆட்டோமொபைல், பேப்பர் மில்கள் மற்றும் துணி வியாபாரத்தில் இசுலாமியர்கள் ஓரளவு இருந்து வருகின்றனர். நகர்மயமாதல் விரைவாக நடந்து வரும் நகரங்களில் ஒன்று முசாஃபர் நகர். தற்போதைய கலவரத்தில் இசுலாமிய வர்த்தகர்களை ஒழிக்கும் ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் சதியாகவே இம்மோதல் வெடித்துள்ளது.

அதே நேரம் தற்போதைய கலவரத்தில் பெரும்பாலான ஜாட் சாதி மக்கள் இசுலாமியர்களை தங்கள் சாதிவெறியர்களிடமிருந்து பாதுகாத்துள்ளனர். வதந்திகளை பரப்பும் சங் பரிவாரங்களையும், ஜாட் சாதி உழைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கே தடையாக இருக்கும் மகா பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும். இந்து என்ற பெயரில் ஆதிக்கசாதி வெறியர்கள் தொடுத்திருக்கும் இந்த கலவரம் இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல, ‘இந்து’ உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

– வசந்தன்.