privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்"போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்" - முதலாளிகள் உறுமல் !

“போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்” – முதலாளிகள் உறுமல் !

-

“இந்தியால டிராஃபிக் சென்ஸ் இல்ல, கவர்ன்மென்ட் ஆபீஸ் போனா இழுத்தடிக்கிறானுங்க, ஒரே புழுதி, அழுக்கு. எங்க திறமைக்கு மதிப்பு இல்ல, சம்பளம் இல்ல. அதனாலதான், நாங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டோம்” என்பது தேசபக்தி ததும்பும் என்ஆர்ஐ அம்பிகள் அவ்வப்போது அலுத்துக் கொள்ளும் அங்கலாய்ப்பு. அங்கலாய்ப்பு அங்கலாய்ப்பாக நில்லாமல் அமெரிக்காவில் கிரீன் கார்டுடன் செட்டில் ஆவதையே லட்சியமாக, குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் அமெரிக்க குடியுரிமை என்பதே திட்டமாக தமது தேசபக்தியை நிலை நாட்டிக் கொள்கிறார்கள். பூலோக சொர்க்கத்தைக் கண்டோர் என்றும் இந்திய நரகத்தை எட்டிப்பார்க்கக் கூட விரும்புவதில்லை.

இந்திய தொழில் துறை
இந்திய தொழில் துறை

சொந்த ஊர் பள்ளியில் படிக்கும் போது, ஐஐடியில் பட்டம் வாங்கும் போதும் புலப்படாத இந்திய வெறுப்பு அமெரிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தெரிய ஆரம்பிக்கின்றது.  ஆனாலும், ஆகஸ்ட் 15-க்கு கொடியேற்றம், வெளிநாட்டு இந்திய நடிகைகள் விழாவுக்கு வருகை, அதில் தள்ளுமுள்ளு, பேஸ்புக்கில் மோடிக்கு ஆதரவு, ஆர்.எஸ்.எஸ்க்கு நிதி வசூலித்துக் கொடுப்பது என்று தமது ‘தேசபக்தி’யை தொடர்ந்து பேணி வருவார்கள்.

இவர்களைப் போலவே, நாட்டின் முதுகெலும்பு, நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கும் அவர்களது தொழில் முனைவுதான் ஆதாரம் என்று போற்றப்படும் இந்திய முதலாளிகளும் வாய்ப்பு கிடைக்கும் வரைதான் இந்தியர்கள், இல்லை என்றால் எங்கு அதிக முட்டை கிடைக்கிறதோ அங்கு அடை காக்கப் போய் விடுவார்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்திய அரசு தங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரா விட்டால், நாங்கள் பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு வேறு நாடுகளுக்குப் போய் விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள் இந்திய தரகு முதலாளிகள். மிரட்டுவதோடு மட்டுமில்லாமல் நடைமுறையில் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பெண் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் மதிப்பிடப்பட்ட கிரண் மஜூம்தார், தனது பயோகான் நிறுவனத்தின் சார்பாக மலேசியாவில் $20 கோடி  (ரூ 1,200 கோடி) முதலீட்டில் தொழிற்சாலை ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்தியாவில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, எனவே நானும் வண்டியை கட்டுகிறேன் என்று கிளம்பியிருக்கிறார் கிரண் மஜூம்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு கார் நிறுத்தும் இடத்தில் பயோகானை ஆரம்பித்த கிரண் மஜூம்தாரின் இன்றைய சொத்து மதிப்பு $62.5 கோடி (ரூ 3,750 கோடி). இவ்வளவு சொத்து சேர்க்கும் வரை இந்தியாவை உறிஞ்சி கொழுத்த கிரண் மஜூம்தார் இங்கு வறண்டு போயிருக்கவே மலேசியாவுக்கு கிளம்பியிருக்கிறார். பாவம் மலேசிய மக்கள்!

கிரண் மஜூம்தார்
பயோகானின் கிரண் மஜூம்தார்

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இந்திய கார்ப்பரேட்டுகள் வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மதிப்பு $2,100 கோடி (ரூ 1.3 லட்சம் கோடி). இது சென்ற ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும். அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிரித்துக் கொண்ட வரும் நேரத்தில் இந்த தேசபக்தர்கள் தமது முதலீடுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் $250 கோடி (ரூ 15,000 கோடி) கொடுத்து அமெரிக்காவின் காப்பர் டயர் & ரப்பர் கோ நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. சிப்லா நிறுவனத்தின் யூசுப் ஹமீது $46 கோடி (ரூ 2,500 கோடி) கொடுத்து தென் ஆப்பிரிக்காவின் சிப்லா மெட்புரோவை  சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். கூடவே அல்ஜீரியா, மொரோக்கோ நாடுகளிலும் நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்.

ஆதித்ய பிர்லா குழுமம் $100 கோடி (ரூ 6,000 கோடி) செலவில் அமெரிக்காவில் ஒரு இரசாயனத் தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

சென்ற மாதம் வரை இந்திய தரகு முதலாளிகள் தமது நிறுவனங்களின் நிகர மதிப்பில் 4 மடங்கு வரை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்து வந்தது.

“அரசு எங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும். ஒரு நாளைக்கோ, ஆறு மாதங்களுக்கோ இல்லை, நீண்ட கால கட்டமைப்பு செய்து தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் தொழில் செய்ய முடியும்” என்கிறார் சிப்லாவின் ஹமீது. தங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செலவில் செய்து கொடுக்க வேண்டும் என்று கூச்சம் இல்லாமல் கேட்கும் இந்த உத்தமர்கள்தான், உழைக்கும் மக்களுக்கான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து கொடுப்பதை எதிர்த்து கூச்சல் போடுகிறவர்கள்.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விலைக் கட்டுப்பாடுக்குள்ளாகும் மருந்துகளின் எண்ணிக்கை குறித்து ஹமீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் அத்தகைய நடவடிக்கைகள் உள்நாட்டு மருந்து தொழிலை மோசமாக பாதிக்கும் என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

யூசுப் ஹமீது
சிப்லா முதலாளி யூசுப் ஹமீது

மருத்துவத் துறை முதல் ரியல் எஸ்டேட் வரை கொடி கட்டிப் பறக்கும் பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல் (பில்லியனர்), “ரியல் எஸ்டேட் துறையில் கொடுக்க வேண்டிய கமிஷன்கள், வாங்க வேண்டிய அனுமதிகள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.” என்று புகார் தெரிவித்திருக்கிறார். தேவைப்படும் இடத்தில் நிலத்தை வாங்கி, முடிந்த வரை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க வழி செய்து கொடுக்காத அரசாங்கத்தை நொந்து கொண்டிருக்கிறார்.

பன்னாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை, ஊக வணிகம், முதலீட்டு வங்கிகள் என்று இந்தியாவுக்குள் தமது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்க, உருக்காலைகள், உற்பத்தி தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்று உலகெங்கும் முதலீடு செய்து நிதி மூலதனத்துக்கு உரம் போடும் வேலையை செய்து வருகிறார்கள் இந்திய தரகு முதலாளிகள். இவர்களை நம்பி நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியும் என்பது தான் முதலாளித்துவ அறிஞர்களின் மோசடி கொள்கை.

இப்படியெல்லாம் வெளிநாட்டில் தொழில் தொடங்குவதால் இந்த முதலாளிகளை உழைத்து முன்னேறியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். இங்கே அரசு உதவியுடன் சுரண்டியவர்கள் வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கு அன்னிய நிதி நிறுவனங்களிடம்தான் கையேந்துகிறார்கள். இவர்களது கடன் மதிப்பை விட சொத்து மதிப்பு குறைவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு கூட வரியற்ற தீவுகள் மூலமும், அன்னிய நிதி நிறுவனங்கள் மூலமும் இந்தியாவிற்கு கொண்டு வருகிறார்கள். இத்தகைய முதலாளிகள்தான் இந்தியா மோசம் என்று வெளிநாடுகளில் டூயட் பாட போகிறார்களாம்.

மேலும் படிக்க