privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்சத்தான கீரை ! அவலமான வாழ்க்கை !

சத்தான கீரை ! அவலமான வாழ்க்கை !

-

நாவில் நீர் சுரக்க சுவைக்கும் பல வகைக் கீரைகளும் நம் கைகளுக்கு எப்படி வந்து சேருகின்றன என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ? கீரை விற்கும் ஒரு பெண்மணி அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பாலக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை என்று உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள்ளித்தரும் பத்துக்கும் மேற்பட்ட கீரை வகைகளை கூடைகளில் வைத்து இடுப்பிலும், தலையிலும் சுமந்து கொண்டு தெருத் தெருவாக விற்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கூறு கெட்டி வைக்கப்பட்டுள்ள கீரைகள்
கீரைக்கு பேரம் பேசுபவர்களுக்கு தெரியாது இந்த வாழ்க்கை

”ரெண்டு ரூபாய் கொறைச்சுக் குடேம்மா..” என்றார் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்த அந்த நடுத்தர வர்க்க நபர். ” நான் நாற்பது வருசமா தெனமும் இதைத்தாம்பா கேட்டுட்டிருக்கேன். பத்துல ஒம்பது பேரு இப்படி தான் இருக்காங்க. நல்லா படிச்சவங்களும், இருக்கப்பட்டவங்களும் தாம்பா ஒரு ரூவா கொறைச்சுக் குடு, ரெண்டு ரூவா கொறைச்சுக் குடுன்னு கேக்குறாங்க. சாதாரண ஜனங்க அதிகமா இப்படி கேக்காதுங்க!” என்கிறார் ஜெபத்தாய்.

கீரை தமிழகம் முழுவதும் அன்றாடம் விற்கப்படும் பொருள் என்றாலும் சென்னையில் இதன் வர்த்தக மதிப்பும், நுகர்வும் அதிகம். கோயம்பேட்டில் வந்து இறங்குகின்ற கீரைகள் அனைத்தும் சென்னை முழுதும் சரிவிகிதத்தில் போய்ச் சேர்வதில்லை. குறிப்பாக நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர் அதிகம் வாழும் தென் சென்னைக்குத் தான்  மிகப்பெரும் பகுதி போகிறது. ஏழைகள் அதிகம் வாழும் வட சென்னைக்கு மிகக் குறைவாகவே போகிறது.

கோயம்பேடு மொத்த விலை காய், கனி, பூ சந்தையில் கீரைக்காக ஒரு தனிப்பகுதி இருக்கிறது. குறிப்பிட்ட சில கீரைகள் கர்நாடகாவிலிருந்தும், ஏனைய கீரை வகைகள் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்தும் வருகின்றன. இங்கே கீரைகளை சில்லறை வியாபாரத்துக்கு வாங்குபவர்கள்  இரண்டு கூடைகளில் அவற்றை நிரப்பி சுமந்து கொண்டு, சென்னை நகரின் தெருக்களில் இறங்கி ”கீரம்மா.. கீர..” என்று உச்ச ஸ்தாயியில் கத்தி விற்று வருகின்றனர். தோராயமாக 1300 க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் தெருக்களில் கீரை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. அதிலும் பெண்களே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெபத்தாய் 63 வயது மூதாட்டி. சென்னை சைதாப்பேட்டை தான் சொந்த ஊர். நாற்பது ஆண்டுகளாக கீரை விற்று வருகிறார். இத்தனை ஆண்டுகள் கீரை விற்பனை மூலம் அவர் சம்பாதித்தது என்ன? அவரே சொல்கிறார். ”நாப்பது வருசமா கீரதாம்பா வித்துனுருக்கேன். மார்க்கெட்ல ஒரு கட்டு பத்து ரூவான்னு எடுத்துனு வந்தா, அஞ்சி ரூவா வச்சி பதினஞ்சு ரூவாய்க்கு விக்கிறோம். அதுவும் வாங்கினு வர்ற எல்லாம் வித்துடாது.. இதுல என்னாப்பா லாபம் கீது..! ரேசன் அரிசிய வாங்கித் துன்னுற அளவுக்கு தான் இதுல லாபம் வருது. இத விட்டா வேற இன்னா பண்றதுன்னு தெரியாம தான் இத்தன காலமா இத்த செஞ்சினுருக்கேன். இதோ பாரு! ஒரு நல்ல சேல கூட கட்ட முடியாத நெலயில தான் கீறேன்” என்றார் நைந்து சல்லடையாகிப் போன தனது புடவையைக் காட்டி.

”தெனமும் விக்கிறீங்களா? இல்ல ஒரு சில நாள் மட்டுமா?”

”தெனமும் தாம்பா.. இத்த வித்தா தானே துன்ன முடியும். நைட்டு ஒரு மணிக்கு கீர மார்க்கெட்டு தெறக்கும். நான் நைட்டு பதினோரு மணிக்கே கௌம்பிருவேன். ரொம்ப தூரத்துல இருந்து வர்றவங்க, மடிப்பாக்கம், தாம்பரம் பக்கம் இருந்து வர்றவங்க எல்லாம் எட்டு, ஒம்போது மணிக்கே வீட்ட விட்டு கௌம்பிருவாங்க. அதுக்கப்புறம் பஸ் கெடைக்காது. ஆனா ஒரு மணிக்கு மேல தான் கூட்டம் அதிகமா இருக்கும்.

மார்க்கெட்ல நெறைய கடைங்க இருக்கு. ஒவ்வொரு கடையா ஏறி எறங்கி தான் வாங்கணும். கீரைங்கள மொத்தமா குவிச்சு போட்ருப்பாங்க. அதுல நல்ல கட்டா பாத்து தான் எடுக்கணும். எங்க கிட்ட பேரம் பேசுற மாதிரி நாங்க அங்க பேரம் பேச முடியாது. பத்து ரூவான்னா பத்து ரூவாய வைச்சா தான் கீர.”

”தெனம் எத்தன கட்டு வாங்குறீங்க?”

”ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி, கூடும் கொறையும். அது கையில இருக்க காசப் பொறுத்தும், கெழமய பொறுத்தும் இருக்கு. சனி, ஞாயிறு அதிகமா வாங்கினு வருவேன். ஒவ்வொரு கீரையிலயும் பதினைஞ்சு  கட்டு எடுப்பேன். கீரைங்க அதிகம் இல்லைன்னா ஒரே கீரையில அதிகமா எடுப்பேன். இப்ப கீரைங்க கம்மியா தான் வருது.”

”எத்தனை மணிக்கு மார்க்கெட்டை விட்டு கிளம்புவீங்க?”

”கீரைங்களை வாங்கி முடிக்க ரெண்டு மணிக்கு மேல ஆயிடும். ஆனா அப்ப கௌம்ப முடியாது. நாலு மணிக்கு தான் கௌம்புவோம். முன்னாடி பஸ் இருந்துச்சு, இப்ப அதுவும் இல்ல. அதனால ஆட்டோவுல தான் போவோம். நாலு மணிக்கு தான் வண்டிங்க கௌம்பும். அது வரைக்கும் இங்கேயே ரோட்டு ஓரமா படுத்துக்குவோம். சும்மா தான் படுத்திருப்போம். தூங்கினு இருந்தா கீரைங்க காணாம போயிரும். அப்புறம் விடிக்கால நாலு மணிக்கா தான் கௌம்புவோம்.”

”நீங்க எந்த ஏரியால விக்கிறீங்க?”

”நான் தெரு மேல விக்கிறது இல்லப்பா. முன்னாடி வித்துனு இருந்தேன், இப்ப முடியல. அதனால எம்.ஜி.ஆர் நகர்ல தான் ரோட்டோரமா போட்டு விக்கிறேன். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சி கஷ்டப்பட்டு இந்த கீரைங்கள வாங்கினு வந்தா, இங்க வர்றவங்க எல்லாம் ரெண்டு ரூவா கொறச்சுக்குடு, மூணு ரூவா கொறைச்சுக் குடுன்னு பேரம் பேசினிருப்பாங்க. அவங்களுக்கு பதில் சொல்லிச் சொல்லியே எங்களுக்கு பாதி மூச்சு போயிரும்.”

”எப்போ எல்லாத்தையும் வித்து முடிப்பீங்க?”

”நான் காலைல ஆறு மணிக்கெல்லாம் இங்க வந்து கடைய போட்ருவேன். அப்புறம் பத்து மணிக்கா நான் போயிருவேன், என் பொண்ணு வந்துடுவா. அவ தான் சாயந்திரம் வரைக்கும் இங்கேயே உக்காந்தினிருப்பா. எல்லா கட்டையும் வித்து முடிக்க ஏழு மணிக்கு மேல ஆயிரும். அதுக்கு மேலயும் விக்காதத பத்து ரூவாய்க்கு தான் விக்கணும். அப்படியும் சிலதுங்க மிஞ்சும், அத்த தூக்கி தான் வீசுவோம். அப்புறம் மறுபடியும் நான் மார்க்கெட்டுக்கு கௌம்பிருவேன்.”

”உங்க பொண்ணும் உங்களோட சேர்ந்து வேலை செய்றாங்களா? அப்படின்னா இது ரெண்டு பேர் வேலையா?”

”ஆமாப்பா.. நைட்டு முழிக்கிறதுனால நான் தூங்கப் போயிருவேன். பகல் முழுக்க அவ தான் பாத்துக்குவா.”

”உங்களுக்கு மொத்தம் எத்தன பிள்ளைங்க?”

”ஆறு புள்ளைங்க.. அஞ்சு பொம்பளை பிள்ளைங்க ஒரு பையன். வீட்டுக்காரர் சின்ன வயசுலயே இறந்துட்டாரு. அத்தனை பிள்ளைங்களுக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன். எல்லாம் கீரை வித்தும், கடனை கிடனை வாங்கியும் தான் கரை சேத்திருக்கேன்..”

”இந்த வயசுல ஏன் வேலை செய்யணும்? உங்க பையன் உங்கள பாத்துக்க மாட்டாரா?”

”ஆமா.. நான் தான் அத பாத்துக்கணும். இப்ப தான் கொஞ்ச நாளா பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு போவுது. இத்தனை நாளா நான் வேலைக்கு போய் தான் சோறு போட்டுட்டு இருந்தேன். வயசு மட்டும் கழுத வயசு ஆச்சு. அவனுக்கு இப்போ நாப்பத்தியோரு வயசு.”

கோயம்பேடு சந்தையில்
கோயம்பேடு சந்தையில் நடக்கும் கீரை வியாபாரம்

கீரை விற்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களாகவோ, விதவைகளாகவோ தான் இருக்கிறார்கள். அதிலும் பெரும்பான்மையானவர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். ஜெபத்தாய் சைதாப்பேட்டையிலிருந்து வருகிறார். 61 வயதாகும் கோதையம்மாளோ கிழக்கு தாம்பரத்திலிருந்து வருகிறார். அது இன்னும் வெகு தூரம். இவருக்கு நான்கு பெண்கள், நான்கு பேருக்கும் திருமணமாகி தனியாக இருக்கின்றனர். கணவர் இறந்து விட்டார்.

”பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாதுன்னுதான்யா தனியா இருக்கேன். ஏதோ என் செலவுக்கு என்னால முடிஞ்ச வேலய நான் பாத்துக்கிறேன். எனக்கு யார் தயவும் வேணாம்” என்கிறார். இவர் கோயம்பேடு போய் வருவதற்கான போக்குவரத்து செலவே முன்னூறு ரூபாய்க்கு மேல் ஆகி விடுகிறது. எனவே தினமும் போவதில்லை. தனது தேவைகளுக்காக மட்டும் வாரத்திற்கு நான்கு நாட்கள் போய் வருகிறார்.

மிகத் தொலைவிலிருந்து வருபவர்கள் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் சந்தைக்குள் வந்து விடுகின்றனர். அப்போது திறந்திருக்கும் ஒரு சில கடைகளில் தேவையான சில கீரைகளை வாங்கிக் கொண்டு அங்கேயே படுத்து விடுகின்றனர். பிறகு ஒரு மணிக்கு எழுந்து மொத்தக் கீரைகளையும் வாங்கிக் கொண்டு, மீண்டும் படுத்து எழுந்து அதிகாலை நான்கு மணிக்கு அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

மீஞ்சூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்று தூரமான பகுதிகளிலிருந்து வருபவர்கள் கூட கீரை வாங்கி விட்டு தங்களது பகுதிகளுக்குத் திரும்பி காலையிலேயே கீரைகளை விற்கத் துவங்கி விடுகின்றனர். இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரண்டு கூடைகளை சுமந்து கொண்டு ஏழு மணிக்கெல்லாம் தெருவில் இறங்குபவர்கள், பதினோரு மணிக்குள் முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல பன்னிரெண்டு அல்லது ஒரு மணியாகி விடுகிறது.

வீட்டிற்குள் நுழைந்ததுமே போய்ப் படுத்துக்கொள்ளும் நிலையிலும் இவர்கள் இல்லை. ஏனென்றால் அனைவரும் பெண்கள், சமையல் உள்ளிட்ட சில வேலைகளை முடித்த பிறகு தான் ஓய்வு, அதுவும் சற்று நேரமே. குடிகாரக் கணவனாக இருந்தால் அந்த ஓய்வும் கிடைக்காது. மீண்டும் இரவு கோயம்பேடு கிளம்புகின்றனர்.

”ஒரு கட்டுக்கு அஞ்சு ரூவா வச்சு விக்கிறீங்களே.. அப்படின்னா உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் இல்லையா..” என்று கே.கே. நகர் தெருக்களில் விற்றுக்கொண்டிருந்த ராஜத்திடம் கேட்ட போது, ”ஆயிரம் ரூவாய்க்கு வாங்கி வித்தா தான் சார் ஐநூறு ரூவா கெடைக்கும். ஆனா அந்த ஐநூறு ரூவாய்க்கு நாங்க எவ்வளோ கஷ்டப்படுறோம் தெரியுங்களா! நைட்டு பத்து மணிக்கு வீட்ட விட்டுக் கௌம்புனா அடுத்த நாள் ஒரு மணிக்கு தான் சார் வீட்டுக்கு போறோம். விடிய விடிய மார்க்கெட்லயே கெடந்து, விடிக்கால எழுந்து 200 ரூவாய்க்கு ஆட்டோவப் புடிச்சு, மத்தியானம் வரைக்கும் வேகாத வெயில்ல அலைஞ்சி திரிஞ்சு, கூவிக் கூவி வித்தா தான் ஐநூறு ரூவா கெடைக்கும்.

அப்படி விக்கும்போது நாலு கட்டுக்கு ஒருத்தர் பேரம் வேற பேசுவாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லிச் சொல்லியே தொண்டத் தண்ணி வத்திரும். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு ஆயிரம் ரூவாய்க்கு வித்தா தான் சார் ஐநூறு ரூவா கிடைக்கும். அதுலயும் ஆட்டோ செலவு அது இதுன்னு நெறைய இருக்கு. இதுல என்னா சார் லாபம் இருக்குன்னு சொல்றீங்க!” என்றார் சோர்வு கலந்த சலிப்புடன்.

அனைவரும் கீரைகளை எடுத்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு நேரத்தில், வயது முதிர்ந்து கூன் விழுந்து விட்டிருந்த ஒரு மூதாட்டி கையில் சில பிளாஸ்டிக் பைகளை வைத்துக் கொண்டு கிழிந்துபோன சேலையும், பரட்டைத் தலையுமாக போய்க் கொண்டு இருந்தார். ஒரு கணம் நான் அவரை சந்தையில் திரியும் பிச்சைக்காரர் என்றே எண்ணினேன். ஆனால் அவர் கீரை விற்பவர். கீரை விற்கும் மற்ற பெண்களைப் போலவே அவரும் குனிந்து கீரைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சி மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இந்தத் தள்ளாத வயதில் அவர் கீரைகளை வாங்கிச் சென்று அதை விற்று வயிற்றைக் கழுவுகிறார் என்பதை ஏற்கவே முடியவில்லை. அவருக்கு கிட்டத்தட்ட 65 வயதுக்கு மேல் இருக்கலாம். அருகில் நெருங்கி ”உங்க பேர் என்னம்மா?” என்றதும், ”ஏன் கேக்குற.. எதுக்கு..?” என்றார். ”இல்ல.. இந்த வயசுலயும் வேலை செய்றீங்களே.. அதான் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்.” என்றதற்கு ”எந்த வயசுன்னா என்ன.. வேல செஞ்சா தானே சாப்புட முடியும்” என்றார்.

காமாட்சி பாட்டி
நமக்காக நள்ளிரவில் கீரை வாங்கும் பெண்மணிகள்

காமாட்சி, இந்த மூதாட்டி மயிலாப்பூரிலிருந்து வருகிறார், வயது 63. ”புள்ளைங்க கூட தான் இருக்கேன். புள்ளைங்க இருந்து என்ன பண்ண.. வேலை செஞ்சா தான் சோறு திங்க முடியும்” என்றார். மொத்தமே அவர் நானூற்று ஐம்பது ரூபாய்க்கு தான் கீரைகளை வாங்கியிருந்தார். ”ஏம்மா இவ்வளவு கம்மியா வாங்கியிருக்கீங்க?” எனக் கேட்டதற்கு, ”நெறைய வாங்குனா யாரு தூக்கிட்டு போறது. எனக்கு இதை வித்தாலே போதும்” என்றார். இதை முழுவதும் விற்றால் கூட 225 ரூபாய் தான் கிடைக்கும், அதற்காக மயிலாப்பூரிலிருந்து இவர் கிளம்பி வந்திருக்கிறார்.

மயிலாப்பூர் போகும் குட்டி யானை வண்டியில் இவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்கிறார். இவரிடம் மற்ற பெண்கள் காசு வாங்குவதில்லை. வாடகையை அவர்களே பகிர்ந்து கொடுத்து விடுகின்றனர். உழைத்துப் பிழைத்தால் தான் காசு என்றாலும், ஓய்வு பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் எதுவும் தராவிட்டாலும் இவர்களுக்கிடையே உதவி செய்வது மிகவும் இயல்பாக இருக்கிறது.

இவர்களது வாழ்க்கை கீரை எனும் இரும்புச் சங்கிலியோடு பிணைக்கப்பட்டு, சென்னை எனும் மாபெரும் நகரத்தில் சுமை தூக்கிய செக்கு மாடுகள் போல சுற்றிச் சுற்றி வருகிறது. எட்டு மணி நேரம் தொடர்ச்சியான தூக்கம், எட்டு மணி நேரம் ஓய்வு, வார விடுமுறைகள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா, பொழுது போக்கு எதுவும் இவர்களுக்குக் கிடையாது. அன்றாடச் செலவுகளுக்கு கீரை விற்று வரும் காசும், பெருஞ் செலவுகளுக்கும், கீரை கொள்முதலுக்கும் கந்து வட்டிக் கடனை வாங்கியும் வாழ்க்கை வண்டி ஓடுகிறது. தலைவலி, காய்ச்சல் இன்னபிற சுகவீனங்களுக்கு கூட விடுப்பு கிடையாது. நள்ளிரவில் விழித்து, நடுப்பகலில் கீரைக்கட்டுச் சுமையோடு சுற்றினால்தான் வயிற்றுக்கு கஞ்சி கிடைக்கும்.

இத்தகைய கடுமையான உழைப்பில்தான் இம்மக்கள் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள். இத்தகைய அவல வாழ்க்கை தான் கீரை விற்பனையால் இவர்களுக்கு கிடைத்திருக்கும் சொத்து, வருமானம். கீரை சத்தான, ஆரோக்கியமான உணவாக இருக்கலாம்; ஆனால் அதை விற்கும் பெண்களை  உருக்கி, இழைத்து, அடித்து விரட்டும் இந்த சமூக அமைப்பு அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை.

– புதிய கலச்சாரம் செய்தியாளர்.
___________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
___________________________________________   

படத் தொகுப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]