privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி - ஒரு அனுபவம்

கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்

-

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

pillayarஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப் போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப் பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப் போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடி ரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்து விட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்ட வரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. மிகச் சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி விடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.

நன்றி : அதிஷா